-சேக்கிழான்
மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

பகுதி-13: மன்னனை உயிர்த்தே மலர்த்தலை உலகம்!
.
14. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை இலக்கியமான புறநானூற்றில் இடம்பெறும் அக்கால மன்னரின் நல்லாட்சி, செங்கோல் சிறப்பு குறித்த சில கருத்துகளை சென்ற அத்தியாயத்தில் கண்டோம். இந்த அத்தியாயத்திலும் அவை தொடர்கின்றன…
முதலாவதாக மாங்குடி மருதனார் எழுதிய பாடலைக் காண்போம். தர்மநெறி தவறாமல் ஆள்வதே அரசின் சிறப்பு என்று, பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் கூறுகிறார் இப்புலவர். இதோ அப்பாடலின் சாராம்சம்:
உயர்ந்த மலையாகிய பெரிய வில்லை பாம்பாகிய நாணினால் கட்டி, ஒப்பில்லாத அம்பை இழுத்து, அதனால் மூன்று கோட்டைகளை அழித்து பெரிய ஆற்றல் மிக்க தேவர்களுக்கு வெற்றியைத் தந்த கருமை படர்ந்த தொண்டையை உடைய இறைவனின் (திரிபுரம் எரித்த திருநீலகண்டனாம் சிவனின் திருவிளையாடல் இப்பாடலில் குறிக்கப்படுகிறது) அழகிய திருமுடியில் சூடிய பிறை சேர்ந்த நெற்றியில் விளங்கும் முக்கண்ணைப் போல, மூவேந்தர்களுள்ளும் உயர்ந்த பூமாலை அணிந்த மாறனே!
கொடும் கோபம்கொண்டு கொல்லுகின்ற யானைப்படை, விரைந்த ஓட்டமும் மனச்செருக்கும் கொண்ட குதிரைப்படை, நெடிய கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை, நெஞ்சுரம் கொண்ட போரை விரும்பும் காலாட்படை என்று நான்கு படைகளுடன் சிறந்து விளங்குவதாயினும், சிறந்த அறநெறியை முதன்மையாகக் கொண்டதுவே ஆளுவோரின் வெற்றி. அறநெறியே ஆட்சியின் சிறந்த மகுடம்!
அதனால், நம்மவர் என்று நடுநிலை தவறாமலும், மற்றவர் என்று அவர் நற்குணங்களைப் பழிக்காமலும், செங்கோல் வளையாது, (அனைவருக்கும் அருளும்) சூரியனைப் போன்ற வெம்மையான ஆற்றலையுடைய வீரமும், திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும், மழையைப் போன்ற ஈகையும், ஆகிய இந்த மூன்றனையும் உடையவன் ஆகி, இல்லாதவர்களே இல்லையெனும்படி நீ நெடுங்காலம் வாழ்வாயாக, நெடுந்தகையே!
ஆழமான நீர்ப்பரப்பையும் வெண்மையான மேற்பரப்பையுடைய அலைகள் வந்து மோதும் செந்தில்பதியில் முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற கடல்துறையில் கடுங்காற்று கொண்டுவந்து திரளாகக் குவித்த மணல் துகள்களின் எண்ணிக்கையிலும் அதிகமாக பல ஆண்டுகள் நீ நீடு வாழிய!
அற்புதமான அறிவுரையை மன்னனுக்குக் கூறும் இப்பாடல், அக்காலத்தில் புலவர்கள் பெற்றிருந்த கௌரவத்தை விளக்குகிறது. முக்கண்ணன் சிவனையும் திருச்செந்தூர் உறை முருகனையும் பாடலில் மிகவும் பொருத்தமாக இணைத்துள்ள பாங்கும் கவனத்திற்குரியது. இதோ அப்பாடல்:
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைஜமிடற்றுஜஅண்ணல் காமர் சென்னி
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல
வேந்து மேம்பட்ட பூ தார் மாற
கடும் சினத்த கொல் களிறும்
கதழ் பரிய கலிஜமாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும்
நெஞ்சு உடைய புகல் மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் என குணம் கொல்லாது
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும்
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர்
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே
(புறநானூறு- 55)
மதுரை மருதன் இளநாகனார்
***
கண்ணனும் பலராமனும் போல வாழிய!
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் ஒருசேரப் புகழ்ந்து பாடும் காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனாரின் அற்புதமான புறப்பாடலை அடுத்துக் காண்போம்.
இரு நாட்டு மன்னர்களும் பகையின்றி நட்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற உயரிய புலவரின் உள்ள விழைவு, மக்கள் நலனைக்கருத்தில் கொண்டதாக இருப்பதைக் கண்டு உவக்கிறோம். இப்பாடலின் செறிந்த பொருள்:
நீ (சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்), காவிரி நாட்டு அரசன். இவன் (பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி), பஞ்சவர் எனப்படும் பாண்டிய அரசர்களில் ஏறு போன்றவன்.
