-கவியரசு கண்ணதாசன்
‘வருவான் வடிவேலன்’ (1978) என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அற்புதமான பக்திப் பரவசமூட்டும் பாடல் இது. இனிய சொற்களும், இனிய இசையும், இனிய குரல்களும் பக்தியுடன் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் இது…

மலேசிய நாட்டின் பத்துமலை, உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ள திருத்தலம். அங்கு பதிவு செய்யப்பட்ட ஒளிப்படக் காட்சியை ‘வருவான் வடிவேலன்’ என்ற திரைப்படத்தில் (1978) காட்சியமைப்பாகப் புகுத்த இயக்குநர் திரு. கே.சங்கர் திட்டமிடுகிறார். சுமார் 10 நிமிடங்கள் கொண்ட அந்த ஒளிப்படத் துணுக்கிற்குப் பொருத்தமான பாடலுடன் இசை அமைக்குமாறு இசை அமைப்பாளர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வேண்டுகிறார்.
அந்தக் காட்சிகள் ஒரு வடிவ ஒழுங்குக்குள் வராதவை. திருமுருக பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; சூடம் காட்டுவார்கள்; காவடி தூக்குவார்கள்; அலகு குத்துவார்கள்; நடுநடுவே கதாநாயகனும் நாயகியும் கூட்டத்தில் தென்படுவார்கள். இப்படி ஒரு படச்சுருளைத் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுக்கிறார் இயக்குநர் சங்கர்.
எம்.எஸ்.வி. மலைக்கவில்லை. கவியரசர் கண்ணதாசன் உடனிருக்கையில் அவர் எதற்கு மலைக்கப் போகிறார்? பாடல் பிறந்தது. மெட்டும் அமைத்தாகி விட்டது. ஆனால் யார் பாடுவது? பத்து நிமிடங்களுக்கு மேல் ஒருவரே பாடினால் அலுத்துப் போய்விடுமே?
ஆறுமுகனைப் போற்றி ஆறு பேர் பாடினால்? இந்த யோசனை உடனே அங்கீகரிக்கப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகிய அறுவரும் பாடுவது என்று முடிவானது. படச்சுருளுக்கு மிகப் பொருத்தமாக பாடலும் பதிவானது.
மக்களின் ரசனையால் அந்தத் திரைப்படம் பெருவெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார். இப்பாடலைப் படிப்பதை விட, பாடகர்களின் பக்திப்பெருக்கு மிகுந்த குரல்களில் கேட்டுப் பாருங்கள். பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து போவீர்கள்!
இதோ காலத்தை வெல்லும் அந்தப் பாடல். கடல் கடந்து வாழும் தமிழர்களின் பக்திக்கு மகுடம் சூட்டும், கவியரசரின் அற்புதமான பாடல்….
***
சீர்காழி கோவிந்தராஜன்:
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்!
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்…
தன்னை மறந்திருப்போம்!
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்!
.ஓம் ஓம் ஓம்! (குழு)
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்!
.ஓம் ஓம் ஓம்! (குழு)
இந்துக்கடலில் மலேசிய நாட்டினில்
செந்தமிழ் பாடி நிற்போம்!
.ஓம் ஓம் ஓம்! (குழு)
இங்கு சந்தனம், குங்குமம் கொண்டு குவித்தொரு
தங்கரதம் இழுப்போம்!
.ஓம் ஓம் ஓம்! (குழு)
இந்துக்கடலில் மலேசிய நாட்டினில்
செந்தமிழ் பாடி நிற்போம்!
இங்கு சந்தனம், குங்குமம் கொண்டு குவித்தொரு
தங்கரதம் இழுப்போம்!
டி.எம்.சௌந்தரராஜன்:
சேவற்கொடியுடை காவலன் பூமியின்
சிந்தை கவர்ந்தவன்டி! ஆஆஆ…. (2 முறை)
உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி
ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி!
தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது
சக்தியின் முருகனுக்கே! (2 முறை)
அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே!
.வேல் வேல்! வேல் வேல்! வேல் வேல்! (குழு)
எல்.ஆர்.ஈஸ்வரி:
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா!
