-சோ.தர்மன், மாலன், பட்டுக்கோட்டை பிரபாகர், ‘உங்கள் ரசிகன்’ ரவிபிரகாஷ், துக்ளக் சத்யா, பி.ஆர்.மகாதேவன், வேதா ஸ்ரீதர், கவிஞர் அரங்க. சுப்பிரமணியம், ச.சண்முகநாதன்.
திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-3)

அ. நன்னடத்தை விதிகள் இல்லை!
-சோ.தர்மன்
ஒவ்வொரு வருஷமும் ஞானபீட விருதுக்கு பரிந்துரைக்குமாறு கூறி கடிதம் அனுப்புவார்கள். இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். நானும் இலக்கியத்தில் ஞானபீட விருதுக்கு தகுதியானவர் என நான் நினைக்கும் எழுத்தாளரைப் பற்றிய ஒரு பெரிய கட்டுரை எழுதி, அவர் எழுதியிருக்கிற நூல்களின் பட்டியலை வரிசைப்படுத்தி, அவர் வாங்கியிருக்கிற விருதுகளின் பட்டியல், அதற்கான சான்றுகள் இத்தனையும் சேர்த்து, அவற்றை கோர்வையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து (எனக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிற அளவுக்கு புலமை இல்லை- இருக்கவே இருக்கிறார் எங்க ஊர் ஜாம்பவான் தேவதச்சன்) அனுப்பி வைப்பேன்.
இனி இரண்டு ஆண்டுகளுக்கு பரிந்துரைகள் கேட்டு கடிதங்கள் வராது. ஞானபீட விருது பெறுகிற மொழிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த விருது இல்லை. ஞானபீட விருது கமிட்டியின் விதி.
ஏற்கனவே ஒவ்வொரு மொழியிலிருந்தும் வருகிற பரிந்துரைக் கடிதங்களை பரிசீலித்து அவற்றிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மொழியிலிருந்தும் மூன்று பேர் கொண்ட ஒரு கமிட்டியை ஞானபீடம் நியமிக்கும். இந்த ஆண்டு தமிழிலிருந்து நியமிக்கப்பட்ட அந்த மூன்று பேர் யாரென்று தெரியவில்லை. அவர்களைத் தெரிந்து கொள்வதுதான் மிக முக்கியம்.
அனைத்து மொழிகளிலிருந்தும் ஒவ்வொருவர் தேர்வான பின்னர் பொதுவான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருதுக்குரியவரை அறிவிக்க ஆறு பேர் கொண்ட ஒரு கமிட்டி இருக்கும்.அதில் யார் யார் இடம் பெற்றிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.
குறிப்பு: ஞானபீட விருது பெறுபவர்களின் ஒழுக்கம் பற்றியோ, நன்னடத்தை விதிகள் பற்றியோ விதிகளில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
$$$
ஆ. பரிசில் வாழ்க்கை
-மாலன்
பரிசில் வாழ்க்கை என்பது சங்க காலத்து வாழ்க்கை. அரசர்கள், வள்ளல்கள் ஆகியோரை நாடிச் சென்று பரிசுகள் பெறுவதற்காகப் பாடும் வாழ்க்கை.
கோவூர் கிழார் இவர்களைப் பற்றி ஒரு பாடல் எழுதியிருக்கிறார் (புறநானுறு 47).
பழுத்திருக்கும் மரத்தை நாடிச் செல்லும் பறவைகள் போலச் செல்வர்.
நெடுந்தொலைவு என்று எண்ணாமல் வறண்ட வெளிகளையும் கடந்து செல்வர்.
பொய் சொல்லும், கூர்மை இல்லாத நாக்கினால், பல்லாண்டு பாடுவர்.
கொடுப்பது சிறிதாயினும் மகிழ்ச்சி அடைவர்.
அதனைத் தன் சுற்றத்தார் நுகரச் செய்வர்.
யாராவது கொடுக்க மாட்டார்களா என்று வருந்தி ஏங்குவர்.
நாங்க யாருனு நினைச்சே, சங்கத் தமிழண்டா!
$$$
இ. கவிதைக்குத் தானே விருது?
-பட்டுக்கோட்டை பிரபாகர்
வைரமுத்து அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள் என்று சொல்ல ஆசை.
ஆனால் அவர் கடிதத்தின் 3 & 4 பாராக்களில் இருக்கும் அவரின் ‘தன்னடக்க’ வரிகள் என் தவறைச் சுட்டிக் காட்டித் தடுக்கிறது. (காண்க: கவிஞர் வைரமுத்துவின் அறிக்கை)
ஆகவே தமிழ்க் கவிதைக்குத்தான் நல்வாழ்த்துகள் சொல்ல வேண்டும்.
தமிழ்க் கவிதை என்றால் அவர், அவர் என்றால் தமிழ்க் கவிதை என்று ஏற்க விடாமல், கம்பர், பாரதியார் போன்றோர் எதிரில் நின்று முறைக்கிறார்கள்.
தமிழ்க் கவிதையின் இ-மெயில் விலாசம் அல்லது வாட்ஸ் ஆப் எண் யாருக்காவது தெரிந்தால் பகிரவும்.
விருதுடன் வழங்கப்படும் 11 லட்சம் தொகையை தமிழ்க் கவிதை பெயரில் காசோலையாகத் தருவார்களே, தமிழ்க் கவிதைக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா என்று ஞானபீடம் அதிகாரிகள் விசாரிக்க வேண்டிய புதிய வேலை வேறு வந்துவிட்டது.
24 வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளருக்கோ, ஒரு கவிஞருக்கோ வழங்காமல் தமிழ்க் கவிதைக்கு விருது வழங்கியுள்ள ஞானபீடத்திற்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
$$$
ஈ. அடுத்த வேலையைப் பாருங்க!
