ஜே.டி.சாலிங்கர், லியோ டால்ஸ்டாய் மற்றும் சுவாமிஜி

-சௌமிக்

தில்லியில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. சௌமிக், சுவாமி விவேகானந்தரின் வெளிநாட்டு அன்பர்கள் குறித்து 2013-இல் எழுதிய கட்டுரை இது...

பகுதி- 1

தனது எழுத்துப் பணியில் மிகுந்த புகழுடன் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்த அமெரிக்க எழுத்தாளர் ஜே.டி.சாலிங்கர், 1960-களின் பிற்பகுதிகளில் தனிமையை நாடி வாழ ஆரம்பித்தார். அப்படி இருந்தும், நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் பார்க் அவென்யூ 91-வது தெருவில் சகல வசதிகளுடன் இருந்த தனது பெற்றோரின் வீட்டிற்கு ஜே. டி. சாலிங்கர் அவ்வப்போது வந்து தங்கினார்.  ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவை அடிக்கடி அவர் முன் சந்தித்துக் கொண்டிருந்ததை விடுத்து, அங்கிருந்து மூன்று தெருக்கள் தள்ளி 94-வது தெருவில் 17-ஆம் எண் இல்லத்தில் இன்றும் இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண- விவேகானந்த மையத்தின் நிறுவனரும், அவரது ஆன்மிக குருநாதருமான சுவாமி நிகிலானந்தரைத் தரிசித்து அவருடன் அளாவுவதில் மிக்க ஆர்வம் காட்டினார்.

‘The Catcher in the Rye’,  ‘Franny and Zooey’ போன்ற நாவல்களை எழுதி,  போற்றத் தக்க கதாசிரியராக விளங்கிய அவர் தனது கடைசிப் படைப்பை 1965-இல் அளித்தார் என்றாலும், அவர் எழுதும் பணியை நிறுத்தவில்லை. 1950-களின் தொடக்கத்தில் இருந்தே அவர் பற்பல வேதாந்த ஞானிகள் மற்றும் சீடர்களுடன் ஓர் இனிமையான, பயனுள்ள கடிதப் போக்குவரத்தை வைத்துக்கொண்டிருந்தார்.

கொல்கத்தாவில் பிறந்து, 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில், நமது பாரம்பரிய யோக முறையை மேலைநாடுகளுக்கு நன்கு  அறிமுகப்படுத்திய வீரத்துறவி விவேகானந்தரின் போதனைகள் தான் சாலிங்கரின் ஆன்மிகப் பயணத்தில் அவருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கின.

எங்கெங்கும் காணப்படும் ‘ஸ்டார்பக்ஸ்’  காபி கடை போன்று இப்போதெல்லாம் யோகப் பயிற்சிகளுக்கு வகுப்பறைகளும், கூடங்களும் காணப்படுகின்றன. பயிற்சிகள் மூலம் உடலைக் காக்கும் இந்த நிலைமையை விவேகானந்தர் பார்த்திருந்தால் சிறிது ஆச்சரியமும், பெரிதே கலவரமும் அடைந்திருப்பார். “நான் இந்த உடல் அளவு மட்டுமே என்று என்னைக் குறுக்கிக்கொண்டு இருந்தேன் என்றால் மற்ற உடல்களைப் பற்றிய எண்ணம் ஏதுமில்லாமல் என் உடலைப் பேணிக் காப்பாற்றித் துப்புரவாக வைத்துக்கொண்டு இருப்பதே என்னுடைய விருப்பமாக இருக்கும். அப்போது நான்- நீ என்ற பேதமும் தலையெடுக்கும்” என்றே அவர் எச்சரித்திருந்தார்.  முதல் ‘வேதாந்த மைய’த்தை மன்ஹாட்டனில் நிறுவிய விவேகானந்தரைப் பொருத்த வரை யோகம் என்பது  ‘இறைவனை உணர்வது’ என்ற ஒரேயொரு நோக்கம் மட்டுமே ஆகும்.

‘ஜென்’ என்றதொரு இறைவனைத் தவிர்த்த ஆன்மிக வழியில் 1940-களில் சில காலம் பயணித்த சாலிங்கர், வேதாந்தத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதனுடைய வழிகள் தனக்குப் பல மடங்கு ஆறுதல் கொடுக்கக் கூடியனவாக இருப்பதைக் கண்டறிந்தார். சாலிங்கரின் வாழ்க்கைச் சரிதத்தைத் தொகுத்து எழுதியுள்ள கென்னத் ஸ்லவேன்ஸ்கி, “ஜென் வழியைப் போலல்லாது, வேதாந்தம் இறைவனுடன் ஒரு தனித்துவ உறவை ஏற்படுத்திக் கொடுக்கிறது… ஒருவன் தனது உள்ளத் தளர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு வழியொன்று உண்டு என்று அவனுக்கு உறுதி அளிக்கிறது…. இறுதியில் இறைவனையும் காண வைத்து, அவன் மூலம் மன அமைதியையும் அளிக்கிறது” என்று கூறுகிறார்.

எனினும் மன அமைதி அடைவது என்பது ஒருவனுக்கு வாழ்நாள் போராட்டமாக அமையலாம். நியூயார்க் நகரத்தின் மையத்தில் தங்கியிருந்த இன்னுமொரு துறவிக்கு தினப்படி தனக்கு நேர்கின்ற வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி 1975-இல் சாலிங்கர் எழுதும்போது, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஆதி சங்கர பகவத்பாதரின் படைப்பு ஒன்றில் உள்ளதைக் குறிப்பிட்டு இவ்வாறு சொல்லியிருந்தார்: “இன்பங்கள் தரும் புலன்கள் எனும் அடர்ந்த காட்டில் உலவும் ஒரு மாபெரும் புலி போன்று நமது மனம் அலைபாய்கிறது. உலகியல் பந்தங்களில் இருந்து விடுதலை விரும்பும் நல்லோர்  எவரும் அந்த வனப் பகுதிக்குச் செல்ல வேண்டாம்”. அவ்வாறு எழுதிவிட்டு சாலிங்கர் தன்னைப் பற்றிக் குறித்து, “அதைவிட உண்மை வேறெதுவும் இருக்க முடியாது என்றாலும்,  நான் என்னை அங்கு அடிக்கடி உலவிவிட்டு அந்தப் புலி என்னைத் தாக்குவதை எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அனுபவிக்கிறேனே” என்று புலம்பியிருந்தார்.

அந்தப் பெரும் புலி அவரை நிதமும் தாக்கியதால் அவருக்கு ஏற்பட்ட மனத் தளர்ச்சி சாலிங்கரை இலக்கியப் படைப்புகளை நிகழ்த்தும் ஆர்வத்தில் இருந்து திசைதிருப்பி ஆன்மிகத்தில் ஆர்வம் கொள்ளத் தூண்டியது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு, அந்தக் களத்தில் இருந்து திரும்பிய அவருக்கு நரம்பு மண்டலக் கோளாறினால் வந்திருக்கக் கூடிய உபாதையால் “கள் அருந்திய குரங்கு ஒன்றைத் தேளும் தன் பங்கிற்குக் கொட்டிய பின் அதைப் பேய் பிடித்தது போல” என்று விவேகானந்தர் மனத்தைப் பற்றி விவரித்ததை சாலிங்கர் மறுக்காது ஏற்றுக்கொண்டார். அவ்வாறு சொன்னாலும்  “அடக்கி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள அதே மனம் ஓர் உற்ற தோழனாய் உதவி செய்பவன் ஆகி அமைதியையும், இன்பத்தையும் அளிக்க வல்லது” என்றும் சொல்லி விவேகானந்தர்  நம்பிக்கையும், ஆறுதலும் அளிக்கிறார். அதுபோன்ற இதம் அளிக்கும் வழி ஒன்றைத் தான் சாலிங்கர் மனத் தவிப்புடன் தேடிக்கொண்டு இருந்தார். தனது செழித்து வளர்ந்திருந்த இலக்கியப் புகழைக்கூடத் துறப்பதற்கான தயார் நிலையை அவர் 1965-ஆம் ஆண்டு வாக்கில் அடைந்துவிட்டார்.

