-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்
கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ்வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்ய மாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்ய மாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்....

புறம்
8. தமிழர் கண்ட உண்மைகள் – அ
விடை காணா வினா
நம்முள் எத்தனை பேர் ‘வாழ்க்கை’ என்றால் என்ன? என்னும் வினாவிற்குச் சரியான விடைகூற முடியும்? நாம் நமது விருப்பம் இருந்தோ இல்லாமலோ பிறந்துவிட்டோம்; விருப்பம் இல்லாமலிருந்தும் இறக்கத்தான் போகிறோம். இடை நடுவே இவ்வுலகில் தங்கி இருப்பதே வாழ்க்கை என்ற கருத்துடன் பலரும் அமைந்து விடுகிறோம். இதற்கு முன்னர் வாழ்க்கை இருந்ததுண்டா? இனி வாழ்க்கை இருக்கப் போகிறதா? இவ்வினாக்களைக் கேட்டும் பயன் இல்லை. காரணம் இவற்றிற்கு விடையை நாம் அறிதல் இயலாது. என்றாலும், ‘இடையில் உள்ள இல்வாழ்க்கை யின் உட்கருத்தென்ன?’ என்று ஆய்வது நமது கடமை யாகும்.
மாந்தர் பல வகையினர்
மிகப் பெரியவரான தாயுமான அடிகள், நம் போன்றவர்கள் வாழ்க்கையை அலசிப் பார்த்து ஒரு முடிவு கூறுகிறார். ‘யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்ற அவருடைய சொற்கள் நம்முள் பெரும்பாலோர் வாழ்க்கையில் நடைபெறுவ தொன்றாகும். ஆனாலும், இதிலும் ஒரு சிறப்புளது. நம்முள் எத்தனை பேர் பசிதீர உண்பவர்கள்? பசிக்காக உண்பவர்கள் மிகப் பெரியவர்களும், யோகிகளும், மிக வறியவர்களுமேயாவார்கள். ஏனையோர் உண்பது பசிக்காக அன்று. உருசிக்காகவே. உண்பதற்காகவே உயிர்வாழ வேண்டும் என்று நினைப்போர் எத்தனை பேர்? சோம்பித் திரிவதற்காகவே வாணாளை வீணாக்குபவர் எத்தனை பேர்? கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என வாழ்பவர் எத்தனை பேர்? இவர்கட்கெல்லாம் வாழ்க்கை நடைபெறாமலா இருக்கிறது? நடைபெறத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுவதைக் காட்டிலும், வாழ்க்கை இவர்களை ஆட்கொண்டுளது என்று கூறுவதே பொருத்தமுடையது. இன்றைய நாளில் இத்தொகுப்பைச் சேர்ந்தோர் பலராவர்.
நிலைபெற வழி
ஆனால் பழந்தமிழன் இவ்வாறு நினைக்கவுமில்லை; வாழவுமில்லை. அவன் கண்ட பேருண்மை, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்றதாம். அஃதென்ன என்பதைக் காண்போம்.
வாழ்க்கை நடைபெறுவது இவ்வுலகிலாகும். எனவே இவ்வுலகைப் பற்றிப் பழந்தமிழன் என்ன நினைத்தான்? வாழத் தகுந்த இடமாக இதனை நினைத்தானா, அன்றி இதனை பயனற்ற ஓர் இடமாகக் கருதினானா? இடைக்காலத்தில் உலகைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஒருவாறு மனிதன் வாழ்வைக் கெடுக்கும் சூழல் நிறைந்த ஓர் இடமாகவும் இது கருதப்பெற்றது. ஆனால் பழந்தமிழன் உலகின் இயல்பை நன்கு அறிந்திருந்தான். ‘உலகம் நிலையில்லாதது’ என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், இது நிலையில்லாதது என்பதனால், தானும் இதனோடு சேர்ந்து நிலையில்லாமல் அழிவதை அவன் விரும்பவில்லை. நிலையில்லாததாகக் கருதப்பெறும் இவ்வுலகிடை வாழ்ந்து தான் மட்டும் நிலைபெறும் வழியை அவன் தேடினான்; தேடிக் கண்டறியவும் அறிந்தான். அவன் கண்ட முடிவு,
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே.
(புறம்-165)
என்பதாகும். எனவே, நிலையற்ற உலகிடை நாம் நிலை பெற வேண்டுமாயின், செய்யத் தகுவது நம் புகழை நிலை நிறுத்துவதேயாகும். நிலையாமையின் நடுவே நிலைபேற்றுக்குரிய வழிகண்ட தமிழன் வாழ்க! உலகம் நிலையற்றது என்பது உலகிடை வாழ்ந்த அனைவருங் கண்ட உண்மையாகும்.
உலகம் போற்றும் ஷேக்ஸ்பியர்,
“The Cloud-capp'd towers the gorgeous palaces,
The solemn temples, the great globe itself,
Yea, all which it inherit, shall dissolve,
And, like this insubstantial pageant faded,
Leave not a rack behind.”
-THE TEMPEST: Act IV, SCENE 1.