-‘உங்கள் ரசிகன்’ ரவிபிரகாஷ்
கவிப்பேரரசுவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட தகவல் சோஷியல் மீடியாவில் கசிய ஆரம்பித்ததும், என் ஃபேஸ்புக் நண்பருக்கும் (நேரிலும் பழக்கம்) எனக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் இது. ‘இதை ஒரு பதிவாகப் போடட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘வேண்டாமே’ என்றார். எனவே, அவர் பெயரைக் குறிப்பிடாமல் எழுதியுள்ளேன்.
நண்பர்: ஹலோ, ரவி சார், வணக்கம். கேள்விப்பட்டீங்களா, நம்ம கவிப்பேரரசுக்கு ஞானபீட விருது கிடைச்சிருக்கு!
நான்: ஆமாம். கேள்விப்பட்டேன். கிடைச்சிருக்கு.
“என்ன சார் பதில் இது?”
“ஏன், வேறென்ன பதில் எதிர்பார்த்தீங்க?”
“அதில்ல சார், இதுல உங்களுக்குக் கோபமோ, வருத்தமோ இல்லியா?”
“அறச் சீற்றம். அதை விட்டுட்டீங்களே?”
“நக்கல் பண்ணாதீங்க. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க!”
“யாரோ கொடுக்கறாங்க. யாரோ வாங்கிக்கிறாங்க. இதுல எனக்கு ஏங்க வருத்தமோ கோபமோ வரணும்?”
“என்ன இப்படி பட்டும் படாம சொல்றீங்க?”
“வேற எப்படிச் சொல்ல? நான் இலக்கியவாதியோ கவிஞனோ கிடையாது. அப்படி இருக்க, வைரமுத்து விருது வாங்கிக்கிறதுல எனக்கென்ன கஷ்டம்? சந்தோஷமா வாங்கிக்கட்டும்!”
“அப்படியில்லீங்க ரவி சார், இதனால ஞானபீட விருதே அசிஙகப்பட்டுப் போச்சே! அது பத்தி உங்க உணர்வு என்னன்னு கேக்கறேன்!”
“கொடுக்குறவங்களுக்கே அது பத்திக் கவலை இல்லாதப்போ எனக்கென்னங்கறேன்?”
“என்ன சார் இப்படிச் சொல்றீங்க? ‘மீ டு’ புகார்ல அடிபட்ட ஒருத்தருக்கு ஞானபீட விருது கொடுத்திருக்காங்களேன்னு தார்மிகக் கோபம்கூட வரலையா உங்களுக்கு?”
“மீ டு புகார்களில் அதிகம் அடிபட்டவர்ங்கிறதுக்காகவா இந்த விருது கொடுத்திருக்காங்க? இல்லையே! கவிஞர்ங்கிறதுக்காகத்தானே கொடுத்திருக்காங்க?”
“அப்ப இதை ஏத்துக்கறீங்களா?”
“இதென்ன வம்பா இருக்கு? நான் ஏங்க ஏத்துக்கணும்? அவர்தான் ஏத்துக்கிட்டாரே?”
“தமிழ்க் கவிதைக்கு இதுவரை ஞானபீடம் வழங்கப்படவில்லை என்ற குறை என்னால் கழிந்ததுன்னு அகந்தையோட சொல்லியிருக்காரே, அதைப் பார்த்தும் கோபம் வரலையா உங்களுக்கு? என்ன பத்திரிகையாளர் நீங்க?”
“ஜேம்ஸ் ஆலனின் As a Man Thinketh என்ற நூலைத் தமிழில் ‘மெய்யறிவு’ங்கிற தலைப்புல மொழிபெயர்த்தார் வ.உ.சி. அப்போ, ‘மேலை நாட்டுத் தத்துவங்கள், உயரிய சிந்தனைகள் தமிழில் இல்லை என்கிற வசவு என்னால் ஒழிந்தது’ன்னு சொல்லியிருக்கார்.”
“நல்லாருக்கே! அவரும் இவரும் ஒண்ணா?”
“சரி, ஒண்ணா இருக்க வேண்டாம். எப்படியோ, தமிழ்க் கவிதைக்கு இதுவரை ஞானபீடம் இல்லைங்கிற வசவு இவரால ஒழிஞ்சது இல்லையா… இது போல புக்கர் பரிசு, புலிட்சர் விருது, கோன்கோர்ட் பரிசு, காஃப்கா விருது, ஹ்யூகோ விருது, நோபல் பரிசு இதெல்லாம்கூட இதுவரை தமிழுக்கு இல்லைங்கிற குறையை வைரமுத்துவுக்குக் கொடுத்துப் போக்கட்டுமே அவை! அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?”
“இந்த விருது இவருக்கு எப்படிக் கிடைச்சுது? லாபி பண்ணாம கிடைச்சிருக்குமா!”
“எப்படியோ கிடைச்சுட்டுப் போகுது, விடுங்களேன். ஏதோ ஒரு சாமர்த்தியம் இருக்கப்போய்த்தானே கிடைச்சிருக்கு? எப்படியோ, தமிழுக்கு இது இல்லை, அது இல்லைங்கிற குறை ஒவ்வொண்ணா நீங்கினா அதுவே எனக்குச் சந்தோஷம்.”
“இப்ப சுஜாதா இருந்திருந்தார்னா என்ன பண்ணியிருப்பார்?”
“தமிழுக்கு ஞானபீட விருது இல்லைங்கிற குறையைப் போக்கினவன் மாதிரி என்ன கெத்தா நடைபோடறான் பாரேன்’னு ஏதோ ஒரு படத்துல யோகி பாபுவுக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார். பாவம், அவரால வேறென்ன செய்ய முடியும்?”
