தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17

-சேக்கிழான்

நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.  

பகுதி-16: அன்பு காட்டாதோ மன்னவனின் செங்கோல்?

.

17. வேந்தன் ஓங்குக! வையகமும் துயர் தீர்க!

தமிழின் இலக்கியப் பிரவாகத்தில் சைவ, வைணவ இலக்கியங்களின் பங்களிப்பு அளப்பரியது. களப்பிரர் காலத்தை அடுத்து தமிழகத்தில் பெருக்கெடுத்த சமய விழிப்புணர்வும், சமயநெறி சார்ந்த நூல்களின் பெருக்கமும், தமிழின் அறுபடாத இலக்கிய வளமைக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழகத்தில் சிவன் வழிபாடு, மாயோன் வழிபாடு உள்ளிட்ட அகச்சமய வழிபாட்டுக் கூறுகள் இருந்ததற்கு பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இடைக்காலத்தில் சமண, பௌத்த சமயங்களின் வரவால் சிறிதுகாலம் தீக்கனலை சாம்பல் படர்ந்தாற்போல அகச்சமயங்கள் தேக்கமுற்றிருந்தன. பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து அகச்சமய எழுச்சியை தமிழகம் கண்டது. சிவனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சைவ சமயத்தினரும், மாலவனை முழுமுதற் கடவுளாக வணங்கும் வைணவ சமயத்தினரும், வழிபாட்டுணர்வுடன் இனிய தமிழையும் வளர்த்தனர்.

சைவ சமயம் சார்ந்த ஆன்றோர்கள் பாடிய பாடல்கள், பின்னாளில் ராஜராஜ சோழன் மன்னராக இருந்த காலத்தில் (பொ.யு. பத்தாம் நூற்றாண்டு)  நம்பியாண்டார்நம்பியால் ‘பன்னிரு திருமுறை’களாகத் தொகுக்கப்பட்டன. அதேபோல, வைணவப் பெரியார்கள் (ஆழ்வார்கள்) பாடிய பாடல்கள் பத்தாம் நூற்றாண்டில், நாதமுனிகளால் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற தொகுப்பாக சேகரிக்கப்பட்டன.

நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை, இவ்விரு நூற்தொகைகளும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.  

பன்னிரு திருமுறைகள்:

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் காலத்தில் மூத்தவர்கள். இவர்களது பாடல்கள் ‘தேவாரம்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டவை. இவற்றில் திருஞானசம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று (1,2,3) திருமுறைகளாகவும், திருநாவுக்கரசரின் பாடல்கள் அடுத்த மூன்று (4,5,6) திருமுறைகளாகவும், சுந்தரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமயக் குரவரான மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் கொண்டது எட்டாம் திருமுறையாகும்.

திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய 9 பேர் பாடிய திருவிசைப்பாவும், சேந்தனாரின் திருப்பல்லாண்டும் சேர்ந்தது ஒன்பதாம் திருமுறை. திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும்.

திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன்,  சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகிய 12 சைவப் பெரியோரால் இயற்றப்பட்ட பல பாடல் நூல்களின் தொகுப்பாக பதினோராம் திருமுறை விளங்குகிறது.

63 நாயன்மார்களின் சரிதம் கூறும் வகையில், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாகும்.

தேவாரம் கூறும் அரசனின் அணிகலன்:

அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் நமச்சிவாய பதிகம், அரசனின் சிறந்த அணிகலன் எதுவென்று கூறுகிறது. அந்த அற்புதமான பாடல் இது…

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

    (நான்காம் திருமுறை - நமசிவாயப் பதிகம்: 04.11.02)

பொருள்: பூக்களுக்குள் சிறந்த அணிகலன்  அழகிய தாமரையாகும்; பசுக்களுக்கு சிறந்த அணிகலன் சிவபெருமான் அபிஷேத்துக்குப் பஞ்சகவ்யம் அளிப்பதாகும்; அரசனுக்கு சிறந்த அணிகலன் செங்கோல் வளையாமல் (கோட்டமில்லது) ஆட்சி செய்வதாம். அதுபோல, நாவினுக்கு சிறந்த அணிகலன் நமசிவாய எனப்படும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதே ஆகும்.

