மனுமுறை கண்ட வாசகம் -2

-வள்ளலார்

தமிழின் ஆரம்பகால உரைநடை என்பதால் சற்று நிதானமாகப் படிக்க வேண்டிய, நெடும் வாக்கியங்கள் கொண்ட நூல், வள்ளலாரின் ‘மனுமுறை கண்ட வாசகம்’. செய்யுள் உரைநூல்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழின் எழுத்துநடையை ஆற்றொழுக்கான உரைநடைக்கு மாற்றும் முயற்சியில் இந்நூல் முக்கியமான ஒரு மைல்கல். (வாசகரின் வசதிக்காக வள்ளலாரின் நெடிய, கலப்பு வாக்கியங்கள் இங்கு பிரிக்கப்பட்டிருக்கின்றன). மனுநீதி சொல்லும் அறங்களையே வள்ளலார் இந்நூலில் சுட்டிக்காட்டுகிறார்…

பகுதி-1

.இந்தப் பிரகாரம் அவ்வவ் வீதியிலுள்ள ஸ்திரீ ஜனங்களும் புருஷ ஜனங்களும் பார்த்துப் பார்த்துப் பலவிதமாகப் புகழ்ந்து நெருங்க வீதிவிடங்கன் தேரிலேறிச் செல்லும்போது, ஒரு வீதியில், தேரிலே கட்டிய குதிரைகள் தேர்ப்பாகன் வசத்தைக் கடந்து தெய்வத்தின் வசமாகி, அதிவேகமாக அத்தேரை இழுத்துக்கொண்டு சென்றன.

.அத் தருணத்தில் தாய்ப்பசுவானது பின்னே வர முன்னே வந்த அழகுள்ள ஒரு பசுங்கன்றானது ‘இளங்கன்று பயமறியாது’ என்ற மொழிப்படியே துள்ளிக்குதித்துக்கொண்டு எதிர் வந்து, இராஜகுமாரனைச் சூழ்ந்து வருகிற சனத்திரள்களுக்குள்ளே ஒருவருமறிந்து கொள்ளாதபடி ஊழ்வினையாற் கண்மயக்கஞ் செய்வித்து உட்புகுந்து, அதிவேகமாகச் செல்லுகின்ற தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு அரைபட்டு உடல் முறிந்து குடல்சதிந்து உயிர்விட்டுக் கிடந்தது.

.உடனே அந்தப் பசுங்கன்று தனது தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டதைக் கேட்ட வீதிவிடங்கன் இடியோசை கேட்ட நாகம் போலத் திடுக்கிட்டு, நடுநடுங்கித் தேரிலிருந்து கீழே விழுந்து, எண்ணப்படாத துன்பத்தோடும், பயத்தோடும் எழுந்துபோய் அப் பசுங்கன்று இறந்து கிடப்பதைக் கண்டு, மதிமயங்கி மனம் பதைத்துக் கையுங்காலும் நடுக்கெடுத்துப் பெருமூச்சுவிட்டு உடம்பு வியர்த்துச் சோபமடைந்து விழுந்து, சிறிதே தெளின் தெழுந்து கண்களிலே நீர் ஆறாகப் பெருக நின்று,

“சிவசிவா! சிவசிவா!! சங்கரா! சங்கரா!! சம்புவே! சம்புவே!! மஹாதேவா! மஹாதேவா!! தியாகராஜப்பிரபு! தியாகராஜப்பிரபு!! தேவரீரைத் தரிசிக்க வேண்டுமென்று வந்த அடியேனுக்கு இப்படிப்பட்ட இடரும் வரலாமா? நன்றறியாத பாவி இவன் நம்மைத் தரிசிக்கத் தக்கவனல்லனென்று திருவுளங் கொண்டு தானோ என்னை இந்தப் பழிக்கு ஆளாக்கியது?