“ப்ச்… விஷயம் கேள்விப்பட்டதுலேர்ந்து மனசு பாரமாகிப் போச்சு! நீங்க எப்படி இதை லேசா எடுத்துக்கறீங்க?”
“லேசா கூட எடுத்துக்கலை. இதை நான் மனசுல ஏத்திக்கவே இல்லையே, அப்புறம்தானே லேசா, கனமாங்கிறதெல்லாம்! நீங்களும் இதை இப்பவே இறக்கி வெச்சுட்டு அடுத்த வேலையைப் பாருங்க! குட் நைட்!”
$$$
உ. நல்ல விருதுக்கு திறமை மட்டும் போதாது
-துக்ளக் சத்யா
நேற்று முழுவதும் ஞானபீட விருது தொடர்பான பதிவுகள் குவிந்து கொண்டிருந்ததால், அதைப்பற்றி நேற்றே எழுத நினைத்தும், கொந்தளிப்பு அடங்கிய பின் கூறலாம் என்று விட்டு விட்டேன்.
தகுதி இல்லாதவருக்கு இவ்வளவு பெரிய விருதா என்று கோபம் கொள்வதில் நியாயம் இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தை பலர் கவனத்தில் கொள்ளவில்லை.
தகுதி உள்ளவர்கள் மட்டுமா முதல்வராகவும் அமைச்சர்களாகவும் பதவியில் அமர்கிறார்கள்? அல்லது வரும் தேர்தலில் தகுதி உள்ளவர்களை மட்டும் தேர்ந்தெடுக்க நம்மால் முடியுமா?
தகுதியற்றவர்கள் உயர் பதவிகளுக்கு வந்து விடுகிறார்களே என்று நாம் கோபம் கொள்ளத்தான் முடிகிறதா?
ஒரு முன்னாள் ரவுடி கூட காவல்துறை அமைச்சராக முடியும். கடவுள் நம்பிக்கையற்ற ஆசாமி கூட அறநிலையத்துறை அமைச்சராக முடியும். சட்ட விரோத காரியங்களில் ஊறிய நபர் கூட சட்ட அமைச்சராக முடியும். எதையாவது நம்மால் தடுக்க முடிகிறதா?
திறமையாளர்களை பின் தள்ளி விட்டு, ஜாதி அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்யும் இட ஒதுக்கீட்டு முறையை ஏற்றுக்கொள்ள நாம் பழகி விட்டோமே.
பாரத ரத்னா விருதே கூட சில சமயங்களில் பொருத்தம் அற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது கொடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால்தான் தகுதிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அந்தப் பொறுப்பில் உள்ளவர்களின் தரம் பற்றி யாருக்கு தெரியும்?
குறிப்பிட்ட இந்த விவகாரத்தில், விருது பெற்றவரின் ஒழுக்கம் கேள்விக்குறியானதுதான் பலரது கோபத்துக்குக் காரணம். அவர் எழுத்துத் திறமையற்றவர் என்று யாரும் கூறவில்லை. அவரை விட மேலானவர்களும் இருக்கலாம். நல்ல விருதுக்கு திறமை மட்டும் போதாது.
விருது வழங்கப்பட தகுதியோடு, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாத ஒழுக்கமும் அவசியம் என்று முடிவு செய்யப்பட்டால் மட்டுமே, இத்தகைய விரும்பத்தகாத விருதுகளைத் தடுக்க முடியும். அதைச் செய்யும் அதிகாரமோ நம்மிடம் இல்லை. எனவே, தவறான அங்கீகாரங்களை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஞான பீட விருது கமிட்டிக்கு நாம் ஒரு வேண்டுகோள் விடுக்கலாம். ஞானபீடம் என்பதை ‘சாதா பீடம்’ என்று மாற்றினால், இவ்வளவு கோபத்துக்கு இடமிருக்காது. .
நியாயமான கோபம் ஒரு சமூகத்துக்கு அவசியம். இத்தகைய கோபத்தை தேர்தலிலும் காட்டி, இருப்பதில் நல்ல கட்சியையும், இருப்பவர்களில் நல்ல வேட்பாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கொஞ்சமாவது சுத்தமாகும்.
$$$
ஊ. சமூகத்தின் கண்ணாடி தானே விருது?
-பி.ஆர்.மகாதேவன்
பிரச்சினை, விருதைக் கேட்டு வாங்கிக்கொண்ட வயிரவ முத்து(ராமலிங்கம்) மீது அல்ல; கேட்டவருக்குக் கொடுத்த ஞானபீடம் மீதும் அல்ல. அது சமூகத்தில் இருக்கிறது.
‘ஞான பீட விருது’ தகுதிக்கு மீறிய அல்லது தவறான பெருமையைக் கொண்ட ஒரு விருது. தேசத்தின் விருதுபோல தோற்றம் காட்டும் தனியார் விருது.
ஒருவகையில் தனக்கான பெருமையை பெருமளவுக்கு நிலைநிறுத்திக்கொண்ட விருதும்கூட. என்றாலும், தேசத்தின் விருதாக ஒரு தனியார் விருதைக் கருதுவது தேசத்துக்கும் நல்லதல்ல; தனியாருக்கும் சரியல்ல.
அரசு தரும் விருதுகளான சாஹித்ய அகாதமி விருது, கலை மாமணி போன்ற விருதுகள்தான் உண்மையில் தேச – பிராந்திய விருதாக, மக்கள் விருதாக மதிக்கப்படவேண்டியவை. மக்கள் விருது என்று சொன்னால் எளிய மக்கள் திரள் என்ற அர்த்தத்தில் அல்ல. அந்த மக்களுடைய விருதும்கூட. என்றாலும் இலக்கிய நயத்துக்காகத் தரப்படக்கூடிய விருதுகளே அவை.