இப்பாடலில், இறைவனின் ஐந்தெழுத்து மந்திரத்திற்கு நிகராக அரசனின் செங்கோன்மை குறிக்கப்படுவது மகிழத் தக்கதாகும்.

வேந்தன் ஓங்குக!

‘திராவிட சிசு’ என்று போற்றப்படும் திருஞானசம்பந்தர். தனது திருப்பாசுரத்தில், நாடு நலம்பெற மன்னன் ஓங்கி உயர்ந்து வாழ்கவென்று வாழ்த்துகிறார். இதோ அப்பாடல்:

வாழ்க அந்தணர் வானவ ரானினம்!
வீழ்க தண்புனல்! வேந்தனு மோங்குக!
ஆழ்க தீயதெல் லாம்! அர னாமமே
சூழ்க! வையக முந்துயர் தீர்கவே!

    (மூன்றாம் திருமுறை - 03.054)

பொருள்: உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவற்றைச் செய்யும் அந்தணர்கள் வாழ்க! அவ்வேள்விகளை சிவநெறிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க! வேள்வி, வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கவ்யங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க! வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக! சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக! வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயல் நெறிகளிலுள்ள தீயவை ஆழ்க! உயிர்கள் யாவும் சிவ நாமத்தை ஓதுக! இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக!

இப்பாடலின் மூலமாக, வேந்தனின் உயர்வும் வையகம் துயர் தீர்வதற்கான அடிப்படை என்பது தெளிவாகிறது. இப்பாடலின் அமைப்பு முறை கவனித்தற்குரியது.

எல்லா உயிரும் இன்புற்று வாழப் பணிபுரிவோர் அந்தணர்கள். ஆகையால் அவர்கள் நன்றாக வாழ வேண்டும். அடுத்து, ‘வானவர் வாழ்க’ என்று கூறினார் சம்பந்தர். வானவர் என்றால் உயர்ந்தவர்கள்; மக்களைக் காப்பாற்றும் வல்லமை படைத்தவர்கள்; இத்தகையவர்கள் நன்றாக வாழ்ந்தால்தான் மனித சமூகம் உயர்வடைய முடியும். அடுத்தபடியாக ஆனினம் – அதாவது பசுக்களை வாழ்த்தினார். மனித சமூக நன்மைக்குப் பசுக்கள் இன்றியமையாத சாதனம் என்பதால் தான் பசுக் கூட்டங்கள் வாழ்க என்று கூறினார்.

அடுத்தபடியாக, மழை வளம் குறையக்கூடாது என்று வேண்டுகின்றார். அதைத் தொடர்ந்து ‘வேந்தனும் ஓங்குக’ என்று அரசனுக்கு வாழ்த்துக் கூறினார். நாட்டிலே எவ்வளவுதான் செல்வம் செழித்திருந்தாலும் அரசாட்சி நல்ல நிலையிலே இல்லாவிட்டால் அந்த நாட்டு மக்கள் நலம்பெற்று வாழ முடியாது. பண்டைக்காலத்தில் அரசாட்சியின் தலைவன் அரசன். ஆதலால் அரசன் சிறந்து வாழ்ந்து செங்கோல் செலுத்துக என்றார்.

அடுத்ததாக, தீமையானது என்று சொல்லத் தக்கது எதுவானாலும், ஒழிந்துபோக வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து, இறைவனுடைய பெயர் உலகமெங்கும் சூழ்க என்று கூறினார். இச்செய்யுளின் இறுதியிலே உள்ள ‘வையகமும் துயர்தீர்க்கவே’ என்ற அடிதான் மிகச் சிறந்த தொடர். தமிழரின் பண்பாட்டை அப்படியே எடுத்துக்காட்டும் தொடர். ‘உலகம் துன்பம் அற்று இன்பத்துடன் வாழ்க’ என்பதே திருஞானசம்பந்தரின் கருத்து .