தேவரீரைத் தரிசனஞ் செய்ய எண்ணி வந்த அடியேன் கால்வருந்த நடந்து பயபக்தியுடனே வந்து தரிசிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல், செல்வச் செருக்கினால் தேரிலேறிக் கொண்டு ஆடம்பரங்களுடன் பக்தியில்லாது பகல்வேஷக்காரன் போல டம்பவேஷங் காட்டி வந்த அன்பில்லாத பாவியாகிய என் பிழையைக் குறித்து நோவதல்லது, எம்பெருமானிடத்திற் குறை சொல்லத் தகுமோ? இப்படிப்பட்ட பெரும்பாதகம் செய்யத் தானோ பிள்ளையாகப் பிறந்தேன்? விரிந்த பாற்கடலில் விஷம் பிறந்ததுபோல் மறைநெறி தவறாத மனுவின் வமிசத்தில் எதிரற்ற பாவியாகிய நான் ஏன் பிறந்தேன்? பழிபாவங்களைக் கனவிலும் கண்டறியாத மனுச்சோழராகிய என் பிதாவுக்குப் பெரும்பழியைச் சுமத்தத் தானோ பிறந்தேன்?

சிவபெருமானைத் தரிசித்துச் சீர்பெறலாமென்று எண்ணி வந்த எனக்குச் சிவதரிசனங் கிடையாது தீராப்பழி கிடைத்ததே! ஓகோ! ‘எண்ணம் பொய்யாகும் ஏளிதம் மெய்யாகும்’ என்ற வார்த்தை என்னிடத்திலே இன்று அனுபவப்பட்டதே! ஐயோ! நான் கற்ற கல்வி யெல்லாம் கதையாய் முடிந்ததே; நான் கேட்ட கேள்வியெல்லாம் கேடாய் முடிந்ததே; நான் அறிந்த அறிவெல்லாம் அவலமாய் விட்டதே; நான் தெளிந்த தெளிவெல்லாம் தீங்காய் விட்டதே! அரஹரா! இப்படிப்பட்ட தீங்கு வருமென்று அறிந்தால் தேரிலேறேனே,

பசுவைக் கொலை செய்வதே பாவங்களிலெல்லாம் பெரும் பாவம், அதைப் பார்க்கிலும் பசுங்கன்றைக் கொலைசெய்வது பஞ்சமா பாதகத்தினும் பதின்மடங்கு அதிகம் என்று பெரியோர் சொல்லக் கேட்டறிந்திருக்கிற நான் இன்று அந்தப் பாதகத்துக்கு ஆளாகியும் உயிரை விடாமல் உடலைச் சுமந்திருக்கின்றேனே;

இளங்கன்று எதிரே வரவும் அதைப் பாராமல் அதன்மேற் தேரை நடத்தியது செல்வச் செருக்கல்லவோ என்று உலகத்தார் பழிக்கும் பழிக்கத்தான் உடம்பெடுத்தேன்; நான் புத்தி பூர்வமாக எள்ளளவாயினும் அறிந்திருப்பேனானால் இப்படிப்பட்ட அபாயம் நேரிடவொட்டேன்; என்ன செய்வேன்! என்ன செய்வேன்!!

மனுச்சோழர் காலத்தில் அவர் புத்திரன் ஒரு பசுங்கன்னைக் கொன்றான் என்னும் பழிமொழியை உலகத்தில் நிலைபெற நாட்டினேனே! நீதி தவறாது உலகத்தை யெல்லாம் ஆளுகின்ற மனுச்சக்கரவர்த்தி யென்னும் மகாராஜனுக்குப் பிள்ளையாகப் பிறக்கும்படி இருந்த நல்வினை இப்போது பேயாகப் பிறப்பதற்குத் தக்க தீவினையாய் விட்டதே! இந்தப் பிறப்பிலே இப் பழியை ஏற்றுக் கொள்வதற்கு முன் பிறப்பில் என்ன பாவஞ் செய்தேனோ?

