-பேரா. இரா.மோகன்
புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்றி வைத்த கவியரசர் பாரதியார்; பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழை, அதன் பெருமையைப் பாரெல்லாம் பரவச் செய்த வீரத் துறவி விவேகாநந்தர். இவ்விருவரையும் பற்றி ‘ஓம் சக்தி’ மாத இதழில் பேராசிரியர் திரு. இரா.மோகன் எழுதிய கட்டுரை இது...

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்றி வைத்த கவியரசர் பாரதியார்; பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழை, அதன் பெருமையைப் பாரெல்லாம் பரவச் செய்த வீரத் துறவி விவேகாநந்தர். இருவரது வாழ்வினையும் வாக்கினையும் இக் கட்டுரையின் வாயிலாகக் காண்போம்.
விழித்தெழு!
விநாயகர் நான்மணி மாலை, மகாத்மா காந்தி பஞ்சகம், புதிய ஆத்திசூடி, பெண்கள் விடுதலைக் கும்மி, சுதந்திரப் பள்ளு, பாரத மாதா நவரத்ன மாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம், பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி என எத்தனையோ பிரபந்தங்களைப் பாடினார் பாரதியார். ஆனால் தாலாட்டினை மட்டும் அவர் பாடவில்லை. என்ன காரணம்? இலக்கிய வடிவத்தில் கூடத் தூங்கச் செய்யும் வடிவத்தை –தாலாட்டை – அவர் விரும்பவில்லை. மாறாக, விழித்தெழுதலைப் பாடுபொருளாகக் கொண்ட வடிவத்தையே – திருப்பள்ளி யெழுச்சியையே – அவர் பெரிதும் விரும்பினார். எனவே
பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் யோயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
(தேசிய கீதங்கள்)
எனப் பாரத மாதாவுக்குத் திருப்பள்ளியெழுச்சியே பாடினார் பாரதியார்.
பாரதியாரைப் போலவே விவேகாநந்தரும் விழித்தெழுவதையே (Awakening) தம் தலையாய செய்தியாகக் கொண்டார்; இதனையே தம் பேச்சிலும் எழுத்திலும், பல இடங்களில் அவர் வலியுறுத்தினார்.
உடலில் உறுதி இல்லாமலும், மனத்தில் ஊக்கம் இல்லாமலும், தங்களுக்கென்று புதிய கருத்து எதுவுமே இல்லாமலும், உயிரில்லாத களிமண் உருண்டைகள் போல் இவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள்? உற்சாகப்படுத்தி தூண்டிவிடுவதன் மூலமாக இவர்களிடம் நான் உயிர்ப்பு உண்டாக்க விரும்புகிறேன்..
`எழுமின்! விழிமின்! என்னும் இந்த அச்சமற்ற செய்தியை இவர்களிடம் அறைகூவிச் சொல்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்தப் பணிக்காக நான் என்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன் என்பது விவேகாநந்தரின் எழுச்சிமிகு வாக்கு.
இந்தியர் ஒவ்வொருவரும் தமது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்பதே அவரது ஆழ்ந்த விருப்பம்.
நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால் எதற்கும் அஞ்சி ஸ்தம்பித்து நின்றுவிட மாட்டீர்கள். நீங்கள் சிங்க ஏறுகளைப் போலத் திகழ்வீர்கள். இந்தியாவையும் இந்த உலகம் முழுவதையுமே நாம் தட்டியெழுப்பியாக வேண்டும். தங்களுடைய பணியைச் செய்து முடிப்பதற்காகத் தீயில் குதிப்பதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும் -என உணர்ச்சியும் உருக்கமும் மிக்க குரலில் அவர் முழங்கினார்.
இங்ஙனம் பாரதியார் விவேகாநந்தர் இருவரும் நாட்டு மக்களை அறியாமை இருளிலிருந்தும் நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்தும் விடுவித்து விழித்தெழச் செய்வதையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தனர்.
அச்சம் தவிர்!
