மனுமுறை கண்ட வாசகம்- 5

-வள்ளலார்

தனது மகன் தேரில் செல்கையில் அறியாமல் நேரிட்ட விபத்தில் பசுவின் கன்று இறந்ததனால் ஏற்பட்ட தோஷத்துக்குத் தண்டனையாக தனது மகனையே அதேபோல தேர்க்காலில் இட்டு நசுக்கிக் கொன்றவன் மனுநீதி சோழன்; அதுவே மனு நீதி சாத்திரம் சொல்லும் அறமென்று கூறியவன். உலக உயிர்கள் அனைத்தையும் சமமாக பாவிக்கும் இந்தக் குணமே தமிழக சரித்திரத்தில் அவனுக்கு நிலையான இடம் அளித்திருக்கிறது. இதுவே அருளாளர் வள்ளலாரால்  ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலாகப் பாடவும் பெற்றது. அந்த நூலின் நிறைவுப்பகுதி இது…

பகுதி-1

பகுதி-2

பகுதி-3

பகுதி-4

அதற்கு முன்னதாகவே, பெரியோர்களிடத்துப் பிராயச்சித்த விதியைக் கேட்கப்போன வீதிவிடங்கன் தமது பிதாவினிடத்தில் பசுவானது வந்து முறையிட்ட சமாசாரத்தை ஒற்றர்களாலே கேள்விப்பட்டு ‘இனி நமக்கென்ன பிராயச்சித்த மிருக்கின்றது! நமது பிதாவானவர் செய்கிற தீர்ப்பின்படி நடந்துகொள்ளுவோம்’ என்று தேகமெலிந்து மேனி வேறுபட்டு, மனந்தளர்ந்து, முகஞ் சோர்ந்து தனது அரண்மனையிடத்து வந்திருந்தான்.

அப்போது அரசன் அனுப்பிய காவற்காரர்கள் அவ்வீதிவிடங்கனைக் கண்டு கைகுவித்து எதிர் நின்றார்கள். அவர்களைப் பார்த்து ‘நீங்கள் என்ன காரியமாக என்னிடத்தில் வந்தீர்கள்?’ என்று கேட்க, அவர்கள் ஒன்றுஞ் சொல்லாது ஊமைகளைப்போல விம்மி விம்மி அழுது கண்ணீர் வடித்துக் கொண்டு நின்றார்கள்.

அதுகண்டு வீதிவிடங்கன், ‘இவர்கள் ஏதோ ஒரு துன்பமான சமாசாரத்தைச் சொல்ல வந்தவர்கள் நாவெழாமல் நடுங்குகின்றார்கள்’ என்று அறிந்து, “ஓ காவற்காரர்களே! வந்த காரியம் இன்னதென்று சொல்லாமல் துக்கப்படுவதில் பலனில்லை; அந்தக் காரியம் எனக்குந் தெரியும், ஆயினும் துயரப்படாமல் சொல்லுங்கள்” என்றான்.

அதுகேட்டு “ஐயா! எப்படிச் சொல்வோம்! என்ன செய்வோம்! எங்கே போவோம்! எல்லார் குடியையுங் கெடுக்க எங்கே இருந்தோ தாட்சண்யமில்லாத தலையீற்றுப் பசுவானது ஒன்று வந்து ஆராய்ச்சி மணியை யசைத்து, இனி உலகத்தை ஆள்வாரில்லாமல் அழிந்துபோகும்படி உம்மை அரசன் அழைத்து வரச் செய்வித்தது” என்று சொன்னார்கள்.

.அதுகேட்டு வீதிவிடங்கனைச் சூழ்ந்திருந்த உறவினர், சினேகர் முதலானோ ரெல்லாம் “இப்படிப்பட்ட அவதி நேரிடத்தானோ தியாகேசர் கோயிலுக்குப் போகத் தொடங்கியது! எள்ளளவும் இப்படிவரும் என்று அறியோமே! இதற்கு என்ன செய்வோம்! என்று அழுது சோர்ந்தார்கள். அந்தப் பிரகாரமே அரண்மனையிலுள்ள மற்றவர்களும் புலம்பி ஆவலித்தார்கள்.

இந்த அழுகையொலியை வீதிவிடங்கன் தாயானவள் கேட்டு இதென்ன காரணமென்று விசாரித்து, இன்ன காரணமென்று அறிந்து, கொழுகொம்பற்ற கொடியைப்போல் கீழே விழுந்து மூர்ச்சையடைந்து, சற்றே அறிவுவரத் தெளிந்து “பாவியாகிய விதி என் பாக்கியத்தை யழித்ததே! தீமையாகிய வினைப்பயன் என் செல்வத்தை யழித்ததே! வஞ்சமாகிய ஊழ் என் வாழ்வை யழித்ததே! பலநாள் வருந்திப் பெற்ற என் வயிறு பற்றுகின்றதே! பகீரென்று பதைக்கின்றதே! ஐயோ! என் புத்திரன் செய்த குற்றத்திற்கு என்னைக் கொன்றாலாகாதோ!” என்று பலவிதமாகச் சொல்லிக் கைநெரித்துக்கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டு வயிறு பிசைந்துகொண்டு மாரடித்துக்கொண்டு வாயில் அறைந்து கொண்டு மனம் பதைத்துக்கொண்டு மண்ணிற் புரண்டு கொண்டு கோ வென்று அழுதழுது புலம்பினாள்.