அடி இற்றுப்போன ஆலமரத்தை அதன் விழுதுகள் தாங்குவது போல முன்னோர் மாய்ந்த பின் பாண்டிய நாட்டுக் குடிமக்களின் அச்சம் போக்கி, அறநெறி பிறழாமல் ஆட்சி நடத்துபவன். உருவில் சிறியதாயினும் நல்ல பாம்பைக் கண்டு மக்கள் ஒதுங்குவது போலப் பகைவர் ஒதுங்கும்படியும், இடியைக் கேட்டு நடுங்குவது போலப் பகைவர் நடுங்கும்படியும் நாடாள்பவன் பாண்டியன்.
நீ, உறையூரைக் கைப்பற்றி நாடாள்பவன். இவன், நெல்லும் நீரும் எல்லாருக்கும் பொது என்று எண்ணிக்கொண்டு பொதியமலைச் சந்தனம், கடல்முத்து, மும்முரசு ஆகிய மூன்றையும் தனதாக்கிக்கொண்டு ஆளும் தமிழ் நிலவும் மதுரையின் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்.
நீங்கள் இருவரும், பால் போன்ற நிறத்தையுடைய பனைக்கொடியோனாகிய பலராமனும், நீல நிற மேனியைக் கொண்ட சக்கரப்படையை உடைய திருமாலும் என்ற இரண்டு பெரும் தெய்வங்களும் ஒன்றாகச் சேர்ந்து நிற்பது போல, பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள். இப்படியே நீங்கள் இருந்தால் இதைக் காட்டிலும் இனிமையான நிகழ்வு வேறு என்ன இருக்கிறது?
இன்னும் கேளுங்கள். உங்களின் புகழ் நிலைக்கட்டும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். இருவரும் சேர்ந்திருந்தால் உலகமே உங்கள் கைக்குள் வரும். உம் பகைவர்கள் இடையிலே புகுந்து நல்ல போலவும், முன்னோர் பின்பற்றிய நெறி போலவும் ஏதாவது (தவறாக வழிநடத்தும் வகையில்) சொன்னால் ஏற்றுக்கொள்ளாமல், இன்று போலவே என்றும் சேர்ந்தே இருங்கள். உங்களுடைய நாட்டுக் குன்றுகளில் புலி (கோண்மா), மீன் (கெண்டை) இரண்டையும் சேர்த்துப் பொறித்துக் கொள்ளுங்கள்.
பயில வேண்டிய இனிய பாடல்:
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
நீல் நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறிய போலவும்,
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.
(புறநானூறு- 58)
காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார்
***
மக்களைக் காக்க முடியாத கொடுங்கோலன் எனத் தூற்றட்டும்!
பழந்தமிழ் வேந்தர்கள், குடிகளைப் புரப்பதே தம் கடன் என்று கருதியிருந்தனர்; குடிமக்களின் நன்மையின் பொருட்டு எதையும் செய்யத் துணிந்து நின்றனர். இதற்கான சான்றுகள் பல உண்டு. அவற்றுள் தலைசிறந்து நிற்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அப்பாடல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனாலேயே பாடப்பட்டது. பண்டைத் தமிழ் வேந்தர்களின் ஆட்சிப் பெருமைக்கு அப்பாடல் ஒரு தூண்டாமணி விளக்காகத் துலங்குகிறது. அப்பாடலின் சாராம்சம் இது…
“எம்மிடம் யானை, குதிரை, தேர், காலாள் படைகள் உள்ளன. எம்மை எதிர்க்கும் இவன் இளையன்” என்று சிறுசொல் சொல்லி சினந்து என் நாட்டின்மீது படையெடுக்கும் வேந்தர் நகைப்புக்கு இடமானவர்கள்.
என்னையும், எனது நாட்டையும், குடிமக்களையும் இகழ்ந்து பேசிய அந்தப் பகையரசர்களை நான் சும்மா விட மாட்டேன். கொடிய போர்க்களத்திலே அவர்கள் படை அழியும்படி தாக்குவேன். அவர்களுடைய வெற்றி முரசையும், அவர்களையும் பிடித்துக்கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் விடுவேனாயின் என்னுடைய குடைநிழலிலே வாழும் குடிமக்கள் தாங்கள் சென்று வாழ்வதற்குரிய வேறு நிழலைக் காணாமல் வருந்தி ‘எமது அரசன் கொடுங்கோலன்’ என்று கண்ணீர் விட்டுக் கதறி என்னைத் தூற்றும்படியான கொடுங்கோலன் ஆவேன் ஆகுக.
அப்படி ஒரு கீழ்நிலை எனக்கு ஏற்பட்டால், மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் அவை என்னைப் பாடாமல் போகட்டும். பாதுகாப்போர் துன்புறும்போது என்னிடம் வந்து நிற்கையில், இரப்போருக்கு ஈய பொருளின்றி நான் வறுமையில் வாடும் நிலை ஏற்படட்டும்” என்று வஞ்சினம் கூறுகிறான் பாண்டியன்.
