-பி.ஆர்.மகாதேவன்
இந்தப் பரந்த உலகம் மானிடனுக்கானது மட்டுமல்ல என்பதை எப்போது உணரப் போகிறோம்? ஒற்றைக் கொம்பன்கள் மின்வேலியில் சிக்கி உயிரை இழப்பதும், மயக்க ஊசியால் மரணிப்பதும் எதைக் காட்டுகின்றன, நமது மனிதநேயத்தையா? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் கவிதை, ஒற்றைக் கொம்பன்களுக்கானது மட்டுமல்ல....

கொம்பிருந்தும் முட்டாதவற்றை
யாரும் கட்டிப் போடுவதில்லை.
சிறகிருந்தும் பறக்காதவற்றை
யாரும் கூண்டில் அடைப்பதில்லை.
வீசும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டுபவற்றை
வீதியில் விருப்பப்படித் திரிய அனுமதிப்பார்கள்.
கண் பார்வைக்கு அப்பால் பாயத் துடிப்பவற்றுக்கே கடிவாளங்கள்.
வழிக்கு வர மறுப்பவற்றுக்கே வலை வீச்சு.
பொதி சுமக்க மறுப்பவற்றுக்கே சாட்டையடி.
வளர்ப்பு மிருகங்களை வளையவர அனுமதித்திருப்பது
அன்பினால் அல்ல; அச்சத்தினாலும் அல்ல.
பொன் முட்டைகளை எல்லாம் தேடி ஓடி வந்து
தன் முற்றத்தில் இடும் வாத்துகளை
எதற்காக அடைக்கப் போகிறான் எஜமான்?
இட்டுக் கொண்டேயிருக்கும் வரை
எதற்காக அறுக்கப் போகிறான்,
எல்லையற்ற அருளாளன்?
வளர்ப்பு மிருகங்கள் வாழ்வது
வளர்ப்பவர்களின் வாழ்க்கையையே.
வளர்ப்பு மிருகங்கள்
உடலால் மிருகம்; மனதால் அடிமை.
உடல் அடிமைப்படுவதே அவமானம்.
உயிரும் ஆன்மாவுமே அடிமைப்படுமென்றால்
அப்படி ஒரு வாழ்வு அவசியமா?
தன் இயல்பு மறவாதவற்றுக்குத்தான் தவிப்பு.
உள் உணர்வு இழக்காதவற்றுக்குத்தான் உயிர் அவஸ்தை.
என்றேனும் எதேனும் வளர்ப்பு மிருகத்தின் மனதில்
சற்றேனும் பூர்வ குணம் சத்தமின்றி எட்டிப் பார்த்தால்கூட,
முதலில் ஆளாக முட்டித் தள்ளுவது
சுற்றி நிற்கும் சொந்த இனமாகத்தான் இருக்கிறது.
ஆதி குணம் மீட்டெடுத்து
பூர்வ வனம் திரும்ப விரும்புபவற்றின் முன்னே,
முடிவற்ற நாகம் போல் நீண்டு கிடக்கிறது
ஒரே ஒரு ஒற்றையடிப் பாதை.
மென் சதைகளைக் குத்திக் கிழிக்கும்
முள் வேலிகளையும்,
முழித்துக் கொண்டு துரத்தும்
மூர்க்கத்தையும் கூடத் தாங்கிக்கொள்ளலாம்.
அந்த ஒற்றையடிப் பாதையில்
மிக மிகத் தன்னந்தனியாக
எப்படித்தான் எடுத்துவைப்பது ஒரு காலடியை?
அனைத்து விலங்கையும் அழைத்துச் செல்ல
ஆசைப்படும் ஆதி விலங்கு
வெட்டிப் போடப்படும் வைக்கோலில்
பச்சைப் பசும் புல்லின் நிறத்தைத்
தன் கண் கொண்டு பூசிக் கொண்டு,
பச்சைப் பசும் புல்லின் மணத்தைத்
தன் நாசியில் நிரப்பிக் கொண்டு,
மென்று மென்று அசைபோடுகையில்
ஒரேயடியாக சருகால் மூடப்படுகிறது –
இருந்த ஒரே ஒற்றையடிப் பாதையும்.
உண்மையை உணர்ந்த ஒற்றைக் கொம்பன்கள்
தன்னந்தனியே அலைந்து தவிக்கின்றன.
காலடித் தடம் பதியாத காடுகளில் சுற்றித் திரிந்தால்தான்
காலன் வரும்வரை அவற்றால் காலம் தள்ளவாவது முடியும்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே
தட்டுத் தடுமாறுபவை
அடுத்த உயிரைக் காக்க ஆசைப்பட முடியுமா?