என்று தாம் எழுதிய ‘புயல்’ என்னும் நாடகத்தில் குறிப்பிடுதல் அறிதற்குரியது.
இத்தகைய நிலையாமை பொருந்திய உலகத்தில் வாழ்ந்த மனிதன் தான் மட்டும் நிலைபெற வேண்டிச் செய்த செயல் புகழைத் தேடுதலேயாம் என்பதைக் கண்டோம். ‘அப்புகழை எவ்வாறு தேடவேண்டும்?’ என்பதே அறிய வேண்டுவதொன்றாகும். இதற்குரிய விடை தெளியப்படுமானால், அதுவே, வாழ்க்கை வாழ்வதற்கு என்னும் உண்மையை நன்கு புலப்படுத்தும்.
புகழ் என்பது எல்லாரும் விரும்பப்படும் ஒன்றாகும். புகழ் விரும்பாத மனிதனே உலகிடை இல்லை எனலாம். ஆனால், எல்லாராலும் போற்றி விரும்பப்படும் இதனையடைய இவ்வனை வரும் முயற்சி எடுத்துக் கொள்கின்றனரா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே கூறிவிடலாம். இதுவே உலகியற்கை. புகழை அனைவரும் விரும்புகின்றனர்;
ஆனால், அதற்குரிய வழியை மட்டும் மேற்கொள்வதில்லை பெரியோர்.
‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்’
(புறம்-182)
என்று புறநானூறு பறைசாற்றுகிறது.
ஆனாலும், ஏன் அனைவரும் அதற்குரிய வழியை மேற்கொள்வதில்லை என்பதை அறிய வேண்டுமன்றோ? காரணம் இருவகைப்படும். ஒன்று, வழி இன்னது என்றே அறியாமல் இருப்பது; இன்னொன்று வழி இது என்று அறிந்திருந்தும், வேறு காரணங்களால் முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது. இவ்வினத்தைச் சேர்ந்திருப்போர் மிகச் சிலரே. பெரும்பாலோரைப் பொறுத்தமட்டில் வழி இன்னதென்று அறியாமல் இருப்பதே உண்மை. அதிலும், ஒரு விந்தை என்ன என்றால், தவறான வழிகளை உண்மை வழி என்று நினைத்திருக்கும் திரிபுணர்ச்சியேயாம். ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு அதனால் புகழ் தம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர் பெரும்பாலும் ஏமாற்றமே அடைவர். ஒருவேளை புகழ் வருவது போலத் தோன்றினும், அது நிலைத்து இருப்பதில்லை. காரணம், வருவது புகழன்று. அது ‘இசை’ என்று கூறப்படும். அவன் உயிருடன் இருக்கும்வரை அதுவும் இருந்து, அவனுடன் கூடவே அதுவும் அழிந்துவிடும். போர்களால் தம்புகழ் பரப்ப நினைத்த பழந்தமிழ் மன்னர் இவ்வினத்தைச் சேர்ந்தவரேயாவர். புகழ் பின்னரும் நிலைத்திருப்பதாகலின் அதனை அடையும் வழியும் வேறாய் உளது. அதனை விரும்பி வேட்டையாடுபவர்களை அது விட்டு ஓடும் இயல்புடையது. தன்னைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாதவர்களிடம், தானே வலியச் சென்று அடையும் இயல்புடையது.
வாழ்வில் பல வகை அனுபவம்
இனி, இப்புகழ் யாரைத் தேடிச் சென்று அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற உண்மையை அறிந்து தங்கள் கடமையைச் சரிவரச் செய்துகொண்டு வாழ்க்கையையும் நன்கு அனுபவித்துக் கொண்டு இருக்கும் பெரியோர்களையே புகழ் தேடிச் சென்று அடைகிறது. வாழ்க்கை வேண்டும்பொழுது நமது விருப்பம் போலக் கிடைக்கும் ஒரு கருவியன்று. அது உள்ளபொழுதே அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதோ ஒன்றின் மேற்கொண்ட பற்றுக் காரணமாக அதனையே செய்துகொண்டு வாணாளைக் கழித்து விடின், அதுவும் பயனற்ற வாழ்க்கையேயாம். எல்லா வகை அனுபவங்களும் வாழ்க்கையில் வேண்டுவனவே. எனவே, போரே பெரிது எனக் கருதி வாழும் மன்னன் ஒருவனை விளித்துப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் அறவுரை பகர்கின்றார். போர் செய்வது அரசனுக்குரிய கடமையாயினும், அதையே வாழ்க்கையின் பயன் என்று மன்னன் கருதி வாழ்வானாயின், அது மடமையன்றோ? எனவே, புலவர், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மன்னனுக்கு நினைவூட்டுகிறார்.
ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப.