வருங்காலத்தில் அழகிய காவியுடையில் தரிசனம் தரவிருக்கும் சுமார் 2 கோடி அமெரிக்க யோகிகளுக்கு ‘யோகா’ எனும் சொல்லையே வங்கத்திலிருந்து வந்திருந்த விவேகானந்தர்  அறிமுகம் செய்து வைத்தார். மஞ்சள் உடையின் இடையே குறுக்காகச் செல்லும் ஆரஞ்சு நிற பெல்ட் ஒன்றுடனும், சிரசில் செந்நிற தலைப் பாகையுடனும் காணப்பட்ட அவர், தாம் சொல்வதையும், செய்வதையும் நிறுத்திவிட்டு அவர் என்ன சொல்கிறார் என்று அனைவரையும் கேட்க வைக்கும் அளவிற்கு, சிகாகோ மாநகரில் 1893-ஆம் ஆண்டில் ஓர் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சி, அக்காலத்தில் வளர்ந்துவந்த தொழில்நுட்பத்தையும், அதனால் உலகில் பெருகும் தொழில் வன்மையையும் அனைவருக்கும் எடுத்துக் காட்டுவதற்கென்றே அமைக்கப்பெறும் உலகத் தொழில் கண்காட்சியைப் போல, உலகளாவிய மதங்களினால் தழைத்து வளரும் ஆன்மிகத்தின் வளமையைக் காட்டுவதற்காகக் கூட்டப்பட்ட ‘மதங்களின் பாராளுமன்றம்’ என்றதொரு மாநாட்டில் நடந்தேறியது.

அந்த மாநாட்டின் தொடக்க நாளான செப்டம்பர் 11 அன்று, மேடையில் அமர்ந்து தியானம் செய்வது போன்றதொரு நிலையில் இருந்த விவேகானந்தரை மாநாட்டு அமைப்பாளர்கள் உரையாற்றக் கூப்பிட, அவரும் கையில் எந்தக் குறிப்புகளையும் வைத்துக்கொள்ளாது பேசுவதற்காக எழுந்து வந்தார். அந்த அவையில் அமர்ந்து அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவருக்கு ‘பேசுபவரது உச்சரிப்பு அவருடைய இந்தியப் பேராசிரியரது அயர்லாந்து ட்ரினிட்டி கல்லூரியின் பின்புலத்தால் கிடைக்கப்பெற்ற ஐரிஷ் பாணி உச்சரிப்பு’ என்று நன்கு விளங்கியது. அந்த உச்சரிப்புடன் விவேகானந்தர் “அன்பார்ந்த அமெரிக்கச் சகோதர சகோதரிகளே! என்னால் விவரிக்கவும் முடியாத மகிழ்ச்சி என் இதயத்தில் பெருக்கெடுத்து ஓட ….” என்று தன் உரையைத் துவங்கினார்.

அவ்வாறு அவர் தனது உரையைத் துவக்கியதுமே, அது வரை நடந்திராத ஓர் அதிசயம் அங்கு நடந்தது. அது பல ஆண்டுகளுக்குப் பின் வரவிருக்கும் ‘பாப்’ இசை ‘பீட்டில்ஸ்’ குழுவை வரவேற்ற விதத்திற்கு ஒரு முன்னுதாரணம் போல அது இருந்தது. (பின்னர் அந்த ‘பீட்டில்ஸ்’ குழுவில் ஒருவரான ஜார்ஜ் ஹாரிஸன் என்பவரும் விவேகானந்தரின் வாழ்நாள் பக்தர் ஆனார் என்பது ஒரு தனிக் கதை).

அவர் பேசிய அன்று, அதுவரை மௌனமாக எந்தவிதச் சலனமும் இல்லாது மற்றவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த, சுமார் 4000-க்கும் அதிகமாகக் கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்கள் இருக்கையைவிட்டு எழுந்து நின்று கரவொலி செய்து, அந்த இளந்துறவியின் பேச்சை வரவேற்றார்கள். அதுபோன்ற பெரிய கூட்டங்களில் அதற்கு முன் பேசிய அனுபவம் இல்லாத அந்தத் துறவியும், ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்த மக்களுக்கு நேர்ந்தது போலவே, அதிர்ச்சி அடைந்தார். தனது உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அடக்க முடியாமல் அவர் உடனே  “உலகின் பழம்பெரும் துறவிகள் வந்த வம்சத்தின் சார்பாக உங்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும் அவர் “மதங்களுக்கெல்லாம் அன்னையான மதம் சார்பாகவும், பற்பல சாதிகளையும், சமயங்களையும் சார்ந்த கோடிக் கணக்கான இந்து மதத்தினர் சார்பாகவும் உங்களுக்கு எனது நன்றி” என்று கூறினார்.

இங்கிலாந்தின் தியோசபிகல் இயக்கத்தைச் சார்ந்த அன்னிபெசன்ட் அம்மையாரும் அந்த மாநாட்டில் ஓர் உறுப்பினராகப் பங்கெடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அங்கிருந்தோர் மேல் விவேகானந்தருடைய தாக்கத்தைப் பற்றி அவர் பின்னர் எழுதும் போது “மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலந்த வண்ண அங்கியை உடையாக அணிந்ததால் பார்ப்பதற்கே எடுப்பாக இருந்து, காரிருள் சூழ்ந்த சிகாகோ வான்வெளியில் ஒரு வேற்றுமை அளிக்கும் வண்ணம் இந்தியாவில் வந்த சூரியன் போல ஒளி வீசிக்கொண்டு…  ஒரு சிங்கத்தின் தலையும், கூர்த்த கண்களும், துடிக்கும் உதடுகளும் ஒருசேரக் கொண்டு, துடிப்புடன் பரபரவென்று அலையும் பேர்வழியாக அவர் விளங்கினார்” என்று கூறுகிறார்.

மேலும் அவர் எழுதுகையில் “மாநாட்டில் உள்ள அனைவரும் அவரது பேச்சைக் கேட்க ஆவலோடு காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்” என்கிறார். அவர் பேசி முடித்ததும், அங்கிருந்தோர் அனைவரும் மறுமுறை எழுந்து நின்று முன்னை விட வலுவாக ஆரவாரம் செய்தது இடி இடித்து ஓய்ந்தது போல இருந்தது. அங்கிருந்த இன்னும் ஒருவரின் விளக்கப்படி “அவரைப் பார்ப்பதற்காக அலைஅலையாக மகளிர் தங்களது இருக்கைகளின் மேல் ஏறி  நடந்து அவரருகே சென்றார்கள்”.  அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னுமொருவர் “அந்த 30-வயது இளைஞன் இந்த அலைகளில் இருந்து தப்பிக்க முடியுமென்றால், உண்மையிலேயே அவர் கடவுளாகத் தான் இருக்க முடியும்” என்று அருகில் இருந்தவரிடம் வேடிக்கையாகச் சொன்னார்.

அது நடந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, “அங்கிருந்தோர்களில் பெரும்பாலானோருக்குத் தங்களை என்ன தான் வந்து தாக்கியது என்பது கூடத் தெரியாமலேயே இருந்தனர். ஒருவேளை எவரும் அறிய முடியாதபடி ஒவ்வொருவரின் அடிமன அளவிலே தகவல் ஒன்று பரவி,  விவேகானந்தர் தொடக்கத்தில் கூறிய சில சொற்கள் பின்வரும் காலங்களிலும் விடாது சிலருக்கு எதிரொலித்துக்கொண்டு இருந்ததால், அந்தச் சொற்கள் அங்கிருந்தவர்கள் அனைவரையும் விஷ ஜுரம் ஒன்று தாக்குவது போல தாக்கி அவர்களை மெய்மறந்து நிற்கச் செய்ததோ” என்று, கிரிஸ்டோபர் ஐஷர்வுட் என்பவர் அங்கு நடந்ததை விவரிக்கிறார்.

