தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 18

-சேக்கிழான்

தமிழ் இலக்கியத்தின் என்றுமுள சீரிளமைக்கு அடையாளமான இனிய பாசுரங்கள் வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காணப்படுகின்றன. அவற்றில் செங்கோல் ஏந்தி வரும் பாசுரங்கள் சிலவற்றை இங்கே நாம் காணலாம்...

பகுதி-17: வேந்தன் ஓங்குக! வையகமும் துயர் தீர்க!

.

18. செங்கோல் ஏந்திய நம்பெருமாள்

திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது வைணவ சமயம். பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து தமிழகத்தில் சைவம் எழுச்சி பெற்றது போலவே, மற்றொரு அகச்சமயமான வைணவமும் மலர்ச்சி பெற்றது. பொ.யு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை, மாலவனைப் போற்றும் இனிய பாசுரங்களால் தமிழ் இலக்கியம் செழிப்புற்றது.

நாட்டை ஆளும் மன்னனை மாலவனாகவே கருதும் பாரம்பரியம் வைணவத்தில் உண்டு. மாலவனின் ஆயுதமான ‘திகிரி’யை (சக்ராயுதம்) அரசனின் மங்கலச் சின்னமாகக் கொள்ளும் மரபு சேர அரசர்களிடத்தில் உண்டு.

திருஉடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே…

     (பாசுரம்- 3163: திருவாய்மொழி)

என்று பாடுவார் நம்மாழ்வார். அனைத்துச் செல்வ வளங்களும் கொண்ட மன்னரை பெருமாளுக்கு இணையாகக் கொண்டாடுவது நமது மரபு. அதனையே இங்கு குறிக்கிறார் நம்மாழ்வார்.

கோ ஆகி மா நிலம் காத்து, நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் – பூ மேவும்-
செங் கமல நாபியான்  சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர்.  

     (பாசுரம்- 2250: இரண்டாவது திருவந்தாதி)

என்ற பூதத்தாழ்வாரின் பாசுரம் இங்கு நினைவு கூர்தற்குரியதாக உள்ளது.

“இந்தப் பூவுலகில் மன்னராகி மக்களைக் காக்கும், நிலம் முழுவதையும் ஆண்டு, குதிரையேறி பவனி வரும் அனைவரும், பிரமனை நாபியில் உதிக்கச் செய்த பெருமாளின் திருவடிகளில் பல பிறவிகள் தொண்டு செய்ததால் தான் அந்த உயர்ந்த நிலையை அடைந்தார்கள்” என்கிறார் பூதத்தாழ்வார்.

எனவே தான். பெருமாளின் சக்கரப்படையை (திகிரி) மன்னரின் நல்லாட்சிக்கு அடையாளமாக தமிழ் இலக்கியம் முன்வைத்தது. செங்கோலும் திகிரியும் மன்னரின் மங்கல அடையாளச் சின்னங்களாகத் திகழ்ந்தன. அவை பயின்று வரும் பாடல்கள் சிலவற்றை இந்த அத்தியாயத்தில் நாம் காணலாம்.

பன்னிரு ஆழ்வார்கள்:

தமிழகத்தில் வைணவம் வளர்த்த பெரியோர், பன்னிரு ஆழ்வார்களாக வணங்கப்படுகின்றனர். அவர்களின் பட்டியல்:

1. பொய்கையாழ்வார், 2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. திருமழிசையாழ்வார், 5. நம்மாழ்வார், 6. மதுரகவியாழ்வார், 7. குலசேகர ஆழ்வார், 8. பெரியாழ்வார், 9. ஆண்டாள், 10. தொண்டரடிப்பொடியாழ்வார், 11. திருப்பாணாழ்வார், 12. திருமங்கையாழ்வார்.

இந்த பன்னிரு ஆழ்வர்களும் பாடிய சிற்றிலக்கிய நூல்களின் எண்ணிக்கை 24. இவற்றில் இடம் பெற்ற பாடல்களின் மொத்த எண்ணிக்கை 3,892. இவை அனைத்தும் நாதமுனிகளால் பத்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன. இவை  ‘ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்’ என்று அழைக்கப்பட்டன.