(புறம்-24)
என்று மாங்குடி கிழார் என்ற புலவர் கூறுகிறார்; போரே செய்யும் ஒருவனை நோக்கி, “தேறல் மடுத்து மகிழ் சிறந்து வாழ்வாயாக! அதுவே வாழ்க்கை வாழ்வதாகும்; அதுவே புகழுடன் வாழ்வதற்கு வழியாகும்” என்று கூறுகிறார். இவ்வொரு கவிதை நமக்கு ஒரு பேருண்மையை அறிவுறுத்துகிறது. வாழ்க்கை, கேவலம் ஒரே வகையில் மூடியணியப் பெற்ற குதிரை போலச் செலுத்தப் பெறுதல் தவறு. அவ்வொரு வகை, எத்துணை சிறந்ததாயினும், அதற்கே வாழ்க்கையைச் செலவழித்தல் போற்றற்குரியதன்று. அங்ஙனம் வாழ்வோர், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற பேருண்மையை மறந்தவரேயாவர். அவ்வாறல்லாமல், வாழ்க்கையில் பலதிறப்பட்ட சுவைகளையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உண்மையைத் தமிழர் அனுபவத்தில் கண்டு கூறினர்.
மனிதன் யார்?
மனித வாழ்க்கையை ஏனைய விலங்குகளின் வாழ்க்கையிலிருந்து பிரித்துக்காட்டப் பல சிறப்பியல்புகள் உள்ளன. பகுத்தறிவு வாழ்க்கைச் சீர்திருத்தம் முதலியன அவற்றுட் சில. எனினும், இவை எல்லாவற்றினும் மேம் பட்ட ஒன்றும் உண்டு. அதுவே குறிக்கோள் அல்லது இலட்சியம் எனப்படும். குறிக்கோள் என்பது என்ன? தனது வாழ்வு இன்னவாறு இருத்தல் வேண்டும் என்று மனிதன் செய்து கொண்டுள்ள கற்பனையே குறிக்கோள் எனப் படும். கண்டதை உண்டு, வாழ்வில் வேறுவித அலுவல் ஏதும் இன்றித் திரியும் விலங்கினங்களிலிருந்து தோன்றிய மனிதனுக்கு, விலங்கினங்களிற் காணப்படும் சில பண்புகள் மறைந்தும், பல புதிய பண்புகள் தோன்றி வளர்ந்தும் வரலாயின. அங்ஙனம் வளர்ந்தவற்றுள் ஒன்றே குறிக்கோள் என்பதாம்.
வாழ்வோருக்கு வினா
உலகிடைப் பிறந்த எல்லா மனிதரும் வாழ்ந்து, காலம் வந்தவுடன் மாய்ந்து போகின்றனர். பெரும்பாலார்க்கு, ‘ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? இவ்வாழ்க்கையின் தத்துவமும் காரணமும் என்ன? வாழ்வின் முடிவு எதுவாய் இருக்கும்?’ என்பன போன்ற வினாக்கள் தோன்றுவதே இல்லை. இங்ஙனம் கூறினவுடன் எல்லோரும் வேதாந்த விசாரணையில் இறங்க வேண்டும் என்று கூறுவதாக நினைத்துவிட வேண்டா. இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, ஒருவாறு இவற்றிற்கு விடையுங் கண்டவர்களே பெரியோர்களாய்த் திகழ்ந்தமையை அறிகிறோம். எனவே, இவ்வினாக்கள் வாழும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை என்பது பெறப்படும்.
மேலே கூறிய வினாக்களின் விடைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்பது தெற்றென விளங்கும். ஒருவன் மனித உடலோடு பிறந்துவிட்டால் மட்டும், மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுடையவன் ஆகிவிட முடியாது. தனித்தனி மக்கள் தனித்தனியான குறிக்கோள்களைக் கொண்டு இலங்குவதைக் காண்கிறோம். இனி இக்குறிக்கோள்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்றால், வேண்டா என்று கூறிவிடலாம். தனித்தனி மனிதர் தத்தம் வாழ்க்கையின் நிலைமைக்கு ஏற்பக் குறிக்கோளைப் பெற்றிருக்கலாம். குறிக்கோள் இல்லையாயின், வாழ்க்கை சுவையற்றதாகிவிடும்.
கண்டதே கண்டும், உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும் வாழும் இவ்வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுதல் இயல்பு. ஒரு சிலர் ‘பொழுதே போவதில்லை!’ என்று குறை கூறுவதையும் கேட்கிறோம்.
நாள் என ஒன்றுபோற்காட்டி, உயிர் ஈரும்
வாள் அஃது உணர்வார்ப் பெறின்
(குறள்-334)
என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறி இருப்பவும், பொழுது போவதில்லை என்று கூறும் இவ்வகை மனிதர் களை என்னென்று கூறுவது! இவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தால் இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணத்தை அறியலாம். இவர்கள் பசி தீர உண்பதையும் உறங்குவதையும் தவிர, வேறு வாழ்க்கையில் ஒன்றையும் அறியாதவர்கள் ஆகலின், இவர்கட்குப் பொழுது போவதில்லை.
