தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 16

-சேக்கிழான்

அகப்பாடல்களிலும் கூட செங்கோலையும், செங்கோன்மையையும் வலியுறுத்தும் தமிழ்ப் புலவர்களின் பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். மூவேந்தரைப் புகழும் வகையில் அமைந்த, இலக்கியச் சுவை மிகுந்த  சில முத்தொள்ளாயிரம் அகப்பாடல்கள் இங்கே...

பகுதி- 15: நீதிநூல்கள் கூறும் செங்கோல் சிறப்பு

.

16. அன்பு காட்டாதோ மன்னவனின் செங்கோல்?

முத்தொள்ளாயிரம் என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர்கள் யாரென்பது தெரியவில்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட அகப்பாடல்கள் அடங்கிய இந்நூல்  பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.

மூவேந்தர் ஒவ்வொருவரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700  பாடல்கள் அடங்கிய தொகுப்பு இது எனக் கருதப்படுகிறது. ஆனால், முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன என்பது பேராசிரியர்  எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கருத்தாகும். தொள்ளாயிரம் என்பது ஒரு சிற்றிலக்கிய வகையே என்பதும், மூவேந்தர் பற்றிய தொள்ளாயிரம் நூலே இது என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும். எப்படியாயினும், இந்நூல் முழுமையும் நமக்குக் கிடைக்கவில்லை.

‘புறத்திரட்டு’ ஆசிரியர் இதன் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகைநூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்து- 1, சேரனைப் பற்றி- 22, சோழனைப் பற்றி- 29,  பாண்டியனைப் பற்றி- 56, சிதைந்த நிலையில்- 1 எனக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. 

மூவேந்தர்களின் புறத்திணை சிறப்பம்சங்களைப் பாராட்டும் வகையில் பாடல்கள் அமைந்தாலும், அவை பெண்களின் தாபத்தைக் கூறும் நோக்கத்திற்காக, அகப்பாடல்களின் கூறுகளாகவே நுழைக்கப்பட்டுள்ளன.

தமிழில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. “முதல்வனே, என்னைக் கண் பாராய் – முந்தானைக் கொடியேற்ற நேரம் இல்லையா?” என்பது அதன் முதல் வரி. கதாநாயகி பாடும் அந்தப் பாடலின் அதே பொருளுடன் தான், முத்தொள்ளாயிரம் பாடல்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவனாக வரும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிறப்புகளைக் கூறும் பெண்ணொருத்தி, இன்னமும் என்னை தனியே வாட வைக்கலாமா என்று கேட்பதாகவே அமையும் பாடல்கள் இவை. அதிலும் சில பாடல்கள் காமச்சுவையின் உச்சமாகவே அமைந்துள்ளன.

ஆயினும், செங்கோல் என்ற கருத்து அமைந்த பாடல்களைத் தேடுகையில், இனிய இலக்கியச் சுவை கொண்ட இப்பாடல்களைக் காணாமல் இருக்க முடியாது. இனி சில முத்தொள்ளாயிரம் பாடல்களும், அவற்றின் விளக்கமும்…

***

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே -  நிரைவளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என.

    (முத்தொள்ளாயிரம் - 5)

இப்பாடல்,  ‘தலைவனிடம் மயங்கி அவனிடம் மனதைப் பறிகொடுத்த பெண்கள் அதனால், அழகு குன்றினராம். அவ்வாறு பெண்களின்  அழகைத் திருடிக்கொண்டு போன மாந்தைக் கோ  என்னும் சேர மன்னன் எவ்வாறு செங்கோல் செலுத்தும் மன்னனாக இருக்க முடியும்?’ என்கிறது.  வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே!  என்கிறது இப்பாடல்.

***

புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர்
மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு.

    (முத்தொள்ளாயிரம் - 31)

“சோழநாட்டைச் சிறப்போடு செங்கோலாட்சி செய்யும் சோழனை, நான் இன்றுவரை ஒருபொழுதும் கண்ணாரக் கண்டதில்லை; ஏனெனில், அவனோடு புலவி கொள்ளும்போது அவனுக்கு என் முதுகைக் காட்டித் திரும்பி நிற்பேன்; அவன் என் புலவியை நீக்க என்னைத் தழுவும்போது நாணத்தால் கண்களை மூடிக் கொள்வேன்; அவன் என்னோடு கலந்து உறவு கொள்ளும்போதோ மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பேன்” என்கிறாள் இப்பாடலின் தலைவி.