தூய்மையுள்ள சூரிய குலத்திற்கு ஆதியாகிய மனுவென்பவரும் அவர் வழிக்குப்பின் வழிவழியாகத் தோன்றிய குலோத்துங்க சோழர், திருநீற்றுச் சோழர், காவிரிகரைகண்ட சோழர், மனுநீதிச் சோழர், இராஜேந்திர சோழர், இராஜசூடாமணிச் சோழர், இராஜராஜ சோழர், உறையூர்ச் சோழர், மண்ணளந்த சோழர், கங்கைகொண்ட சோழர், தேவர்சிறைமீட்ட சோழர், மரபுநிலைகண்ட சோழர், எமனை வென்ற சோழர், சுந்தரச் சோழர், மெய்ந்நெறிச் சோழர் முதலான என் மூதாதைகளான முன்னோர்களெல்லாம் தீமையைச் சேராது செங்கோல் நடத்தி அடைந்த கீர்த்தி இக்காலத்தில் எடுக்கப்படாத பழியைச் சுமந்த என்னால் மறைந்து போகும்படி நேரிட்டதே! ஐயோ! இதை எண்ணும்போது, நான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பானேனே! மரபழிக்க வந்த வச்சிராயுதமானேனே!

கன்றுக்குப் பாலூட்டாதவனைக் கண்டாலும் பாவமென்று சொல்லுகிற பெரியோர்கள் சேங்கன்றைத் தேர்க்காலிலிட்ட என்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? இந்தக் கன்று எங்கே பிறந்ததோ? எங்கே வளர்ந்ததோ? எங்கே போக எண்ணியதோ? இங்கே வந்து இறக்க நேரிட்டதே! சுந்தரமுள்ள இக் கன்று இறந்ததைக் கண்ட எனக்கே இவ்வளவு துக்கமுண்டாயிருக்கின்றதே! இதை ஈன்ற தாய்ப்பசு கண்டால் என்ன பாடு படுமோ?

இச் செய்தியை என் பிதாவானவர் கேட்பாரானால் ஏதாய் முடியுமோ? வார்த்தை மாத்திரத்திலே பழியென்று சரசஞ் செய்கின்றவர்களையுந் தண்டிக்கின்ற தந்தையார் திருமுகத்தில் தகுதியல்லாத பழியைச் சுமந்து தண்டனைக்காளாகிய நான் எவ்வாறு விழிப்பேன்? இனி இவ்வுலகில் பழிக்காளாகி உண்டுடுத்து உலாவி உயிர் வைத்திருக்க மாட்டோன்; இன்றே என்னுயிரை இழந்துவிடுகிறேன்!” என்று பலவிதமாகப் பரிதபித்து, துக்க சமுத்திரத்தில் அழுந்திக் கரை காணாதவனாகி நின்றபோது,

உடன் சூழ்ந்துவந்த அந்தணர் அமைச்சர் முதலானோர் ராஜகுமாரனைப் பார்த்துத் தாமும் விசனமடைந்தவர்களாய், “ஓ விவேகமுள்ள வீதிவிடங்கனே! நீர் என்ன கெடுதி நேரிட்டதென்று இப்படிப் பிரலாபிக்கின்றீர்? அந்தப் பசுவின் கன்றை நீர் கொல்ல வேண்டுமென்று கொன்றீரோ? அல்லது அந்தக் கன்று தேர்க்காலில் அகப்படுவதை அறிந்தும் அஜாக்கிரதையாயிருந்தீரோ? அக்கன்று ஓடிவந்ததைச் சூழ்ந்திருந்த நாங்கள் ஒருவரும் அறியோமே; நீர் எப்படி அறிவீர்? அது கர்மவசத்தாலே எல்லார் கண்களிலும் மண்களைத் தூவி வலிய வந்து மடிந்ததே; அதற்கு நீர் என்ன செய்வீர்? மிருக ஜாதிகளிலே உயர்வுள்ள பசுவின் கன்று இறக்கநேரிட்டதே யென்று எண்ணி யெண்ணிச் சோர்ந்து போகின்றீர். ஆனால் அதற்கென்ன செய்வோம்?

பொன்கத்தி என்று கழுத்தரிந்து கொள்ளலாமோ? இதனால் நமக்குப் பழி பாவம் ஒன்றுமில்லை; ஆயினும் இதுபற்றி உமது மனது ஆலைபாய்ந்து அவலங் கொள்ளுகின்றபடியால், வேதத்தில் விதித்திருக்கின்ற பிராயச்சித்தங்களுள் இதற்குத் தக்கது எதுவோ அதைக் கேட்டறிந்து செய்து கொள்ளலாம்; நீர் சித்தங் கலங்காமல் தேரிலேறும்” என்று சொன்னார்கள்.