வாழ்வில் வெறுப்பு
இங்ஙனம் தோன்றிய இவ்வெண்ணம் இம்மட்டோடு நிற்பதில்லை. ஒரு சிலர், ‘வாழ்க்கையில் வெறுப்படைந் தேன்!’ என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வதையும் காண்கிறோம். வாழ்க்கைப் போரில் ஓயாது சண்டை செய்து, இன்றியமையாத பொருள்களைக் கூடப் பெற முடியாது வறுமையில் ஆழ்ந்து, அதன் பயனாக உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் உண்டு. இத்தகையோர் சாவிற்கு நமது இரக்கம் உரியதாகும்! குறை இவர்களிடம் இல்லை. இவர்கள் சாவிற்குக் காரணம், இவர்கள் தோன்றி வளர்ந்த சமுதாயமே ஆகும். இனி, ஒருசார் மக்கள், வாழ்க்கையில் பெற வேண்டுவன அனைத்தையும் பெற்று இருந்தும் வாழ்க்கையில் வெறுப்புத் தட்டித் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம். செல்வங் கொழிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில், பணத்தில் புரளும் பெரும் பொருளாளர்களுட் சிலரும் இக்கதிக்கு ஆளானமையை அறிகிறோம். ஏன் இவர்கள் வாழ்க்கை இந் நிலைக்கு வந்தது? வாழ்க்கைக்கு, அதுவும் சுகமான வாழ்க்கைக்கு, எவை எவை தேவை என நினைப்போமோ, அவை அனைத்தும் இவர்களிடம் ஒன்றுக்கு நூறாய் இருப்பவும், வாழ்க்கையில் வெறுப்புத்தட்டக் காரணம் என்ன? இவற்றிலிருந்து நாம் அறிய வேண்டுவது ஒன்றுளது. வாழ்க்கையில் ஏற்படும் விருப்பும் வெறுப்பும் வாழும் மனிதனுடைய மனநிலையைப் பொறுத்தனவே தவிர, ஏனைய உலகப் பொருள்களைப் பொறுத்தவை அல்ல.
அழுகிய வெறுப்பு
வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகள் மனநிலையைப் பொறுத்தவை என்பதன் பொருள் என்ன? உடலை வளர்க்க உணவு தேவைப்படுவது போல, மனத்தை வளர்க்கச் சிறந்த எண்ணங்களும் குறிக்கோள்களும் தேவை. இவை இல்லையேல் மனம் உடலோடு சேர்ந்து வளர்ச்சியடையாமல், உரம் குன்றிப்போம். அம்மட்டோடு இல்லை. வாழ்க்கையிலும் வெறுப்படையுமாறு செய்யவுஞ் செய்யும். அழுகிப்போன ஓர் உறுப்பு உடலில் இருக்குமானால் உடல் முழுமைக்கும் தீங்கு விளைத்தல் கண்கூடு அன்றோ? எனவே, மனமும் உடலோடு சேர்ந்து வளர்ச்சியடையச் செய்ய வேண்டுவது அறிவுடையார் கடமையாகும்.
இன்பம் எங்கே?
இம்மன வளர்ச்சிக்கு ஏதுவானவை எவை எவை என்று ஆராய்ந்து தக்க முடிவிற்கு வர வேண்டும். சாதாரண ஆசைகளைக் குறிக்கோள்கள் என்று தவறுதலாக நினைத்துவிட்டால், அவற்றால் உண்டாகும் துன்பம் ஏட்டில் அடங்காதது. இந்நிலையில் மனத்தின் இயல்பையும் நன்கு அறிதல் வேண்டும். எத்தகைய ஆசையாயினும் அது நிறைவேறியவுடன் அமைதியடைகிற இயல்பு மனத்திற்கு இல்லை. மேலும் புதிய பொருள்களின்மேல் ஆசை செலுத்துவதே மனத்தின் இயல்பாகும். இது கருதியே சாந்தலிங்க அடிகளார், “அரிதுபெற் றிடினும் பெற்றதில் விருப்பம் அறப்பெறா தனவிகும்பு உயிர்கள்” என்று கூறிப் போந்தார். ஆகவே, மட்டமான பொருள்கள் மேல் பற்றுவைத்து, அதையே வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டுவிட்டால், அவ்வாசை நிறைவேறியவுடன் வாழ்க்கையில் அலுப்புத் தட்டிவிடும். அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் கோடீசுவரர்கள் இந்த இனத்தையே சேர்ந்தவர்கள். கேவலம் சில கோடிப் பொருளைச் சேகரிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று தவறாக உணர்ந்த இவர்கள், அப்பொருளைச் சேகரித்தவுடன் வேறு வாழ்க்கையில் சுவையுண்டு என்பதை அறிய முடிவதில்லை. காரணம் மிக இன்றியமையாதது. மனம் எப்பொழுதும் இன்பத்தைக் காண்கிறது. ஒரு குறிக்கோளை நாடி அடைய முற்படும் பொழுது மனத்திற்கு இன்பம் பிறக்கிறது. ஆனால், எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வின்பம் என்று ஆய்தல் வேண்டும். குறிக்கோளையடையச் செய்யும் முயற்சியில் இன்பமே தவிர, அடைந்து விட்ட பிறகு அங்கு இன்பம் என்ற ஒன்றும் இல்லை. எனவே, முயற்சியிலேதான் இன்பம் என்றால், அம்முயற்சி வாழ்நாள் முழுதும் நீடித்ததாக இருத்தல் வேண்டுமே தவிர, இடையே பயந்தரக் கூடியதாய் அமைந்துவிடின் முற்கூறியபடி வெறுப்பே மிஞ்சும். இது வாழ்க்கையின் எல்லா முயற்சிகட்கும் பொதுவான நீதியாகும்.