அடுத்து வந்த மணவாள மாமுனிகள், ராமானுஜர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார்  இயற்றிய ராமானுஜர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள்) இத்துடன் சேர்த்து  ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூற்தொகையாக்கினார். இத்தொகையில் உள்ள மொத்த பாசுரங்களின் எண்ணிக்கை 4,000. இவற்றில் பெரும்பாலானவை இன்னிசைப் பாடல்களாகும்.

இந்த நூற்தொகையில் உள்ள நூல்களின் எண்ணிக்கை 25; அவற்றின் பட்டியல்:

1. திருப்பல்லாண்டு, 2. பெரியாழ்வார் திருமொழி, 3. திருப்பாவை, 4. நாச்சியார் திருமொழி, 5. பெருமாள் திருமொழி, 6. திருச்சந்த விருத்தம், 7. திருமாலை,  8. திருப்பள்ளி எழுச்சி, 9. அமலனாதிபிரான், 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு, 11. பெரிய திருமொழி, 12. திருக்குறுந்தாண்டகம்,

13. திருநெடுந்தாண்டகம், 14. முதல் திருவந்தாதி, 15. இரண்டாம் திருவந்தாதி, 16. மூன்றாம் திருவந்தாதி, 17. நான்முகன் திருவந்தாதி, 18. திருவிருத்தம், 19. திருவாசிரியம், 20. பெரிய திருவந்தாதி, 21. திருஎழுகூற்றிருக்கை, 22. சிறிய திருமடல், 23. பெரிய திருமடல், 24. திருவாய்மொழி, 25. ராமானுஜ நூற்றந்தாதி.

திராவிட வேதம் என்று திராவிட பிரபந்தம் என்றும் அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம், வைணவர்களின் தமிழ்மறையாகக் கொண்டாடப்படுகிறது.

முல்லைநிலக் கடவுளாக மாயோனை வழிபடுவது பழந்தமிழ் மரபு. “மாயோன் மேய காடுறை உலகமும்” என்பது தொல்காப்பிய நூற்பா (அகத்திணையியல்- 5). அந்த மாயவனை, மாலவனை, பாகவதம் போற்றும் பாலகனை, கண்ணனை, கார்மேக வண்ணனை ஆராதிப்பதே வைணவ மரபு. அந்த மரபின் உச்சகட்டமாக, பக்தியின் சிகரமாக ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் விளங்குகின்றன.

திகிரியின் சிறப்பு:

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்.

    (சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்- மங்கல வாழ்த்து)

-என்று இளங்கோ அடிகள் பாடுகிறார். பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழி (திகிரி- சக்கரப்படை) போல, பொன்னாலான கொடுமுடியை உடைய மேருவை (கயிலாயத்தை) வலம் வருவதால், அந்த ஞாயிறை வணங்குவோம் என்பது இப்பாடலின் பொருள்.  

நச்சினார்க்கினியர் புறத்திணையியல் உரையில், திகிரியை நல்லாட்சியின் சின்னமான செங்கோலுக்கு இணையெனக் கொள்கிறார். செங்கோல் போலவே திகிரியும் நல்லாட்சியின் சின்னமாகக் கருதப்பட்டதற்கு சான்றாக பல சங்க இலக்கியப் பாடல்கள் இருப்பதை ஏற்கனவே நாம் கண்டோம்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 696, 919, 1180, 2348 பாசுரங்கள் ‘திகிரி’யைக் கொண்டதாக அமைந்திருக்கின்றன; இவை அனைத்திலும் பெருமாளின் சக்கரப்படையாகவே குறிக்கப்பட்டுள்ளன.

இந்த சக்கரப்படையை அணிந்து நல்லாட்சி செய்த சேர மன்னன் குறித்த பதிற்றுப்பத்து பாடல் இது…

…பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படை ஏர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக்
கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல, நின்று நீ
கெடாஅ நல் இசை நிலைஇத்
தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே!