.அதுகேட்ட வீதிவிடங்கன் “நடுவாகப் பேசுகின்ற நல்லோர்களாக விருந்தும் காலவேற்றுமையால் கருத்து வேறுபட்டு முகநட்பாகப் பேசி முகந்துடைக்கின்றவர்கள் போற் சொன்னீர்கள். இதென்ன ஆச்சரியம்!

பூர்வம் எங்கள் வம்சத்தில் சிபிச் சக்கரவர்த்தி என்பவர் ஒருவர் ஒரு வேடன் துரத்திக்கொண்டு வரப்பயந்து அடைக்கலமாகப் புகந்த புறாவுக்கு அபயஹஸ்தஞ் செய்து, பின்பு அவ்வேடன் வந்து புறாவைக் கேட்டு வழக்கிட்டபோது, அந்தப் புறாவுக்கு ஈடாகத் தமது சரீரத்திலுள்ள மாமிசத்தை யெல்லாம் அரிந்தரிந்து தராசில் வைத்தும் நிறை காணாமலிருக்க, அதுகண்டு தாமும் அந்தப் தராதசிலேறினார்.

அவர் பட்சி ஜாதிகளில் சாமானியப் பிறவியாகிய புறாவின் உயிர்க் கொலைக்கே அஞ்சித் தம் உடம்பைக் கொடுத்ததுமன்றி உயிரையுங் கொடுத்தாரானால், அப்பட்சி ஜாதிகளில் விசேடப் பிறப்பாகிய கருடன் முதலான உயிர்களினிடத்து எப்படிப்பட்ட காருண்ணியமுள்ளவராய் இருக்க வேண்டும்? அதனினும் உயர்ந்த மிருக ஜாதிகளில் எவ்வகைப்பட்ட கிருபையுடையவராய் இருக்க வேண்டும்?

அதனினும் அம்மிருக ஜாதிகளில் விசேடமாகிய பசுக்களினிடத்தில் எப்படிப்பட்ட இரக்கமுள்ளவராய் இருக்க வேண்டும்? அதனினும் பசுவின் கன்றுகளிடத்தில் எவ்வகைப்பட்ட தயவுள்ளவராய் இருக்க வேண்டும்? அப்படிப்பட்டவருடைய வம்சத்தில் நான் பிறந்தும், இன்று வீதியில் வரும்போது யாரோ பயங்காட்டித் துரத்த, அதனால் நடுங்கி என்னெதிரே அடைக்கலமாகத் துள்ளியோடி வந்த இந்தப் பசுங்கன்றை அபயஹஸ்தங் கொடாமல், அநியாயமாகத் தேர்க்காலில் அகப்பட்டிறந்து போகச் செய்தேனே! இப்படிப்பட்ட என்னை என்ன செய்தால் தீரும்?

என்னை இதற்குத்தக்க பிராயச்சித்தஞ் செய்து கொள்ளும்படி சொன்னீர்கள்; எங்கள் வம்சத்திலிருந்த அரசர்கள் இரக்கத்துடன் நீதி தவறாது அரசு செலுத்தி வந்த கிரமத்தையும், என் பிதாவாகிய மனச்சோழர் நடுநிலை தவறாமல் எவ்வுயிர்களையும் தம்முயிர்போலப் பாதுகாத்து வருகின்ற முறைமையையும், அரசர்க்குக் கோபூசை செய்வது கடனென்ற வேதவாக்கியத்தையும், அரசர் பசுக்களுக்கு யாதொரு குறைவும் நேரிடவொட்டாமல் மிகுந்த ஜாக்கிரதையுடன் விருத்தி செய்விக்க வேண்டுமென்கிற பெரியோர் வாக்கியத்தையும், ஐயோ! எங்கே அனுப்பிவிட்டு இங்கே பிராயச்சித்தஞ் செய்து கொள்ளுவேன்!” என்று துயரத்துடன் சொல்லினான்.