தமிழகத்தை – இந்தியாவை – இந்த உலகம் முழுவதையும் – தட்டியெழுப்ப வேண்டும் என முனைப்போடு முயன்ற பாரதியார், விவேகாநந்தர் இருவரும் அம் முயற்சியின் முதல் கட்டமாக அஞ்சாமையை வலியுறுத்தினர். பாரதியார் தம் கவிதைகளில் ஒல்லும் வகையெல்லாம் மக்களின் அச்ச உணர்வைச் சாடினார்: அஞ்சாமைப் பண்பினைப் போற்றினார். அவர்,
நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
(தேசிய கீதங்கள்)
எனப் பாரத ஜனங்களின் தற்கால நிலைமையைப் பற்றிப் பாடும்போது, அவர்களின் அச்ச உணர்வைச் சாடினார்; அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே… உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே (வேதாந்தப் பாடல்கள், ப.98) என மூன்று முறை முழங்கினார்.
பாரதியாரைப் போலவே வீரத் துறவி விவேகாநந்தரும் தம் எழுத்திலும் பேச்சிலும் அஞ்சாமைப் பண்பைப் பலபடப் போற்றிக் கூறியுள்ளார். இளமைப் பருவத்தில் இருந்தே அவரது நெஞ்சில் யாருக்கும் – எதற்கும் – அஞ்சாத வீரப்பண்பு குடிகொண்டிருந்தது; வேப்ப மரப் பேயையும், பாயும் புலியையும், பாம்பையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் துணிவு அவரிடம் நிரம்ப இருந்தது. உபநிஷதங்களிலிருந்து வெடிகுண்டைப் போலக் கிளம்பி அறியாமைக் குவியல்களின் மீது வெடிகுண்டைப் போன்று வெடிக்கும் சொல் ஒன்றை நீ காண்பாயானால், அந்தச் சொல் அஞ்சாமை என்பதுதான் என்பது அவரது ஆணித்தரமான கருத்து .
எனது வீரக்குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க் குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள் என அவர் குழந்தைகளுக்குக் கட்டளையிட்டார்; அச்சமே மரணம்; அச்சத்திற்கப்பால் நீ போக வேண்டும். இன்று முதல் அச்சம் அற்றவனாக இரு என அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.
இங்ஙனம் அச்சம் என்பதை அடியோடு தவிர்த்து நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் அஞ்சாமல் செயலாற்றுவதையே பாரதியாரும் விவேகாநந்தரும் பெரிதும் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுமை கண்டு பொங்கு; போராடு!
மனிதனின் மனத்தில் அஞ்சாமைப் பண்பு மட்டும் குடிகொண்டிருந்தால் போதாது; போராடும் குணமும் கூடவே அவனுக்கு இருக்க வேண்டும். இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன?
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு பூனைக்கு யார் மணி கட்டுவது? நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, நம் மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார் சிவனே என்று இருப்பா என்றாற் போன்ற பழமொழிகளில் பாரதியாருக்கு அளவற்ற வெறுப்பு.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
(பாப்பாப் பாட்டு)
எனச் சின்னஞ்சிறு பாப்பாவுக்கே பாடியவர் அல்லவா அவர்? போகின்ற பாரதத்தைச் சபித்து, வருகின்ற பாரதத்தை வாழ்த்திப் பாடிய கவிதையிலும் அவர் `சிறுமை கண்டு பொங்குவாய் (தேசீய கீதங்கள், ப.158) என்றே இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் புதிய ஆத்திசூடியில் வரும் ‘கொடுமையை எதிர்த்து நில் சீறுவோர்ச் சீறு, ராஜஸம் பயில் ரௌத்திரம் பழகு’ (பக். 258-260) என்னும் அவரது வாக்குகளும் இவ்வகையில் மனங்கொளத் தக்கவை.
இத்தகையதொரு போர்க் குணத்தையே சிறுமை கண்டு பொங்கி எழும் சீற்றத்தையே விவேகாநந்தரும் போற்றுகின்றார். அவரது பார்வையில் இன்று மனிதனுக்குத் தேவை ஒரு காதலனின் மனநிலையன்று; வீரனின் மனநிலையே ஆகும். என் மகனே! மரணம் நேருவதைத் தடுப்பதில்லை என்றால் கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதைவிட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? என்பது அவருடைய அடிப்படையான வினா.
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் புஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக, வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது தேவை என்பது அவரது அழுத்தம் திருத்தமான கருத்து.
பாரதியார், விவேகாநந்தர் இருவரது கருத்திலும் வாழ்க்கை என்பது ஒரு புந்தோட்டமன்று; போராட்டமே. எழுந்து நின்று இறுதி வரை ஓர் அடியும் பின்வாங்காமல் போராடும் மனிதனையே இருவரும் போற்றினர்.
