தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 19

-சேக்கிழான்

பகுதி-18: செங்கோல் ஏந்திய நம்பெருமாள்

.

19. மன்னவர்க்கு அழகு எது?

வெற்றிவேற்கை என்ற நூலை இயற்றியவர், கொற்கை நகரத்திலிருந்து ஆட்சி புரிந்த அரசர் அதிவீரராம பாண்டியன் ஆவார். இவரை தென்காசிப் பாண்டியர் என்றும் கூறுவர். இவருடைய ஆட்சிக் காலம் பொ.யு. 11 – 12ஆம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவர். குருமூலமாக சிவ தீட்சை பெற்ற சிவபக்தர். இவர் இயற்றிய பிறநூல்கள் நைடதம், லிங்கபுராணம், காசிக் காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி போன்றவை. இவருடைய சகோதரர் புலவர் வரதுங்க ராம பாண்டியன்.

வெற்றிவேற்கை நூல்  ‘நறுந்தொகை’ என்றும் அழைக்கப்படுகிறது. பிற்கால நீதிநூல்களுள் மிகவும் எளிமையும் இனிமையும் வாய்ந்தது இந்நூல். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் தமிழக திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்ட நூல் இது. அண்மைக்காலம் வரையிலும் (1990) நமது ஆரம்பப் பள்ளி பாடநூல்களில் பாடமாக இடம் பெற்றிருந்த இந்நூலின் செய்யுள்களை பாடத்திட்டத்தில் இருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை.

மன்னராகவும் புலவராகவும் இருந்த அதிவீரராம பாண்டியனின் இந்நூல், செங்கோன்மை குறித்துக் கூறும் கருத்துகளைக் காண்போமா?

கல்விக்கு அழகு கசடற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்…

      (வெற்றிவேற்கை : 2-8)

இப்பாடலுக்கு தனியே பொருள் விளக்கம் கூற வேண்டியதில்லை. இதில் ஐந்தாம் அடியில் கூறப்படும் கருத்தே கவனிக்கத் தக்கது. மன்னவர்க்கு அழகு அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் அல்ல, அவர்கள் நடாத்தும் நல்லாட்சியின் சிறப்பே என்கிறார் நூலாசிரியர்.

இதையே மற்றொரு பாடலில் மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் இவர். செங்கோன்மைக்கு எதிரானது கொடுங்கோன்மை. அத்தகைய கொடுங்கோல் மன்னர் ஆளும் நாட்டில் வாழ்வதை விட, கொடிய புலி வாழும் காட்டில் வசிப்பதே நல்லது என்கிறார் அதிவீரராம பாண்டியர்:

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும் புலி வாழும் காடு நன்றே!

     (வெற்றிவேற்கை - 63)

குமரகுருபரர் கூறும் அறிவுரைகள்:

பிற்கால நீதி நூல்களுள் மற்றொன்று ‘நீதிநெறி விளக்கம்’. இந்நூலை இயற்றியவர் குமரகுருபர சுவாமிகள். துறவியாகவும், புலவராகவும் பொ.யு. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; தருமபுரம் சைவ ஆதீன திருமடத்தின் தம்பிரானாக இருந்தவர்; பின்னாளில் காசியில் காசி திருமடத்தை நிறுவினார். பின்னாளில் திருப்பனந்தாளிலும் இதன் கிளை மடம் நிறுவப்பட்டது. காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இந்துக்கள் வழிபடு உரிமைக்காக, இவர் மொகலாய மன்னர் ஔரங்கசீபுடன் வாதம் புரிந்து வென்றதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

சகலாகலாவல்லிமாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம் உள்ளிட்ட 16 நூல்கள் இவரால் இயற்றப்பட்டன. இவரது  ‘நீதிநெறி விளக்கம்’ நூல் 102 வெண்பாக்களைக் கொண்டது. இதில் சாமானிய மக்களுக்கு மட்டுமல்லாது, மன்னர்களுக்கான நீதிகளையும் கூறியிருக்கிறார்.

மக்களிடம் வரிவசூலிக்கும் முறை குறித்த இவரது அறிவுரை இதோ…

குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால்கொளலும் மாண்பே - குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.

     (நீதிநெறி விளக்கம் – 29)

பொருள்:

குடிமக்களை கடுமையாக வருத்தி வரி வசூலிக்கும் அரசனின் செயலை விட. கன்றையுடைய பசுவின் மடியினை அறுத்து பால் கறப்பது சிறந்ததாகும்.  குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாத்து நல்ல முறையில் வாங்கும் வரியே, அரசர்களுக்கு சிறந்த கருவூலமாக அமைந்து,  வெள்ளமாய்ப் பெருகும்.

வரிவசூலிப்பதன் முறையைக் கூறிய குமரகுருபரர், அரசனாக இருப்பவனின் இயல்புகள் எவ்வாறு இருக்கக் கூடாது என்றும் கூறுகிறார். இதோ அப்பாடல்:

இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன்
ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும்
வேடலன் வேந்தும் அலன்.