    (பதிற்றுப்பத்து –14: 16-22)

“….வெற்றிக் கொடியுடன் வரும் யானைக்கூட்டப் படையை ஏரில் பூட்டி உழவு செய்பவன் நீ. பாடினியர் ஆடிப்பாடிப் போற்றும் வேந்தன் நீ. உன் முன்னோர் மணி பதித்த பொன்னாலான சக்கரத்தை (சக்ராயுதம்- திகிரி) கையில் ஏந்தி, கடலை எல்லையாக உடைய இந்த நிலமெல்லாம் ஆண்டனர். அவர்களைப் போல நீ ஆள வேண்டும். உன் புகழ் நிலைபெற்றிருக்க வேண்டும். நீயும் உன் புகழும் குன்றாமல் நிலைபெற்றுத் திகழ வேண்டும்” – என்று சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடுகிறார் புலவர் குமட்டூர்க் கண்ணனார்.

இனி, செங்கோல் பயின்று வரும் திவ்யப் பிரபந்தப் பாடல்கள் சிலவற்றைக் காணலாம்.

ஆண்டாள் போற்றும் செங்கோல்:

திருவில்லிப்பூத்தூரில் பிறந்த, சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள், கண்ணன் மீதான மையலில் பாடிய ‘நாச்சியார் திருமொழி’ அகச்சுவை மிகுந்தது. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்பாற் புலவரான ஆண்டாள் நாச்சியாரின் பாடல்கள் (முதல் ஆயிரம்), இனிய சுவையுடையவை.

“கடல் சூழ்ந்த இந்த நிலத்தையும் விண்ணுலகையும் ஆள்பவர், செங்கோல் ஏந்திய திருவரங்கத்துச் செல்வன். அத்தகைய அரசனுக்கு என் கை வளையல் மீது அப்படி என்ன ஆசை? அதைத் திருடிக் கொள்வதால் அவருக்கு இடர் தீர்ந்து விடுமோ? இப்படி ஒரு அரசனே தன்னை நம்பியுள்ள குடியானவளின் வளையலை வலியப் பெற்றால் நான் எங்கு செல்வது? இதனால் அவருக்கு ஆகப் போறது என்ன? அவரையே நினைத்துருகி வளை கழன்றதே, இந்த வளையலா அவர்தம் துயர் தீர்க்கப் போகிறது?”  என்று அகத்திணைப் பொருளில், பெருமாளையே வம்புக்கு இழுக்கிறார் ஆண்டாள். இதோ அப்பாடல்:

பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும்
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே?

     (பாசுரம்- 609: நாச்சியார் திருமொழி)

மாலவன் மீதான காதலில் உருகி மெலிந்தவளானதால் இவளது கைவளையல்கள் கழன்று விட்டனவாம். வளையணியை மாலவனே கழன்றோடச் செய்தவன் என்று புலம்புகிறாள் சுடர்க்கொடி.

கோல் நோக்கி வாழும் குடி:

அடுத்து குலசேகர ஆழ்வாரின் பாசுரம் (முதல் ஆயிரம்) ஒன்றைக் காண்போம்.

“மீன்கள் நீர்வளம் சூழ்ந்த இடத்துக்காக ஏங்குவது போல, திருவித்துவக்கோட்டு (கேரளத்தில் உள்ள திருத்தலம்) பெருமானே, எனக்கு நீ அருள் செய்தாலும், செய்யாவிட்டாலும், உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறு ஒருவரைச் சரணம் புக மாட்டேன். பல கஷ்டங்களைத் தரும் மோசமான அரசனாக இருந்தாலும் அவன் எப்போதேனும் செங்கோல் ஆட்சி நடத்துவான் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து வாழ்கிற குடிமக்கள்போல நான் உன்னையே சரணடைந்து இருப்பேன்” என்கிறார் குலசேகரர். இதோ அப்பாடல்:

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்-
பால் நோக்காயாகிலும்  உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே.

    (பாசுரம் – 690: பெருமாள் திருமொழி)

இப் பாசுரத்திலிருந்து, குடிமக்கள் துயரமின்றி நல்லாட்சி செய்வது மன்னனின் கடமை என்பது உய்த்துணரப்படுகிறது.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

-என்ற திருக்குறள் (542) இங்கு நினந்து மகிழ்தற்கு உரியது.