.அதுகேட்ட அவ்வந்தணர் முதலானவர்கள் “வாராய் இராஜபுத்திரனே! நாங்கள் முகத்துக் கிச்சையாக முன்னொன்று பேசிப் பின்னொன்று சொல்லுகின்றவர்களல்ல; நெடுநாளாக எங்களுடன் பழகியிருந்தும் எங்கள் சுபாவம் இன்னமும் உமக்கு நன்றாகப் புலப்படவில்லை என்று தோன்றுகின்றது. உலகம் தலைகீழாகுமானாலும் உள்ளபடி சொல்லுவோமே யல்லது புதிதாகத் தொடுத்துப் பொய் பேச மாட்டோம். நாங்கள் சொல்லும் வார்த்தையில் நம்பிக்கை வைத்துக் கேட்கக் கடவீர்.

அந்தப் பசுங்கன்று ஒருவர் துரத்த அதனால் பயந்து அடைக்கலமாக வேண்டுமென்கின்ற அறிவோடு உமக்கெதிரே ஓடிவந்ததல்ல; அல்லது தானே துள்ளிக் குதித்து ஓடிவந்ததுமல்ல; அதை இன்னவிடத்தில் இன்ன காலத்தில் இன்னபடி இறக்குமென்று விதித்திருந்த அதன் தலைவிதியே அதனைத் துரத்திக் கொண்டுவந்து தேர்க்காலில் அகப்படுத்திச் சிதைந்துவிட்டது; அதன் விதி அப்படியிருக்க நீர் வீணாக விசனப்படுவதில் என்ன பலன்?

‘கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டுபோகத் தஞ்சாவூர்ப் பார்ப்பான் தண்டங் கொடுத்தான்’ என்னும் பழமொழிபோல அதனுயிரே விதி கொள்ளை கொள்ள உம்முயிரைத் தண்டங் கொடுப்பதேன்? நீர் ஒன்றுக்கும் அஞ்சாமல் தேரிலேறும்” என்று சொன்னார்கள்.

.அதுகேட்டு ராஜபுத்திரன், “சிவதரிசனம் செய்ய எண்ணித் தேரிலேறும்போதே கால்தவறியும் இடது தோளும் இடது கண்ணும் துடித்தும் காட்டிய உற்பாதங்களை ஆலோசியாமல் புறப்பட்ட என்மதியை நினைத்துத்தான் துயரப்படுவேனோ! அரசர் குலத்திற் பிறந்தும் என்னை இழிகுலத்தார் செய்யும் செய்கையைச் செய்வித்த என்விதியை நினைத்துத்தான் துயரப்படுவேனோ! மாசில்லாத சூரிய குலத்துக்கு மாசுண்டாகும்படி செய்ததைக் குறித்துத் துயரப்படுவேனோ! பிதாவுக்குப் பழிசுமத்தப் பிள்ளையாகப் பிறந்ததைக் குறித்துத் துயரப்படுவேனோ! இக்கன்றின் இறப்பைக் கண்ட தாய்ப்பசு துக்கப்படுமென்பதை நினைத்துத் துயரப்படுவேனோ! நானொருவன் எதற்கென்று துயரப்படுவேன்! என்ன செய்வேன்! செய்யத் தக்கதான்றும் இன்ன தென்று அறியேனே!

ஆயினும் ‘முற்ற நனைந்தார்க்கு ஈரமில்லை’ என்பதுபோல முழுதும் பழிப்பட்ட எனக்கு இனி யென்ன துக்கமிருக்கின்றது! இனிப் பெரியயோர்சொல் கடக்கப்படாது என்பதுபற்றி உமது சொற்படியே இதோ இரதத்தில் ஏறுகின்றேன்! என்னை எப்படிப் புனிதனாக்க வேண்டுமோ அப்படிச் செய்து கடைத்தேற்றுவது உங்களுக்கே கடன்” என்று சொல்லி, ஏறி, இரதத்தை வந்த வழியே திருப்பிவிட்டுப் பிராயச்சித்தம் அறிந்து செய்விக்கத்தக்க பெரியோர்களிடத்துக்குப் போயினான்.