ஒருமுறை பீட்டில்ஸ் பாடகர் ஜார்ஜ் ஹாரிஸனை அவர்களது  “My Sweet Lord” பாடல் பிறந்த கதையைப் பற்றிக் கேட்க, அவர் “சுவாமி விவேகானந்தரிடம் இருந்த வந்த  ‘இறைவன் என்று ஒருவன் இருந்தால் நாம் அவனைக் காண்பதற்கு இயல வேண்டும்; ஆன்மா என்று ஒன்று இருந்தால் நாம் அதை உணர்வதற்கு இயல வேண்டும்’ என்ற கருத்தில் இருந்து வந்ததே அந்தப் பாடல்” என்று விளக்கினார்.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வரும் நமது பண்டைய சாஸ்திரக் குறிப்புகளான வேதங்களே வேதாந்தத்திற்கு அடிப்படை என்பதும் அல்லாமல், அவையே பின்வந்த பௌத்தம், சமணம், இந்து மதம் என்ற அனைத்திற்கும் மூலவேராக இருந்திருக்கின்றன. ஒவ்வொரு ஜீவராசிகளுக்கு உள்ளும் புறமும் இறைவன் இருந்து, யாதுமாகி எங்கும் பரந்து விரிந்து அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கிறான் என்ற மூலக் கருத்தையே வேத நூல்களான உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இறைவனின் கானம் என்று கருதப்படும் பகவத்கீதை இன்னுமொரு புனித நூலாக வழிபடப்பெறுகிறது. இவற்றின் அடிப்படையில் கிளைத்தெழுந்த பல்வேறு நம்பிக்கைகளின்படி வாழ்ந்த விதவிதமான, பற்பல சமூகங்களின் ஒட்டுமொத்த அமைப்பையே விவேகானந்தர் இந்து மதம் என்று குறிப்பிட்டார்.

வேதாந்தம் பற்றி எதுவும் அறிந்திராத மேலைநாட்டு மக்களும் நன்கு புரிந்துகொள்ளும் அளவு, வேதாந்தக் கருத்துக்கள் அனைவரையும் எளிதில் சென்றடையும் வண்ணம் அவற்றை சில அறிவுரைகள் மூலம் அளித்ததில் விவேகானந்தரின் அறிவுத்திறன் பளிச்சிடுகிறது. பைபிளைத் தழுவுபவர்கள் விவரிப்பது போல, எங்கோ கண்காணாத சொர்க்கத்தில் இறைவன் இருந்து அடுத்த நொடி என்ன செய்வான் என்பது கூட புரியாத அளவிற்குச் செயல்படும் சர்வாதிகாரி என்பது சரியல்ல; அவன் இயங்கும் அனைத்து உயிர்களின் உள்ளேயே இருக்கும் ஒரு சக்தி. “பிறந்துள்ள ஒவ்வொரு ஜீவாத்மாவும் இறைமயமானது” என்று அவர் உறுதியளித்தார். “ஒருவனது உள்ளும் வெளியும் நிலவும் இயல்புகளைக் கட்டுப்படுத்தி, அந்த தெய்வீக சக்தியை உணர்ந்துகொள்வதுதான் பிறந்த பிறப்பின் பயன்”.  அந்தக் கூற்று சரியா தவறா என்று முடிவு செய்ய முடியாதவர்களுக்கு, அவர் எவ்வாறு வேதாந்தக் கருத்துகள் மற்ற மதங்களையும், அந்தந்த போதகர்கள் சொல்வதையும் தழுவிச் செல்கிறது என்று எடுத்துக்காட்டினார். இந்து மதம் போற்றும் கிருஷ்ணரைப் போலவும், தனது குருவான ராமகிருஷ்ணரைப் போலவும், இயேசு கிறிஸ்துவும், புத்தரும் நம்மைக் கரையேற்ற வந்த தெய்வீக அம்சம் கொண்ட பிறவிகளே என்பார்.

“அவர் ஒரு திறமை மிகுந்த அறிவாளி; தன்னலமற்ற ஆன்மிக வழியில் சென்றவர்களில் இவரையும் விட அதிகமான உயர்ந்த நிலையை அடைந்தவர் எவரேனும் இருக்கிறாரா என்பது சந்தேகமே” என்று ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் விவேகானந்தரைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார்.

 “பல தலைமுறைகளாக சட்ட வல்லுனர்களைக் கொண்டிருந்த வம்சத்தில் தோன்றி” மேலைநாட்டு வழியில் கல்வி கற்று, எதையும் பற்றிய ஆழ்ந்த அறிவை விவேகானந்தர் கொண்டிருந்தார் என்றால், அவரது குருநாதரான ஸ்ரீ ராமகிருஷ்ணரோ எந்த வகையில் பார்த்தாலும் படிப்பு வாசனை அற்றவர். அவர் பிறந்தவுடன் அவருக்கு கதாதர் சட்டோபாத்யாய என்றுதான் பெயர் சூட்டியிருந்தார்கள். அப்போதிருந்தே ராமகிருஷ்ணருக்கு வேதம் ஓதுவதற்கும், பிரார்த்தனை செய்வதற்குமான பயிற்சியைத் தவிர பள்ளி சென்று படிக்க வேண்டும் என்ற ஆவல் சிறிதும் இருந்ததில்லை. தக்ஷிணேஸ்வர் காளி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்த அவருக்கு கல்வியறிவு இல்லாதிருந்தது ஒரு பிரச்னையாகவே இல்லை. ஒரு ஞானியாக பாரதம் முழுதும் நன்கு அறியப்பட்டவராகவும், பலருக்கு கடவுளின் அவதாரமாகவே காணப்பட்டவராகவும் இருந்த ராமகிருஷ்ணர் சதா சர்வ காலமும் நிர்விகல்ப சமாதி எனப்படும் உலகை மறந்த ஓர் உயரிய தியான நிலையிலேயே இருந்து, சிறிது காலமே வாழ்ந்திருந்தார். அவர் சாதாரணமாக அமர்ந்த அல்லது நின்ற நிலையில் இருந்தாலும் ‘கடவுளை உணரும் நிலை’ என்று அவரே விவரித்த உணவு, உறக்கம் ஏதும் தேவையில்லாத அந்த தியான நிலைக்குச் எந்தவிதக் கடின முயற்சியும் செய்யாமலேயே சென்றுவிடுவார். அவர் 1886-ஆம் ஆண்டில் தனது 50-வது வயதில் தனது பூதவுடலை நீத்து இறைவனடி சேர்ந்தார்.

சுற்றுவட்டாரத்தில் அனைவரும் அறியும் குட்டிக்கதைகளை அவர்களது கிராமிய பாணியிலேயே அவர் சொல்லிக்கொண்டு இருந்தாலும், மழைக் காலத்தில் கிடுகிடுவென்று மழை பரவுவது போல 1870-களில் அவரது புகழ் மக்களிடையே பரவி அவர் ‘ஒரு வங்கத்து ஞானி’ என்று பலர் மத்தியிலும் நன்கு அறியப்பட்டார். அவ்வாறு அவரிடம் வந்து சேர்ந்து அவர் ஒரு தெய்வப் பிறவியே என்று உணர்ந்தவர்களில் பலரும், கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய ஆங்கிலப் பள்ளிகளில் படித்து பட்டம் பெற்று, தொழிலில் நன்கு அறியப்பட்ட சட்ட மேதைகள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்களாக இருந்தனர்.

ஒரு புகழ் பெற்ற குடும்பத்தில் 1863-இல் பிறந்து நரேந்திரநாத் தத்தா என்று முன்னதாக அறியப்பட்ட சுவாமி விவேகானந்தரே ராமகிருஷ்ணரின் நம்பிக்கைக்கு உரியவராகவும், அணுக்கத் தொண்டராகவும் விளங்கியதுடன், வேதாந்த உண்மைகளை உலகிற்கு அறிவித்து, அதன் கருத்துக்களைப் பரப்புவதற்கான உத்தரவையும் அவரிடமிருந்து கிடைக்கப் பெற்றார்.