திருமங்கையாழ்வார் போற்றும் செங்கோல்:

பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் திருமங்கையாழ்வார். சோழ நாட்டிலுள்ள திருவாழி- திருநகரி அருகே திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கலியன். சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தபோது இவரது போர்க்கள வீரத்தைக் கண்ட அரசன், இவரை  ‘திருமங்கை’ நாட்டின் குறுநில மன்னராக்கினான். அன்றுமுதல் இவர்  ‘திருமங்கை மன்னன்’ என அழைக்கப்பட்டார். மன்னர்குலத்தைச் சார்ந்த திருமங்கை ஆழ்வார், நல்லாட்சியின் அடையாளமான செங்கோலைப் பாடாமல் இருக்க முடியுமா?

இவரது ‘பெரிய திருமொழி’ திவ்ய பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் உள்ளது. இதோ, செங்கோல் இடம்பெற்றிருக்கும் இவரது சில பாடல்கள்…

திண் படைக் கோளரியின் உரு ஆய்  திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் டப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த  பரமேச்சுர விண்ணகரம் அதுவே.

    (பாசுரம்-1133: பெரிய திருமொழி)

பொருள்:

முன்னொரு காலத்திலே கூர்மையான (நகங்களாகிய) ஆயதங்களையுடைய வலிமை மிக்க நரசிம்மராகத் தோன்றி, மகாபலசாலியான ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழித்தெறிந்த எம்பெருமானுக்கு இருப்பிடம்; உயர் மாடங்கள் நிறைந்ததால் அழகு பொலிந்திருக்கிற காஞ்சிபுரத்திலே, வெண்கொற்றக்குடையின் நிழலில் வீற்றிருந்து, நீதி தவறாமல் செங்கோல் ஆட்சி செலுத்துபவனும், எருதுக்கொடியையும் வேலையும் ஏந்தி சேனைகளின் முன்னே செல்பவனுமான, பல்லவர் கோன் வணங்கித் துதித்த பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்) அதுவே.

போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்தம்
கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதாதூ மொழியாய் சுடர்போல்  என் மனத்து இருந்த
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே.

     (பாசுரம்- 1466: பெரிய திருமொழி)

பொருள்:

தாமரைப்பூவை இருப்பிடமாக உடைய லட்சுமி தேவியும், பூதேவியும்   நித்யஸூரிகளும் விரும்பும் மாலவனே, செங்கோல் செலுத்தி ஆண்ட மன்னவர்களுக்காக  (கௌரவர்களிடம் பாண்டவர்களுக்காக) தூது நடந்தவனே!, இன்சொல் உடையவனே! என்னுள்ளத்தில் சுடரொளியாக உறைகின்ற வேதியனே, திருவிண்ணகர்ப் பெருமாளே (கும்பகோணம் ஒப்பிலியப்பர் கோயில்), நின்னை சரணடைந்தேன்.

இப்பாடலில் மகாபாரதக் காட்சியை வர்ணிக்கும் போது கௌரவ- பாண்டவர்களிடையிலான உரிமைப்போரில் பஞ்ச பாண்டவர்களுக்காக தூதனாகச் சென்ற கண்ணனின் பெருமை பாடப்படுகிறது.

கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா! என் இனிக் காண்பது? என்னாதமுன்
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்
நம் கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 

     (பாசுரம்- 1480: பெரிய திருமொழி)

பொருள்:

தேன் நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மாதர் ஒன்றாகக் கூடி,
‘கிழவனாரே! இப்படி நீர் கிழத்தன்மை அடைந்த பின்  எங்களையும் எங்கள் அழகான அலங்காரத்தையும் எப்படிப் பார்ப்பது?” என்று சிரிப்பதற்கு முன்னர்,
செங்கோலாட்சி புரிந்த சோழராஜன்  வணங்கிய திவ்யதேசமான எம்பெருமானின்  திருநறையூரை  (நாச்சியார்கோவில் என்ற ஊரில் உள்ள கோயில்) சென்று வழிபடு நெஞ்சமே!

இளமை வனப்பிலே மயங்கி நின்றிடாமல், இறைவனைத் துதிக்குமாறு கூறும் திருமங்கையாழ்வார், இப்பாடலில் சோழ மன்னனின் செங்கோலாட்சியைப் புகழ்கிறார். இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் சோழமன்னன் கோச்செங்கண்ணான் என்பர்.

