-சேக்கிழான்
நமக்குக் கிடைத்திருக்கும் 22 பரிபாடல்கள், மாலவன், முருகன், வைகை ஆறு ஆகியவை பற்றிய பாடல்களே. இதில் மாலவனின் அறக்கோலாக செங்கோல் இடம் பெறும் கருத்து பரிபாடல்-3இல் வருகிறது.... அறத்திற்கு ஆதியாக விளங்குவது மன்னவனின் செங்கோல்; அந்த மன்னவனுக்கும் ஆதியாக நிற்பது கார்மேகவண்ணனின் அறக்கோல்.

பகுதி-10: எட்டுத்தொகை அக நூல்களில் செங்கோல்
.
11. பரிபாடலில் மாலவனின் அறக்கோல்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல், அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கொண்டது. சங்க இலக்கிய நூல்களுள் மிகவும் எளிமையான பாடல் வரிகளைக் கொண்டவையாக இந்நூல் விளங்குகிறது. இன்றைய உரைநடைக்கு முன்னோடியாகவே, இதிலுள்ள சில பாடல்களைக் கூற முடியும்.
திருமாற்கு இரு நான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடு கிழாட்கு ஒன்று - மருவினிய
வையை இரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்
-என்பது பரிபாடலின் அமைப்பு குறித்த பழைய வெண்பா. இந்த வெண்பா கூறும் தகவலின்படி, பரிபாடல் நூலில் 70 பாடல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. அதன்படி, திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, காடு கிழாளாகிய கொற்றவைக்கு 1, வையைக்கு 26, மதுரை மாநகருக்கு 4 என மொத்தம் 70 பாடல்கள் அமைந்திருந்தன. இறையனார் களவியலுரையும் பரிபாடலில் 70 பாடல்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. பரிமேலழகர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
ஆனால், இன்று கிடைத்துள்ள பரிபாடல்கள், திருமாலுக்கு 6, செவ்வேளுக்கு (முருகன்) 8, வைகை ஆற்றுக்கு 8 என்னும் 22 பாடல்கள் மட்டுமே. இவற்றில் முதல் பாடலையும் கடைசிப் பாடலையும் பாடியவர் யாரென்று தெரியவில்லை. மீதமுள்ள 20 பாடல்களை 13 புலவர்கள் பாடியுள்ளனர்.
ஒவ்வொரு பாடலுக்குரிய பண்ணும், துறையும் இசையமைத்தவர் பெயரும் பாடலின் இறுதியில் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். இவையல்லாது பரிபாடல் எனக் கொள்ளத்தக்க 11 பாடல்கள் ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில் ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலை அரிதின் முயன்று அச்சிட்டவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்.
ஐந்திணைகள் குறித்தும், நான்கு யாப்பிசையிலும், பரிபாடல் என்ற துள்ளலோசை மிகுந்த தனித்த செய்யுள் நடையிலும் அமைந்த இனிய நூல் இது. கிடைத்துள்ள 22 பாடல்களின் இனிமையைக் காண்கையில், நாம் இழந்த இலக்கியச் செல்வம் குறித்து வேதனை மிகுகிறது.
சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்தவருள் ஒருவரான ஆசிரியர் அடியார்க்கு நல்லார், தம் உரைக்கண், முத்தமிழ்ச் சங்கமும் விளங்கிய வரலாற்றை உரைக்கிறார். அதில் அவர், “முதலுழி யிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும், இறையனாரும், குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்பர் எண்ணிறந்த பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களறியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து” என்று கூறுகின்றார்.
இதனையே, கடைச்சங்கத்துப் புலவரான நக்கீரரும், தாம் வகுத்த இறையனார் களவியலுரை நூலுள் கூறுகின்றார். இவற்றால், ‘பரிபாடல்’ என்னும் பாவமைப்பு முதற்சங்க காலத்தில் உருவான தொன்மையுடையது என்பது விளங்கும். இதனால் தான், சங்க இலக்கிய நூல்களுள் பரிபாடலே பழமையானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நமக்குக் கிடைத்திருக்கும் 22 பரிபாடல்கள், மாலவன், முருகன், வைகை ஆறு ஆகியவை பற்றிய பாடல்களே. இதில் மாலவனின் அறக்கோலாக செங்கோல் இடம் பெறும் கருத்து பரிபாடல்-3இல் வருகிறது.
மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
(பரிபாடல்- 3: 1-3)
-என்று தொடங்கும் இப்பாடல் 94 வரிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் கடுவன் இளவெயினனார். இதற்கு இசை அமைத்தவர் பெட்டனாகனார். பண்; பாலை யாழ். இப்பாடலில் நாம் காண வேண்டிய அடிகள்…
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; . . . .[65]
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூஏழ் உலகமும்
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;...
(பரிபாடல்- 3: 63-76)
இதன் பொருள்:
எம்பெருமானே! தீயினும் உறைந்திருக்கும் வெப்பம் நீ! மலருக்குள் வீசும் நறுமணம் நீ! கற்களுக்குள் மாணிக்கக் கல் நீ! சொல்லினில் வெளிப்படும் உண்மை நீ! அறத்துக்குள் ஒளிந்திருக்கும் அன்பு நீ! மறத்துக்குள் ஒளிந்திருக்கும் வீரம் நீ! கதிர் மதிகளும், அனைத்தும் நீயே!
ஏன் என்றால் அனைத்தின் உட்பொருளாய் இருக்கின்றாய்! உனக்குத் தங்கும் இடமும் இல்லை! தங்குவதும் இல்லை! ஆனால் தங்குகிறாய்! உனக்குப் பிறவியும் இல்லை! மறவியும் இல்லை! (இருப்பினும் உலக நலனுக்காகப் பிறந்து வாழ்ந்து காட்டுகிறாய்)
காயாம் பூ கருநீல வண்ணா, உன் அருளே குடை! அறமே செங்கோல்! அப்படி மூவேழ் உலகையும் ஆளும் மன்னா, எம் வண்ணா!
-இவ்வாறு திருமாலை வர்ணிக்கும் புலவர், கார்மேக வண்ணனான மாலவனின் அருளே தண்ணிழற்குடையாகவும், அவனது செங்கோலே உலகைப் புரக்கும் அறமாகவும் விளங்குகிறது என்கிறார்.
இப்பாடலின் 65வது அடி, “ அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ” என்று போற்றுகிறது. இதன் பொருள், “அறத்துக்குள் ஒளிந்திருக்கும் அன்பு நீ! மறத்துக்குள் ஒளிந்திருக்கும் வீரம் நீ!” என்பதாகும். ஆகவே அறம் எனப்படுவது அன்பின் வழியதான உயிர்நிலை என்பது தெளிவு.
பரிபாடல் முதல் பாடலில், அந்தணர் காக்கும் அறமும், பக்தர்களைக் காக்கும் இறையருளும் குறித்த சொற்றொடர் (40-41) வருகிறது. அதுபோலவே தீமை அளிக்காத மறப்பண்பும் (43வது அடி) குறிப்பிடப்படுகிறது. இதோ அப்பாடல் அடிகள்:
மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம்
திரு மறு மார்ப நீ அருளல் வேண்டும்
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும்
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும்
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ!...
(பரிபாடல்- 1 : 38- 45)
இதன் பொருள்:
அல்லி மலரில் வீற்றிருக்கும் அழகிய திருமகளை மார்பில் தரித்தவனே! நீ எமக்குத் திருவருள் புரிய வேண்டும். ஆற்றல் மிகுந்த மேன்மையான அந்தணர்கள் காக்கும் அறமும், உன் அன்பர்களுக்கு அருள்கின்ற திருவருளும் நீயே! திறனில்லாதவர்களைத் திருத்திய தீமையற்ற மறப்பண்பும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ! வானத்தில் அழகான நிலவொளியாகத் திகழும் திங்களும், சுட்டுப் பொசுக்கும் கதிர்களையுடைய சூரியனும் நீயே!
மூன்றாம் பரிபாடலில் குறிக்கப்பெறும் “மறத்துக்குள் ஒளிந்திருக்கும் வீரம் நீ” என்ற தொடர் (65வது அடி) இங்கு ஒப்புநோக்கத் தக்கது. மாலவனின் வீரம், அறத்தை மறுதலிப்போருக்கு மட்டுமே எமனாகக் கூடியது என்பதை அது உணர்த்துகிறது.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
(திருக்குறள்- 543)
-என்று திருவள்ளுவர் கூறும் செங்கோன்மையின் பொருள், இங்கு நினைவு கூர்வதற்குரியது. அறத்திற்கு ஆதியாக விளங்குவது மன்னவனின் செங்கோல்; அந்த மன்னவனுக்கும் ஆதியாக நிற்பது கார்மேகவண்ணனின் அறக்கோல்.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 11”