விவேகானந்தரின் அமெரிக்க விஜயத்திற்கு முன்னதாகவே, கீழை நாடுகளின் ஆன்மிகக் கருத்துக்களில் சில இங்கொன்றும் அங்கொன்றுமாக மேலைநாடுகளில் பரவியிருந்தன. 1820-களில் பகவத்கீதையின் பிரதி ஒன்று கிடைக்கப்பெற்ற ரால்ப் வால்டு எமர்சன் என்பவர் அதைப் படித்ததும் அதன் கருத்துக்களில் மூழ்கித் திளைத்தார். அதைப் பற்றி அவர் 1831-இல் தனது ஆய்வுப் பத்திரிகையில் எழுதும்போது, “பகவத் கீதையினால் எனது வாழ்நாள் பயனுள்ளதாயிற்று” என்று கூறுகிறார். அவரது அதீத ஆன்மிக அனுபவக் கட்டுரைகளில் கீதையின் தாக்கம் வலுவாக இருந்தது. கீதை கூறிய எங்கும் நிறைந்துள்ள பிரம்மம், ஆத்மா என்ற அடிப்படை வேதாந்தக் கருத்துக்களைப் பின்புலமாகக் கொண்டு, ஒருவனின் உள்ளே உறையும் அம்சமாக விளங்கும் “மேல்-நிலை ஆன்மா” எங்கும் உள்ள பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பே என்றதொரு கருத்தைப் பற்றியே அவர் எழுதினர். (இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். சுமார் அறுபது ஆண்டுகள் சென்ற பின், 1895-ஆம் ஆண்டில் விவேகானந்தர் ‘ராஜ யோகம்’ என்ற தனது முதல் நூலுக்கான வார்த்தைகளைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வர, அதை உடனுக்குடனே எழுதி அந்த நூலுக்கு வடிவு கொடுத்தவர் அவரது சீடராக விளங்கிய எமர்சனின் உறவினரான எல்லன் வால்டு என்பது  சரித்திரக் கட்டாயம் போல அமைந்தது).

எமர்சனின் அதீத ஆன்மிக மாணவராக இருந்த ஹென்றி டேவிட் தொரோ, வால்டன் பாண்ட் என்ற குளக்கரையிலேயே தங்கி அனைத்தையும் விட்டுவிட்ட துறவு வாழ்வை வாழ்ந்துகொண்டு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன்  இந்தியக் கருத்துக்களை ஆய்வு செய்துகொண்டிருந்தார்.  1875-இல் வால்ட் விட்மன் அவர்களுக்கு கீதையின் பிரதி ஒன்று கிறிஸ்துமஸ் பரிசாக வருகிறது. “நான் இறந்ததும் உலகில் இருந்து சென்றுவிட்டு ஒரு புதுப்பிக்கப்பட்ட குழந்தையாக மீண்டும் வந்தாலும், என்னை எனது சிரசிலிருந்து பாதம் வரை மட்டுமே உள்ளவனாகக் கருதப்பட முடியாது” என்று அவர் தன் “Leaves of Grass” என்கின்ற படைப்பில் எழுதும்போது, அதில் கீதையின் வரிகள் தான் எதிரொலிக்கின்றன. சுவாமி விவேகானந்தரும் விட்மனும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்றாலும், விட்மனை ‘அமெரிக்காவின் துறவி’ என்றே சுவாமி விவரிப்பார்.

ஆனாலும் மேலைநாட்டு அறிஞர்கள் மத்தியில் கீழை நாடுகளின் இலக்கியமும், தத்துவமும் வேர் பிடித்து வளர்வதற்கு இன்னமும் சிறிது காலம் தேவைப்பட்டது. ஹார்வர்டு பட்டதாரிகளின் தத்துவக் கழகத்தில் 1896-ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று விவேகானந்தர் ஒரு சீர்மிகு சிறப்புரை ஆற்றிய பின்னரே,  அவர்களின் கவனம் அதில் மேலும் ஈர்க்கப்பட்டு, அதன் விளைவாக சில பல்கலைக்கழகங்களின் கூட்டான ‘Ivy League’ எனப்படும் கல்லூரிகளில் கீழைநாடுகளின் தத்துவம் பற்றி போதிக்கவும், ஆய்வு செய்யவும் தனித்துறைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் தொடங்கின.

நன்கு கல்வி பயின்று, பல மொழிகளில் பேசும் திறமை கொண்ட ஓர் இளந்துறவி (சுவாமிஜி) ஒரு நாள் முழுவதுமே ஆடாது அசையாது அமைதியான தியானத்தில் மூழ்கி இருக்க முடிந்ததைக் கண்டு அதிசயித்த வில்லியம் ஜேம்ஸ் என்ற தத்துவ ஞானி, விவேகானந்தரின் ஹார்வர்டு  உரையைக் கேட்பதற்கு தனது சக ஊழியர்களையும், மாணவர்களையும் அழைத்து வந்தார். அங்கு வந்திருந்தவர்கள் எவருக்குமே அன்று ஏமாற்றம் என்பது சிறிதும் இல்லாது அமைந்தது. “பரிணாம வளர்ச்சியின் அடிப்படை, பிராணன் (சக்தி), ஆகாயம் (வெளி) இவை அனைத்துமே இன்றைய விஞ்ஞானத்தில் இருக்கின்றன” என்று அந்தப் பேச்சாளார் சர்வ சாதாரணமாக விவரித்தார். “சுவாமி! உணவையும், சுவாசத்தையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருவர் அவரிடம் கேட்க “உண்மைதான். அவை இரண்டுமே நமக்கு வேண்டும்” என்று பதில் அளித்தார். “கருஞ்சிவப்பு அங்கி உடையை உடுத்திக்கொண்டு”  தலைப்பாகையையும் அணிந்திருந்த அந்தத் துறவி அன்று மாலை தனது உரையை முடித்ததும், ஹார்வர்டு  பல்கலைக்கழகத்தின் புதிய தத்துவத் துறைக்கு அவர் தலைவராக ஆகும் பணி நியமன உறுதி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. கொலம்பியா பல்கலைக்கழகமும் தன் பங்கிற்கு அதேபோன்ற உறுதியை அளித்தது. தான் எதையும் துறக்கும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டுள்ளதால், தன்னால் அதுபோன்ற பணிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் உறுதியாகச் சொல்லி அந்த இரு வாய்ப்புகளையும் ஏற்க மறுத்தார்.

அவரை கௌரவிக்கும் வகையில் மறுநாள் இரவு உணவு அருந்தச் செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டின் போது, வில்லியம் ஜேம்ஸும் அவரும் ஒரு தனி இடத்தைத் தேடிப் பிடித்து அமர்ந்து, நள்ளிரவு வரை எதையாவது பற்றி பேசிக்கொண்டே  இருந்தார்கள். மறுநாள் காலை ஜேம்ஸ் அவரைத் தனது வீட்டில் இரவு உணவு அருந்தச் சொல்லி அழைத்தார். அதற்கு மறுவாரம் பாஸ்டன் நகரில் நடக்கவிருந்த விவேகானந்தரின் மற்றைய உரைகளைக் கேட்பதற்காக ஜேம்ஸ் புறப்பட்டுச் சென்றார்.

ஹார்வர்டில் ஜேம்ஸுடன் பணியாற்றிய சக பேராசிரியர் “தனது பேச்சினால் பேராசிரியர் ஜேம்ஸை விவேகானந்தர் மிகவும் கவர்ந்துவிட்டார்” என்று எழுதிவைத்தார். உண்மையில் அந்தப் புதிய வங்கத்து நண்பரை “குரு” என்று அழைக்கும் அளவிற்கு, பெரும் கல்விமானான பேராசிரியர் ஜேம்ஸ் அவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தான் எழுதிய ‘The Varieties of Religious Experience’ என்ற மகத்தான நூலில், சுவாமி விவேகானந்தரின் ‘ராஜ யோகம்’ நூலில் இருந்து பற்பல மேற்கோள்களைக் காட்டி தியான முறைகளை விளக்கி “யோகப் பயிற்சிகளில் கையாளப்படும் விதவிதமான வழிகள் எல்லாமே ‘சமாதி’ எனப்படும் ஒருவனது உணர்வுக்கும் அதீதமான நிலையை விஞ்ஞான முறைப்படி அடையும் குறிக்கோள் ஒன்றிற்காகத் தான்” என்பார்.