நம்மாழ்வாரின் திருவிருத்தங்கள்:

நம்மாழ்வார் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். நான்கு வேதங்களையும் தீந்தமிழில் பாடியதால்  ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றே புகழ்ப்படுகிறார். அவரது  ‘திருவிருத்தம்’ திவ்ய பிரபந்தத்தில் மூன்றாம் ஆயிரத்தில் இடம்பெறுகிறது.

இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் வேண்டுதல் ஆகவும், இறுதிப் பாசுரம் பயனுரைக்கும் பாசுரம் ஆகவும் அமைந்துள்ளன. பிற 98 பாசுரங்களும் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை.  இங்கு, திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார், நாயகியாகத் தம்மைப் பாவித்துக்கொண்டு, (மகாகவி பாரதியின்  ‘கண்ணன் என் காதலன்’ போல) அகச்சுவையுடன் எழுதிய பாடல்கள் இவை. இவற்றிலும் சில பாக்களில் மன்னரின் செங்கோலை இடம்பெறச் செய்திருக்கும் மாண்பு கவனித்தற்குரியதாகும். அந்தப் பாசுரங்களைக் காண்போம்…

பனிப்பு இயல்வாக  உடைய தண் வாடை, இக் காலம் இவ் ஊர்ப்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும், அம் தண்ணம் துழாய்ப்-
பனிப் புயல் சோரும் தடங் கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்?
பனிப் புயல் வண்ணன், செங்கோல் ஒருநான்று தடாவியதே?

     (பாசுரம்- 2482: திருவிருத்தம்)

சுருக்கமான பொருள்:

குளிர்ந்த காற்றானது இப்போது இவளை எரிக்கிறது. குளிர்ந்த மேகம் போன்ற எம்பெருமாளின் செங்கோலானது கோணலாகிப் போனதே, அதனால் இவளது கண்ணிமைகள் சோர்ந்து போயினவே.

தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு,
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும், அசுரர் மங்கக்-
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர்,  உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே.

    (பாசுரம்- 2483: திருவிருத்தம்)

சுருக்கமான பொருள்:

இந்தப் பெண்ணின் கண்கள் பாயும் அம்புகள், புருவங்கள் விற்கள். இந்த ஆயுதங்களுடன் இவள் ஒயிலாக நடக்கிறாள். கருடனை வாகனமாகக் கொண்ட எம்பெருமானின் அருள் பெற்ற மன்மதனின் செங்கோலை நடத்தும் யமன் போன்றவள் இவள். ஆகவே உலக மக்களே உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்.

தனி வளர் செங்கோல் நடாவு, தழல் வாய் அரசு அவிய-
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து, பார் முழுதும்-
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர், எனை ஊழிகள் ஈர்வனவே.

     (பாசுரம்- 2490: திருவிருத்தம்)

சுருக்கமான பொருள்:

தனது செங்கோலாம் ஒளியாட்சியை எங்கும் தடையின்றிச் செலுத்துகிற சூரியனாகிய அரசன் மறைய, இருளாகிய சிற்றரசு பூமி முழுவதும் ஆட்சி செலுத்துகிறது. இனிமேல், என் ஆசைக்கு இலக்கான தலைவனது  துளசி மாலையின் வாசத்துடன் வருகிற குளிர்ந்த காற்றைத் தடுத்து, பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத் தொடங்கியிருக்கும் வளையல்களைப் பாதுகாப்பவர்  யாருளர்?   

எம் கோல் வளை முதலா,  கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால், திறல் சேர் அமரர்- 
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய், என் செய்யாது இனி நானிலத்தே?