சம்பந்தர் தேவாரத்தில் ‘பல்பெயர்ப்பத்து’ பதிகத்தில் உள்ள ஒரு பாடல், செங்கோல் என்ற சொல்லை இருமுறை கொண்டு இலங்குகிறது. வெங்குரு தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனைப் போற்றிப் பாடும் பாடல் இது…

சங்கோடிலங்கத் தோடுபெய்து
   காதிலொர் தாழ்குழையன்
அங்கோல்வளையா ரையம்வவ்வா
   யானலம் வவ்வுதியே
செங்கோனடாவிப் பல்லுயிர்க்குஞ்
   செய்வினை மெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட
   வெங்குரு மேயவனே.

    (முதல் திருமுறை – 01.63.4)
    பல்பெயர்ப்பத்து (திருமுறைப் பாடல்- 681)

பொருள்:  யமன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித் தான் செய்யும் செயல்கள் அனைத்தும் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு, செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு தோடு அணிந்தும், ஒரு காதில் தாழ்குழை அணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து, அழகிய  வளையல்களை அணிந்த இளம்பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ? என்கிறார் சம்பந்தப் பெருமான்.

திருமூலர் கூறும் அரசாட்சி முறை:

பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில், முதல் தந்திரத்தில் 16வது பதிகம், அரசாட்சி முறைக்கான இலக்கணம் வகுக்கிறது. அதில் முதல் பாடல் நீதிநெறியைக் கற்றுணர்ந்தவரே அரசனாகத் தகுதி பெற்றவன் என்கிறது. அப்பாடல் இது..

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

    (திருமந்திரம் - முதல் தந்திரம்- 1.16.1)

பொருள் : நீதி நூலைக் கல்லாத அரசனும் யமனும் கருணையின்றிக் கொலை புரிதலால் ஒத்தவர்களே ஆவர். இவர்களிலும், கல்லாத அரசனை விட கூற்றுவனே மிக நல்லவன். ஏன் தெரியுமா? கல்லாத அரசன் தனது அறியாமையால் ஒரு குற்றமும் செய்யாதாரையும் (நல்லவன் – கெட்டவன் என்ற பேதமின்றி) ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; காலனோ அறமுடையவரைத் தண்டிக்கத் தயங்குவான்.

நீதிநெறி தவறும் அரசன் மீளா நரகம் புகுவான் என்று எச்சரிக்கவும் செய்கிறார் திருமூலர். இதோ அப்பாடல்:

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

    (திருமந்திரம் - முதல் தந்திரம்- 1.16.6)

பொருள்:

பசுக்களையும், பெண்களையும், துறவிகளையும், தேவர்களால் வணங்கப்படும் சிவனடியாரையும் காப்பது அரசனின் கடமை. இக்கடமையில் அவன் தவறினால், மறுமையில் (இறப்புக்குப் பிறகு) மீளா நரகம் புகுவான்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

    (திருக்குறள்- கொடுங்கோன்மை அதிகாரம்- 560)

-என்ற திருவள்ளுவரின் கருத்து இங்கு நினைவுகூர்தற்குரியது.

மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் நிற்பர் என்று கூறும் திருமூலர், நெறிமுறையில் நாட்டைக் காக்க இயலாத மன்னன் சுயநலம் மிகுந்த புலியைப் போன்றவன் என்று சாடுகிறார்:

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

     (திருமந்திரம் - முதல் தந்திரம்- 1.16.8)

பொருள்:

அரசன் உலகத்தை நன்னெறியில் காப்பது பலருக்கும் நன்மை தருவதாகும். அப்போதுதான்,  அத்தகைய ஆட்சிக்கு உள்பட்ட மக்களும் நன்னெறியில் நிற்பார்கள். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து, தனது நாட்டை பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு சுயநலத்துடன் வாழ்வானேயானால் அவன், தனது பசியின்பொருட்டு பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியைப் போன்றவனே.