.இந்தப் பிரகாரம் இராஜகுமாரன் போனபின்பு, இறந்துவிட்ட அக்கன்றை ஈன்ற தலையீற்றுப் பசுவானது தன் கன்று துள்ளிக் குதித்தோடிய வழியேபோய் அந்தக் கன்று கீழே விழுந்து கிடப்பதைத் தூரத்தே கண்டவளவில் குலைகுலைந்து நடுநடுங்கி புத்திமயங்கி ஒன்றுந் தெரியாமல் சூறைக்காற்றில் அகப்பட்ட துரும்பைப்போல் சுழன்று சுழன்று ஓடிச் சமீபத்தில் வந்து உடல் சிதைந்தும் குடல் சரிந்தும் உயிர்விட்டுக் கிடப்பதைப் பார்த்துச் சோர்ந்து விழுந்து பிரக்கினை தப்பிப் பிணம்போற் கிடந்து,

பின்பு சற்றே தெளிந்தெழுந்து பெருமூச்சுவிட்டு அந்தக் கன்றைச் சுற்றிச் சுற்றிக் கோவென்று அலறியலறி அதனுடம்பை முகர்ந்து முகர்ந்து, “இதென்ன தீவினையோ; இதென்ன இந்திரசாலமோ! இதென்ன விபரீதமோ! வாலசைத்துக் கால்விசைத்து எனக்குமுன் துள்ளியோட இப்போது பார்த்தேனே! இத்தனை விரைவில் இப்படிப்பட்ட இடியிடிக்கும் என்று எள்ளளவும் அறியேனே! காவிரி முதலான தீர்த்த யாத்திரை செய்தும், சிதம்பரம் முதலான ஸ்தலயாத்திரை செய்தும், திருக்கோயில்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல் முதலானவைகளை வாயினாற் களைந்து திருப்பணி செய்தும், புல் மேயாமலும் நீர் குடியாமலும் நெடுநாள் விரதங்காத்தும் உன்னைப் பெறப்பட்ட பாடு தெய்வம் அறியுமே! அவ்வளவு பாட்டையும் அவலமாக்கிப் போட்டு, சேங்கன்றே! என்னைத் தெருவில் விட்டாயே!

உன்னைப் பெறுகிறதற்கு நோற்ற நோன்புகளால் வந்த இளைப்பு இன்னும் ஆறவில்லையே! இதற்குள் இப்படிப்பட்ட ஆறாத பெரு நெருப்பை அடிவயிற்றில் வைத்தாயே! இந்தத் துக்கத்தை இனி எந்த விதத்தினாற் சகித்துக் கொள்ளுவேன்! ‘பாவிக்கப் பாக்கியந் தக்காது’ என்பதற்குச் சரியாகப் பளிங்கு போன்ற நிறமும், பால் வடிகின்ற முகமும், சிறுகித் திரண்ட திமிலும், கடைந்தெடுத்தது போன்று கால்களும் வாழைச் சுருள் போன்று வளர்ந்த வாலும், சித்திரக்கன்று போன்று சுபலக்ஷணங்களைப் பெற்ற வடிவுமுடைய நீ நிர்ப்பாக்கியமுள்ள எனக்குத் தக்காமற் போய்விட்டாயே! உன்னுடைய சுந்தரமுள்ள வடிவத்தைக் கண்டாற் காமதேனுவுங் கட்டியணைத்து முகங்குளிர்ந்து முத்தங் கொள்ளுமே! நான் உன்னைப் பற்றியல்லவோ உயிர்தரித்து உலகத்தில் உலாவியிருந்தேன்! இன்னும் ஒருதரம் உன்னழகிய முகத்தைக்கண்டு என் மடிசுரந்து பால் சொரியக் காண்பேனோ!