     (நீதிநெறி விளக்கம் - 30)

பொருள்:

இன்று தர வேண்டிய பொருள்களை (வரியை) நாளைக்கு வாங்கிக்கொள்ள ஒருநாள் கூடப் பொறுக்க மாட்டான்; சற்று நேரம் எதிரே நின்று குடிமக்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்கும் அகப்பட மாட்டான்; யாரேனும் ஒருவர் துணிந்து நேரில் சென்று முறையிட்டால் சினந்து, பல்லைக் கடித்து அச்சுறுத்துவான்; இப்படிப்பட்டவன் வேடனும் அல்லன் அரசனும் அல்லன்.

-என்று விலங்குகளை வேட்டையாடும் வேடனுக்கு தகுதியற்ற மன்னனை ஒப்புமையாக்குகிறார் குமரகுருபரர்.

நமது நாட்டில், நல்லரசன் ஆளும் நாட்டில் மாதம் மும்மாரி பொழியும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக நிலவுகிறது. செங்கோலாட்சியின் அடையாளமே மாதம் மும்மாரி மழை தான் என்கிறது ‘விவேக சிந்தாமணி’ என்னும் பிற்கால நீதிநூல். நாயக்கர் காலத்தில் இயற்றப்பட்ட நூல் இது. எழுதியவர் யாரென்று தெரியவில்லை. இந்நூலில் 135 பாடல்கள் உள்ளன.

இப்பாடலுக்கு தனியே விளக்கம் தேவையில்லை:

வேத மோதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

     (விவேக சிந்தாமணி- 26)

என்று கூறும் விவேக சிந்தாமணி,  ‘’வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை” என்று அடுத்த பாடலில் எச்சரிக்கவும் செய்கிறது. அதாவது, முறை தவறும் மன்ன்ன் இருக்கும் நாட்டில் ஆண்டுக்கு ஒரு மழைதானாம்.

ஔவையார் கூறும் மன்னரின் கோல்:

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறையத் தங்கினால் நெல் விளைச்சல் அதிகரிக்கும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாகப் போற்றப்படுவான் என்கிறார் ஔவையார் இப்பாடலில்:  

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

     -ஔவையார் 

இப்பாடல் மன்னர் குலோத்துங்க சோழனை வாழ்த்தி ஔவையார் பாடியதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன. இப்பாடலில் ஔவையார் குறிப்பிடும் மன்னரின் கோல் செங்கோலே. குடிமக்கள் உயர்வாக வாழ்வதே செங்கோலின் இலக்கணம் என்கிறார் ஔவைப்பாட்டி.

இதே கருத்தை காரியாசானின் சிறுபஞ்சமூலமும் கூறுவது கவனிக்கத்தக்கது:

வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர, வைகலும்
நீர் சான்று உயரவே, நெல் உயரும்; சீர் சான்ற
தாவாக் குடி உயர, தாங்கு அருஞ் சீர்க் கோ உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு.
 
     (சிறுபஞ்சமூலம்- 45)

விளக்கம்:

நீண்ட கூந்தலையுடைய பெண்ணே! வரப்பு உயருமானால் நாள்தோறும் நீர் உயரும். நீர் மிகுந்து உயருமானால் நெல் விளைச்சலின் அளவு  உயரும்.  நெல் விளைச்சலின் அளவு உயருமானால், அதனைப் பயிர் செய்த குடிமக்கள் உயர்வர். குடிமக்கள் உயரும்போது, அவர்களின் அரசன் உயர்வான். அரசன் உயர்ந்தால் உலகம் செழிக்கும்.

தமிழ் மூதாட்டி ஔவையின் தனிப்பாடல் ஒன்றும், செங்கோல் ஆட்சியின் சிறப்பை வேறுவிதமாகக் கூறுகிறது.

“செழிப்பான வாழ்வுக்கு செல்வம் வேண்டும்; வாணிபம் செய்ய நல்லறிவு வேண்டும்; செங்கோல் ஆட்சி நடத்த நல்ல நாடு வேண்டும்; இவை இல்லாமல் இவற்றைச் செயல்படுத்தவும் முடியும். ஆனால் குரு இல்லாமல் வித்தை கற்பதும், குணமில்லாத பெண்ணோடு வாழ்வதும், விருந்து வராத வீட்டில் வாழ்வதும் வீணே ஆகும்” என்கிறார் ஔவையார். இதோ அப்பாடல்:

மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்
னாடில்லான் செங்கோல் நடத்துவதும் – கூடும்
குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல்.

      (ஔவையார் தனிப்பாடல் திரட்டு- 59)

குரு இல்லாவிடில் கல்வி இல்லை. செல்வம் இல்லாவிடில் நல்வாழ்வு இல்லை; நல்ல நாடு இல்லாவிடில் செங்கோலும் இல்லை என்று இதற்கு இணைப் பொருள் விளக்கமும் காணலாம்.

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 19

Leave a comment