உன்னத இலக்கியங்கள் மக்கள் கலையாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். லெளகிக, யதார்த்த விஷயங்கள் சார்ந்தும் அது இருக்கலாம். ஒட்டுமொத்த மானுட குலம் சார்ந்ததாக, கால, வெளிகளைக் கடந்த அறமும் ஆன்மிகமும் கொண்டதாகவும் அது இருக்கலாம்.
பொதுவாக, ஒரு காலகட்டத்தின் கண்ணாடியாக, ஒரு மக்கள் திரளின் ஆன்மாவாக அது திகழும்; திகழ வேண்டும்.
அந்த அளவுகோலின்படிப் பார்த்தால் இந்த ஞானபீடவிருது தகுதியானவருக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. விருதுக் குழு சரியான செயலைத்தான் செய்திருக்கிறது.
கண்ணாடியில் தெரியும் முகம் அசிங்கமாகத் தெரிகிறதென்றால், கண்ணாடியின் குறையில்லை. சமூகம் மலினப்பட்டுக் கிடக்கிறது. எனவே அதைப் பிரதிபலிக்கும் இந்த விருதும் மலினப்பட்டுவிட்டிருக்கிறது.
ஒருவேளை மிகவும் சிறப்பான வேறொரு படைப்பாளிக்கு இந்த விருது தரப்பட்டிருந்தால் கண்ணாடி, மாய பிம்பத்தைக் காட்டுகிறது என்று அர்த்தம். சிதிலமடைந்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு கொண்டு துலக்கிக் காட்டுவது போன்ற மாயத் தோற்றம்.
அப்படி ஒரு படைப்பாளி மிகச் சிறந்த படைப்பை உருவாக்கியிருந்தால், அவர் யதார்த்த உலகையோ வாழும் காலத்தையோ பிரதிபலிக்காமல் மாய உலகை சிருஷ்டித்திருக்கிறார் என்றே ஆகிறது. எனவே அவருக்கு விருது தராததும் சரியே.
ஒரு படைப்பாளி சமகால ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும். அப்படியான எழுத்தைக் கண்டுபிடித்து விருது தர வேண்டும். அது அற்புதமான படைப்பாகவும் செயலாகவும் இருக்க வேண்டுமென்றால் சமூகம் அப்படி அற்புதமானதாக இருந்தாக வேண்டும்.
சமூகம் அற்பமானதாக இருந்துகொண்டு, அற்புதமான கலையை எதிர்பார்க்க முடியாது.
கண்ணாடி பளபளப்பாக இருந்தாலும் முகத்தின் கறை மாறாது. அசிங்கமான முகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி மிகவும் சரியான செயலையே செய்கிறது.
இதில் கல்லூரி – கல்விப்புல பேராசிரியர்கள் இதை விமர்சிப்பதெல்லாம், இழவு வீட்டுல கொன்னவனும் கூட உட்கார்ந்து அழுவதைப் போன்றது.
இலக்கியவாதிகளின் அறச்சீற்றங்கள் எல்லாம் வேறு பல விஷயங்களையெல்லாம் மறந்தாலே பொருட்படுத்தத் தகுந்தவையாக ஆக முடியும்.
படைப்பாளிகளின் தனி மனித ஒழுக்கம் சார்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் தனியாகப் பார்க்கப்பட வேண்டியவையே. அவை ஒரு படைப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதிகம் பாதிக்க வேண்டிய ஒன்றே அல்ல.
கலை, இலக்கியம், ஒழுக்கசீலர்களால் உருவாக்கப்படுவதல்ல. கலை, இலக்கிய பிரபல்யத்தையும் அதிகாரத்தையும் ஒருவன் மலினமாகப் பயன்படுத்திக் கொண்டால், அது தனி மனித ஒழுங்கீனமாக, தனியாகப் பார்க்கப்படவேண்டிய விஷயம் மட்டுமே.
கலை சார்ந்தும் பெரிதாக எதையும் செய்யாத ஒருவன் லாபியிங் மற்றும் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் நெளிச்சிரிப்புடன் கூழைக் கும்பிடுகளுடன் சஞ்சரித்த வண்ணம் இருந்திருந்தால் இந்த ஒழுங்கீனத்தையும் சார்ஜ் ஷீட்டில் எழுதிச் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி கலைக்கும் தனி மனித மதிப்பீடுகளுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கலாம்.
எதையும் பொதுமைப்படுத்துதல் கூடாது.
*
கலை, இலக்கியத் துறையில் மட்டுமல்ல; போலி திராவிட அதிகார மையத்தின் மலினம் அனைத்துத் துறைகளிலும் துலக்கமாகத் தெரியும்படியாகத்தான் இருக்கிறது.
தமிழகத்தின் அரசியல் இயக்கங்களையும் தலைவர்களையும்போன்ற ஆகக் கேடு கெட்ட கும்பல் உலகில் மிகவும் குறைவாகவே இருக்கும். மக்களும் நவீனகால விஷயங்களும் கொண்டுவந்த மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றுக்கு வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே திராவிட இயக்கமும் ஆட்சியும் கட்சியும் செய்து வந்திருக்கிறது.
23-ஆம் புலிகேசியின் அப்பட்டமான அழுத்தமான வாழும் வரலாற்று உதாரணம் திராவிட இயக்கமே.
அந்த சிக்ஸ் பேக் உடம்புடன் இந்த டெரர் மரு முகத்தை ஒட்டி வருங்கால சந்ததிக்குக் காட்டும் சாதனை மட்டுமே நடக்கிறது.
