-சேக்கிழான்
தமிழ் இலக்கியங்களில் அக்கால வரலாற்றை மன்னர் கொடிவழியுடன் பதிவு செய்துள்ள ஒரே நூல், பதிற்றுப்பத்து. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பாடல் இலக்கியமான இந்நூல், சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்து புலவர்கள் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலில் நல்லாட்சி, செங்கோல் குறித்துப் பயின்றுவரும் பாடல்களைக் காண்போம்...

பகுதி- 11: பரிபாடலில் மாலவனின் அறக்கோல்
.
12. கோல் செம்மை அளித்த சேர மன்னவர்
தமிழ் இலக்கியங்களில் அக்கால வரலாற்றை மன்னர் கொடிவழியுடன் பதிவு செய்துள்ள ஒரே நூல், பதிற்றுப்பத்து. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பாடல் இலக்கியமான இந்நூல், சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்து புலவர்கள் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பாகும்.
அழியும் நிலையில் இருந்த இந்நூலின் ஓலைச் சுவடிகளைச் சோதித்து, செம்மைப்படுத்தி, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் 1904-ஆம் ஆண்டு இந்நூலை முதன்முதலாக வெளியிட்டார். இவற்றில் முதல் பத்துப் பாடல்களும், இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கப் பெறவில்லை.
பதிற்றுப்பத்து நூல் முழுவதும் மன்னர்களை வாழ்த்தும் பாடல்களே காணப்படுகின்றன. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் எட்டுப் பத்துக்களும், இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் (வஞ்சி), அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவருமே (கருவூர்) அந்த எட்டு மன்னவர்கள்.
இந்நூலின் காலம் பொ.யு.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. ஆய்வாளர்களால் இது கடைச்சங்ககால நூல் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சேர மன்னர்களின் வீரம், அறம் தழுவிய ஆட்சிச் சிறப்பு, காதல், புகழ், கொடையுள்ளம் உள்ளிட்ட பல்வகைத் திறன்களையும் சித்தரிக்கும் பாடல்களாக பதிற்றுப்பத்து பாடல்கள் உள்ளன.
இந்நூல் பிற்காலத்தில் முறையாகத் தொகுக்கப்பட்டபோது, ஒவ்வொடு பத்து பாடலுக்கும் இறுதியில் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை, அவை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பதிகங்கள் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டையங்களிலும் காணப்படும் மெய்க்கீர்த்திகளை ஒத்துள்ளன.
பதிற்றுப்பத்துப் பதிகங்களை ஆய்வு செய்தால், சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மன்னர்களின் மரபினர் வஞ்சி, கருவூர் (இன்றைய கரூர்) ஆகிய இருவேறு இடங்களில் இருந்து ஆட்சி செய்தது தெரிய வருகிறது.
இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் உதியஞ்சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன்; மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்; நான்கு, ஐந்து, ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பவை தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத் தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.
ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பவை புலனாகின்றன.
காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையாக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இவ்வாறு ஒரு மன்னர் வம்சம் குறித்து கிடைத்துள்ள முழுமையான வரலாற்றுக் குறிப்புகளுடன் கூடிய தமிழ் இலக்கியம் பதிற்றுப்பத்து மட்டுமே.
***
ஒரு மக்கள்நல அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பல குறிப்புகள் பதிற்றுப்பத்து நூலில் காணப்படுகின்றன. ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்று, மூன்றாம் பத்தில் உள்ள இப்பாடல் கூறுகிறது.
…சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்…
(பதிற்றுப்பத்து - 22: 1-4)
பாடியவர்: பாலைக் கௌதமனார்
பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன்.
இதன் பொருள்: மன்னர்கள் கோபம், காமம், அளவிறந்த கண்ணோட்டம், பயம், பொய், அதீத அன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதுவே அவர்கள் நல்லாட்சி நடத்துவதற்கு அடையாளமாகத் தாங்கியிருக்கும் திகிரிக்கு ஆதாரமாகும் என்கிறார் புலவர்.
சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் புலவர், அவனுக்கு அறிவுரை கூறும் பாங்கில் இப்பாடலின் அடிகள் அமைந்துள்ளன. அதீத அன்பு காட்டுவதும் கூட நல்லாட்சிக்கு தடையாகிவிடும் என்ற புலவரின் எச்சரிக்கை கவனத்திற்குரியது.
இப்பாடலில் குறிப்பிடப்படும் ‘திகிரி’ என்பது பெருமாளின் கரத்திலுள்ள சக்ராயுதம் போன்றது. அக்காலத்தில் செங்கோலுக்கு இணையாக இதனை மன்னர்கள் மதித்தனர் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இதே மூன்றாம் பத்தில் உள்ள எட்டாம் பாடல், பல்யானைச் செல்கெழு குட்டுவனின் ஆட்சித் திறத்தைப் பாடுகிறது.
இந்தக் குட்டுவன் பகைவர்களின் யானைப்படை அணிவகுப்பைத் துண்டாடினான். அந்த வெற்றிக்குப் பிறகு எதிரி நாட்டு வீரர்கள் போர்த்தொழிலையே துறந்துவிட்டனர். குதிரைப்படை வீரர்கள் சினத்துடன் போரிடுவதையே மறந்துவிட்டனர். நாட்டில் விளைச்சலுக்குத் தட்டுப்பாடு இல்லை. அதனால் மக்கள் புலம்பலின்றி வாழ்ந்துவந்தனர். இதற்கெல்லாம் காரணம் மன்னன் குட்டுவன் தன் ஆளும் தொழிலைச் செம்மையாகச் செய்ததுதான்.