.அப்போது வீதிவிடங்கனென்கிற இராஜபுத்திரன் அழுகின்ற தாய் முதலானவர்களைப் பார்த்து, “வீணாக நீங்கள் அழுது புலம்புகின்றதில் என்ன லாபம்! பிரமதேவன் முதலான கர்த்தர்களுக்கானாலும் விதியைக் கடக்கக் கூடுமோ! எலும்பு நரம்பு தோல் முதலான அசுத்தங்களாற் கட்டிய இந்தச் சிறுவீட்டை நிலையென்று நம்பப்படுமோ! என்று பிறந்தார்களோ அன்றே இறந்தார்களென்று நினைக்க வேண்டும்; ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவென்றும், நிலத்தில் முளைத்த பூண்டுகள் நிலத்திலே மடியுமென்றும், சாமானியரான அசேதனர்களும் சொல்லிக் கொள்ளுகின்றார்களே; அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமற் போனதென்ன? இதுபற்றி எவ்வளவுந் துயரப்பட வேண்டுவதில்லை” என்று பலவிதமான உறுதி வார்த்தைகள் கூறி, அவ்விடத்திலிருந்து புறப்பட்டு மனதில் நாணமும் நடுக்கமும் உண்டாகத் தந்தையாரிடத்திற்கு வந்து தொழுது வணங்கித் தூரத்தே நின்றான்.

.அப்படி நின்ற புதல்வனை மனுச்சக்கரவர்த்தியானவர் நேரே பாராதவராய் வேறொருவன் முகத்தைப் பார்த்து, “இவன் இளங்கன்றை யெவ்வாறு கொன்றானோ, அவ்வாறு கொலை செய்யப்படுதற்குத் தக்க குற்றவாளி யாயினான்” என்றார்.

அப்பொழுது புத்திரன் “பசுங்கன்றைக் கொன்ற அப்போதே உயிர்விட்டுப் பழிக்குப்பழி சரிகட்டுவேன்; ஆனால் தேவரீர் கட்டளை எதிர் பார்த்திருந்தேன்” என்று விண்ணப்பம் பண்ணிக்கொண்டான்.

உடனே அரசரானவர் கொலை வீரர்களை அழைப்பித்து, “இந்தக் குற்றவாளியை ஏற்பாட்டின்படி கடுங்காவல் செய்து கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கொண்டு போய்க் கிடத்துங்கள்” என்று கட்டளையிட்டார்.

அந்தக் கட்டளைக்கு அஞ்சி அவ்வீரர்கள் உருவிய கத்தியோடு சூழ்ந்து நடுவே இராஜபுத்திரனைக் காவல் செய்து நடத்திக்கொண்டுபோக, மனுசக்கரவர்த்தியும் மலை போல் உயர்ந்த ஒரு தேரிலேறிக்கொண்டு பின்னே நடந்தார்.

.அதுகண்ட அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் “இந்த இராஜகுமாரனுக்கு ஐசுவரியமும் அழகும் அறிவும் குறைவில்லாது கொடுத்த தெய்வம் இடையிலே இந்தப் பழிக்கு ஆளாகச் செய்து, நல்ல விதி நடுவே யிருக்கக் கோணிய விதி குறுக்கே வந்ததென்று சொல்வதற்குச் சரியாக்கியதே! இன்பத்தை யனுபவிக்கின்ற இளமைப் பருவத்தில் எடுக்கப்படாத பழி வந்து சூழ்ந்து, சோறுண்ணும்போது தொண்டை விக்கிக் கொண்டதென்பதுபோல் துன்பத்தை யுண்டுபண்ணியதே!

கல்யாணக் கோலங்கொள்வதற்கு இசைந்துவரும் பருவத்தில் செல்வத் திருமேனிக்குத் தீங்கு உண்டாகும்படி, வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி யுடைந்ததென்பது போல் நேரிட்டதே! சிவதரிசனத்துக்கப் போனவிடத்தில் சேங்கன்றின் பழி வந்து, கிணறு வெட்டப் போனவிடத்தில் பூதம் புறப்பட்டதுபோல் தோன்றியதே!