அருள்நெறி கூறவந்த திருமந்திரத்திலும், அரசனுக்கு அறிவுரை கூறியிருக்கும் திருமூலரின் சமுதாய உணர்வு போற்றற்குரியதாகும்.

திருத்தொண்டர் வரலாற்றில் செங்கோல்:

இரண்டாம் குலோத்துங்க சோழனின் (அநபாய சோழன்) முதலமைச்சராக இருந்த சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், அக்கால சமூக வாழ்க்கையின் சிறப்பான பதிவாகும்.

ஆட்சியாளராக இருந்தவர் என்பதால் அரச நெறி உணர்ந்தவர்; நாட்டில் சமுதாய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்திருந்ததால், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சிவனடியாராகத் தொண்டு புரிந்ததை வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். அவற்றில், செங்கோல் பதிவு பெற்ற சில பாடல்களைக் காண்போம்.

திருவஞ்சிக்களத்தில் (கொடுங்கோளூர்) இருந்து நாடாண்டவர் சேரமான் பெருமாள் எனப்படும் கழறிற்றறிவார் நாயனார். இந்நாட்டில் அரசனாக இருந்த செங்கோற் பொறையன் துறவறம் பூணுகிறார். அதையடுத்து ஆள வேண்டியவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஆன்றோருக்கு வாய்க்கிறது. அவர்களது தேர்வு அரசகுடியில் பிறந்த சிவநெறிச் செல்வரான பெருமாக்கோதையார். ஆயினும், ஈசனின் ஆணை இருந்தால் மட்டுமே ஆட்சிப் பொறுப்பை ஏற்பதாக அவர் கூறுகிறார். அதை ஏற்று திருவஞ்சிக்கள நாதனைத் துதித்தபோது, அவரது இறையாணை கிடைத்தது. அதன்படி, அவர் மன்னராகப் பொறுப்பேற்று சேரமான் பெருமாள் என்ற பெயர் பெறுகிறார். திருக்கயிலாய ஞானஉலா இவர் இயற்றியதே. இவரை 63 நாயன்மார்களில் கழறிற்றறிவார் நாயனாராக திருத்தொண்டர் புராணம் போற்றுகிறது.

இந்நிகழ்வுகள் அமைந்த பாடல்களில் இரண்டை இங்கே காண்போம்:

நீரில் மலிந்த கடல்அகழி
   நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகரம்
   அதனிற் செங்கோற் பொறையனெனும்
காரின் மலிந்த கொடைநிழன்மேற்
   கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன்
   தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.

    (பெரிய புராணம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம்: 37-10)

பொருள்:  கடலைப் போன்ற நீர் நிறைந்த அகழியும்,  கொடியையுடைய நீண்ட மதிலும் சூழ்ந்த சிறப்பு மிக்க அந்நகரத்தில் (திருவஞ்சிக்களம்), மேகத்தைவிட மிக்க கொடைச்சிறப்புடையவனும், வெண்கொற்றக் குடைநிழலில் நல்லாட்சி செய்பவனுமான செங்கோல் பொறையன் என்ற  சேர மன்னன், ஆட்சியிலிருந்து விலகி துறவு புண்டான்.

எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி
   இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச்
   செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி
   யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
   போற்றிப் புகன்ற பொழுதின்கண்.

    (பெரிய புராணம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம்:  37.12)

பொருள்: பொய்மை தவிர்ந்த மெய்ம்மையுடைய அமைச்சர்கள் திருவஞ்சிக்களத்தைச் சேர்ந்து, பெருமாக்கோதையாரை வணங்கி, `மலை நாட்டின் மன்னர் மரபு, வழிவழிவரும் முறைமையினால், உரிமைச் செங்கோல் அரசு செலுத்துதற்குக் குற்றம் இல்லாத தூய மரபால் தங்களிடம் வந்தது’ என்று கூறினர்.  