ஐயோ! உன்னை ‘ஆயிரங் கன்றுகளிலும் அழகுள்ள கன்று’என்று கண்டோர் சொல்லக் களிப்புடன் கேட்ட என் காதுகளால் இன்று ‘இளங்கன்றை இறக்க விட்டு மலட்டுப் பசுப்போல் வருந்துகின்றதே’ என்று பலபேரும் பழித்துப் பேசுகின்ற வார்த்தையை எவ்வாறு கேட்பேன்? என்று எண்ணியெண்ணி இளைப்படைந்து மூர்ச்சித்து, மறுபடியுந் தெளிந்து இறந்து கிடக்கின்ற கன்றினுடம்பை உற்றுப் பார்த்த இரதத்தின் சக்கரம் ஏறுண்டு இரத்தஞ்சொரிய அழுந்திக் கிடக்கின்ற வடுவைக் கண்டு,

“ஓகோ!! என் ஏழை மதியால் ஏதோ ஒரு சொற்பமான அபாயத்தால் விழுந்திறந்ததென்று எண்ணி யிரங்கினேனே! இவ்வடுவைப் பார்க்கம்போது தேர்ச்சக்கரம் ஏறுண்டு உடல் சின்னப்பட்டு இறந்ததாகத் தெரியவருகின்றதே! ஆ! ஆ!! உனக்கு இப்படிப்பட்ட பெரிய அபாயம் வந்து சம்பவிக்கும்படி நானென்ன பாவஞ் செய்தேனோ! ஓ குழந்தாய்! நீ தேர்க்காலில் அகப்பட்டபோது எப்படிப் பயந்தாயோ! என்ன நினைந்தாயோ! எவ்வாறு பதைத்தாயோ! உயிர்போய் உடல் குழம்பிக் கிடக்கின்ற உன்னைப் பார்க்கப் பார்க்கப் பெற்ற வயிறு பற்றி யெரிகின்றதே!” என்று கண்ணீர் விட்டுக் கதறிக் கதறி அழுதழுது புரண்டு புரண்டு விம்மி விம்மி வெதும்பி வெதும்பிப் பெருமூச்சவிட்டு விழுந்து விழுந்து மெய்மறந்து கிடந்து,

பின்பு எழுந்து “என் கன்றினைத் தேர்க்காலில் அழுத்திக் கொன்ற காருண்யமில்லாத கண்மூடியைக் கண்டால் என்னிரண்டு கொம்புக்கும் இரையாக்காது விடுவேனோ! மைந்தரைப் பெறாத மலட்டுத்தன முள்ளவர்களும் இப்படிச் செய்தத் துணிவு கொள்ளார்கள்! ஆ! இது செய்யத் துணிந்தவன் இன்னுமென்ன செய்யத் துணியான்!” என்று வெம்பியும்

“துன்பஞ் செய்விக்கும் துஷ்டர்களுக்கும் கொலை செய்கின்ற கொடுந் தொழிலோர்க்கும் இடங்கொடாத இந்நகரம் இன்று வலியற்ற உயிர்களை மாய்த்து விடுகின்ற வஞ்சகர்க்கும் இடங்கொடுத்ததே! ஐயோ, இதில் அரசனில்லையோ! நீதியில்லையோ! நெறியில்லையோ! இதென்ன அநியாயமோ!” என்று முறையிட்டும்,

தன் கன்றையிழந்ததனால் உண்டாகிய துக்கத்தைச் சகிக்க மாட்டாததாய் வருந்தி, ‘நமக்கு சென்று குறிப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளுவோம்’ என்றெண்ணி அக்கன்றைப் பசுந்தழைகளால் மூடி, கண்ணீர் சொரிந்து கதறிக் கொண்டே மனுச்சக்கரவர்த்தியின் வாயிலில் வந்து, குடிகளுக்குக் குறைவு நேரிட்டால் அதை அரசனுக்கு அறிவிக்கும்படி அவ்வரண்மனை வாயிலில் கட்டியிருக்கிற ஆராய்ச்சிமணியைத் தன் கொம்பினால் மிகுந்த விசையோடும், வலியோடும் அடித்தசைத்தது.

.அப்படியசைத்தபோது அந்த நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம், “ஒரு காலத்திலுங் கேட்டறியாத ஆராய்ச்சிமணியினது ஓசையையின்று நூதனமாகக் கேட்டோம்; என்ன விபரீதமோ!” என்று ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ள, அந்த மணியிலிருந்து காதமட்டுங் கேட்கக் கணீரென்று ஓசையுண்டானது.