***

கனவினுள் காண்கொடாக் கண்ணுங் கலந்த
நனவினுள் விலக்கு நாணும் - இனவங்கம்
பொங்கோதம் போழும் புகார்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று.

    (முத்தொள்ளாயிரம் - 32)

“பொங்கிவரும் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பலவகையான கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் புகார் நகரம்; அதன் தலைவனாக செங்கோலாட்சி செய்பவன் சோழன்; அவனைக் கனவிலும் காணவிடாமல் உறங்காதிருக்கும் என் கண்களும் அவனோடு கலந்திருக்கும் நினைவுப்பொழுதில் முழுமையாய்க் கலந்திருக்கும் வாய்ப்பைக் கெடுக்கும் என் நாணமும் சென்று அவன் செங்கோலாட்சிக்குக் கறை (களங்கம்) ஏற்படுத்துகின்றன” என்று அகச்சுவை மிளிரப் பாடுகிறாள் தலைவி.

***

அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி -  இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு.

    (முத்தொள்ளாயிரம் – 39)

“கழுத்தில் மாலை அணிந்துகொண்டு கிள்ளி வளவன் பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றனர். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எந்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே!” என்கிறாள் இப்பாடலின் தலைவி.  இது திருவள்ளுவர் கூறும்  ‘உறுப்புநலன் அழிதல்’ அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களின் (1234, 1235, 1236) பொருளை ஒத்திருக்கிறது.

***

தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ - யானை
பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது.

    (முத்தொள்ளாயிரம் - 45)

“யானைகளை தானமாக வழங்கும் கொடையாளி கிள்ளி. மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா?” என்று பகடியாக உரைக்கிறாள் தலைவி.

***

மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு.

    (முத்தொள்ளாயிரம் – 63)

“பாண்டியன் செழியன் உலக உயிரினம் எல்லாவற்றின் மீதும் அன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படலாமே? பச்சைமண் கலத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் மட்டும் கசிந்து ஒழுகுகிறது; பால் கசிவதில்லை. இது என்ன விந்தை! அதுபோல, அவனது செங்கோல் ஆட்சி என்னை கவனத்தில் கொள்ளாதது ஏனோ?” என்கிறாள் இப்பாடலின் தலைவி. இப்பாடலில் அமைந்துள்ள அழகிய உவமை, கவனிக்க வேண்டியதாகும்.

இதற்கு முந்தைய பாடலில், “மாறன் தன் வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். யானோ எளியவள்; இரக்கம் காட்டிக் காப்பாற்றப்பட வேண்டியவள். ஆனால், அவன் எனக்கு அளி (கருணை காட்டி) செய்து காப்பாற்றவில்லையே!” என்று விரகத்தில் புலம்புகிறாள் பாடலின் தலைவி. முத்தொள்ளாயிரத்தின் ஆதார சுருதி இப்பாடல் என்றே சொல்லலாம். இனிய பாடல் இதோ…

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் -  யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர்.

    (முத்தொள்ளாயிரம் – 62)

***

அடுத்து தனக்காக வாடைக்காற்றை தூதாக மன்னவனிடம் அனுப்பும் இளம்பெண் ஒருத்தி, மன்னனின் செங்கோல் சிறப்பைக் கூறி அவனது நெஞ்சம் கவர்ந்த பின் தனது காதலைச் சொல்லுமாறு பணிக்கிறாள்.

“சந்தனக்கட்டையை விறகாகக் கொண்டு அடுப்பெரிக்கும் வளம் மிகுந்த பொதியமலை நாட்டுக் கோமான் அவன். குளிரும் வாடைக்காற்றே! நீ அவனிடம் தூது செல். பகைவரைப் போரில் வெல்லும் அவனது  வெண்கொற்றக் குடை, செங்கோல் ஆகியவற்றின் சிறப்பை முதலில் சொல். பின்னர், அவனை நெஞ்சில் பங்குபோட்டுக் கொண்டிருப்பதால் என் வளையல்களைத் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதையும் சொல்” என்கிறாள். அப்பாடல் இது…

மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை.

    (முத்தொள்ளாயிரம் – 75)

சங்க இலக்கிய அகப்பாடல்களிலும் இதேபோன்ற அழகிய கற்பனைகளை நாம் காண முடியும். அகப்பாடல்களிலும் கூட செங்கோலையும், செங்கோன்மையையும் வலியுறுத்தும் தமிழ்ப் புலவர்களின் பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும்.

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 16

Leave a comment