கடைகொள்ளப் போகும்போது கள்ளன் எதிர்ப்பட்டதுபோல், அருள் பற்றுவரப் போகும்போது இந்தப் புத்திரனுக்கு அந்தக் கன்றானது எமனைப்போல் எங்கேயிருந்து எதிர்ப்பட்டதோ! இந்தக் குமாரனைப் பற்றி நமக்கெல்லாமுண்டாகிய இரக்கம் பழிவாங்கவந்த பசுவுக்கும் உண்டாயிருக்குமானால், ஆராய்ச்சிமணியை யசைத்து முறையிட்டுக் கொள்ளாதே! ஐயோ! இந்தப் பசுவானது சூரியவமிசத்தை யழிக்கத் துசங் கட்டிக்கொண்டதே!

இனி நம்மரசனுக்குப் பிற்காலத்தில் நீதியுடன் அரசாட்சி செய்யத்தக்க அரசனைப் பெறாமல் எல்லா உயிர்களும் நிலைதடுமாறி நின்று மயங்குமே; இந்த இராஜபுத்திரன் முன்பு சேனை சூழத் தேரிலேறி வந்த மங்கலமாகிய கோலத்தைக் கண்டு மகிழ்ச்சி யடைந்த நாம் இப்போது இப்புத்திரன் காவல்சூழக் காலால் நடந்து வருகின்ற பரிதாபமாகிய கோலத்தைப் பார்ப்பதற்கு என்ன பாவஞ் செய்தோமோ!

இந்தப் புத்திரனுயிர்க்கு ஈடாக நம்முயிரை யெல்லாங் கொடுத்து விடுவோமென்றாலும் அரசன் சம்மதிக்க மாட்டாரே! இந்தப் புத்திரன் உயிரிழந்தால் பின்பு அரசனும் உயிரிழப்பார், பின்பு நாமிருந்து என்ன செய்வது! இதற்குமுன் இறந்து விடுவதே சுகமாக விருக்கின்றதே! ஆ! ஆ!!

நம்மரசனைப் போல இப்படிப்பட்ட அருமையான நீதியோடு அரசு செய்கிறவர்கள் முன்னுமில்லை பின்னுமில்லையே! தியாகராஜப் பெருமான் நமது இராஜனுடைய மனத்தைச் சோதிக்கும்படியாகவே இப்படிச் செய்வித்ததாகத் தோன்றுகிறதே! தரும தேவதை நமது அரசனது உண்மையாகிய நீதியின் தன்மையைச் சோதிக்கும்படி இவ்விதஞ் செய்ததாகத் தோன்றுகின்றதே!” என்று பலவிதமாக அவரவர்களுந் தங்கள் தங்களுக்கு நேரிட்ட ஆபத்தென்று நினைத்தும் புலம்பியும் அதிசயித்தும் நின்றார்கள்.

.ஆகாயத்தினிடமாக இவ்வதிசயத்தைப் பார்க்கும்படி வந்திருக்கின்ற தேவர்களெல்லாம் “இந்த மனுச்சக்கரவர்த்தியானவன் செய்யத் துணிந்த காரியம் இவனுக்கு முன்னிருந்த அரசர்களுக்குச் சொல்லத்தான் கூடுமோ? அல்லது நினைக்கத்தான் கூடுமோ? இம்மனிதர்களைப் பார்க்கிலும் உயர் பிறப்பினராகிய நம்மவர்களுக்குத் தான் செய்யக் கூடுமோ? இவ்வரசன் நீதியிலும் மனோதிடத்திலும் சிறந்தவனாக விருக்கின்றான். இவனுக்குச் சிவகடாக்ஷம் கைகூடுமல்லது மற்றவர்களுக்கக் கூடுமோ? ஆயினும், இன்னும் நடக்கப் போகிற அற்புதங்களை யெல்லாம் பார்த்தறிவோம்” என்று புகழ்ந்து சொல்லி நின்றார்கள்.

.இந்தப் பிரகாரமாகச் சொல்லிக்கொண்டு நிற்க, மனுச்சக்கரவர்த்தியானவர் அந்தப் பசுங்கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் போய், தமது புத்திரனைக் காவல் செய்து முன்னே நடத்தி வந்த கொலைவீரத்களைப் பார்த்து “இனிக் காலதாமதம் பண்ணாமல் இந்தப் பசுங்கன்றை யெடுத்து அப்புறத்தே வைத்து, அவ்விடத்தில் இவ்வீதிவிடங்கனைக் கிடத்தி வையுங்கள்” என்று கட்டளையிட்டார்.