நம்பிக்கை கொள்!
வாழ்வில் துன்பங்கள் அடுக்கடுக்காக அணிவகுத்து வந்து அடுத்தடுத்துத் தாக்கியபோதும் மனம் தளராமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள் இறைவா, இறைவா, இறைவா! (தோத்திரப் பாடல்கள் ப.60) என்று நம்பிக்கையோடு பாடியவர் பாரதியார். தெய்வத்தின் மீதும் நல்லது நடக்கும் என்பதிலும் அவருக்கு என்றும் குன்றாத மாறாத நம்பிக்கை இருந்தது. தெய்வத்தின் மீது மட்டுமன்றி, பாரத நாட்டின் மீதும் பாரதியாருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இல்லையென்றால்,
எல்லாரும் அமரநிலை எய்துநன் முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும் – வாழ்க!
(தேசீய கீதங்கள்)
என மும்முறை வலியுறுத்திப் பாடி முத்தாய்ப்பாக வாழ்த்தும் வரிகள் அவரிடமிருந்து பிறந்திருக்குமா?
இவ்வனம் நம்பிக்கையை வலியுறுத்திப் பாடுவதில் பாரதியாருடன் விவேகாநந்தரும் ஒன்றுபடுகின்றார். நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை… தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கிறது.
நீ எதையும் சாதிக்க முடியும் (ப.2) என நம்பிக்கையின் வலிமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றார் விவேகாநந்தர்.
சென்றது இனி மீளாது; மூடரே, நீர் எப்போதும்
சென்றதையே சிந்தை செய்து,
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில்
வீழ்ந்து குமையாதீர்;
சென்றதனைக் குறித்தல் வேண்டா!
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு,
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!
(வேதாந்தப் பாடல்கள்)
என்று பாரதியார் கவிதையில் பாடியதையே, விவேகாநந்தர் உரைநடை வடிவில் வேறு சொற்களில், உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.
நம்பிக்கையைப் பொறுத்தவரையில் பாரதியார் தெய்வ நம்பிக்கைக்கு முதலிடம் தருகின்றார்; விவேகாநந்தரோ தன்னம்பிக்கைகுச் சிறப்பிடம் தருகின்றார். இது இருவரது சிந்தனைப் போக்கிலும் காணப்படும் ஒரு முக்கியமான வேறுபாடு ஆகும்.
லட்சியத்தைக் கைக்கொள்!
மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் எனில் – மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும் எனில் – வன் நல்ல குறிக்கோள்களும் உயர்ந்த நோக்கங்களும் உடையவனாக இருக்க வேண்டும். `நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்’ எனத் தமது முப்பெரும் லட்சியங்களை விநாயகர் நான்மணி மாலையில் வெளியிட்டார் பாரதியார்.
பாரதியாரைப் போல் மேலான குறிக்கோளை வலியுறுத்தி விவேகாநந்தர் கூறியுள்ள கருத்துக்கள் பலவாகும். மரணம் வருவதோ உறுதி. ஆனால் இறப்பதற்கு முன் மேலான இலட்சியத்தைக் கொண்டிரு. மேலானதொரு குறிக்கோளுக்காக வாழ்ந்து இறந்து போவது மிகவும் சிறந்தது என்பது அவரது கருத்து. ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய் என எந்த நிலையிலும் இலட்சியத்தைக் கைவிடாது வாழுமாறு வலியுறுத்துகிறார் விவேகாநந்தர்.
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என அன்னை சிவசக்தியிடம் வேண்டினார் பாரதியார் (தோத்திரப் பாடல்கள், ப.75). விவேகாநந்தரோ இவ் வேண்டுகோளையே வேறு வடிவில் சிந்தனையாக வெளியிட்டார்:
இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் சொல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால், இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? என இந்த மாநிலம் பயனுற வாழ வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துரைத்தார்.
இங்ஙனம் கவியரசர் பாரதியாரும் வீரத் துறவி விவேகாநந்தரும் சிந்தனை அளவில் ஒன்றுபடும் இடங்கள் பலவாகும்; வேறுபடும் இடங்கள் சிலவாகும். இரண்டையும் நுணுகி ஆராய வேண்டுவது ஒப்பிலக்கிய ஆர்வலர்களின் – ஆய்வாளர்களின் – இன்றியமையாத கடமையாகும்.
நன்றி: ஓம் சக்தி
$$$