சுவாமியின் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின் போது அவர் அவ்வப்போது இனவெறியர்களின் இடைஞ்சலைச் சந்திக்க நேர்ந்ததால், ஜேம்ஸ் சகோதரர்களைத் தவிர சமூகத்தில் நன்கு அறியப்பட்ட சில செல்வச் சீமாட்டிகளும் அவருக்கு உதவியாக இருந்தார்கள். கேம்ப்ரிட்ஜ் நகரில் சாரா புல் அம்மையாரும், நியூயார்க் நகரில் ஜோசபைன் மெக்லியோட் அம்மையாரும், லண்டனில் மார்க்கரெட் நோபில் அம்மையாரும் அவருக்காக அரங்கம் அமைத்து அவரைப் பற்றி பலரும் அறியும் வகையில் செய்ததும் அல்லாமல், அவரைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கும்  வருகை தந்தனர். அவர்களின் நண்பர்கள் வட்டம் மூலமும், அவர்களுக்கு இருந்த செல்வாக்கினாலும், நிற்கக்கூட இடம் இல்லாத போதும் சுவாமியின் உரையைக் கேட்பதற்குப் பலரும் ஆங்காங்கே வந்தனர். அவர்களில் அன்றைய பிரபலங்களும், வெவ்வேறான விளக்கங்களை நாடி வந்தவர்களும், இன்னும் பல சாமானியர்களும் இருந்தனர். அவ்வாறு வந்தவர்களில் பேராசிரியர் ஜேம்ஸின் மாணவரான ஜெர்ட்ரூட் ஸ்டைன் தொடங்கி கோடீஸ்வரரான ஜான் டி. ராக்பெல்லர் வரை இருந்தனர். விவேகானந்தர் ‘அருமையான குணாதிசயங்களின் சக்தி’ கிடைக்கப் பெற்றவராக இருந்ததால், அவரே வேதாந்தத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறவல்ல சிறந்த போதகராக விளங்கினார் என்று ஹென்றி ஜேம்ஸ் சொல்வார்.

 பகுதி – 2

ரஷ்ய இலக்கிய வட்டத்தில் புகழ் வாய்ந்த லியோ டால்ஸ்டாய் அவர்கள் விவேகானந்தரின் வாழ்நாளில் அவருக்குக் கிடைக்கப்பெற்ற இன்னுமொரு தீவிர ரசிகர். சுவாமியின் ‘ராஜ யோகம்’ நூலை 1896-இல் ஒரே மூச்சில் படித்து முடித்ததும் “அவர் ஒரு சீரிய சிந்தனை படைத்த அறிவாளி” என்று டால்ஸ்டாய் அவரைப் பற்றிச் சொல்லி “அது நேர்த்தியான படைப்பு…. அதிலிருந்து எனக்கு நிறைய விஷயங்கள் தெரிய வந்தன. ஒரு மனிதனின் உண்மையான  ‘நான்’ என்னும் ஸ்வரூபத்தைக் காண்பது என்ற கருத்து உன்னதமாக உள்ளது…. நேற்று முழுதும் விவேகானந்தரின் நூலையே படித்துக்கொண்டு இருந்தேன்” என்றும் கூறினார்.

டால்ஸ்டாய் இறக்கும் சில நாட்கள் முன் வரை விவேகானந்தரைப் பற்றி மிக உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தார். “தன்னலமற்ற ஆன்மிக வழியில் சென்றவர்களில் இவரையும் விட அதிகமான உயர்ந்த நிலையை அடைந்தவர் எவரேனும் இருக்கிறாரா என்பது சந்தேகமே” என்று அவர் கூறினார்.

டால்ஸ்டாயும் விவேகானந்தரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் பெயர் பெற்ற ‘ஓபரா’ பாடகி எம்மா கால்வே அவர்களும், நாடகங்களில் சோகப் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்ற சாரா பெர்ன்ஹார்ட் அவர்களும் அவரைத் தேடி வந்து, அவரது வாழ்நாள் நண்பர்களாக இருந்தனர்.

அமெரிக்காவில் நடந்ததைப் பார்த்தவர்கள் கூறியபடி, “அவரைப் பார்ப்பதற்காக அலைஅலையாக மகளிர் தங்களது இருக்கைகளின் மேல் ஏறி நடந்து அவரருகே சென்றார்கள்… இந்த அலைகளில் இருந்து ஒருவர் தப்பிக்க முடியுமென்றால், உண்மையிலேயே அவர் கடவுளாகத்தான் இருக்க முடியும்” என்பது உண்மை தான்.

மின்காந்தப் பிரிவில் சிறந்த ஆராய்ச்சியாளரான நிகோலா தெஸ்லா அவர்களுக்கு விவேகானந்தரை பெர்ன்ஹார்ட் அறிமுகம் செய்து வைத்தார். அவரது இயற்பியல் பற்றிய அறிவைக் கண்டு தெஸ்லா மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். இயற்கையில் உள்ள சக்தியைப் பற்றி இருவருமே வெவ்வேறு வழிகளில் ஆனால் ஒரே மாதிரியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாக இருவருமே உணர்ந்து கொண்டனர். தியான முறைகளுக்கு விஞ்ஞானம் தரும் ஆதரவு பற்றி அறிவதில் விவேகானந்தர் ஆர்வம் காட்டினார்.  மின்சாரம் பற்றிய ஆதார ஆய்வுகளைப் பற்றி எழுதும்போது தெஸ்லா தன் பங்கிற்கு சுவாமியின் வேதாந்த அடிப்படையிலான கருத்துக்களையும் சுட்டிக் காட்டினார்.

“வேதாந்தம் கூறும் பிராணன், ஆகாயம், மற்றும் கால அளவைகளான கல்பங்கள் பற்றிக் கேட்டறிவதில் தெஸ்லா அவர்கள் மிகுந்த விருப்பம் காட்டினார். ஒரு பொருளின் இருப்பையும், அதன் உந்து திறனையும் சமன்பாட்டு விதிகள் மூலம் அதன் உள்ளார்ந்த சக்தியுடன் இணைக்க முடியும் என்று தெஸ்லா கருதுகிறார். கணக்கு விதிகள் மூலம் அவ்வாறு இருப்பதைக் காட்டக்கூடிய அவரது முயற்சியைக் காண நான் அடுத்த வாரம் அவரைச் சந்திப்பதாக இருக்கிறேன். அது இயலும் என்றால் வேதாந்தத்தின் பிரபஞ்ச விளக்கத்திற்கு அறிவார்த்தமான அடிப்படை விதிகளை நாம் கண்டறியலாம்” என்று சுவாமி தனது நண்பர் ஒருவருக்குக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

விஞ்ஞானம், பரிணாம வளர்ச்சி, மத நம்பிக்கைகள் – இவற்றிற்கு இடையே முரண்பாடு இருந்ததாக அந்த வங்கத்து வீரத் துறவிக்கு என்றுமே எண்ணம் இருந்ததில்லை. அவரைப் பொருத்த வரை “நம்பிக்கை என்பது நமது அனுபவத்தின் வாயிலாக வெளிவர வேண்டியது; மதக் கோட்பாடுகள் மூலம் வற்புறுத்தி வரவழைப்பதல்ல”.