திரையுலகை எடுத்துக்கொண்டால் வதவதவென பன்றியைவிட அதிக குட்டிகளைப் பெற்றுப் போட்டு அதில் சாதனை படைத்துவருகிறது. உலகின் சிறந்த படங்களுக்குத் தரப்படும் விருதுகளைப் புறந்தள்ளிவிடலாம். தமிழ் வாழ்வை தமிழ் சினிமாக்கள் பிரதிபலிப்பதே இல்லை என்ற ஒற்றைக் காரணமே தமிழ் திரைப்படங்களின் இடத்தைச் சுட்டிக்காட்டி விடுகின்றன. கற்பனைகளுமே கூட தமிழ்த் தன்மை கொண்டதாகவோ தமிழ் மண் சார்ந்ததாகவோ இல்லை என்பது அதையும் விடப் பெரிய பலவீனம்.
கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் திராவிட அரசுப் பள்ளிகள் உலகின் அடிமட்ட இடத்தைப் பிடிப்பதில் வேக வேகமாக முன்னேறி வருகின்றன. தனியார் மற்றும் மத்திய அரசின் பள்ளிகளிலும் பல குறைகள் உண்டு. ஆனால் அவை இன்றைய லெளகிகக் கல்வியின் தேவையை பெருமளவுக்குப் பூர்த்திசெய்பவையாகத் திகழ்கின்றன. அந்த ஒரு பெருமைகூட திராவிடக் கல்வித் துறைக்கு இல்லை.
மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் அதே விஷயம்தான். உலகின் முன்னணி மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருக்கிறார்கள் என தமிழர்களும் தமிழகமும் பெருமை கொள்ள முடியும். இவையும் திராவிட அரசுகளை மீறி நடந்த சாதனைகளே இவை.
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால், இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா?
ஆக,
உள்கட்டமைப்பு (மத்திய அரசு, அந்நிய நாடுகளின் உதவியால் மட்டுமே), அடிப்படைவசதிகள், குடிமை உரிமைகள் – மதிப்பீடுகள் என பல விஷயங்களில் இந்திய அளவில் தமிழகம் மேம்பட்ட நிலையில் இருப்பதன் முக்கிய காரணம், திராவிட இயக்கத்துக்கு முந்தைய வரலாறு மட்டுமே.
நாம் இன்று லட்சாதிபதியாக இருக்கிறோம். மறுக்கவே முடியாது. முன்பு கோடீஸ்வரராக இருந்தோம். இதையும் மறக்கவே கூடாது.
ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்… தமிழக அரசு தரும் கலைமாமணி விருதுகளுக்கு தமிழகத்திலேயே என்ன மரியாதை இருக்கிறது?
இந்த விருதுகளைப் பெற்ற சில நல்ல கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த விருதை இந்தக் கைகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட தவறைத் தவிர, அவர்களுடைய கலைத்துறையில் நிச்சயம் திறம்பட வெளிப்பட்டவர்கள் உண்டு. அவர்களுக்கு அந்தக் கலைத் திறமைக்கான மரியாதையை நிச்சயம் தரத்தான் வேண்டும். ஆனால், திராவிட மாடல் அரசின் விருதுக்கு தமிழர்களிடமே மரியாதை இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மையே.
‘முப்பது நாட்களில் சாஹித்ய அகாதமி விருது பெறுவது எப்படி?’ என்ற தொழில் நுணுக்கத்தை, அதாவது இடது பக்கம் கெந்திக் கெந்தி நடக்கும் சப்பாணி நடையை ‘ராஜ நடை’யாகக் கருதி கற்றுத் தேர்ந்து கரை கண்ட கும்பலின் அடுத்த கட்டப் பாய்ச்சல் இப்போது நடந்தேறியிருக்கிறது.
அல்லது அடுத்தகட்ட வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது.
ஒரு தனியார் அமைப்பு இதுவரை காப்பாற்றிய போலிப் பெருமையை இனியும் காப்பாற்றத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. திராவிட இயக்க ஆசுகவி (இவன் ராஜ பரம்பரையின் அந்தப்புரத் தோழனும்கூட) தன் வழக்கமான மலினத்தையே செய்திருக்கிறான்.
சாஹித்ய அகாதமி இந்தச் செயல்களை எப்போதோ செய்ய ஆரம்பித்துவிட்டது. திராவிட அரசின் விருதுகள், என்றைக்குமே இந்த கண்ணியம் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை.
பன்றிகள் சாக்கடையில் வாழ்வதில்லை. தாம் வாழும் இடத்தை அவை சாக்கடை ஆக்கிக் கொள்கின்றன.
இதில் பெரிய வேதனை என்னவென்றால், இரண்டுக்கும் நம் வீட்டின் முன்வாசலில் இடம் ஏற்படுத்தித் தந்திருக்கும் நாம்தான் முக்கிய குற்றவாளிகள்.
‘சாக்கடையில் பன்றிகள் குதுகலமாக விளையாடிக் கொண்டிருக்குமே அந்த வீடு’ என்று நம் வீட்டுக்கு அற்புதமான அடையாளத்தை, நாமே அரும்பாடுபட்டு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.