பகைவரின் நாடு முன்னர் குறைவில்லாத விளைச்சல் தருவதாக இருந்தது. உன் போருக்குப் பின்னர் அந்த நாட்டின் நிலங்கள் எல்லாம் விளைச்சல் இல்லாத தரிசுநிலமாக மாறிவிட்டது. சேர நாடோ, கோடையிலும் வறட்சி இல்லாத பேரியாற்று பாய்ந்து, அதன் நீர் மதகில் பாயும் ஓசை எங்கும் கேட்கிறது. அதனால், மக்கள் ஓலமிடும் பூசல் கேளாத நாடாக விளங்குகிறது என்கிறார் புலவர்.
இதன்மூலம், ஒரு நாடு பகையின்றி (பகையை வென்று) இருக்க வேண்டும் என்பது கூறப்படுகிறது. இதோ அப்பாடல்:
திரு உடைத்து அம்ம பெரு விறற் பகைவர்
பைங் கண் யானைப் புணர் நிரை துமிய,
உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால்,
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப,
இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது,
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.
விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய
கோடை நீட, குன்றம் புல்லென,
அருவி அற்ற பெரு வறற் காலையும்;
நிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச்
சீருடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்,
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச்
செந் நீர்ப் பூசல் அல்லது,
வெம்மை அரிது, நின் அகன் தலை நாடே.
(பதிற்றுப்பத்து- 28 )
***
பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தைப் பாடிய புலவர், பெருங்குன்றூர்க் கிழார். குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின் மேல் பாடப்பட்டது இந்த ஒன்பதாம் பத்து. இதில், சேரனுக்கு அப்புலவர் கூறும் அரசியல் அறிவுரை குறிப்பிடத் தக்கது.
“மிகுந்த வேல்படைகளை உடைய இரும்பொறையே! உன்னுடைய செங்கோல்முறையைக் கண்டு மகிழ்ந்து, ஒவ்வொரு நாளும் உனது நாட்டினர் உன்மேல் அன்பு மிகுந்து உன்னை வணங்கிப் பாராட்டுவார்களாக! உயர்ந்த இவ்வுலகில் உள்ள சான்றோர் உன்னைப் போற்றுவார்களாக!
அரசியலிலே எத்தகைய தவறும் ஏற்படாமல் நாட்டைப் பாதுகாப்பாயாக! உனக்கு நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதனால், உன் பகைவருடன் செய்யும் போரிலே நீ வெற்றி பெறுவாயாக! நீயும் நீண்ட நாள் நோயின்றி, எத்தகைய துன்பமும் இன்றி, வாழ்வாயாக!” என்கிறார் புலவர்.
இதில் இடம்பெறும் ‘நின்கோல் செம்மையின்’ என்ற சொற்கள், அரசனின் குடியோம்பலின் அற அடையாளமாக செங்கோலை முன்னிறுத்துகின்றன. இதோ அப்பாடல்:
வானம் பொழுதொடு சுரப்ப, கானம்
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல,
புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப,
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது,
பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, . . .
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின்
பெரும் பல் யாணர்க் கூலம் கெழும,
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக-
பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின்,
நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த,
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி,
நோய் இலைஆகியர், நீயே - நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது,
கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத்
தகரம் நீவிய துவராக் கூந்தல்,
வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து
வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து,
மீனொடு புரையும் கற்பின்,
வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே!
(பதிற்றுப்பத்து- 89)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டவர்: குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
இதே கருத்து, ஒன்பதாம் பத்தின் இறுதியில் காணப்படும் பதிகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த அடிகள்:
...மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு...
(பதிற்றுப்பத்து- ஒன்பதாம் பதிகம்: 16-18)
***
பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் இறுதியில் உள்ள பதிகம், இமயம் வரை சென்று வென்ற சேரனின் மெய்க்கீர்த்தியைப் பாடுகிறது. இதில் தான் ‘தமிழகம்’ என்ற சொல் நாட்டைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதோ அப்பாடலின் அடிகள்:
...அமைவரல் அருவி இமையம் விற் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,..
(பதிற்றுப்பத்து- இரண்டாம் பதிகம் – 4-8)
பொருள்: இமயம் வரை படை நடத்தி தன் அரசு (கொடிச்) சின்னமாகிய வில்லைப் பதித்து, இருபுறமும் கடலால் சூழப்பெற்ற தமிழகம் புகழடையுமாறு, தன் செங்கோல் ஆட்சியை நிறுவியவன், சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் புகழ் வாய்ந்த வம்சத்தில் வந்தவன்; வட திசை ஆட்சியாளரை அடக்கி அவர்களிடம் திறைப் பொருள்பெற்று; கொடைகள் பல செய்து, புலவர் பெருமக்களால் பாராட்டப்பட்டவன்; நேர்மையற்ற, கடுமையான பேச்சினை உடைய மேலை நாட்டினரைக் கைது செய்தவன் சேர மன்னன்…
இப்பாடலில் இருந்து, நமது நாட்டிற்கு வந்த அந்நியர்கள் தவறிழைத்தபோது தண்டித்த சேர மன்னனின் சிறப்பும், குற்றம் கடிந்து குடிப்புறம் காக்கும் மாண்பும் வெளிப்படுகின்றன. இப்பதிகமும், செங்கோல் என்ற பொருள் தரும் ‘தன்கோல்’ என்ற சொல்லைக் கொண்டு இலங்குகிறது.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 12”