அதையேற்று, ஈசனின் ஆணையுடன், அரசாட்சியை மக்கள் உதவியுடன் பெற்று, சேர நாட்டை ஆண்டார் சேரமான் பெருமாள் எனப்படும் கழறிற்றறிவார் நாயனார். இவர் தோழர் சுந்தரமூர்த்தி நாயனாருடன் இணைந்து கயிலாயம் புகுந்ததாக திருத்தொண்டர்புராணத்தில் கூறப்படுகிறது.

இதுபோன்றே அரசர்குலத்தைச் சார்ந்த ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணத்திலும் செங்கோல் குறிப்பைப் பொதிந்திருக்கிறார் சேக்கிழார். அப்பாடல்:

செங்கோல் அரசன் அருளுரிமைச்
    சேனா பதியாங் கோட்புலியார்
நங்கோ மானை நாவலூர்
    நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திருவமுது
    செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த
பொங்கோ தம்போற் பெருங்காதல்
    புரிந்தார் பின்னும் போற்றுவார்.

    (பெரிய புராணம் - ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம்: 29.37)

பொருள்: செங்கோல் நெறியில் நாட்டை ஆளும் சோழ அரசனின் அருளுக்குப் பாத்திரமான சேனாதிபதியான கோட்புலி நாயனார்,   சைவம் விளங்க உதித்த நமது தலைவரும், திருநாவலூரின் அரசருமான நம்பியாரூரரை (சுந்தரர்) நட்பு முறையால், தமது மனையில் வரவேற்று திருவமுது செய்வித்து, வணங்கிப் போற்றி மகிழ்ந்தார்.

அன்னை மீனாட்சியும் சோமசுந்தரரும் ஏந்திய செங்கோல்:

சிவனின் 64 திருவிளையாடல்களைக் காப்பியமாக எழுதியவர் பரஞ்சோதி முனிவர். இந்நூல் காலத்தால் பிறப்பட்டது (பொ.யு. 16ஆம் நூற்றாண்டு). பன்னிரு திருமுறைத் தொகுப்பில் இடம் பெறாதது என்றபோதும், சிவநெறி சார்ந்தது என்பதால், இங்கே இந்நூலின் சில பாடல்கள் குறிக்கப்படுகின்றன.

திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியே, உலகைக் காக்கும் புரவலனான மன்னனின் செங்கோல் வாழ்கவென்று தொடங்குகிறது:

மல்குக வேத வேள்வி, வழங்குக சுரந்து வானம்,
பல்குக வளங்கள் எங்கும், பரவுக அறங்கள் இன்பம்,
நல்குக உயிர்கட் கெல்லாம், நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம், புரவலன் செங்கோல் வாழ்க.

    (திருவிளையாடல் புராணம் - மதுரைக் காண்டம் - கடவுள் வாழ்த்து- 5)

அடுத்து மதுரையை ஆண்ட அன்னை மீனாட்சியை வாழ்த்தும் பாடலில் (தடாதகைப் பிராட்டியார்), செங்கோலோச்சி நாடாண்ட பெண்ணரசியைப் போற்றுகிறார் பரஞ்சோதியார். இதோ அப்பாடல்:

செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று
     முடிபுனைந்து செங்கோ லோச்சி
முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு
     நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித்
     தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி
     யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்.