.அதுகேட்டுக் கொலைவீரர்கள் மனம் பதைத்து மதிமயங்கி நின்றார்கள். அப்பொழுது தந்தையாகிய மனுச்சக்கரவர்த்தியின் கட்டளையைக் கேட்டு மயங்கி நிற்கின்ற கொலைவீரர்களை வீதிவிடங்கன் பார்த்து, “நீங்களேன் மயங்கி வருந்துகின்றீர்கள்? அந்தக் கட்டளையின்படி நானே செய்து கொள்ளுகிறேன்” என்று சொல்லித் தியாகராஜப் பெருமான் சந்நிதிக்கெதிராகத் திரும்பி இரண்டு கைகளையுங் குவித்துச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு,

“சிறு பிள்ளைக்குத் திருப் பாற்கடலை அழைத்துக் கொடுத்த தியாகராஜப் பெருமானே! அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுயம்பிரகாச சாட்சாத்கார சிதாகாச சொரூப சின்மயனாகிய சிவசங்கரனே! அடியேன் பசுங்கன்றைக் கொன்ற பாதகனாயினேன். அதுவும் போதாமல், ஐயோ! எனக்கு நல்வழியைக் கற்பித்துக் கண்போல் விளங்கிய நின்னடிமையிற் சிறந்தவனாகிய மதியுள்ள கலாவல்லபனென்கிற மந்திரியையும் இறப்பிப்பதற்குக் காரணமாகியிருந்தேன்? இப்படிப்பட்ட என்போல் பாவிக ளெங்கேயுண்டு?

என் பிதா தண்டிக்கப்போகிற தண்டனை என் பாதகத்துக்குத் தக்க தண்டனையுமல்லவே! என்ன செய்வேன்! பாவியாயினும் எனக்கு வேறொரு கதியுமில்லாதபடியால், முன் தாயைக் கூடித் தந்தையைக் கொலை செய்தவனது மாபாதகத்தை மன்னித்து அனுக்கிரகஞ் செய்ததுபோல், அடியேனுக்கும் அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்; என் பிதாவுக்கும் எனக்கும் உரித்தாகியிருந்த மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி வந்த பழி பாவங்களை நீக்கியருள வேண்டும்; என்பொருட்டு இறந்த மந்திரியை யெழுப்பிக் கொடுத்தருள வேண்டும்;

இதோ இந்தப் புலாலுடம்பைப் போட்டுவிட்டு வருகிறேன்; என்னையுந் திருவடி நீழலிற் சேர்த்துக்கொள்ள வேண்டும்; இந்தப் பிறப்பிலே யெனக்குத் திருவடி கிடையாதானால் வரும் பிறப்பிலாயினுங் கிடைக்கத் தக்க நல்லறிவும் பேரன்பும் உள்ளவனாகப் பிறப்பிக்க வேண்டும்” என்று சொல்லி விண்ணப்பஞ் செய்துகொண்டு திரும்பி நின்று, மாதா பிதா குரு முதலானவர்களுக்கும் மனத்தினால் வந்தனஞ் செய்து,

“இம் மனுச்சோழருடைய செங்கோல் மாறாது நிலைபெற்றிருக்க வேண்டும்” என்று இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை யுச்சரித்துக் கொண்டு விழுந்து வடக்கே தலையும் தெற்கே காலும் வைத்துக் கொண்டு இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு சிந்தையைச் சிவபெருமான் திருவடித் தியானத்தில் வைத்துக்கொண்டு யோகநித்திரை செய்பவன்போல உடம்பைக் கிடத்தினான்.

.அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் சிவத்தியானஞ் செய்துகொண்டு, தியாகேசர் சந்நிதியை நோக்கி, “அடியேனை யாட்கொண்ட ஆண்டவனே! இவ் வீதிவிடங்கனென்பவன் பசுங்கன்றைக் கொலை செய்தானென்பது பிரத்தியட்சமாக உண்மையென்று வெளிப்பட்டபடியால், இந்தக் குற்றவாளியின் கொலைப் பாதகந் தீரத் தக்க தண்டனை செய்வதற்குச் சக்தியில்லாத அடியேன், தேவரீர் திருவுளப்பாங்கின்படி மேலோர் ஏற்படுத்திய தரும நூல்களில் கொலை செய்தவனைக் கொலை செய்யக் கடவரென்று விதித்திருக்கின்ற விதியின்படி, விதி மாறாட்ட முதலான குற்றங்களுக்குச் சிறிது மிடங்கொடாமல், இவனைக் கொலை செய்யும்படித் திரிகரண சுத்தியாகத் தீர்ப்பிட்டுக் கொண்டு, இதோ தேர்க்காலிலூர்ந்து கொலை செய்யத் தொடங்குகின்றேன்,

இத் தீர்ப்பினிடத்துத் தேவரீர் திருவடி சாட்சியாக என் மனமறிந்து யாதொருபிசகும் நேரிட்டதில்லை. என்னையுமறியாது ஏதாகிலுங் குறை நேரிட்டிருக்குமானால் அதைத் தேவரீர் மன்னித்துக்கொள்ள வேண்டும். இந்தக் குற்றவாளியின் பாவாத்மாவை அப்பாவத்தினின்று நீங்கும் வண்ணந் தக்க தண்டனை செய்வித் தருளி, மறுபிறப்பிலாயினும் கடைத்தேறும் வழியைத் கடாக்ஷக்கவேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்துகொண்டு,

தேரிற்கட்டிய குதிரைகளை விழுந்து கிடக்கின்ற வீதிவிடங்கன் கழுத்தடியிற் சக்கரமழுந்தும்படி நேராக முடுக்கித் தேரை நடத்தினார்.
அப்போது தேர்ச்சக்கரமானது வீதிவிடங்கன்மேல் அழுந்திக் கறகறவென்று இழுத்துக்கொண்டு அதிவேகமாகச் செல்ல, உடல் குழம்பிச் சின்னாபின்னப்பட்டு நசுக்குண்டு, கையாற் பிசைந்து ரசம் பிழிந்த மாங்கனியின் கோதுபோல, உடல்வேறு உயிர்வேறாக இறந்தான்.