இந்தியப் பெண்மணிகளின் சமூக அந்தஸ்து உயராத வரை இந்தியா அடிமைப்பட்டும், ஏழ்மையில் உழன்றுகொண்டும் இருக்கும் என்று அவர், வரவிருப்பதை முன்கூட்டியே அறிவிப்பதுபோல, நம்மை எச்சரித்திருந்தார். இவ்வுலக இன்பங்களில் மேலைநாட்டினர் மூழ்கி இருப்பதற்காக அவர்களை எச்சரித்த அவர், ஒரு புதிர் போல நலிந்து நின்ற ஓர் இளைஞனை நோக்கி “நீ பகவத்கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடச் சென்றால் உனக்கு மேலுலகத்திற்குப் போகும் வாய்ப்பு அதிகரிக்கும்” என்று சொல்லி அவனை இவ்வுலகச் செயல்களில் மூழ்கச் சொல்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கையில் விவேகானந்தரின் செல்வாக்கு நன்கு படர்ந்து மகாத்மா காந்தி,  கார்ல் யுங்,  ஜார்ஜ் சாந்தயானா,  ஜேன் ஆதம்ஸ்,  ஜோசப் கேம்பெல்,  ஹென்றி மில்லர் போன்ற பலதரப்பட்ட சிந்தனாவாதிகளின் பணியை வெகுவாக ஆட்கொண்டது. அதற்குப் பிறகு அவருக்கு மேலைநாடுகளில் ஓர் இருட்டடிப்பு நிகழ்ந்தது.  தனது இயல்பு நிலையை அறிவதை விட தன் செயல்திறன்களில் மிகுந்த கவனம் செலுத்திய அமெரிக்காவின் புதிய தலைமுறை தியான முறைகளைக் கற்பதை விட்டுவிட்டு  ‘உடனுக்குடன் பயன் தரும் யோகவழி’களை நாடினார்கள். இவ்வாறாகத் தொன்றுதொட்டு வந்த உலகச் சுகங்களை நாடாத மனப்போக்கு 1980-களில் விலைமிக்க கருவிகளைக் கொண்டு உடலைச் சீராகப் பேணிக் காக்கும் மனப்பாங்காக மாறி உருவெடுக்கத் தொடங்கியது.

மேலும் அண்மைக் காலமாக, மனோதத்துவ ஆய்வாளர் பிராய்டின் அலசல் முறைகள் மூலம் பார்த்து, விவேகானந்தரையும், ராமகிருஷ்ணரையும் பாலின உணர்வுகளின் அடக்குமுறையைப் போற்றியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை முடுக்கி விட்டுள்ளனர். அவர்களது பார்வைக்கு எதிரான கருத்துடைய ஆய்வாளர்கள், அதே பிராய்டின் வேறு சில எளிய முறைகள் மூலம், அவ்விரு கொல்கத்தாவாசிகளும் சிறிதும் புரிந்துகொள்ள முடியாத ஜாம்பவான்கள் என்ற கருத்தை ஆதரிக்கிறார்கள். எவ்வித வரைமுறைகளும் அற்ற அவர்களது பிரம்மச்சரியத்தைப் புரிந்துகொள்ள அவர்களது 19-ஆம் நூற்றாண்டில் புழங்கிய வங்க மொழிப் பேச்சு வழக்குகளின் அறிவும், மேலைநாடுகளின் பாதிப்பு இல்லாததொரு ஆய்வுத்திறனும் தேவை என்பது அவர்களது கணிப்பு.

கிறிஸ்டோபர் ஐஷர்வுட்டும் அவரது நண்பர் ஓல்டஸ் ஹக்ஸ்லியும் அந்தக் கணிப்பு சரியானதே என்ற எண்ணம் கொண்டிருந்தனர். 1898-இல் இந்தியாவில் முதன்முதலில் பிரசுரம் ஆன “ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளுரைகள்” என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பு 1942-இல் வெளியானபோது,  அதற்கு அறிமுகம் எழுதிய ஓல்டஸ் ஹக்ஸ்லி “நாம் காணும் அனைத்தின் இறுதி உண்மையைப் பற்றிய ஆழ்ந்த, நுண்ணிய கருத்துக்கள்” என்று அந்த நூலின் சாராம்சத்தைப் போற்றுகிறார். ஓல்டஸ் ஹக்ஸ்லி, ஜோசப் கேம்பல், மறைந்த அமெரிக்க அதிபரின் பேத்தியான மார்க்கரெட் வில்சன் இவர்களின் துணைகொண்டு சாலிங்கரின் குருவான நிகிலானந்தர் அந்த நூலுக்கான மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார்.

1930-களில் ஹாலிவுட் ஹில்ஸ் எனும் இடத்தில் வேதாந்தத்தைப் பற்றி ஹக்ஸ்லிக்கும், ஐஷர்வுட்டிற்கும் அமெரிக்க எழுத்தாளர் கெரால்ட் ஹேர்ட் அறிமுகம் செய்து வைத்திருந்தார். அமெரிக்காவின் கிழக்குப் பக்கம் நியூயார்க் வேதாந்த மையம் இயங்குவது போல, மேற்குப் பக்கத்தில் அமைக்கப்பெற்ற ஹாலிவுட் வேதாந்த சங்கத்தை இயக்கும் அறிவார்ந்த, ஆர்வமிக்க பிரபவானந்தர் அவர்களே அந்த மூன்று ஆங்கில எழுத்தாளர்களும் வேதாந்த வழிகளில் செல்வதற்குத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.

நிகிலானந்தரைப் போலவே பிரபவானந்தரும் அறிவாளிகளைக் கவர்ந்திழுப்பதில் காந்தம் போன்றவர். அவரது உரைகளும் கலையுலகப் பிரபலங்களான ஐகோர் ஸ்ட்ரவின்ஸ்கி, லாரன்ஸ் ஒலீவியர், விவியன் லே, சோமர்செட் மாம் போன்றவர்களைக் கவர்ந்திழுத்தது. அத்தகைய தாக்கமே சோமர்செட் மாம் எழுதிய The Razor’s Edge என்ற படைப்புக்கும் அடிகோலியது. அந்த மையத்திலேயே சில காலம் தங்கிய ஐஷர்வுட்டின் வழியையே தானும் பின்பற்ற, அந்நாளைய பிரபல நடிகை க்ரெட்டா கார்போ அங்கு தங்குவதற்கு அனுமதி வேண்டினார். மையத்தில் தங்குவதற்கு ஆண்களே அனுமதிக்கப்படுவார்கள் என்பதைக் கேட்டு உற்சாகம் இழந்த அவர் “அதற்கென்ன? நானும் ஆண்களைப் போலவே உடை அணிந்துகொள்கிறேனே” என்று சொன்னாராம்!

தனது பாரிஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஹென்றி மில்லர் 1930-களில் எழுதிய  ‘Tropic of Cancer’ என்ற புத்தகம் ரசாபாசம் நிறைந்தது என்று அமெரிக்கா தடை செய்தாலும், 40 வருடங்களுக்குப் பின்னர் வழக்கு மன்றத்தால் அந்தத் தடை நீக்கப்பட்டு, பின்னர் ஒரு திரைப்படமாகவும் அரங்கேறியது. ஹாலிவுட் மையத்தில் மில்லர்  சந்தித்தபின், ஒரு சிறிய நூலகம் கொள்ளும் அளவிற்கான எண்ணிக்கையில் வேதாந்தம் பற்றிய நூல்களைப் படித்து முடித்து, 1944-ல் ‘பிக் சர்’ என்ற இடத்திற்கு அவர் குடி புகுந்தார். தனது மலரும் நினைவுகளை ‘The Air Conditioned Nightmare’ என்ற நூலில் பதிவு செய்த அவர், அந்த நூல் முழுவதிலுமே விவேகானந்தரை அக்காலத்திய அரும்பெரும் ஆன்மிக ஞானி என்று விவரித்துவிட்டு, மேலைநாடுகளின் ஆன்மிக வறட்சியைத் துடைக்கும் தன்மை கொண்ட எல்லாம் வல்ல இறைத்தூதர் என்றும் போற்றுகிறார்.