    (திருவிளையாடல் புராணம் - மதுரைக் காண்டம்- காப்புச் செய்யுள்- 12)

பொருள்: மன்னன் மலையத்துவஜ பாண்டியனின் திருமகளாய்த் தோன்றி, எல்லாக் கலைகளையும் கற்று,  திருமுடி சூடி, செங்கோல் ஆட்சி நடத்தி, பல நாடுகளை வென்று, அந்நாடுகள் செலுத்திய திறையால் (கப்பம்) ஆண்ட பேரரசி தடாதகைப் பிராட்டி. பின்னாளில் நந்திதேவர் முதலிய சிவகணங்களை  போரில் வென்றவர். ஆயினும் போர்முனையில் தலைவன் சிவனைக் கண்டதும் நாணி அழகிய மணமாலையைச் சூட்டி,  தனது திருமுடியையும் புனைவித்தவர்; செல்வம் நிரம்பப்பெற்ற,
தனது அரசையும் சிவனுக்கே அளித்த மங்கையர்க்கரசியாகிய தடாதகைப் பிராட்டியார். அவரின் திருவடித் தாமரைகளைப் பணிந்து வணங்குவோம்!

அன்னை மீனாட்சியே மதுரையின் பேரரசி. அவளை மணம் புரிந்த சிவன் சோமசுந்தரப் பெருமானாக மதுரையின் மன்னர் ஆகிறார். இதுவே புராணம் கூறும் கதை. சிவனின் திருவிளையாடல்களுள் இதுவும் ஒன்று (திருஅவதாரப்படலத்தில் இக்கதை விரிவாகக் கூறப்படுகிறது).

அடுத்து, பாண்டிய நாட்டின் சிறப்பைக் கூறவரும் பரஞ்சோதியாரின் பாடல் இது…

கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளதுக்கி
மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம்!

    (திருவிளையாடல் புராணம் -  மதுரைக் காண்டம்- பாண்டித் திருநாட்டுப் படலம் -1)

பொருள்: ஆலகால விஷத்தை விழுங்கி கண்டத்தில் நிறுத்தியதால் நீலக்கறையுடன் விளங்கும் அழகனான சோமசுந்தரக் கடவுள் மன்னனாக முடிசூடி , கையில் செங்கோல் ஏந்தி, உறைவாளால் பகைவரை ஒழித்து,  வேதநெறிப்படி நல்லறத்தை நிலைநிறுத்தி ஆட்சி நடத்திய நாடு பாண்டிய நாடு. அந்நாட்டின் சிறப்பைக் கூறுகிறேன்…

திருவிளையாடல் புராணத்தின் மாயப்பசுவை வதைத்த படலத்தில், பாண்டிய மன்னன் அனந்தகுண பாண்டியனின் செங்கோலாட்சி புகழப்படுகிறது. இதோ அப்பாடல்:

செங்கோ லனந்த குணமீனவன் றேயங் காப்பக்
கொங்கோ டவிழ்தார்க் குலபூடணன் றன்னை யீன்று
பொங்கோத ஞாலப் பொறைமற்றவன் பாலி றக்கி
எங்கோ னருளாற் சிவமாநக ரேறி னானே.

    (திருவிளையாடல் புராணம் - மாயப்பசுவை வதைத்த படலம்: 2.29.37)

பொருள்: செங்கோலையுடைய மன்னன் அனந்தகுண பாண்டியன்,   நிலவுலகைப் பாதுகாப்பதற்கான இளவலை (குலபூடணன்) ஈன்றவன். ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து, சிவனருளால்  சிவபுரத்தை (கயிலாயம்) அடைந்தான்.

மதுரையில் இன்றும் சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் சமர்ப்பிக்கும் வழிபாட்டு நிகழ்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சித்திரை முதல் ஆடி மாதம் முடிய நான்கு மாதங்கள் மதுரையில் அன்னை மீனாட்சியே மணிமுடி சூடி, செங்கோல் ஏந்தி ஆட்சி புரிகிறாள்; அதன்பிறகே சோமசுந்தரப் பெருமானின் கரங்களுக்கு ஆவணியில் செங்கோல் இடம் மாறுகிறது.

கண்ணுதற் கடவுளான சோமசுந்தரரும் அன்னை மீனாட்சியும் செங்கோல் ஏந்தி அருளாட்சி புரிவதாக தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கையும் பக்தியும், செங்கோலின் சிறப்பை ஓங்கி உரைக்கின்றன.

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17

Leave a comment