.அதுகண்ட தேவர்களெல்லாம் “அருமையாகப் பெற்ற புத்திரனை நோக்காமல் புண்ணியத்தை நோக்கிய கண்ணியவானே! உனக்குச் சுபகர முண்டாவதாக!” என்று வாழ்த்திக் கற்பகப் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் அதிர்ந்தன. அந் நகரத்தா ரெல்லாம் “இப்படிப்பட்ட நீதி செலுத்துகின்ற மஹாராஜனை என்ன தவஞ்செய்து பெற்றுக் கொண்டோம்” என்றும், “ஐயோ! இனி எக்காலத்தில் வீதிவிடங்கனைக் காண்போம்?” என்றும், இன்பக் கண்ணீரும் துன்பக்கண்ணீரும் விட்டுக்கொண்டு நின்றார்கள்.

உடனே மனுச்சக்கரவர்த்தியானவர் மந்திரியின் பழிக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் துணிந்து தேரிலிருந்து கீழே யிழிந்தார்.

அப்போது ஸ்ரீகண்டர், அனந்தேசர், காலச்செந்தீ யுருத்திரர், துவாதச ருத்திரர், ஏகாதச ருத்திரர், புத்தியட்டகர், கூர்மாண்டர், ஆடகர், சதவுருத்திரர், அஷ்டமூர்த்திகள், நீலலோகிதர், கங்காளகபாலர், அசுவாரோகணர், அஷ்டபயிரவர், வீரபத்திரர், சக்ரதரர், நான்முகர் முதலான பதமூர்த்திகளும்,

கபாலிகன், அசன், புதன், வச்சிரதேகன், பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பலவான், அதிபலவான், பாசாத்தன், மகாபலவான், சுவேதன், ஐயபத்திரன், தீர்க்கபாகு, ஜலாந்தகன், மேகவாகனன், சௌமியகேசன், சடாதரன், லட்சுமிதரன், ரத்நந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்தியாதிபன், ஈசன், சர்வஞ்ஞன், பலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோகனன் முதலான பதத்தலைவர்களும்;

இந்திரர், சந்திரர், சூரியர், முதலான தேவர்களும்; வசிட்டர், அகத்தியர், புலத்தியர், பராசரர், வியாசர் முதலான முனிவர்களும், கண்ணுவர், கருக்கர், சதானந்தர் முதலான இருடிகளும்;

அசுரர், அந்தரர், ஆகாயவாசிகள், விஞ்சையர், வித்தியாதரர், கருடர், காந்தருவர், இயக்கர், கின்னரர், கிம்புருடர், சித்தர், நிருதர், பூதர், பைசாசர், போகபூமியர், உரகர் முதலான கணங்களும்; நந்தி, பிங்கிருடி, சண்டன், பிரசண்டன், சங்குகன்னன், வாணன், அந்தகன், கும்போதரன், விரூபாக்ஷன் முதலான பிரமத கணங்களும் சூழ்ந்து துதித்து வரவும்;

பேரிகை, மத்தளம், தாளம், சங்கம், சச்சரி, தடாரி முதலான வாத்தியங்கள் முழங்கி வரவும்;

“எல்லாம் வல்ல இறைவன் வந்தான்! நல்லோர்க்கருளும் நாயகன் வந்தான்! முப்புரமெரித்த முன்னோன் வந்தான்! தப்பிலார்க் கருள்செயுந் தயாநிதி வந்தான்; வள்ளல் வந்தான்! மஹாதேவன் வந்தான்! எள்ளிலெண்ணெய்போ லிருப்பவன் வந்தான்! அன்பர்க்கருளும் ஐயன் வந்தான்! இன்பங்கொடுக்கும் இறைவன் வந்தான்! முத்தொழில் நடத்தும் முதல்வன் வந்தான்! பத்தர்கள் புகழும் பதத்தோன் வந்தான்! தேவர்கள் போற்றுந் தியாகன் வந்தான்! மூவர்கள் வாழ்த்தும் முக்கணண் வந்தான்!” என்று சின்னங்கள் பிடித்து வரவும்;