வேதாந்தக் கருத்துக்களில் சாலிங்கருக்கு இருந்த ஈர்ப்பு போலவே, ஐஷர்வுட்டின் ஈர்ப்பும் வாழ்நாள் முழுதும் தொடர்வதாகவும், சிறிதும் மாற்றுக் குறையாததாகவும் இருந்தது. பின் வந்த 20 ஆண்டுகளில் அவர் பிரபவானந்தரோடு சேர்ந்து பகவத் கீதை, பதஞ்சலியின் யோக சூத்திரம், ஆதி சங்கரரின்  ‘விவேக சூடாமணி’ என்ற நூல்களை மொழியாக்கம் செய்ததோடு, விவேகானந்தர், ராமகிருஷ்ணர் மற்றும் அவர்கள் வழிகள் பற்றியும் பல நூல்களை எழுதிக் குவித்தார்.

ஆனால் ஹக்ஸ்லியின் வழிகளோ பின்பு திசைமாறிப் போயின. தனது இறுதிக்காலத் தருணங்களில் அவர், அதுதான் தனது ஆன்மிகப் பயணம் என்று நம்பிக்கொண்டு, அதைத் தனது இரண்டாம் மனைவி லாரா, மற்றும் வேதாந்திகள் கூடவே கூடாது என மறுக்கும் போதைப் பொருள்களின் வசத்தில் விட்டுவிட்டார். சமாதிக்கான ஒரு குறுக்கு வழியைத் தான் கண்டுகொண்டதாக எண்ணிக்கொண்டு, அந்த மாமனிதர் தான் இறக்கும் போதும் தனது மனைவி கையால் LSD விஷஊசி மருந்தைச் செலுத்தச் சொன்னார். ஒரு துறவி வருத்தத்துடன் கூறியது போல “நான் சந்தித்த மனிதர்களிலேயே ஓல்டஸ் ஹக்ஸ்லி ஒரு சிறந்த அறிவாளி, ஆனால் அவருக்கு நல்லது – கெட்டது பிரித்துப் பார்க்கும் விவேகம் இல்லாது போயிற்று” என்பதே உண்மை.

விவேகானந்தரும், வேதாந்தமும் பெரிதும் வசீகரித்த இலக்கிய மேதைகளிலேயே ஜே.டி.சாலிங்கர் ஒருவரே அவரது இயக்கத்தில் இறுதி வரை ஈடுபாடு கொண்டு, அதற்குத் தேவையான தியாகங்களும் புரிந்தார். Gospel என்ற அருளுரைகளின் ஆங்கிலப் பதிப்பை  ‘இந்த நூற்றாண்டின் சமய நூல்’ என்று கூறி, தனக்கு இருந்த அந்த நூலின் காப்புரிமையை அவர் அதன் பதிப்பாளரான பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு விட்டுக்கொடுத்தார்.

1961-க்கு முன்னதாகவே நிகிலானந்தர் சாலிங்கரை ஒரு சீடராக அங்கீகரித்துவிட்டார். இலக்கிய வட்டாரத்தில் அவரது புகழ் ஓங்கியிருந்த அச்சமயம் அவர் வேதாந்தக் கருத்துக்களும், அது தொடர்பான மற்றவர்களது குறிப்புகளும் பெரிதும் உள்ளடக்கியிருந்த ‘Franny and Zooey’ என்ற நூலை வெளியிட்டார். அதன் பிரதி ஒன்றில் மிகவும் நெகிழ்ச்சியாக தனது குருவிற்கு நன்றி தெரிவித்து எழுதி அதை அவருக்குக் கொடுத்தார். அந்த நூலைப் பற்றி அவர் குருவிடம் பேசும்போது, அனைத்து வேதாந்தக் கருத்துக்களையும் நூலில் குறிப்பிடாது அங்கங்கே தொட்டும் தொடாமலும் எழுதியிருப்பதாகச் சொல்லி, அதன் வாசகர்கள் மேற்கொண்டு வேதாந்தத்தை ஆழப் படித்து அவரவர்களே அறிந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

94-ஆவது தெருவில் அமைந்திருந்த வேதாந்த மையத்தில் அவர்கள் அடிக்கடி சந்தித்து, துறவு நிலையில் தோன்றும் பற்பல ஆன்மிகம் தொடர்பான சவால்களைப் பற்றி விவாதித்தனர். ‘செயின்ட் லாரன்ஸ் ரிவர்’ எனும் நகர்ப்புறத்தில் ஆயிரம் தீவுப் பூங்கா எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வேதாந்த மையத்திற்கு ஏகாந்தத் தனிமை நாடி சாலிங்கர் அடிக்கடி செல்வார். அவ்வாறு செல்லும் அவர் விவேகானந்தர் 1890-களில் ஏகாந்தத்தில் திளைத்துக்கொண்டு தங்கியிருந்த அதே குடிலில் தங்குவார்.

ஜனவரி 1963-இல் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளரான  யூ தாண்ட் தலைமை தாங்க, நியூயார்க் நகரில் நடந்த விவேகானந்தரின் 100-ஆவது பிறந்தநாள் விழாவில், சாலிங்கர் முன்வரிசையில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார். அதன்பின் சில வாரங்கள் கழித்து, “Raise High the Roof Beam, Carpenters and Seymour: An Introduction” என்ற படைப்பை வெளியிட்டார். அது இரண்டு சிறிய நாவல்களின் தொகுப்பு. அதில் சாலிங்கரின் அகங்கார வடிவு என்று கருதப்பட்ட சீமோர் என்ற பாத்திரம் தற்கொலை செய்துகொள்வதாக வரும் நிகழ்ச்சி தான் ஒரு முக்கிய அம்சம்.

அந்த நாவலில் சீமோர் தனது நாட்குறிப்பில் “வேதாந்தம் பற்றிய பல தரப்பட்ட விஷயங்களை இன்று முழுதும் படித்துக்கொண்டு இருந்தேன்” என்று இவ்வாறாக எழுதுவது சாலிங்கர் தன்னையே குறிப்பிட்டுகொள்வது போலத்தான் இருக்கிறது. அது தவிர சீமோர் தன்னைப் பற்றி “நான் ஒரு நான்காம் வகுப்பு கர்ம யோகி என்று என்னை நினைக்கிறேன்; காய்கறியில் சிறிது காரம் கூட்டுவது போல அதில் சிறிது ஞான யோகமும் கலந்து இருக்கலாம்” என்று சொல்லிக்கொள்வதும் அவ்வாறே இருக்கிறது.

‘ஹாப்வொர்த் 16, 1924′ என்ற தலைப்பில் ‘தி நியூயார்க்கர்” மாத இதழில் அவரது இறுதிக் கட்டுரையில், அவர் விவேகானந்தருக்கு எண்ணற்ற புகழாரம் வழங்குவார். அதில் “நம் காலத்தில் துருதுருவென்று அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்தியாவின் விவேகானந்தர் எழுதியுள்ள ராஜ யோகம், பக்தி யோகம் என்ற இரண்டு கையடக்க நூல்கள் போதுமே” என்கிறார்.

அதன் பின்னர் அமெரிக்கர்கள் பெரிதும் விரும்பிய அந்த எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிட்டார். ராமகிருஷ்ணர் மிகவும் ஒதுக்கித் தள்ளிய பெயரும் புகழும், சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்த சாலிங்கருக்கும் தேவையற்றுப் போய்விட்டது. அவரது ஓயாது பெருகிய இலக்கிய ஊற்று அடங்கி, அது இருந்த இடத்தில், அவரது புத்தி பிசகி இருக்கிறதோ என்ற சந்தேகம் வரும் அளவிற்கு, அவரது இடைவிடாத கடுமையான ஆன்மிகத் தேடல் சுமார் 40 ஆண்டுகளாக, அவர் 2010-இல் காலமாகும் வரை தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

ஓர் அடம் பிடிக்கும் பித்தன் என்று சாலிங்கரை அவரது சம காலத்தவர்களும், சரித்திர ஆய்வாளர்களும் கருதினாலும், அவரது வழி வந்தவர்களால் நியூயார்க்கில் உள்ள ராமகிருஷ்ண – விவேகானந்த மையத்திற்கு கொடுக்கப்பட்ட நான்கு கடிதங்கள் அவரை மனம் குவிந்த பக்தி மற்றும் துறவைப் பேணிய மனிதர் என்றே காட்டுகிறது. “நான் அனுதினமும் காலையில் உறக்கத்தில் இருந்து விழித்ததும் கீதையில் இருந்து சிறிது படித்த பின்பே படுக்கையை விட்டு எழுந்திருப்பேன்” என்று 1975-இல் அவர் நிகிலானந்தரை அடுத்து தலைவராக வந்த சுவாமிக்கு எழுதி வைத்திருக்கிறார்.

