மண்ணுலக சுல்தான்

-பி.ஆர்.மகாதேவன்

எல்லைகளைச் சிதறடிப்பது விளையாட்டு. அதன் சிகரத்தில் இருந்தவர் மத எல்லைக்குள் குறுகியதால், எதிரி நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியதால், இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாதபடி  அவலத்தில் ஆழ்ந்திருக்கிறார். அதனைத் தாங்க இயலாத ஒரு கவிஞனின் கோபம் இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது... 

இரண்டு லட்சம் சதுர அடிகள்கொண்ட
புல்வெளி மைதானத்தின் சுல்தான்
இன்று
360 சதுர அடி புல்வெளியில் மெள்ள நடக்கிறார்…
அதுவும் அவர்கள் அனுமதிக்கும் அரை மணி நேரம் மட்டுமே…

காட்டருவி ஒன்று
கைக்குழாயின் வழியே
கசிய அனுமதிக்கப்பட்டிருப்பதுபோல அது இருக்கிறது.

அவர் ஒரு அடி எடுத்துவைக்கும்போது
முன்னொரு காலத்தில்
ஓராயிரம் கைகள் ஒலி எழுப்பியது அவர் காதில் விழுகிறது.

அன்று அவர்
ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து ஓடத் தொடங்கும்போது
அலை அலையாகப் பெருகத்தொடங்கும் அந்தக் கரவொலி…
அவர் ஒரு புள்ளிமானைப் போல் துள்ளிக் குதிக்கும்போது
மைதானம் தாண்டி அந்தக் கரவொலி பறந்திருக்கும்.
உடல் வலு கூட்டி உயிர் மூச்சு கலந்து வீசும் செர்ரி
பறக்கும் தட்டுபோல் காற்றில் அலைபாய்ந்து
கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையிலான
கண நேர இடைவெளியினூடாகச்
சீறிப் பாய்ந்து விக்கெட்டைச் சிதறடிக்கையில்
விண்ணை முட்டியிருக்கும் அந்தக் கரவொலி…

இப்போதும் அவருக்கு அந்த ஒலி கேட்கிறது-
அவருக்கு மட்டுமே கேட்கிறது.

முன்பு அவர் கையில் இருந்த செர்ரி
இப்போது அவர் கண்ணில் இருக்கிறது.
முன்னொரு காலத்தில்
இந்த உலகையே சிறைப்பிடித்தவர்…
இப்போது அவரே சிறையில் இருக்கிறார்.

(ஆம், அது முன்னொரு காலம் போலவே
அவருக்குத் தோன்றுகிறது.
காலம் என்பது சார்புடையது…
எல்லாருடைய காலமும்
24 மணிநேரங்கள், 60 நிமிடங்கள், நொடிகள் கொண்டது அல்ல.
சிலருடைய ஒரு நிமிடம் ஒரு யுகமாக இருக்கும்).

எல்லாருடைய உலகும் ஒரே விஸ்தீரணம் கொண்டது அல்ல
சிலருடைய உலகம் 10க்கு 12 சிறையாக இருக்கும்.
அங்கு அந்த நேற்றைய சுல்தானுக்கு
100 புத்தகங்கள் கொண்ட அலமாரி உண்டு.
ஆனால்,
எந்தவொன்றையும் எடுத்து
எழுத்துக் கூட்டிக்கூடப் படிக்க முடியாத அளவுக்கு
அவருடைய கண் பார்வை மங்கவைக்கப்பட்டுவிட்டது.

(வேறொன்றுமில்லை.
சிறிய ரத்தக் கட்டு.
சிறிதாகவே இருக்கும்போதே
சிகிச்சை தந்து சரி செய்ய முடிந்த கண் நோய்)
கூடாது என்று தடுத்துவிட்டார்கள்
கண் நரம்பு புடைத்து வெடித்து
முக்கால் குருடாகிவிட்டார்.
ஆக்கிவிட்டார்கள்).

அங்கு அவருக்கு ஒரு தொழுகைப் பாய் உண்டு.
ஆனால் அவருக்கு எந்த திசை பார்த்துத் தொழ என்பது
இப்போது தெரியவில்லை.

எல்லையற்ற அருளாளனின் தேசத்தில்
அதாவது தார் அல் இஸ்லாமில்
சிறையில் வாடும் சுல்தான்
எந்த திசை பார்த்துத் தொழ என்று குழம்பி நிற்பது அதிர்ச்சியாக இருக்கிறதா?
அவன் சிறையில் வாடுவது
இதுவரை அதிர்ச்சியாக இருந்திருக்கவில்லை அல்லவா…
இதுவும் பழகிப் போகும்.

ஒரு காலத்தில்
உலகத்தோரின் கண்களைக் கட்டி வித்தை காட்டியவர்;
இன்று
அவருக்கே ஒரு வித்தை காட்டப்பட்டிருக்கிறது.
அவர் எப்படி அந்தச் சிறைக்குள் வந்தார்..?
அவருக்குப் புரியவே இல்லை.
ஒரு நாள் தூங்கி எழுந்து கண் விழித்துப் பார்த்தபோது
அவரைச் சுற்றி ஒரு சிறை முளைத்திருந்தது!
இன்னொரு முறை தூங்கி எழுந்தால்
இந்த சிறையில் இருந்து வெளியேறிவிடலாம் என்று நினைத்து
தூங்கித் தூங்கிப் பார்க்கிறார்.
அதிசயங்கள் நடப்பதெல்லாம் சொல்லக் கேள்விதானே…
கொடுங்கனவுகள் சீக்கிரம் முடிவுக்கு வராது என்பதுதானே
சுய அனுபவங்கள்.