உயர்ந்த குறிக்கோள்
இந்த முடிபை மனத்துள் இருத்திக் கொண்டுதான் எத்தகைய குறிக்கோள் சிறந்தது என்னும் ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும். ஒருவன் வாழ்நாளில் எளிதாக அடைந்துவிடக் கூடியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டால், நேரும் இழுக்கைக் கண்டோம். அவ்வாறாயின், அடையமுடியாத குறிக்கோளை மேற்கொள்வதால் என்ன பயன் என்று கேட்கப்படலாம். ‘குறிக்கோள்’ என்பதற்குப் பொருளே, ‘எளிதில் அடைய முடியாதது’ என்பதாகும். பொதுமறை தந்த பெரியாரின் கட்டளையை உற்று நோக்குவோம்.
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
(குறள்-596)
என்றல்லவோ அவர் கூறிச் சென்றார்? வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோளைப் பற்றிக் கூறவந்த ஆசிரியர், ‘உயர்வு உள்ளல்’ என்று கூறினார். ‘உயர்வு’ என்ற சொல் ஓர் ஒப்புநோக்குச் சொல்லேயாகும். ஒன்றை நோக்க ஒன்று உயர்வு என்றுதான் கூற வேண்டும். எனவே இங்கு உயர்வு என்று கூறினதற்கு எவ்வாறு பொருள் கூற வேண்டும் என்று ஐயுறுவார்க்கு விளக்கம் தருவார் போன்று பின் அடியைக் கூறினார். ‘மற்றது தள்ளினும்’ என்ற கூற்றால், அக்குறிக்கோள் அடைய முடியாததாகும் என்ற குறிப்பையும் பெற வைத்தார். ‘அடைய முடியாத குறிக்கோளை வைத்துக் கொள்வதாற் பயன் என்ன?’ என்று வினவினால், அதற்கு விடை ‘தள்ளாமை நீர்த்து’ என்பதன்கண் அடங்கி விடுகிறது. அடைய முடியாவிடினும், அக்குறிக்கோளும், அதனை அடையச் செய்யும் முயற்சியும் ஏற்றுக்கோடற்பாலன என்பதே வள்ளுவர் வகுத்த நெறியாகும்.
தாழ்ந்த குறிக்கோள்
மேலும், மட்டமான குறிக்கோளைக் கொண்டிருந்து, அதனை அடைந்துவிடுவதைக் காட்டிலும், உயர்ந்த குறிக்கோளைக் கொண்டிருந்து, அதற்கெனத் தளரா முயற்சி செய்து அம்முயற்சியில் தோல்வியுறுதலே சிறந்தது என்பதும் தமிழர் கண்ட கொள்கையாம். இதனையே பெரியார்,
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(குறள்-772)
என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுப் பெருநூல்களிற் காணப்படும் பெருமக்கள் கருத்துக்களும் அவர்கள் செய்த செய்கைகளும் இத்தகைய கருத்தையே அடிப்படையாகக் கொண்டவை. அவர்கள் கொண்ட குறிக்கோளை அடையாமற்போயினும் அக்குறிக்கோள் மிக உயர்ந்ததாய் இருந்தது என்பதில் ஐயமில்லை. அவர்கள் பெற்ற உயர்வையும் அவர்கள் கொண்ட வெற்றியையும் கொண்டு கணக்கிடாமல், குறிக்கோளையும் அதற்குச் செய்யப்பெற்ற முயற்சியையும் கொண்டே தமிழர் கணக்கிட்டனர். இதனாலேயே வள்ளுவப் பெருந்தகையார்,
வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
(குறள்-595)
என்று முழங்கினார். மனிதனின் உயர்வு அவன் உள்ளத்துட்கொண்ட குறிக்கோள் அளவாகுமே தவிர, அதனை அவன் அடைந்தானா இல்லையா என்பதைப் பொறுத்தன்று.
உலகம் ஏன் நிலை பெறுகிறது?
இவ்வுலகம் ஏன் நிலை பெற்றிருக்கிறது? எவ்வாறு நிலை பெற்றிருக்கிறது? இவ்வினாக்கட்குப் பலர் பல்வாறு விடை கூறுவர். விஞ்ஞானிகள் பெருவெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கோளங்கள் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு நிற்றலின், அந்த ஈர்ப்புச் சக்திக்குக் கட்டுப்பட்டே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது என்பார்கள். எவ்வாறு என்ற வினாவிற்கு, உலகம் தன்னில்தானே சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருத்தலினால் என்றும் விடை கூறுவர். இறைவனை நம்பியிருக்கும் அன்பர்கள் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பது இறைவனுடைய கருணையால் என்பர். எதனையுமே நம்புவதில்லை என்ற கொள்கையுடையார் சிலர், இத்தகைய வினாக்களுக்கு நாம் ஏன் விடை தேடி அலைய வேண்டும்? உலகந்தான் இருக்கிறது. அது எதனால் நிலை பெற்றால் என்ன? என்பர். பழைய புராணம் முதலியவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் உலகம் ஆதிசேடன் தாங்கிக் கொண்டிருத்தலினாலேதான் நிலைபெற்றிருக்கிறது என்பர்.