இதோ அந்த வஞ்சினக் காஞ்சித்துறைப் பாடல்:
‘நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்;
இளையன் இவன்’ என உளையக் கூறி,
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள்
நெடு நல் யானையும், தேரும், மாவும்,
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி,
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது,
‘கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
(புறநானூறு- 72)
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
***
வேள்பாரியின் செங்கோல் ஆட்சிச் சிறப்பு:
பாரி மகளிர் ‘ஆய்தொடி அரிவையர்’ எனப்படுகின்றனர். பறம்பு மலையை ஆண்ட கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வேள்பாரியின் நல்லாட்சிச் சிறப்பை புலவர் கபிலர் வர்ணிக்கும் இனிய பாடல் இது…
பாரியின் நாடு இயற்கைச் சீற்றங்கள் தாக்கினாலும் வளம் குன்றாமல் முல்லை பூக்கும் நலம் கொண்டது. அதற்குக் காரணம் அந்நாட்டில் அரசன் ஆட்சி செங்கோலாக அமைந்து சான்றோர் பல்கி வாழ்வதே ஆகும்.
புகையைக் கக்கிக்கொண்டே எரிமீன் விழுதல், வால்மீன் தோன்றுதல், வழக்கமான இடத்திலிருந்து வெள்ளி விண்மீன் தென்திசையில் நகர்தல் போன்ற நிகழ்வுகள் வானில் நிகழ்கையில், நாட்டில் வளம் குறைந்து வறுமை பெருகும் (நாட்டின் மன்னனுக்கு ஆபத்து) என்பது நம்பிக்கை. ஆனால், இத்தகைய நிகழ்வுகள் நடந்தபோதுகூட, பறம்பு நாட்டில் நெல் விளைச்சல் மிகுந்திருக்கும். நிலமெங்கும் முல்லை மலர்கள் மலர்ந்திருக்கும். தலைமகவுக் கன்றுகளை ஈன்ற பசுக்கூட்டம் பசுமையான தழைகளை மென்று கொண்டிருக்கும் (இவை முல்லைத்திணைக் காட்சிகள்).
வேள்பாரியின் செங்கோன்மை சிறந்த ஆட்சியால் நாட்டில் சான்றோர் பெருகி வாழ்வர். அந்நாட்டில் மாதம் தவறாமல் வான்மழை பொழியும். அதனால் வளம் பெருகும்.
ஆனால், அந்த வள்ளல் பாரி இன்று நம்முடன் இல்லை. அங்கவை, சங்கவை எனப்படும் இருவரின் தந்தையர் நாடாகிய பறம்புமலை, வேள்பாரி இல்லாததால் வளம் குன்றிவிட்டது இந்த நாடு இனி என்னவாகுமோ என்ற எண்ணமே என்னை கவலை கொள்ளச் செய்கிறது – என்கிறார் புலவர் கபிலர்.
பாரியின் நன்பரான கபிலர், விண்ணில் தோன்றிய உத்பாதங்களை இங்கே குறிப்பிட்டிருப்பதுடன், நாட்டு மன்னருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியையும் பதிவு செய்திருப்பது கவனத்திற்குரியது. இதோ அப்பாடல்:
மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல் அகம் நிறைய புதல் பூ மலர
மனை தலை மகவை ஈன்ற அமர் கண்
ஆமா நெடு நிரை நன் புல் ஆர
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி
பெயல் பிழைப்பு அறியா புன் புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.
(புறநானூறு- 117)
கபிலர்
***
செங்கோல் மன்னர்களால் தான் உலகம் வாழ்கிறது!
அக்கால மன்னர்கள் ஆட்சியில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, தமிழ்ப் புலமையிலும் சிறந்து விளங்கியவர்கள். சங்க இலக்கியங்களுள் மன்னர்களே இயற்றிய பாடல்களும் இடம் பெற்றிருக்கின்றன. கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்ற மன்னன் பாடிய பாடல் இது:
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.
(புறநானூறு- 182)
கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
இப்பாடலின் பொருள்:
உலகம் வாழ்வது எதனால்? தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான்.
அவர்கள் இந்திர உலகத்து தேவாமிர்தமே கிடைத்தாலும் ‘ஆகா இனிது’ என்று எண்ணி, தான் மட்டும் உண்ண மாட்டார்கள் (பிறருக்கும் பகிர்ந்து அளிப்பார்கள்). உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ள மாட்டார்கள். பிறர் அஞ்சி ஒதுங்கினாலும், அந்த நற்பணிகளைச் செய்யத் தயங்க மாட்டார்கள்.
புகழ் வரும் என்றால் அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுப்பார்கள். பழி வரும் என்றால் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இத்தகையவர்கள் வாழ்வதால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமக்கேன வாழாத சான்றோரால் தான் இந்த உலகம் வாழ்கிறது.
-என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. அக்கால மன்னவர்களின் ஆட்சியும் இந்தக் கண்ணோட்டத்தால்தான் நல்லாட்சியாகத் திகழ்ந்தது. உலகம் வாழ்வது சான்றாண்மையாலென்று உணர்ந்த மன்னர்களின் செங்கோலின் கீழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.
மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 14”