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா!
.அரோகரா! அரோகரா! (குழு)
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா!
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா!
ஆழமான பக்தி கொண்டோம், ஐயனே என் முருகா…
ஆழமான பக்தி கொண்டோம், ஐயனே என் முருகா!
நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா!
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி,
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி…
சீர்காழி கோவிந்தராஜன்:
முருகா, முருகா! முருகா, முருகா!
எல்.ஆர்.ஈஸ்வரி:
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி,
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி…
டி.எம்.சௌந்தராஜன்:
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி…………முருகா!
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி,
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி!
டி.எம்.சௌந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து:
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை, முருகா!
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா!
பி.சுசீலா:
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு!
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு…
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு!
இன்று… வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா,
வானத்தில் உன்னொளி கண்டு!
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு!
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு!
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு…
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு!
டி.எம்.சௌந்தரராஜன்:
பொன்னாய்க் குதிப்பது முருகனடி!
மலைப்புகழாய்க் குவிப்பது முருகனடி!
பொன்னாய்க் குதிப்பது முருகனடி!
மலைப்புகழாய்க் குவிப்பது முருகனடி!
பி.சுசீலா:
கண்ணைக் கொடுப்பது முருகனடி!
தினம் கருணையைப் பொழிவது முருகனடி! (2 முறை)
சீர்காழி கோவிந்தராஜன்:
தண்டாயுதமே காவலடி!
இது சேனாபதியின் கோயிலடி!
வண்டார்குழலி வள்ளியில்லை!
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி!
பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் இருவரும்:
தண்டாயுதமே காவலடி!
இது சேனாபதியின் கோயிலடி!
எம்.எஸ்.விஸ்வநாதன்:
பத்தினி இருவரை விட்டுவிட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்! (2 முறை)
பத்துமலை குடி கொண்டு விட்டான்..
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்!
ஆனந்த தரிசனம் காணுகின்றோம்,
அவன் அழகிய தேரினை வணங்குகின்றோம்!
ஞாலத்து தேசிகன் மார்பினிலே – உயர்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்!
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்!
அனைவரும்:
முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா!
பெங்களூர் ரமணியம்மாள்:
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்…
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்! (2 முறை)
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்…
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்! (2 முறை)
.அரோகரா அரோகரா! அரோகரா அரோகரா! (குழு)
இடம் தெரியாமல் தலைகளம்மா!
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா! (2 முறை)
வரம் தெரியாமல் வரவில்லையே!
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே! (2 முறை)
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்…
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்!
.அரோகரா அரோகரா! அரோகரா அரோகரா! (குழு)
பெங்களூர் ரமணியம்மாள்:
முருகா, சண்முகா, கந்தா, கடம்பா, அறுமுகவேலா!
சீர்காழி கோவிந்தராஜன்:
கார்த்திகேயா, செந்தில்நாதா, சிங்கார வேலா!
பெங்களூர் ரமணியம்மாள்:
முருகா, சண்முகா, கந்தா, கடம்பா, அறுமுகவேலா!
சீர்காழி கோவிந்தராஜன்:
கார்த்திகேயா, செந்தில்நாதா, சிங்கார வேலா!
பி.சுசீலா:
கார்த்திகேயா, செந்தில்நாதா, சிங்கார வேலா!
அனைவரும்:
கார்த்திகேயா, செந்தில்நாதா, சிங்கார வேலா!
சீர்காழி கோவிந்தராஜன்:
திருமுத்துக்குமரா, உமைபாலா, வள்ளியம்மைக் காவலா!
பெங்களூர் ரமணியம்மாள்:
தெய்வானைக் காவலா!
அனைவரும்:
வந்தருள்வாய் வடிவேலா! வடிவேலா, வடிவேலா!
.அரோகரா அரோகரா! அரோகரா அரோகரா! (குழு)
திரைப்படம்: வருவான் வடிவேலன் (1978) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா, பெங்களூர் ரமணியம்மாள், எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடலின் திரைவடிவம்:
$$$