எது உலகம்? மேலே கூறிய விடைகள் அனைத்திலும் ஓரளவு மெய்ம்மை இருக்கிறது. ஆனாலும் முழு மெய்ம்மையா என்றால், இல்லையென்றுதான் கூற வேண்டும். மேலும், உலகமாகிய சடப்பொருள் நிலைபெறும் காரணத்தைத் தான் இவ்விடைகள் ஒருவாறு விளக்கின. ஆனால் உலகத்தை மண்ணும், நீரும், நெருப்பும், காற்றும் கலந்த ஒரு ஜடப் பொருளாக மட்டும் தமிழர்கள் கருதவில்லை. உலகம் என்ற சொல்லால் உலகில் உள்ள மக்களையே இவர்கள் குறித்தார்கள். இது பற்றியே பொலும், ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று’ என்பது பொன்ற முதுமொழிகள் தோன்றலாயின! எனவே, உலகம் என்பது மக்களைத்தான் சுட்டும் என்ற கருத்துடன் மேலே கூறிய வினாக்களை எழுப்பினால், கூறப்பட்ட விடைகள் பொருத்தமற்றவை என்பது நன்கு விளங்கும். தமிழர் கண்ட இந்த உண்மை இன்றும் ஒத்துக்கொள்ளப் பெறுகின்றது என்பதற்குச் சான்றாக ‘உலகம் வரவரக் கெட்டுப்பொய் விட்டது!’ என்று கூறப்படும் வாக்கியத்தைக் கூறலாம். உலகம் என்பது அதில் வாழும் மக்களைக் குறிக்கிறது என்பது வெளிப்படை அவ்வாறாயின், இந்த உலகம் ஏன் வாழ்கிறது?
நாகரிகம் வளர்ந்த வரலாறு
உலகம் தோன்றிய நாளில் அதில் மனிதன் தோன்றவில்லை. பல நூறாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பே மனிதன் தோன்றி வளரத் தலைப்பட்டான் என்று நிலநூல் வல்லுநர் கூறுகின்றனர். ஆதியில் தனித்தனியாய் வாழ்ந்த மனிதர் பல நூறு ஆண்டுகளின் பின்னர்க் கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்டனர். தனித்தனியாய் வாழ்ந்து வந்த பொழுது அவர் அநுபவித்துப் பழகிய உரிமைகள் முதலியன, கூட்டமாக வாழும்பொழுது பயன்படவில்லை. தனி மனிதனுடைய உரிமைகள் பலவற்றைக் கூட்டத்துடன் வாழும்பொழுது விட்டுக் கொடுக்க வேண்டி நேரிட்டது. காலம் செல்லச் செல்ல இப் புதுமுறை வாழ்க்கையைப் பழகிக் கொண்டான் மனிதன். அதிகக் கூட்டம் கூடி ஓரிடத்தில் வாழத் தலைப்பட்ட இடம் நகரம் எனப் பெயர் பெறலாயிற்று. கிராமங்களில் வாழும் மக்கள் ஓரளவு பிறருடைய கையை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்த முடிந்தது. ஆனால், நகரத்தில் வாழ்க்கை நடத்துபவர் பல்வேறு துறைகளில் முயற்சி செய்யத் தொடங்கினர்; ஆதலின் பிறர் கையை எதிர்பார்த்தே அன்றாட வாழ்க்கை நடத்தும் நிலைக்கு வந்தனர். பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலையில், அப்பிறருக்காகத் தம்முடைய உரிமைகள் சிலவற்றை விட்டுவிட வேண்டிய நிலைமையும் வருமன்றோ? இவ்வாறு விட்டுக் கொடுத்து வாழ்வதே நகர வாழ்க்கையின் அடிப்படை யாகும். எனவே இந்நகர மக்களின் வாழ்க்கை ‘நாகரிக வாழ்க்கை’ என்று பெயர் பெறலாயிற்று. ‘நகரம்’ என்ற சொல்லிலிருந்தே ‘நாகரிகம்’ என்ற சொல் பிறந்தது. நாளாவட்டத்தில் தன் நலத்தைக் குறைத்துக் கொண்டு பிறர் நலம் பேணும் வாழ்வையே ‘நாகரிக வாழ்வு’ என்று கூறத் தலைப்பட்டனர். இத்தகைய பண்பாடுடையவர்களை ‘நாகரிகர்’ என்றும், ‘நாகரிகம் அறிந்தவர்’ என்றுங்கூடக் கூறினர்.
எது நாகரிகம்?