வளர்ப்பு மிருகம் மட்டுமல்ல;
தானே தனித்து வளரும் மிருகமும்
வாழ முடியவில்லை தன்னுடைய வாழ்க்கையை.
வேடிக்கையான வேதனைதான் இல்லையா?
தான்மட்டும் வாழும் கானகத்தின்
தகிப்பு தாள முடியாமல்
தன் இனம் காக்க
கானகம் விட்டு வெளியேறுகிறான்
ஒற்றைக் கொம்பன்.
அடக்கி ஆள்பவனிடமிருந்து
அத்தனை அடிமைகளையும் மீட்க,
ஆடி அசைந்தாடி இறங்குகிறான் மலைச்சரிவில்.
வேலிப் படலுக்குள் விருப்பம் போல் இருந்துகொள் என்று
வளர்ப்பு மிருகங்களுக்கு விதி வகுத்த எஜமான்,
பஞ்சு மெத்தையில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறான்.
காடு விட்டு இறங்கிவரும் ஒற்றைக் கொம்பன்
பாதையின் கீழே பள்ளம் இருக்கிறதா என
தும்பிக்கையால் சோதித்துப் பார்த்து
மெள்ள மெள்ள இறங்குகிறான்.
அப்போது,
எட்டு வைத்து நெருங்குகிறது
மதமிளகிய ஒற்றைக் கொம்பனை,
எஜமான் அனுப்பிய கும்கி.
பஞ்சு மெத்தையில் படுத்துறங்குபவன்
தன் கனவில் மெள்ளச் சிரிக்கிறான்.
பாவம்
மண்ணில் வெட்டி வைக்கப்படும் பள்ளங்களில் இருந்து
தப்பிக்கத் தெரிந்த ஒற்றைக் கொம்பனுக்கு,
மனதில் வெட்டி வைக்கும் பள்ளத்திலிருந்து தப்ப முடிவதில்லை.
இனப் பாசமே அதற்கு வெட்டி வைத்திருக்கும்
இனம் புரியா மாயப் படுகுழி.
கைகளே கண்ணைக் குத்துமா என்று,
எந்த உடம்புதான் சந்தேகிக்க முடியும்?
விசுவாசம் காட்ட வேண்டியது யாருக்கு என்பது
என்றைக்குப் புரியும் கும்கிகளுக்கு?
கும்கிகளும் கொம்பன்களும் ஒன்று சேர்ந்தால்தானே
மீட்டெடுக்க முடியும் கைவிட்டுப் போன பூர்வ கானகங்களை?
குறுகிய ஒற்றையடிப் பாதையில்
குறுக்கிடும் கிளைகளை ஒடித்துப் போட்டபடி
ஒற்றைக் கொம்பன்கள் உருவாக்கிய தனி வழியில்
மீண்டும் மீண்டும் முளைத்துவிடுகின்றன
முடிவற்ற பச்சைக் கிளைகள்.
இவையெல்லாவற்றையும்விட
மந்தையை மீட்க மதமிளகி
மலை இறங்கும் கொம்பன்களே
அடுத்த கும்கிகளாக ஆகிவிடும்
அவலம் தான் தாங்க முடிவதேயில்லை.
***
கல்லெறிந்தபோது விலகிய பாசி,
நீரலைகள் அடங்கியதும், மீண்டும் மூடிவிடுகிறது.
அடி ஆழத்து உயிர்கள்
ஆதி ஒளியைத் தேடி மேலே வருகையில்
நிரந்தரமாகக் கவிந்திருக்கிறது நிச்சலனமற்ற காரிருள்.
படர்ந்து விரியும் பச்சைப் பாசி
மெள்ள மெள்ள உறிஞ்சுகிறது,
அனைத்து உயிர்களுக்குமான உயிர்வளியை.
இருளுக்குப் பழகிய நீர்நிலை உயிர்களுக்கு
நிலைமை எப்போது புரியவரும்?
அலை எழுப்பி அடங்கிப் போகவா
எறியப்படுகின்றன மீட்சிக் கற்கள்?
ஒளியிடமிருந்தும்
வெளியிடமிருந்தும் பிரிக்கும்
பச்சைப் பாசிகளின் சல்லி வேர்கள்,
ஆயிரம் கரங்கள் கொண்ட அரக்கனாக
அனைத்தையும் அழிப்பதற்குள்
வந்து விழுந்தாக வேண்டும் –
நெருப்பு அணையாத ஒரு எரி நட்சத்திரம்.
அதன் வெம்மை அடியாழம் வரை பரவும் என்றாலும்,
பாசிகள் கருகிய தடாகத்தில் எஞ்சும் உயிர்கள்
புதிதாகப் படைத்துக் கொண்டுவிட முடியுமல்லவா,
பாசியே இனி எப்போதும் படர முடியாத
பொன் தாமரைத் தடாகத்தை?
$$$