தும்புருநாரதர் யாழிசை பாடிவரவும்; உருத்திரகணிகையர் நடனஞ்செய்து வரவும்; ஒற்றை வெண்குடை, சாமரை முதலான மங்கல விருதுகள் நெருங்கி வரவும்; ஆனைமுகக் கடவுளும் ஆறுமுகக் கடவுளும் இருபக்கங்களினு மிசைந்து வரவும்; உலகமாதாவாகிய உமாதேவியார் இடது பக்கத்திலிருக்க, சடாமகுட திரிநேத்திர காளகண்ட சதுர்ப்புஜம் முதலானவை விளங்க,

தர்மசொரூபமாகிய இடபவாகனத்தின்மேல் சர்வ மங்கல சக்தியே திருமேனியாகக் கொண்ட தியாகராஜப் பெருமான் எழுந்தருளி, மனுச்சோழ ராஜனுக்கு முன் தரிசனங் கொடுத்தருளி, குளிர்ந்த நிலவு துளம்பி வீசுகின்ற புன்னகைகாட்டி, அரசனுக்கு ஜில்லென்று உடம்பும் உள்ளமும் உயிரும் குளிரும்படி செய்வித்து, கருணை யென்னும் வெள்ளம் நிறைந்து பொங்கித் ததும்பிப் பெருக்கெடுத்து ஒளி கொண்டோங்கி மடை திறந்தோடுகின்ற மலர்போன்ற திருக்கண்களால் அருள்நோக்கஞ் செய்து, அவ்வரசனுக்குண்டாயிருந்த விடாய் முழுதுந் தீர்த்து,

“நம்மிடத்து நம்பிக்கையும் பேரன்பும் வைத்து மனுநீதி தவறாது அரசாட்சி செய்கின்ற மனுச்சோழனே! நீ நடத்துகின்ற நீதியின் பெருமையை உலகத்தவர் செவ்வையாகத் தெரிந்து கொள்ளும்படி நாமே இவ்வாறு சோதித்தோம், இனி ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்” என்று திருவாய் மலர்ந்தருளி, இறந்து கிடக்கின்ற பசுங்கன்றும் கலாவல்லபனென்னும் மந்திரியும் வீதிவிடங்கனென்னும் இராஜ குமாரனும் உயிர் பெற்று எழுந்திருக்கும்படி கடாக்ஷத்தருளினார்.

.அந்தக்கணமே நித்திரை நீங்கி யெழுகின்றதுபோல், இளங்கன்றானது உயிர்பெற்றெழுந்து தன் தாய்ப் பசுவினிடத்தில் சென்றது. மந்திரியும் புதல்வனும் உயிர்பெற்றெழுந்து, ஆண்டவனை வணங்கி அருகே மலர்ந்த முகத்தோடு வந்தனை செய்துகொண்டு மகிழ்ந்து நின்றார்கள்.

அதுகண்டு அந்நகரத்திலுள்ள ஜனங்களும் மற்றவர்களும் தம்மை யறியாத பெருங் களிப்புடையவர்களாய்ச் சிலர் “அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அற்புதம்!” என்று ஆடினார்கள்; சிலர் “பண்ணிய பூசை பலித்தது பலித்தது!” என்று பாடினார்கள்; சிலர் “சூரியகுலந் தோன்றியது! தோன்றியது!” என்று துதித்தார்கள்; சிலர் “துக்கம் நீங்கியது! சுகம் கிடைத்தது!” என்று துள்ளினார்கள்; சிலர் “குறையெல்லாந் தீர்ந்தது! குறையெல்லாந் தீர்ந்தது!” என்று கொண்டாடினார்கள்; சிலர் “கும்பிட்ட தெய்வம் குறுக்கே வந்தது!” என்று குதித்தார்கள்; சிலர் “எம்பெருமான் எதிர்ப்பட்டால் என்ன முடியாது!” என்று எக்களித்தார்கள்; சிலர் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டு ஒரு காதமட்டும் ஓடித் திரும்பினார்கள்; சிலர் தோள் தட்டிக் கொண்டும் தொடை தட்டிக்கொண்டும் முகரோமத்தை முறுக்கிக்கொண்டும் முகமலர்ந்துகொண்டும் உடல் நிமிர்த்துக்கொண்டும் உலாவி நின்றார்கள்; சிலர் “வாழ்வு வந்தது!” என்று மனம் பூரித்தார்கள்.