நாகரிகம் உடையவராலேதான் உலகம் நடை பெறுகிறது என்று கூறினால், இன்றும் அதனை மறுப்பார் யாரும் இல்லை. நாகரிகம் என்பது யாது என்று கேட்டால்தான் விடை நன்கு கூற முடியாது விழிக்க நேரிடும். சென்னப் பட்டினத்தில் வாழும் அனைவரும் தம்மை மிக்க நாகரிகம் உடையவர் என்றே கருதிக் கொள்கின்றனர்; தருக்கோடு பேசவும் செய்கின்றனர். ஆனால் இவர்கள் எதனால் இவ்வாறு கூறிக்கொள்கின்றனர் என்பதை அறிய அதிக நேரம் செல்லாது. எளிய உடை அணிந்து, கோணல் எழுத்துக்களை அறியாத ஒருவர் இந் நகரப் பெருமக்கள் ஏறிச் செல்லும் பஸ் முதலியவற்றில் வந்து ஏறிவிட்டால் அவர் படும்பாட்டைப் பார்க்க பல கண்கள் வேண்டும். சென்னையில் வாழும் நாகரிகர்கள் அப்புதியவரை மனிதராகக்கூட மதிக்க மாட்டார்கள். ஏன்? பஸ் கண்டக்டர்கூட சென்னையில் வாழும் ஒரே காரணத்தால் தம்மை மிக்க நாகரிகமுடையவராகவே கருதிக் கொள்வதால், அப்புதியவரை நாட்டுப்புறத்தார் என்று ஏளனமாகப் பேசுதலைக் கேட்கிறோம்.
எனவே, இக்கால முறைப்படி பார்த்தால், வேட்டி உடுக்காமல் கடுங்கோடைக் காலமாயினும் கம்பளியால் நெய்யப்பட்ட சட்டை மாட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு சுருக்குத் துணியும் அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வாழ்வதே நாகரிகம் என்பது விளங்கும். இதுதான் நாகரிகம் எனில், இன்று வாழும் தமிழர் பலர், அவருள்ளும் இளந்தமிழர் பலர் நாகரிகம் மிகுந்தவர்களே! இத்தகைய நாகரிகம் மிகுந்துவிட்டதால், தமிழ்நாடு என்ன கதியடையும் என்று கூறத் தேவையில்லை. ஆனால், இவர்கள் நாகரிகரும் அல்லர்; இவர்கள் பண்பாடு நாகரிகமும் அன்று என்பது நன்கு அறியப்பட வேண்டும்.
உலகம் வாழக் காரணம்
உலகம் வாழ்வதற்கு உரிய காரணத்தைக்கூற வந்த வள்ளுவப் பெருந்தகையார்,
‘பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்’
(குறள்-996)
என்று கூறினார்.
பண்புடையவர் இருத்தலினாலேதான் உலகம் நடைபெறுகிறது என்று அவர் கூறும்பொழுது, நாகரிகம் உடையவர்களையே குறிப்பிடுகிறார். ‘பண்பெனப்படுவது பாடறிந்த ஒழுகல்’ என்று கலித்தொகை கூறுவது இக் கருத்தையேயாம். பிறருடைய இயல்பறிந்து அதற்கேற்ப நடத்தலையே ‘பாடறிந்து’ என்று கூறுகிறார் அந்த ஆசிரியர்.
தனக்கு என வாழாமல் பிறர்பொருட்டு வாழ்வதே நாகரிகம் எனப்படும் என்பது தெளிவு. எந்த அளவு வரை ஒருவன் தன்னலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவது சற்றுக் கடினந்தான். வேறு வகையாகக் கூறுமிடத்து ஒருவனுடைய நாகரிகம் எவ்வளவு என்பதை எவ்வாறு அளவிட்டுரைப் பது என்பதே இவ்வினாவாகும். பெரிய படிப்புப் படித்துவிட்டு வேற்று நாடுகட்குச் சென்றுவிட்டு மீட்டும் இந்த நாட்டையும் இதில் வாழும் மக்களையும் ஏற இறங்கப் பார்க்கும் பெரியோர்தாம் இன்று நாகரிகத்தில் மேம்பட்டவராகக் கருதப்படுகின்றனர். பிறருக்காகத் தம்மையே தியாகம் செய்வதுதான் நாகரிகம் என்றால் இவர்களுடைய நாகரிகத்தை எவ்வாறு மதிப்பிடுவது? தமிழன் நாகரிகம் பற்றிக் கொண்ட கருத்தை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணை இதோ கூறுகிறது.
‘முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்’
(நற்றிணை - 355)
‘நட்புக் கொண்டவர்கள் எதிரே இருந்து கொண்டு நஞ்சை ஊற்றி ‘உண்க’ எனத் தந்தவிடத்தும், சிறிதும் மனங்கோணாமல், முகத்தைச் சுளிக்காமல் உண்பதே நாகரிகம்’ என்பது கருத்து. இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும்,
‘பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்’
(குறள் - 580)
என்று கூறுகிறார். மகாத்மா காந்தி, ஸாக்ரட்டிஸ் போன்றவர்களே ‘நாகரிகம் உடையவர்கள்’ என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே, மீட்டும் பழைய வினாவைக் கேட்போம். உலகம் எதனால் வாழ்கிறது என்றால், இத்தகைய நாகரிகம் உடையவர்கள் இருப்பதனாலேதான் என்று எளிதாக விடை கூறிவிடலாம்.