சுவாமி விவேகானந்தரின் மேலைநாடுகள் விஜயம் பற்றிய முழு விவரங்கள் கொண்ட ஆறு நூல்களைத் தொகுத்து அளித்த மேரி லூயி பர்கே என்பவரிடம்  சாலிங்கர் ஒரு நெடுநாள் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். பர்கே அவர்களும் சாலிங்கரைப் போலவே இன்னுமொரு தீவிர ஆன்மிக நாட்டம் கொண்ட துறவியாக வாழ்ந்தவர். சகோதரி கார்க்கி என்றே அவர் ஒரு துறவுப் பெயரையும் ஏற்றிருந்தார். அவ்வாறு இருந்தும் தங்களது கடிதங்கள் மூலம் பர்க் ஏதேனும் செல்வாக்கைத் தேடுவாரோ என்று இயற்கையாகவே சந்தேகப்படும் சாலிங்கருக்கு ஒருவித அச்சம் இருந்தது. ஆனால் பர்கே அவர்களோ அந்தக் கடிதங்கள் அனைத்தையும் தீயிலிட்டுக் கொளுத்தி தனது நேர்மையை நிலைநாட்டினார்.

அவரது மேலைநாடுகளின் இரண்டு விஜயங்களுக்கு இடையே, ராமகிருஷ்ண துறவிகள் பரம்பரையை விவேகானந்தர் ஒரு துறவிகள் இயக்கமாகவும், பொதுமக்கள் சேவை இயக்கமாகவும் நிறுவினார். இந்தியாவில் அதுபோன்று இருக்கும் நிறுவனங்களிலேயே மாபெரும் நிறுவனமாக அது இன்று விளங்கி, பலகோடி மக்களுக்கு உணவு, உடல் ஆரோக்கியம் மற்றும் பேரழிவு நிவாரணச் சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது. அன்னியர்கள் ஆண்டதனால் அடக்குமுறைக்கு ஆளான தனது மக்களுக்கு அவர், மேலைநாட்டு மக்களிடையே இருந்த தனிநபர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அத்துடன் “எங்களால் எதுவும் முடியும்” என்ற அமெரிக்க உணர்வையும் சேர்த்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். “பலம், பலமே  எனது மதம்! மதம் பலவீனமானவர்களுக்கானது அல்ல!” என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த நாள் விழாவை இந்தியா முழுவதும் 2013 ஜனவரி 12-ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்குக் கொண்டாடப்பட்டது. யோகம் பயில்வதை ஆன்மிக வழிகளாகக் காட்டும் அவரது நான்கு நூல்கள் பல இடங்களில் வாசித்துக் காட்டி விளக்கப்படும். இளஞ்சிறார் திருமணத்திற்கு எதிரான வாதங்கள் தொடங்கி, ஆங்கிலக் கவிஞன் மில்டனின்  ‘Paradise Lost’ கவிதைகள் உட்பட, அவரது செல்லப் பிராணிகளான ஆடுகள் மற்றும் வாத்துக்கள் வரை அவரது சிந்தனைகள், பேச்சுக்கள் மற்றும் கட்டுரைகள் எல்லாமே ஒன்பது அதிகாரங்களாகத் தொகுத்து வெளியிடப்பட்டன. அவரது போதனைகளில் ஓர் ஆன்மிகக் கருத்தின் கருவை மனதில் பதிகிற மாதிரி ஒரு வரியில் சொல் என்று எவரேனும் கேட்டால் “நீ உன் உடல் அல்ல” என்பதே சரியாக இருக்கும். உடற்பயிற்சிக்காக யோகா செய்யும் அனைவருக்கும் அது ஒரு நல்ல செய்தியாக இருக்க முடியாது. சாலிங்கர் போன்று மனம் தளர்ந்து போனவர்களுக்கான நற்செய்தி என்னவென்றால் விவேகானந்தர் தரும் இன்னுமொரு மாற்றுச் செய்தியான “நீ உன் மனம் அல்ல” என்பதே ஆகும்.

தனது இறுதிக் காலத்தில் உடல்நிலை சரியில்லாது படுத்திருந்த நிகிலானந்தருக்கு 1972-இல் தான் எழுதிய கடிதத்தில் சாலிங்கர் அந்தக் கருத்தைத் தான் இவ்வாறு கூறுகிறார்.

“ஒருவன் தனது உடலை எப்படிப் பேணிக் காத்து நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றதொரு சிறிய கலையை வளர்த்திருக்க வேண்டியதில் கீழை நாடுகள் தங்களது அதிநுட்ப அறிவைச் சிறிதாவது பயன்படுத்தி இருக்கலாம் என்ற ஆவலும், எண்ணங்களும் எனக்குச் சில சமயம் தோன்றுகிறது. உடலைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் இருக்கும் அதீத நிலை ஒரு பக்கம், ஆனால் அதைப் பற்றியே முழுமையான ஆவலுடன் ‘ஹட யோகம்’ போன்று பயிலும் மற்றுமொரு அதீத நிலை இன்னொரு பக்கம் என்ற இருதலைக்கொள்ளியின் இடையே பயனுள்ளதான நடுநிலை என்று ஒன்று அங்கு இருப்பதாகத் தெரியவில்லை”.

அவரது நீண்ட இருண்ட காலத்தில் ஓர் ஒளிவிளக்கு ஏற்றியது போல வழிகாட்டிய தனது குருநாதருக்கு தனது நன்றியுணர்வை அந்தக் கடிதம் மூலம் இவ்வாறாக சாலிங்கர் தெரிவிக்கிறார்:

“தங்களின் விளக்கப்படி, ஆவலுடன் கேட்பவர்களுக்கு நீங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளுரைகளைப் படிப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் கேட்கும் அந்தப் பாக்கியசாலிகளோ நீங்கள் அருளுரைகளைப் படிப்பதைச் சற்றே வேறு மாதிரியாகப் பார்க்கலாம் அல்லவா? என்னைப் பொருத்த வரை, நான் உங்கள் வாசிப்பைக் கேட்பதற்கு முன் எனது வாழ்வில் நடந்த பல முக்கியமான, நினைவுகூரத் தக்க நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து விட்டேன்; ஆனால் ஆயிரம் தீவுப் பூங்காவில் தாங்கள் உபநிஷதங்களில் இருந்து படித்ததையும், அதை விளக்கிச் சொன்னதையும் நான் சிறிதும் மறக்கவேயில்லை”.

அவ்வாறு அந்தக் கடிதத்தை அவர் எழுதியதற்குப் பல நாட்கள் முன்னதாகவே தனது எழுத்துப் பணியை அறவே நிறுத்திவிட்டார். எழுதுவதை நிறுத்தியதைப் பற்றிய கவலையும் அவருக்கு இருந்தில்லை.

குறிப்பு:

திரு. சௌமிக், விவேகானந்தா.ஓஆர்ஜி இணையதளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.  இவரது ஆங்கிலக் கட்டுரையை தமிழில் வழங்கி இருப்பவர், திரு. எஸ்.ராமன். இவர் சென்னையில் வசிக்கிறார்; மொழிபெயர்ப்பாளர்; மின்னணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரமண மகரிஷியின் பக்தர்.

$$$

Leave a comment