இதில், பன்றிகளையும் சாக்கடையையும் நொந்துகொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
$$$
தேர்வுக் குழுவினர் யார்? ‘பாரதிய ஞான பீடம்’ (Bharatiya Jnanpith Award) பாரதத்தில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய தனியார் விருது ஆகும். இந்த விருதை பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகத்தினர் வழங்குகின்றனர். இந்த அறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாஹு ஜெயின் குடும்பத்தினரால் 1961இல் நிறுவப்பட்டது. 1965ஆம் ஆண்டுமுதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு 60-வது ஞானபீட விருது (2025-ஆம் ஆண்டிற்கானது) அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மார்ச் 14 ஆம் தேதி வெளியானது. தமிழில் கவிஞர் வைரமுத்து அவர்களின் ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பிற்காக (Outstanding contribution to Indian Literature) இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாவல்கள் மற்றும் கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக (கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம் போன்றவை) இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஞானபீட அமைப்பின் தேர்வு வாரியம் (Selection Board) இந்த முடிவை எடுத்தது. இக்குழுவில் இடம்பெற்ற முக்கிய நபர்கள்: தலைவர்: திருமதி. பிரதிபா ராய் (பிரபல எழுத்தாளர்) உறுப்பினர்கள்: மாதவ் கௌஷிக், தாமோதர் மௌசோ, சுரஞ்சன் தாஸ், ஏ.கிருஷ்ணா ராவ், பிரபுல்ல ஷிலேதர், கேசுபாய் தேசாய், ஜானகி பிரசாத் சர்மா, கே. சீனிவாஸ் ராவ், மகேஸ்வர். தமிழிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பட்டியலைப் பரிசீலித்து தேர்வு செய்வது மட்டுமே இவர்களின் பணி. திருவாளர் வைரமுத்துவைப் பரிந்துரைத்த அந்த அதிமேதாவி யாரென்று தான் தெரியவில்லை. (ஒரு மூத்த பத்திரிகை ஆசிரியர் பரிந்துரைத்ததாகவும், அதை துணை ஜனாதிபதி சிபாரிசு செய்ததாகவும் வரும் தகவல்கள் உண்மையா என்று தெரியவில்லை). காண்க: ஞானபீடம் (விக்கி)
$$$
எ. சூடு சொரணை நமக்கெதற்கு?
-வேதா ஸ்ரீதரன்
ஆண்டாளை கேவலாமக்ப் பேசியவனுக்கு ஞானபீட விருது.
மத்திய அரசாங்கம் தவறிழைத்து விட்டதாம். மோதிஜி குற்றவாளியாம்.
மன்னிக்கவும்.
ஞானபீடம் என்பது ஒரு பணக்காரக் குடும்பம் தனது அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்காக ஏற்படுத்திய விருது. அது பல வருடங்களாக பாரபட்சமில்லாமல்தான் இயங்கி வருகிறது. ஆனாலும், ஆங்காங்கே – குறிப்பாக, மாநிலவாரியாக – ஏற்படுத்தப்படும் தேர்வுக்குழுவினரின் முடிவுகள் எப்படி அமைகின்றனவோ, அதன்படிதான் அந்த அமைப்பு செயல்பட முடியும்.
இதற்கும் மத்திய அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
பாரதத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த தேர்வுக்குழுக்களில் ரத்த வாடை வீசும். காரணம், இலக்கியம் என்பதே தற்கால இந்தியாவில் இடதுசாரிகளின் குத்தகைப் பொருள் என்றாகி விட்டது.
அதிக துர்நாற்றம் வீசுவது சாகித்ய அகாதெமியில்தான். காரணம், அது மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சுதந்திர அமைப்பு. அரசுப் பணம் என்பதாலும், சுதந்திர அமைப்பு என்பதாலும் அதில் இடதுசாரிகள் அதிகம் கோலோச்ச முடிகிறது.
‘சிவலிங்கத்தின்மேல் சிறுநீர் கழித்தேன்’ என்று எழுதிய கன்னட கர்ல்புகிக்கு ஓடோடிப்போய் சாகித்ய அகாதெமி விருது வழங்கினார்கள்.
அமெரிக்க நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு (மாதொருபாகன் என்ற நாவலில்) திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழாவைப் பற்றிக் கொச்சையாக எழுதிய பெருமாள் முருகனை உள்ளூர் ஹிந்துக்கள் நாறடித்து விட்டார்கள். அவரும் தனது புத்தகத்தை வாபஸ் வாங்கிவிட்டு எழுத்துப் பணிக்குத் தலைமுழுக்குப் போட்டு விட்டார்.
ஆனால், இடதுசாரிகளின் மானம் போய்விட்டதே, என்ன செய்வது? அட்ரஸ் இல்லாத அவருக்காக இந்தியா முழுவதும் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தார்கள். மேலும், மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு (மோதிஜி பிரதமராக இருக்கும்போதே) சாகித்ய அகாதெமி விருது வழங்கி அரிப்பைத் தணித்துக் கொண்டார்கள்.
ஒருபுறம் பாரத அரசாங்கம் நக்சல்களை எதிர்த்துப் பல விதங்களில் போராடிக் கொண்டிருக்கும்போது – ஏராளமான காவல்துறை, ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கொண்டிருக்கும்போது – நக்சல்கள் தேசபக்தர்கள் என்று அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை (மத்திய அரசாங்கத்தின் நிதியுடனும், கண்காணிப்பின் கீழும் செயல்படும்) மனோன்மணியம் பல்கலைக்கழகம் பாடநூலாக வைத்தது.
இத்தகைய சூழலில்கூட ஓரளவு மரியாதைக்குரியதாக இயங்கி வந்தது ஞானபீடம். எனவேதான், அது ஆண்டாளை கேவலாமக்ப் பேசியவனுக்கு விருது வழங்கியது என் போன்றவர்களைப் புருவம் உயர்த்த வைக்கிறது.
அதேநேரத்தில், இந்த விருது வழங்கும் குடும்பம்தான் ‘எகனாமிக் டைம்ஸ் அவார்ட், ஃபிலிம்ஃபேர் அவார்ட், மிஸ் இந்தியா அவார்ட்’ ஆகியவற்றையும் வழங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால், ஞானபீடம் என்பது வெறும் ஃபேமிலி ஷோ மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே, இதற்காக அலட்டிக்கொள்வது அநாவசியம்.
