அகல் விளக்கு- 27

சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு" என்றான்.... மு.வ.வின் அகல் விளக்கு- நிறைவு....

அகல் விளக்கு- 26

“என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?" என்றாள். அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது....

அகல் விளக்கு- 25

தங்கையின் அறிவு நுட்பத்தையும் தெளிவையும் உணர்ந்து போற்றினேன். "சாரதாமணி கணவருடைய நெறிக்கே திரும்பிவிட்டார். அதனால் இராமகிருஷ்ணர் தம்முடைய உயர்ந்த தவத்திற்கும் துணையாக்கிக் கொண்டார். ஆனால் மீராவின் கணவன் அவ்வாறு திருந்தாதிருக்கலாம்; உயராதிருக்கலாம் தன் வழிக்கு வராத கணவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என்றேன். என்ன விடை வரப்போகிறது என்ற ஆவலாலேயே விளையாட்டுப் போல் கேட்டேன்....

அகல் விளக்கு- 24

ஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

அகல் விளக்கு- 23

"சே! என்ன பேச்சு இது! தெருவில் போகிற ஒருவன் அழகாக இருந்தால், அதனால் அவன்மேல் ஆசை தோன்றி விடுமா? நம் அம்மாவைவிட இன்னொருத்தி அழகாக இருந்தால் அவள்மேல் ஆசை வளருமா? அழகு குறைவாக இருந்தாலும் என்னைப் பெற்று வளர்த்தவள்தான் எனக்கு வேண்டும். அவள்தான் எனக்குத் தாய். அப்படித்தான் நீங்களும் எனக்கு."

அகல் விளக்கு- 22

தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக் கதை, மணிமேகலை வசனம் என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன....

அகல் விளக்கு- 21

சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக் கொள்கிறோம். தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவி கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும்.

அகல் விளக்கு- 20

வேலத்து மலைச்சரிவைக் கண்டதும் தாழை ஓடை நினைவுக்கு வந்தது. ஊர்ப்பக்கம் திரும்பியபோது, பழைய அரளிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன். மலரும் அரும்பும் இல்லாமல், ஒன்றும் உதவாத இலைகளோடு அந்தச் செடி நின்று கொண்டிருந்தது. அதன் கீழே துளசிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன், இருந்தது. ஆனால், ஓர் இலையும் இல்லை. குச்சிகள் இருந்தன. அவைகளும் உலர்ந்திருந்தன.

அகல் விளக்கு- 19

"குருவி அருமையாகக் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பது போல் நம்முடைய பெற்றோரும் நமக்கு அருமையாக ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். குஞ்சு நன்றாக இறக்கை முளைப்பதற்கு முன் கூட்டைவிட்டு வெளியே வரத் தொடங்கினால் என்ன ஆகிறது பார்த்தாயா? விழுந்து விழுந்து இடர்ப்படுகிறது. தாய்க் குருவியாலும் காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் காக்கைக்கோ பூனைக்கோ இரையாகிறது."

அகல் விளக்கு- 18

இயற்கை இங்குதான் தாயாக இருக்கிறாள்; மக்கள் இங்குதான் இயற்கையின் குழந்தைகளாக இருக்கின்றனர். குறைந்த அளவு ஆடை உடுத்துத் திரியும் உரிமையும் இங்கே உள்ள மக்களுக்கு உண்டு; திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தவாறு படுத்து உறங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. கைக்கும் உறை வேண்டா; காலுக்கும் உறை வேண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளிய வேண்டா. வேண்டியபோதெல்லாம் காற்றில் திளைக்கலாம். விரும்பிய போதெல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இயற்கையன்னை தன் மக்களுக்கு வேண்டியவை எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில் மிக்க குளிர்ச்சி வேண்டும் என்று அழுகின்ற குழந்தைகளுக்காகத் தாய் தனி அன்போடு அழைத்து அளிக்கும் தட்ப இன்பம்போல் விளங்கியது அந்த நீலமலையின் குளிர்ச்சி மிக்க காற்று.....

அகல் விளக்கு- 17

அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது.

அகல் விளக்கு- 16

மாலனுடன் மட்டும் மனம் கலந்து பழகி வந்தேன். அவனுடைய குறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்த குறைகள் அவ்வளவாகத் தீமை செய்வதில்லை. பழகிய வழியில் உள்ள மேடும் பள்ளமும் கல்லும் முள்ளும் நமக்குத் தீமை செய்வதில்லை. பழகாத வழியில் உள்ள குறைகள்தான் தீமை செய்கின்றன. மாலனும் எப்படியோ என்னிடம் மட்டுமே நெருங்கிப் பழகிவந்தான். என்னுடைய முற்போக்குக் கொள்கைகளும் அவனுடைய மூடநம்பிக்கைகளும் முரண்பட்டன. என்னுடைய இரக்க உணர்ச்சியும் அவனுடைய தன்னல முயற்சியும் மாறுபட்டன. ஆனால் எப்படியோ என் நெஞ்சமும் அவன் நெஞ்சமும் உறவு கொண்டன.

அகல் விளக்கு- 15

அங்கே இருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்குத் துயரமாகவே இருந்தது. மறுநாளே புறப்படலானேன். தாயும் தந்தையும் பேச்சு இல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக விடை கொடுத்தார்கள். அத்தை மட்டும், "எங்கே பார்த்தாலும் கேட்டாலும் கொண்டு வந்து சேர்த்துவிடு வேலு" என்று வேண்டினார். கற்பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிரே நின்று கைகூப்பிக் கண் கலங்கி விடை கொடுத்தாள்.

அகல் விளக்கு-  14

"நல்ல பிள்ளை அம்மா, அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது. அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு. சந்திரனுக்கே மனம்மாறி உன்னிடத்தில் வேறு வகையாகப் பழகத் தொடங்கினாலும் விலகிவிடு; அல்லது உன் மனமே சந்திரனிடத்தில் வேறு வகையாகச் செல்லுமானாலும் விலகிவிடு. ஏன் என்றால், ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் உங்கள் உணர்ச்சியால் முடிவு செய்யக்கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக்கூடியது. ஆகையால் அனுபவம் நிறைந்த எங்கள் அறிவுரையும் அதற்கு வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே" என்று கூறினார். அந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது. ஆனால் அவருக்கு அப்படி ஒருவர் அறிவுரை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றாள்.

அகல் விளக்கு- 13

அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆக வேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று.