வழுதி கூறுகிறான்…
‘கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி’ என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன். வழுதி என்பதால் பாண்டியன் என்பதும், ‘இளம்பெரு’ என்ற அடைமொழியால் ஆட்சி செய்யும் அரசனுக்கு அடுத்த உரிமையில் இருந்தான் என்பதும் அறியப்படும். அரசனாக மட்டும் இல்லாமல், பெரும் புலமை வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான் அப்பெருமகன். அவன் பாடிய ஒரே ஒரு பாடல்தான் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது. ‘கடலுள் மாய்ந்த’ என்ற அடைமொழியால் அவன் எதிர்பாராதவிதமாகக் ‘கடலுக்கு இரையாகி விட்டான்’ என்பதும் தெரிகிறது. மிகவும் இளமையிலேயே அவன் இறந்து விட்டாலும், தமிழ்மொழி உள்ள அளவும் இறவாத சிறப்புடைய ஒரு பாடலை நமக்குத் தந்து விட்டான். அந்தப் பாடலிலேதான் இந்தப் பழைய வினாவை எழுபபி, அதற்கு விடையும் அவனே கூறுகிறான்.
“இவ்வுலகம் இருக்கிறது. (யாரால் எனில்) இந்திரனுக்கே உரிமையான அமிர்தம் கிடைப்பதாயினும், அதை இனிது என்று கொண்டு (பிறருக்குத் தாராமல்) தனித்து உண்ண மாட்டார்; யாரோடும் வெறுப்புக்கொள்ள மாட்டார்; பிறர் கண்டு அஞ்சுகிற துன்பத்தைக் கண்டு தாமும் அதற்கு அஞ்சி அத்துன்பம் தீருகிற வரையில் (முயற்சி இல்லாமல்) மடியுடன் (சோம்பலுடன்) இருக்க மாட்டார்; புகழ் கிடைப்பதாயின், தம் உயிரையும் கொடுப்பார்; பழி வருவதானால் உலகு முழுவதும் கிடைப்பதாயினும் கொள்ள மாட்டார்; அத்தகைய மாட்சிமைப்பட்ட பண்பாட்டை உடையவராகித் தமக்கு என்று (தன்னல) முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் பொருட்டே முயற்சி செய்பவர். இவ்வுலகத்தில் இருத்த லான் (இவ்வுலகம் இருக்கிறது)” என்ற பொருள்பட அப் பெருமகன் பாடுகிறான்.
உண்டால் அம்ம! இவ் வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஒனத்
தமியர் உண்டலும் இவரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சீப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.
(புறம்-182)
(முனிவு- வெறுப்பு; துஞ்சல்- சோம்பல்; நோன்தாள் – வலிய முயற்சி.)
நாகரிகத்தின் சிகரம் என விளங்குபவன் யார் என்பதை இப்பாடலில் அவ்வரசப் புலவன் மிகவும் விரிவாகப் பேசுகிறான். இந்திரனுடைய அமிழ்தத்தை நிரம்பப்பெற்ற தேவர்கள்கூட அசுரர்கட்குத் தாராமல் தாமே அதனை உண்ண விரும்பினர். ஆனால், நாகரிக மனிதர் யார் எனில், இந்த அமிழ்தத்தைக்கூடத் தனக்கே என்று எண்ணாமல் பங்கிட்டுண்பவனாவான். பிற உயிர்களிடத்து இத்துணை அன்பு காட்டும் ஒருவனுக்கு அவற்றின்மேல் எவ்வாறு வெறுப்பு உண்டாக முடியும்? பிறர்மாட்டு வெறுப்புக் கொள்ளக் காரணம் தன்னலத்தில் கொண்ட பற்றுத்தானே! எனவே, தன்னலத்தைத் துறந்த பெரியவனுக்கு வெறுப்பு என்பது இருக்க இயலாது. தன்னை அடித்துப் பல்லை உடைத்தவனையும் சோதரனாகக் கருதி, அவனை விடுதலை செய்தால் ஒழிய உணவு உண்ண மாட்டேன் என்று கூறும் ஒருவனுக்கு (மகாத்மா காந்தி) எவ்வாறு வெறுப்புத் தோன்ற முடியும்? இனி அந்த நாகரிக மனிதன் துன்பத்தைக் கண்டு அஞ்சிச் சோம்பி இருத்தலும் இல்லை. பிறர் துயரம் துடைப்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவனுக்குச் சோம்பி இருக்க நேரம் ஏது? துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் எவ்வாறு பிறருக்கு உதவ முடியும்? அவன் வாழ்வின் குறிக்கோள் ‘புகழ்’ ஈட்டுதல் ஒன்றுதான். பிறருக்குத் துன்பந்தாராத நன்முறையில் கடமையைச் செய்து நிறைவேற்றினால்தான் புகழ் உண்டு. கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ்வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்ய மாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்ய மாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்.
உலகம் ஏன் வாழ்கிறது என்ற வினாவிற்கு இப்பொழுது விடை கிடைக்கிறதன்றோ?
$$$