ஆனாலும், ஞானபீட விருது என்பது சான்றிதழ், (ரூ. 11 லட்சம்) பணமுடிப்பு ஆகியவற்றுடன் சரஸ்வதி விக்கிரகத்தையும் உள்ளடக்கியது.
ஆக, ஆண்டாளை கேவலப்படுத்தியவனுக்கு வாக்தேவி சரஸ்வதியைப் பரிசாக வழங்கப் போகிறார்கள்.
அந்த விக்கிரகத்தை அவன் ஈ.வெ.ரா., கருணாநிதி சமாதிகளில் வைத்து அஞ்சலி செலுத்தினாலும் செலுத்துவான். யார் கண்டது?
பாம்புக்கறி தின்னும் கூட்டத்தில் வாழ்கிறோம். நடுக்கண்டம் நமக்குத்தான் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுதான் புத்திசாலித்தனம்.
சூடு சொரணை, வெட்க, மானமெல்லாம் நமக்கெதற்கு?
$$$
ஏ. விடை தேடும் முயற்சி தொடக்கம்
-கவிஞர் அரங்க சுப்ரமணியம்
இந்திய இலக்கிய உலகில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஞானபீடம் விருது. பல தசாப்தங்களாக இந்திய மொழிகளின் சிறந்த எழுத்தாளர்களை கௌரவித்து வந்த இந்த விருது, இலக்கியத்தின் உயரிய மரியாதையை பிரதிபலிப்பதாகப் பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் பெற்ற இந்த விருது யாருக்குக் கிடைக்கிறது என்பதே சமூகத்திலும் இலக்கிய உலகிலும் மிகுந்த கவனத்திற்குரியதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ் மொழியின் பெயரில், தமிழ் மக்களின் உணர்வுகளின் பெயரில் மட்டுமே பேசிக்கொண்டே வந்த ஒருவருக்கு இவ்வளவு உயர்ந்த விருது வழங்கப்படுவது குறித்து சிலர் கேள்வி எழுப்புவது இயல்பானதே. அந்த கேள்விகளில் ஒன்று: “தமிழன், தமிழ் என்ற நாணம் இல்லாத ஒருவருக்கு ஞானபீடம் விருது வழங்கப்பட வேண்டுமா?” என்பதாகும்.
இது வெறும் ஒருவரை குறிவைத்து கூறப்படும் விமர்சனமன்று, இது ஒரு பெரிய விவாதத்தின் தொடக்கம்.
இலக்கியம் என்றால் என்ன? ஒரு எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு என்ன? அவரது தனிப்பட்ட செயல்கள், கருத்துகள், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவை விருது வழங்கும்போது கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டதா என்ற கேள்விகளும் இதன்மூலம் எழுகின்றன.
தமிழ் மொழி என்பது வெறும் ஒரு மொழி மட்டுமில்லை! அது ஒரு பண்பாடு, ஒரு மரபு, ஒரு உணர்வு. இந்த மொழியின் சாராம்சத்தையும் அதன் பெருமையையும் தாங்கி நிற்க வேண்டியவர் தான் ஒரு பெரிய தமிழ்க் கவிஞர் அல்லது எழுத்தாளர். அவருக்கு எழுத்துகளிலும் வாழ்வியலிலும், தமிழ்ச் சமூகத்தின் மரியாதையைக் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
இந்தச் சூழலில், பல சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரை இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடத்திற்கு தேர்வு செய்வது குறித்து பலரும் அதிருப்தி தெரிவிப்பது இயல்பானதே.
ஒரு விருது என்பது வெறும் கௌரவம் மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல் சின்னம். அது சமூகத்திற்கு ஒரு செய்தி கூறுகிறது. அந்த செய்தி என்னவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். உயர்ந்த இலக்கியத்தையும் உயர்ந்த மனித மதிப்புகளையும் கொண்டாடும் ஒரு செய்தியாக இருக்க வேண்டுமா? அல்லது சர்ச்சைகளையும் விவாதங்களையும் புறக்கணித்து வழங்கப்படும் ஒரு விருதாக இருக்க வேண்டுமா?
இலக்கியம் என்பது மனித உணர்வுகளை உயர்த்துவதற்கான ஒரு கருவி. அதில் உண்மை, நேர்மை, மனிதநேயம் போன்ற உயர்ந்த மதிப்புகள் பிரதிபலிக்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு எழுத்தாளரின் முழு வாழ்க்கையும் அவரது எழுத்துகளுக்கு இணையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தும் பலரிடையே நிலவுகிறது.
தமிழ்ச் சமூகத்தில் இந்த விவாதம் ஒரு முக்கியமான சிந்தனையை உருவாக்குகிறது. விருதுகள் வழங்கப்படும்போது எந்த அளவுகோல்கள் பயன்படுத்தப்பட வேண்டும்? இலக்கியத் திறமை மட்டும் போதுமா? அல்லது சமூகப் பொறுப்பும் அவசியமா?
ஞானபீடம் போன்ற உயர்ந்த விருதுகள் குறித்து எழும் இந்தக் கேள்விகள் வெறும் விமர்சனங்களாக மட்டுமே பார்க்கப்படக் கூடாது. அவை ஒரு சமூகத்தின் இலக்கிய உணர்வையும் அதன் மதிப்புகளையும் பிரதிபலிக்கும் ஒரு சிந்தனைக்குரிய விவாதமாக பார்க்கப்பட வேண்டும்.