.இப்படி அவரவர்களும் அளவில்லாத ஆனந்தமுடையவர்களாய் இழந்துவிட்ட பொருள் எதிர்வரப் பெற்றவர்கள்போல் சந்தோஷகோஷஞ் செய்து நிற்க, மனுச் சக்கரவர்த்தியானவர்,

கங்கையும் இளம்பிறையும் விளங்குகின்ற சடாமகுடத்தையும், திரிபுண்டரமுந் திலகமும் திருநோக்கும் விளங்குகின்ற நெற்றியையும், அருள் ததும்பி வழிகின்ற திருநோக்கங்களையும், சங்கு குண்டலமணிந்து தாழ்ந்த செவிகளையும், நறுங்குமிழ் போன்று விளங்குகின்ற நாசியையும், வேதமாகிய தெள்ளமுதத்தைக் கொள்ளைகொண்டு உண்ணும்படி அன்பர்களுக்கு அருளிச் செய்கின்ற செம்பவளம் போன்ற திருவாய் மலரையும், வானவர்க்கு உயிர் கொடுத்த மணிகண்டத்தையும், கொன்றைமாலை யணிந்து குலவரைகள்போல் உயர்ந்த திருத்தோள்களையும், மானும் மழுவும் வரதமும் அபயமுங் கொண்ட மலர்க்கரங்களையும், சிவந்து மெல்லென்று திருவருள் பழுத்து ஆனந்தமொழுகிப் பத்தர்கள் மனத்தில் தித்தித்திருக்கும் பாதமலர்களையும், செம்பவளமாலை போன்ற திருமேனியையும், பச்சைக்கொடி படர்ந்ததுபோன்று பார்வதியார் மகிழ்ந்து விளங்குகின்ற பாகத்தையும் கண்குளிரக் கண்டு களிப்படைந்து,

ஆனந்தநீர் ஊற்றுநீர் போலச் சுரந்து சுரந்து விழுந்து விழுந்து மார்பினிடத்து வண்டலாடவும், உடல் குழைந்து விதிர்விதிர்த்துச் சிலிர்சிலிர்த்து மயிர்க்கூச்செறிந்து என்பு நெக்குவிட்டுருகியும், மனங் கனிந்துகனிந்து கசிந்துகசிந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து படபடவென்று பதறிப்பதறி உருகியுருகி ஆனந்த வெள்ளத்தி லழுத்தியழுந்திப் பரவசமாகியும்,

“சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிற்பர தற்பர சிற்குண சின்மய சிவசிவசிவ” என்று வாய்நீர் சுரந்து பாடிப்பாடி நாக்குழறித் தழும்பேறியும், “ஹர ஹர” என்று ஆனந்தக் கூத்தாடியும், தண்டுபோல் அனந்த முறை கீழே விழுந்து விழுந்து வணங்கி உடம்பிற் புழுதியாடியும்,

குளிர்ச்சி பொருந்திய சந்திரபிம்பம் போன்ற முகத்தின்கண் முத்துமாலை யணிந்ததுபோல வியர்வரும்பி இளநகை தோன்றி மலர்ந்து விளங்கக் கைகளைக் கூப்பிச் சிரசின் மேல் வைத்துக்கொண்டு, அன்பே வடிவமாகி நின்று,

“பிரமன் முதலாகிய பெரிய தேவர்களெல்லாம் அரியதவஞ் செய்தும் கனவினுங் காண்பதற் கருமையாகிய கடவுளே! அன்பு அணுவளவு மில்லாத அடியேனுக்கு அருமையாகிய திருமேனியை நனவிலே எளிதாகத் காட்டியருளிய தேவரீர் பெருங்கருணையை யென்னென்று துதிப்பேன்! பொய்யுலகத்தை மெய்யென்று நம்பிப் புன்மையாகிய போகத்தை விரும்பி, புவியாண்டு மீளாநரகில் விழத் துணிந்திருந்த அஞ்ஞானத்தையுடைய அடியேனையும் ஓர் பொருளாகத் திருவுள்ளத்திற் கொண்டு காட்சி கொடுத்தருளிய கருணைக் கடலே! கண்ணுண் மணியே! கரும்பின் சுவையே! கற்பகக் கனியே! கருணாநிதியே!

தேவரீர் திருவருட்பெருமையை யென்னென்று சொல்லுவேன்! யான் என்கின்ற ஆணவப் பேயும், எனதென்கின்ற இராட்சதப் பேயும், மாயையென்கின்ற வஞ்சப் பேயும், பெண்ணாசை யென்கின்ற பெரும்பேயும், மண்ணாசை யென்கின்ற மானிடப்பேயும், பொன்னாசை யென்கின்ற பொல்லாப் பேயும், குரோத மென்கின்ற கொள்ளிவாய்ப் பேயும், உலோப மென்கின்ற உதவாப் பேயும், மோகமென்கின்ற மூடப் பேயும், மதமென்கின்ற வலக்காரப்பேயும், மாச்சரிய மென்கின்ற மலட்டுப் பேயும், மனப் பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட, ஆடியாடி யிளைக்கின்ற அடியேனைக் காத்தருளத் திருவுள்ள மிரங்கித் தரிசனங் கட்டளையிட்டுத் துன்பத்தை நீக்கி யின்பத்தை யளித்த எம்பெருமானே! என்னாண்டவனே!

