தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 9

-சேக்கிழான்

பகுதி-8: ஆற்றுப்படை நூல்களில் செங்கோல்

.

9. செங்கோலை விடக் குளிர்ந்த என்னவளின் தோள்கள்

பத்துப்பாட்டு இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்ற செங்கோல் தொடர்பான செய்திகளை சென்ற அத்தியாயத்தில் கண்டோம். அவை தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்கள் குறித்தும், அவற்றில் பயின்று வரும் செங்கோல் கருத்துகள் குறித்தும் இங்கு காண்போம்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, நிலையற்ற உலக வாழ்க்கை குறித்து மன்னருக்கு அறிவுறுத்தும் வகையில் (காஞ்சித் திணை), மாங்குடி மருதனாரால் பாடப்பட்டதே, மதுரைக் காஞ்சி.

ஆசிரியப்பாவால் அமைந்த இப்பாடல், மொத்தம் 782 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு தொகுப்பில்  நீளமானது இதுவே. பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. 

ஆரிய மன்னன்  பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்தவும், தமிழரின் களவு – கற்பு ஒழுக்கங்களை விவரிக்கும் வகையிலும், குறிஞ்சித் திணையில், அறத்தொடு நிற்றல் துறையில், பெரும்புலவர் கபிலரால் இயற்றப்பட்டதே, குறிஞ்சிப்பாட்டு.  சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையிலான பாடல்களை இயற்றியவர் கபிலரே. ஆசிரியப்பாவால் அமைந்த இப்பாடலின் மொத்த அடிகள்: 261

சோழ மன்னன் திருமாவளவன் என்னும் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாலைத் திணையில், செலவழுங்குதல் துறையில், கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் இயற்றப்பட்டதே பட்டினப்பாலை. இவரே பெரும்பாணாற்றுப்படையையும் பாடியவர். இப்பாடல் வஞ்சிப்பா வகையால் அமைந்தது. இப்பாடலின் மொத்த அடிகள்: 301

காவிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறும் வகையில், பாலைத்திணையைப் பற்றிய பாடல் என்பதால் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது.  மனைவியை விட்டுப் பிரிந்து பொருள் தேடுவதற்காக வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதும் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாக, செலவழுங்குதல் துறையில் இப்பாடல் அமைந்துள்ளது.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை தலைவனாகக் கொண்டு, முல்லைத் திணையில், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனால் இயற்றப்பட்டது முல்லைப்பாட்டு. ஆசிரியப்பா)வால் அமைந்த இப்படல் மொத்த அடிகள்: 103. பத்துப்பாட்டு நூல்களில் மிகவும் குறைந்த அடிகள் ஒண்ட நூல் இதுவே.

பாண்டிய அரசனான நெடுஞ்செழியனை  பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை. முல்லைத் திணைக்குரிய இந்நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லி போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராததால், வில்லை. பிரிவுத் துயரம் தாழாமல் தலைவி வாடுகிறாள்;  போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்  என்று கூறுகிறது முல்லைப்பாட்டு.

பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, வாகைத் திணையில், கூதிர்ப்பாசறைத் துறையில், ஆசிரியப்பாவில் மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரரால் இயற்றப்பட்டதே, நெடுநல்வாடை. திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே. இப்பாடலின் மொத்த அடிகள்: 188.

இந்நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நெடிய நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றிருக்கிறது.

***

இந்த ஐந்து நூல்களில் செங்கோன்மையை விளக்கும் செங்கோல் குறித்த குறிப்புகள், பட்டினப்பாலையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிலும் காடு திருத்தி நாடமைத்த மன்னனை ‘பட்டினப்பாலை’ பாடி மகிழ்கிறது.

காட்டை அழித்து நாடாக்கி, குளங்களைத் தோண்டி, வளமையைப் பெருக்கி, பெரிய மாடங்களை உடைய உறையூர் நகரை விரிவுபடுத்தி, அரண்மனைகளுடன் குடிகளை நிறுவி, அரண்களில் பெரியதாகவும் சிறியதாகவும் வாயில்கள் அமைத்து, கோட்டையின் ஏவல் அறைதோறும் அம்புக் கூட்டை நிறுவி, நாட்டு மக்களைக் இயல்பினன் கரிகாலன். வீரத் திருமகள் நிலைத்த பெரிய நிலையான அவனது மதில் மின்னலைப் போன்று ஒளி வீசுகிறது என்பது பாடலின் அடிகள் கூறும் பொருள். இதோ அந்த அடிகள்:

காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ,
வாயிலொடு புழையமைத்து,
ஞாயில் தொறும் புதை நிறீஇப்
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது,
திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப

    (பட்டினப்பாலை- 283-292).

பாடலின் இறுதியில், தமிழர்தம் அகவாழ்வைச் சித்திரிக்கும் காட்சி சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. பகைவரை நடுங்கச் செய்யும் வேலும், மக்களை அரவணைக்கும் செங்கோலும் கொண்டவன் கரிகாலன் என்பது பாடலில் எடுத்தாளப்படும் கருத்து.

கரிகாலன் பகைவர்மேல் உயர்த்திய வேலைக் காட்டிலும் கொடியது காடு. அவனது செங்கோலைவிடக் குளிர்ச்சியானவை என் தலைவியின் பெரிய மெல்லிய தோள்கள் என்கிறான் குடிமகன் ஒருவன். இதோ அப்பாடல் அடிகள்:

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய, தட மென் தோளே.

    (பட்டினப்பாலை- 299- 301)

கொடுங்கோலான இடையர் கோல்:

செங்கோலுக்கு எதிரானது கொடுங்கோல். ஆனால், முல்லைப்பாட்டில் ஓரிடத்தில் பயின்றுவரும் கொடுங்கோல் என்பது, ஆநிரை மேய்க்கும் இடையரின் கோலாக வருகிறது. இதோ அப்பாடலின் அடிகள்:

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர,  
இன்னே வருகுவர் தாயர்” என்போள்...

    (முல்லைப்பாட்டு- 12-16)

இதன் பொருள்: சிறிய கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றின் துடிப்பான துள்ளலைக் கண்ட ஆயர் பெண், “கோவலர்கள் (இடையர்கள்) கொடிய கோலால் பின்னின்று செலுத்த, இப்பொழுதே வருவார்கள் உன்னுடைய அன்னையர்கள்” என்கிறாள்.

இதேபோல, நெடுநல்வாடையிலும், இடையர்தம் கோலாக கொடுங்கோல் வருகிறது. இதோ அந்த அடிகள்:

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்

    (நெடுநல்வாடை- 3-4)

இதன் பொருள்: கொடிய கோலையுடைய இடையர்கள் ஆநிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் மேயவிட்டு,  அவற்றைக் கட்டுப்படுத்தும் வளைந்த கோலுடன் வருகின்றனர். இடையரின் கோல் தழைப் பறிப்பிற்காக வளைந்திருக்கும்; மந்தையிலிருந்து விலகும் கால்நடைகளை மிரட்டி வழிநடத்தும். எனவே அது கொடுங்கோலாகிறது.

குறிஞ்சிப்பாட்டு அகப்பாடல் என்பதால் அதில் செங்கோல் குறித்த குறிப்பு இடம்பெறவில்லை எனலாம். மதுரைக்காஞ்சியில் செங்கோல் குறித்த நேரடிக் குறிப்புகள் அமையாவிடிலும், அறம்கூறும் அவையம்,  காவிதி மாக்கள், நாற்பெருங்குழு தொடர்பான செய்திகள் அமைந்து, அக்கால முடியாட்சியின் சிறப்பை விளக்குகின்றன.

 (தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 9

Leave a comment