இலக்கியம் உயர்ந்து நிற்க வேண்டுமென்றால், அதை கௌரவிக்கும் விருதுகளும் உயர்ந்த தரத்தையும் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், அந்த விருதுகளின் மரியாதை குறைய வாய்ப்பு உள்ளது.
ஆகவே, இன்றைய விவாதம் ஒருவரை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்ற அளவிற்கு மட்டுமில்லாது, அது தமிழ் இலக்கியத்தின் எதிர்காலத்தையும், விருதுகளின் நம்பகத்தன்மையையும் பற்றிய ஒரு பெரிய சிந்தனையாக மாறிவிடும். ஒரு விருது உயர்ந்து நிற்க வேண்டுமென்றால், அதைப் பெறும் நபரின் உயரமும் அதற்கேற்ப இருக்க வேண்டும். இல்லையெனில், விருதின் பெருமையே கேள்விக்குறியாகும்.
இந்த விவாதம் இறுதியில் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது:
“இலக்கியத்தின் உயரத்தை அளவிடுவது யார்?அதை மதிப்பிடும் அளவுகோல் என்ன?”
இந்த கேள்விக்கு விடை தேடும் முயற்சிதான் இன்று தமிழ்ச் சமூகத்தில் தொடங்கி இருக்கிறது.
$$$
ஐ. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்
-ச.சண்முகநாதன்
வைரமுத்து- அரசியல்வாதிகளின் கூடாரத்தில் ஒரு நல்ல இலக்கியவாதி.
இலக்கியவாதிகளின் கூடாரத்தில் ஒரு தேர்ந்த அரசியல்வாதி.
இதுதான் உண்மை நிலை.
தகுதியான ஒருவருக்கு விருது கிடைக்கும்பொழுது உவகை கொள்ளும் மனம், இந்த ஞானபீட விருது விவகாரத்தில் ‘சீ’ என்றாகி விட்டது.
ஜெயகாந்தனுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூட முடியாத ஒருவருக்கு இந்த விருது வழங்கியதில் வருத்தம் தான். ஜெயகாந்தனுடன் இணைத்துப் பேசும் அளவுக்கு தகுதி இல்லாதவர் வைரமுத்து. தேசிய விருதுக்கு மேல் எந்த விருதுக்கும் தகுதி இல்லாதவர். வேண்டுமென்றால் தகைசால் தமிழர் விருது கிடைக்கலாம்.
தமிழ் இலக்கிய வாசகர்களில் இருவர் ஒரு மேஜையில் அமர்ந்து இவரது இலக்கியப் படைப்புகளை அலசும் அளவுக்கு எதாவது எழுதியிருக்கிறாரா? இவருடைய வாகர் வட்டம் ஒரு கட்சி சார்ந்த வாசகர் கூட்டம். அதற்கு வெளியில் யாராவது இவரது இலக்கியத்தை விமர்சனம் செய்து நான் பார்த்ததில்லை.
சராசரி இலக்கிய வாசகனுக்கு சட்டென்று அவரின் ‘இலக்கியம்’ என்றால் ஞாபகத்துக்கு வருவது “ஃபிஃப்டி கேஜி தாஜ் மஹல்”, “சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன்” போன்ற வரிகள் தான்.
ஜெயகாந்தனின் எழுத்துக்களில் ஓர் ஆண்மை இருந்தது. எம்ஜிஆர் உச்சத்தில் இருந்தபொழுது சினிமா மோகம் எப்படி கீழ்மட்ட மக்களை வதைக்கிறது என்பதை ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ கதை மூலம் துணிவுடன் எழுதியவர். அவருடைய கதாபாத்திரங்கள் இன்றும் சாகாவரம் பெற்று நம்முடன் உலவுகின்றன. கங்காவும் ஹென்றியும்.
தான் கற்றதையும் பெற்றதையும் அறிவியல் தமிழில் எழுதி தமிழனின் தரத்தை உயர்த்திய சுஜாதா அவர்களுக்கு எந்தவித விருதும் கிடைக்கவில்லை, திராவிடம் அவரை தமிழராகக் கூட ஒப்புக்கொள்ளவில்லை. அவருடைய எழுத்துக்கு அருகில் நிற்கக்கூட கூச வேண்டும் வைரமுத்து.
ஜெயமோகன் நூற்றுக்கணக்கான நூல்களில் அதிசயிக்கத்தக்க தலைப்புகளில் ஆணித்தரமாக எந்தவித சமரசமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். இனி இவருக்கு இந்த விருது இல்லை என்றாகிவிட்டது.
“திகைத்தனை போலும் செய்கை” என்ற கம்பனின் அரையடி ராமாயணச் செய்யுளை, தன்னுடைய சூதுக்குப் பயன்படுத்தி கம்பன் மீதே பழி சுமத்தும் பாவம் செய்தவர் வைரமுத்து.
இவரை ஞானத்தின் பீடத்தில் வைப்பதா?
முதல் மரியாதை படத்தின் பாடலுக்கு தேசிய விருது பெற்றவர். ஆனால் அந்தப் பாடல்களில் வரும் புகழ் பெற்ற வரிகளெல்லாம் வானமாமலை தொகுத்த ‘தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்’ நூலில் இருந்து எடுத்தாளப் பட்டவை.
இப்படி எந்த வகையில் பார்த்தாலும் தகுதி இல்லாத ஒருவருக்கு ஞானபீட விருது கிடைத்தது சரியாகப் படவில்லை.
ஞான பீடத்தில் இப்பொழுது அமரவைக்கப் பட்டிருக்கிறார். வள்ளுவப் பேராசான் சொன்னது போல “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்”. மேல்நிலையில் இருந்தாலும் மேலான குணங்கள் இல்லாதவர் மேலானவர் அல்ல.
$$$