என் தந்தையே! என் தாயே! என் குருவே! என் தெய்வமே! என் குலதெய்வமே! என்னுயிர்த் துணையே! என்னறிவுக் கறிவாகிய இறைவனே! தேவரீர் திருவடிப்புகழை வேதங்களு மறியாது விழித்துக் கொண்டு தேடித்தேடி இளைக்கின்றன வென்றால், கிருமி கீடங்களிலுங் கீழ்ப்பட்ட அசேதனனாகிய அடியேன் எப்படியறிந்து துதிப்பேன்! தேவரீர் திருவடிக் காட்சி பலிக்கும்படி செய்வித்த இந்தப் பசுவுக்குங் கன்றுக்கும் என்னை யடிமையாகக் கொடுப்பேன் அல்லது வேறென்ன கைம்மாறு செய்வேன்!

தேவரீர் திருமேனிக்காட்சி கிடைப்பதற்குக் காரணமாகிய வீதிவிடங்கனென்னும் புத்திரன் இன்றுதான் எனக்குப் புத்திரனாயினான்! தேவரீரது திருவருட் கோலத்தைக் காணப்பெற்ற அடியேனுக்கு இனி என்னகுறை இருக்கின்றது! அன்பர்களுக்கு இன்பமளிக்கின்ற ஆண்டவனே தேவரீர் கிருபாநோக்கஞ் செய்யப் பெற்று உடல்பூரித்தேன்! உள்ளங்குளிர்ந்தேன்! உயிர் தழைத்தேன்! பசுங்கன்றும் மந்திரியும் மைந்தனும் உயிர்பெற்று எழுந்திருக்கவும் வரம்பெற்றேன்! வாழ்வடைந்தேன்! துக்க மெல்லாம் நீங்கினேன்! சுகப்பட்டேன்! மனத்துக்கு அடங்காத மகிழ்ச்சிகொண்டு நின்றேன்!

இனி அடியேனுக்குத் தேவரீர் திருவடியினிடத்துத் தவறாத தியானமும் சலியாத அன்பும் தந்தருளி யென்னை அடிமை கொள்ள வேண்டும். குற்றஞ் செய்தாலும் குணமாகக் கொள்கின்ற குணக்குன்றே! பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த பரம்பொருளே! புலிமுலையைப் புல்வாய்க்குக் கொடுத்த புண்ணியமூர்த்தியே! கல்லடிக்கும் வில்லடிக்குங் கருணைபுரிந்த கருத்தனே! திருவாரூர்ப் பூங்கோயிலி லெழுந்தருளிய தியாகராஜப் பிரபுவே! போற்றி! போற்றி!” என்று தோத்திரஞ் செய்து தொழுதுநின்றார்.

.அரசன் செய்த தோத்திரங்களைத் திருச்செவி ஏற்றுக்கொண்டு தியாகராஜப் பெருமான் “நம்மிடத்தில் அன்புள்ள அரசனே! நீ இன்னும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, நமது அருளே துணையாகக்கொண்டு, இவ்வுலகத்தை யெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, மெய்யறிவு விளங்கி, மாறாத மகிழ்ச்சியோடிருக்கக் கடவாய்! பின்பு எக்காலத்தும் மீளாத பேரானந்த போகத்தை நாம் தருவோம்” என்று அருள்புரிந்து கணங்களுடன் அந்தர்த்தானமாக எழுந்தருளினார்.

.அது கண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு “என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போ லெனக் கினியவர்கள் உண்டோ!” என்று உபசரித்து,

பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளுஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடை கொண்டு புறப்பட்டு, அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அதுகண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு

“என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போலெனக் கினியவர்கள் உண்டோ!” என்று உபசரித்து, பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடைகொண்டு புறப்பட்டு,

அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அந்தணர் அமைச்சர் முதலானவர்களும் வாழ்த்தி மங்கலச் செய்கைகளோடு எதிர்கொள்ள அரண்மனையிற் சென்று, வேதியர், துறவினர், விருந்தினர், உறவினர், முதலானேர்களுக்கு அவரவர்க்குத் தக்க வரிசைகளைச் செய்து மகிழ்வித்து,

கற்புநிலை தவறாத மனைவியார் மனங்குளிர்ந்து களிக்கும்படி மைந்தனைக் காண்பித்து, மந்திரி முதலானவர்கள் குழச் சிவானுக்கிரகத்தால் சிங்காசனாதிபதியாய் உலகத்தையெல்லாம் ஒருகுடைநிழலில் வைத்து அறநெறிப்படியே அரசாட்சி செய்திருந்தார்.

வாழ்த்து
நேரிசை வெண்பா

வாழி மனுச்சோழர் வாழி யவர்மைந்தன்
வாழியவர் மந்திரியாம் வல்லவனும்-வாழியவர்
செங்கோன் முறையவர்தஞ் சீர்கேட் பவர்வாழி
எங்கோன் பதம்வாழி யே.

திருச்சிற்றம்பலம்!

மனுமுறை கண்ட வாசகம் முற்றிற்று.


$$$

One thought on “மனுமுறை கண்ட வாசகம்- 5

Leave a comment