     (பாசுரம்- 2502: திருவிருத்தம்)

சுருக்கமான பொருள்:

தேவர்களின் தலைவனான பிரம்ம தேவனுக்கும் தலைவனானவன்;  பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள் எல்லோர்க்கும் தலைவனானவன்;  நமக்கும் தலைவனான நம் பெருமான் அணிந்துள்ள துளசி மாலையானது, அவனது நினைவைப் பெருக்குகிறது. ஆனால், என்னை ஆட்கொள்ளாமல் தவிர்ப்பது, எல்லா உயிரையும் புரக்கும் அவனது செங்கோலுக்குக் குறைவை உண்டாக்குகிறது. இவ்வுலகத்தில் திருத்துழாய் (மாலவன் அணிந்துள்ள துளசி மாலை) வேறு எந்தத் தீங்கைத்தான் செய்ய மாட்டாது?

அருள் ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர், ஈங்கு ஓர் பெண்பால்-
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ?
தெருளோம் அரவணையீர்,  இவள் மாமை சிதைக்கின்றதே.

     (பாசுரம்- 2510: திருவிருத்தம்)

சுருக்கமான பொருள்:

சேஷசயனனே,  கருணை நிறைந்த சக்ராயுதத்தால் விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் செங்கோலாட்சி செலுத்தும் நாயகனே,  உலகைக் காக்கும் நீ  இந்த எளியவளின் மேனி பசலை கொள்ளுமாறு நலிவடையச் செய்வது சிறப்பானதா? (இவளைக் காப்பது எப்போது?)

திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட
செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை, தென்பால் இலங்கை-
வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான், வந்து தோன்றி நலிகின்றதே. 

     (பாசுரம்- 2554: திருவிருத்தம்)

சுருக்கமான பொருள்:

பிறைச் சந்திரனாகிய அழகிய தனது இளம்பிள்ளை  தந்தையை இழந்து தனிமையில் தவிக்க, தனது ஒளியை எங்கும் தடையறச் செய்யும் செங்கோன்மையையுடைய சூரியன் மறைந்ததால் செவ்வானமானது போல  தென்னிலங்கையில் குருதி சிந்திய போர்க்களத்தைச் செய்த நமது தலைவனது  துளசி மாலை, எமக்குக் கிடைக்காததைக் கொண்டிருப்பதால் (பெருமாளைத் தழுவி நிற்பதால்) எம்மை மிகவும் வருந்துகிறது.

சீர் அரசு ஆண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த,
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு, பார் அளந்த- 
பேர் அரசே! எம் விசும்பு அரசே! எம்மை நீத்து வஞ்சித்த  
ஓர் அரசே! அருளாய், இருளாய் வந்து உறுகின்றதே.

     (பாசுரம்- 2557: திருவிருத்தம்)

சுருக்கமான பொருள்:

அரசன் ஒருவன் சிறப்பாக நாட்டை ஆண்டு நீதி தவறாது செங்கோல் செலுத்திய பின் மறைவது போல இருக்கிறது சூரிய அஸ்தமனம். நாயகனே! இப்பொழுது நீ என்னை வந்து சேர்ந்திடாவிடில், அரசனில்லாத நாட்டில் கணவனையிழந்த அபலை படும் அவதியை நான் இருளினால் அடைவேன். எனவே எமக்கு இன்னருள் புரிவாய்.

-இவ்வாறெல்லாம் பாடும் நம்மாழ்வார், தன்னை நாயகியாக பாவித்துக்கொண்டு இறைவனான நாயகன் தனக்கு அருள மாட்டானா என்று ஏங்குகிறார். இந்த நாயக – நாயகி பாவம் வைணவத்தின் மிக உயர்ந்த நிலையாகும். தன்னைக் காக்காத நாயகனான பெருமாளின் செங்கோலை எள்ளி நகையாடுவதாக பாசுரங்களைப் புனைந்திருக்கும் ஆழ்வாரின் கற்பனைப் பெருக்கில் நாமும் திளைத்து மகிழ்கிறோம்.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில், தஞ்சை மாமணியில் உள்ள நீலமேகப் பெருமாள் கோயில், இருபதாவது திவ்ய தேசமாகும். பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் உற்சவரான நீலமேகப் பெருமாள் செங்கோல் ஏந்தி காட்சி அளிக்கிறார். மன்னவர்க்கெல்லாம் மன்னவனான எம்பெருமாள் செங்கோல் ஏந்து அருளாட்சி புரிவது, தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பல்லவா?

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 18

Leave a comment