யார் அதன் கதவுகளை உடைத்து அவரை மீட்பார்..?
என்றைக்கு மீட்கப்படுவார்..?
எதுவுமே அவருக்குத் தெரியவில்லை.

அவருடைய அறையில்
ஒரு தொலைகாட்சிப் பெட்டி இருக்கிறது.
தார் அல் இஸ்லாமின் சிறையில் இருப்பவர்களில்
ஆகப் பெரிய சலுகை இவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது இல்லையா..?
அதற்கு மின் இணைப்பு கிடையாது என்பது
பெரிய குறையாக இருக்கவும் வாய்ப்பில்லை அல்லவா?

ஒரு காலத்தில் உலகத் தொலைகாட்சிகள் அனைத்திலும்
ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து ஓடிய சுல்தான்…
நினைத்துப் பாருங்கள்-
ஒரு டி.வி.ஷோரூமின் ஒற்றைச் சுவரில் அல்ல…
ஒற்றை டி.வி. ஷோரூமின் அத்தனை சுவர்களில் மட்டுமல்ல…
ஒரு ஊரின் அத்தனை டி.வி.க்களில் மட்டுமல்ல…
ஒட்டு மொத்த உலகின் அத்தனை டி.வி.க்களிலும்…
(அவற்றைத் திறந்தவெளியில் அடுக்கி வைத்திருப்பதாக
கற்பனை செய்து பாருங்கள்).

அத்தனை தொலைகாட்சிப் பெட்டிகளிலுமாக
அந்த சுல்தான் ஓடிக் கொண்டிருந்தான்.
இன்று அவன் முன்னால்
மின் இணைப்பு இல்லாத ஒரு தொலைகாட்சிப் பெட்டி
அவனையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறது.
(அவனால் அதைக்கூடப் பார்க்க முடியவில்லை).

அல்லா என்றுமே பெரியோன்தான்…
சுல்தானின் மனதில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு
மின் இணைப்பு தேவையில்லை.

அவர் அதில் மெள்ள ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து
ஓட ஆரம்பிக்கிறார்.
கரவொலிகள் அலை அலையாக எழும்ப ஆரம்பிக்கின்றன.
மான் போல் துள்ளிக் குதிக்கிறார்…
செர்ரி கையில் இருந்து சீறிப் பாய்கிறது…
மட்டையைத் தொட்டும் தொடாமலும்
பாதுகாப்பான கைகளிடம் தஞ்சமடைகிறது.
மைதானம் ஏக்கப் பெருமூச்சுடன்
மயான அமைதியில் ஆழ்கிறது.
நமக்கு ஒரு நொடி…
சுல்தான் ஆஃப் ஸ்விங்குக்கு ஒரு யுகம்…
மீண்டும் அவர்
10க்கு 12 சிறைக்குள் ஓட ஆரம்பிக்கிறார்.

கண்ணில் செர்ரி மின்னுகிறது.
இது வேறு செர்ரி…
யா அல்லா…
யா மாலிக்…
யா சுல்தான்…
உன்னருகில் அழைத்துக் கொண்டுவிடக்கூடாதா
எங்கள் பால்யத்தின் சுல்தானை…

அவனுடைய இன்றைய ஒவ்வொரு காலடியும்
உலகின் ஆன்மாவை அல்லவா ஓங்கி ஓங்கி மிதிக்கின்றன
யா ரஹ்மான்…
அந்த மான் துள்ளல் எங்களைக் கொல்கிறது
யா … ரப்பே….
அந்த செர்ரி எங்களைச் சிதறடிக்கிறது .

பறக்கும் தட்டுபோல
முடிவற்று ஊசலாடுகிறான்
சுல்தான் ஆஃப் ஸ்விங்
உன்னாலும் கைவிடப்பட்ட
12க்கு 30 பச்சைப் புல்வெளி மைதானத்தில்!

*

காலவெளியில் அவன் வீசிய செர்ரி ஒன்று
உன்னை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறது
பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மாய விக்கெட் போல
பிடிகொடுக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் உன்னை அது
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
உரசிச் செல்லவிருக்கிறது.

எந்தப் புயலிலும் அசையாத உன் விக்கெட்
அப்போதும் அசையாமல்தான் இருக்கும்.
ஆனால்
அதன் உச்சியில் இருக்கும் பைல்ஸ்
சீறிச் செல்லும் செர்ரியின் சர்ப்பக் காற்று பட்டு
மெள்ள, மெள்ள
ஸ்லோமோஷனில் மண்ணில் விழும்.
ஆம்
அது விழுந்தே தீரும்.

ஏனென்றால்
நீ விண்ணுலக மாலிக் என்றால்,
அவன் மண்ணுலக சுல்தான்!


$$$

Leave a comment