.அவ்வோசையைச் சபா மண்டபத்தில் மந்திரி முதலானவர்கள் சூழச் சிங்காதனத்தின்மேல் வீற்றிருந்த மனுச்சக்கரவர்த்தியானவர் கேட்டு, மாதர்கள் காலிலணிந்த சிலம்போசை கேட்ட மாதவர்போலவும், அழுகுரலோசை கேட்ட அந்தணர் போலவும், சண்டையிரைச்சலைக் கேட்ட சற்சனர் போலவும், புலி முழக்கங்கேட்ட புல்வாய்போலவுந் திடுக்கிட்டு, திகைப்படைந்து சிங்காதனத்திலிருந்து பெருங்காற்றால் அடியற விழுந்த பனைமரம் போலக் கீழே விழுந்து மூர்ச்சை யடைந்து, சிறிது நேரஞ் சென்று தெளிந்தெழுந்து உடல் நடுங்கி உள்ளம் பதைத்து உயிர் சோர்ந்து நா உலர்ந்து கண்கலங்கி நடை தள்ளாடி அதிவேகமாக அரண்மனை வாசலுக்கு வருமுன்,

வாயில் காப்பாளர் அரசனுக்கெதிரே அஞ்சி யஞ்சி வந்து அடியில் விழுந்தெழுந்து, “ஆண்டவரே! அரண்மனை வாயிலில் கட்டியிருக்கிற ஆராய்ச்சிமணியை ஒரு தலையீற்றுப் பசுவானது தன் கொம்பினால் அடித்து ஓசை யுண்டாக்கியது” என்று விண்ணப்பஞ்செய்ய,

அதுகேட்டு விரைவில் வந்து, அவ்வாராய்ச்சிமணியின் அருகே உடல் மெலிந்து முகஞ்சோர்ந்து கண்ணீர் சொரிந்து கதறி நிற்கின்ற பசுவைக் கண்டு, சாவியாய்ப் போன தன் பயிரைக்கண்ட தரித்திரனைப்போல் மனம் நைந்து நைந்துருகி நொந்துநொந்து வருந்தி,

“ஐயோ! சாதுவான இந்தப் பசுவுக்கு என்ன துன்பம் நேரிட்டதோ! இதன் குறையை இன்ன தென்று மதித் தறிந்துகொள்ள வல்லமை யில்லாதவனாக இருக்கின்றேனே!” என்று பதைத்துத் தம் அருகில் அச்சத்துடன் நிற்கின்ற அமைச்சர்களைப் பார்த்து “எனக்குப் புகழும் புண்ணியமும் வரும்படி செய்விக்கின்ற உங்கள் மந்திரிச் செய்கை நன்றாக விருந்தது! உங்கள் அஜாக்கிரதையினால் அல்லவோ இந்தப் பசுவுக்கு ஏதோ வொரு குறை நேரிட்டது!” என்று கோபித்துப் பார்க்க,

அது கண்டு அச்சங் கொண்ட மந்திரிகளுள் அப்பசு துயரப்படுவதற்குக் காரணம் இன்னதென்று முன்னே அறிந்தும் அரசனித்திற் சொல்வதற்க அஞ்சியிருந்த ஒரு மந்திரியானவன் ‘இனி இதை நாம் மறைத்து வைத்தாலும் வேறொருவரால் வெளிப்படுமாதலால் நாமே அறிந்த மட்டில் அறிவிப்போம்’ என்றெண்ணி அரசனை வணங்கித்

“தலைவனே! உமது புத்திரன் இன்று ஏறிப்போன இரதத்தின் சக்கரத்தில் இளங்கன்று ஒன்று எதிரே குதித்து வந்து அகப்பட்டு இறந்துவிட்டது; அந்தக் கன்றை யீன்ற இந்தப் பசுவானது ஆற்றாந்துயர் கொண்டு ஆராய்ச்சிமணியை யசைத்தது!” என்று சொன்னான்.

(தொடர்கிறது)

$$$

3 thoughts on “மனுமுறை கண்ட வாசகம் -2

Leave a comment