இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: தன்னம்பிக்கையின் வெற்றி!

-வ.மு.முரளி

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாக, கடந்த 2026 பிப். 2ஆம் தேதி அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மிக விரைவில் இந்த ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்தாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் பயன்கள் இப்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டன. இந்த ஒப்பந்தம் உருவானதன் பின்புலத்தில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் நிதானம் காத்த இந்தியாவின் ராஜதந்திர வியூகமும், பண்பட்ட அணுகுமுறைகளும், பொறுமையான செயல்பாடுகளும் காரணமாக இருந்துள்ளன.

அமெரிக்காவுடனான உறவில் நெருடல்:

உள்நாட்டு பெட்ரோலியத் தேவையை நிர்வகிக்க இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணையை வாங்கி வருகிறது. குறிப்பாக ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணை வாங்குவதால் இந்தியாவின் பெட்ரோலியத் தேவையால் ஏற்படும் பொருளாதார அழுத்தம் கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா 2022ஆம் அண்டு முதலே நிர்பந்தித்து வந்தது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பொருளாதாரரீதியாக சிக்கலை ஏற்படுத்த இந்த பொருளாதாரத் தடை உதவும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ஆனால், இந்தியா அதனை செவி மடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2025 ஆகஸ்ட் முதல் தேதி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணை வாங்குவதால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் பொருட்களுக்கு 25 % பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். ஆயினும் இந்தியா அசைந்து கொடுக்கவில்லை. எனவே, இந்தியா மீது மேலும் 25 % அபராத வரி விதிப்பதாக ஆகஸ்ட் 27இல் டிரம்ப் அறிவித்தார்.  “இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்னையை வாங்கினால் இந்தியப் பொருட்கள் மீதான் வரியை 200 % வரை மேலும் அதிகரிப்பேன்” என்றும் அவர் எச்சரித்தார்.

இதன் காரணமாக அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்திய ஜவுளித் துறையில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. ஆயினும் இந்திய அரசு உடனடி எதிவினையைக் காட்டாமல் அமைதி காத்தது. எனவே அமெரிக்காவுக்கு அடிபணித்து விட்டதாக, இந்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்குதல்களை நிகழ்த்தி வந்தன.

தன்னம்பிக்கையான அணுகுமுறை:

அதேசமயம், இந்திய வெளியுறவுத் துறையும் வர்த்தக அமைச்சகமும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தன. அதன் விளைவாக தற்போது, 2025 ஆகஸ்ட் 1க்கு முந்தைய நிலைக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு (18 %) திரும்பியுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்பே கடந்த பிப். 2ஆம் தேதி அறிவித்திருக்கிறார். இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாக பல்வேறு அம்சங்கள் இருந்துள்ளன.

இந்தியாவின் ராஜதந்திர அமைதி, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இந்தியாவின் ஒப்பந்தம், அமெரிக்க நெருக்கடிக்கு அஞ்சாமல் தலைநிமிர்ந்து நின்றது, அதே சமயம் அமெரிக்கா போல எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியைக் கடைபிடிக்காமல் நிதானம் காத்தது ஆகியவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை உலகிற்கு வெளிப்படுத்தின.

இதே காலகட்டத்தில் இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்திய மாற்றத்தால் அமெரிக்கா சிக்கலை உணரத் தொடங்கியது. தவிர, இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்துவந்த அமெரிக்க நிறுவனங்களே, தங்கள் நாட்டு அரசிடம் இந்தியா மீதான வரியைக் குறைக்குமாறு நிர்பந்தித்து வந்தன. இதன் விளைவாகவே தற்போது அமெரிக்க அரசு தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறது.

முக்கியமான மாற்றங்கள்:

புதிய வர்த்தக ஒப்ப்ந்தம் மூலமாக இந்தியா- அமெரிக்கா நாடுகளிடையிலான வரிவிதிப்புக் கட்டமைப்பு புது வடிவம் பெற்றுள்ளது. இனி அது 18 % ஆக இருக்கும். அடுத்து, இருதரப்பு சந்தை விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் எளிதாகும். இது அமெரிக்காவில் இந்திய ஏற்றுமதியாளர்களின் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கும்.

பரஸ்பர வரி 18 % ஆக இருந்தது, கூடுதல் வரி விதிப்பு (18 + 7 = 25 %), அபராத வரி விதிப்பு (25 %) ஆகியவை மூலமாக 50 % என்ற அபாய நிலையை எட்டி இருந்தது. பொதுவாகவே, அமெரிக்கா இவ்வாறு உயர்த்திய வரியினங்களை மிகக் குறுகிய காலத்தில் குறைத்ததில்லை. ஆனால், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்தியா இதனை சாதித்திருக்கிறது.

அதேசமயம், இந்தியா அமெரிக்காவின் நெருக்குதல்களை லாகவமாகக் கையாண்டு, இறையாண்மையையும் தற்காத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியச் சந்தையை கட்டுப்பாடின்றித் திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளுள் ஒன்றாக இருந்தது. அதற்கு இந்தியா கடைசிவரை ஒப்புக் கொள்ளவில்லை. வர்த்தக லாபத்திற்காக சுயமரியாதையையும் இந்திய இறையாண்மையையும் அடகு வைக்க இந்தியா தயாரில்லை என்ற சேதி அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது, உலகிற்கும் தெளிவாகச் சொல்லப்பட்டது. இது இந்திய அரசியல் தலைமையின் விவேகத்திற்கும் மனஉறுதிக்கும் எடுத்துக்காட்டாக வெளிப்பட்டது.

பலன் பெறும் துறைகள்:

இந்தியா அமெரிக்காவுக்கு ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ஆபரணங்கள், எஃகு, மருந்துப் பொருட்கள், பொறியியல் தயாரிப்புகள் ஆகியவற்றை பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவின் புதிய அறிவிப்பால், இத்துறைகளில் ஏற்றுமதி அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேக்கம் அடைந்திருந்த இந்திய ஏற்றுமதி மீண்டும் சூடு பிடிக்கும். குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பங்களாதேஷ், சீனா, வியட்நாம் போன்ற போட்டி நாடுகளால் இந்தியாவின் வர்த்தக வாய்ப்புகள் பறிக்கப்பட்ட நிலை மாறும்.

அமெரிக்க அதிபரின் அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. அதன் உடனடி விளைவாக இந்திய பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய  ஏற்றம் அன்று (பிப். 2) காணப்பட்டது. நிஃப்டி, சென்செக்ஸ் புள்ளிவிவரங்கள் அமெரிக்க ஏற்றுமதி குறித்த ஆக்கபூர்வமான அறிவிப்பால் குதிரைப் பாய்ச்சல் கண்டன.

அது மட்டுமல்ல, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 119 பைசாவிலிருந்து 90.3 பைசாவுக்கு மாற்றம் கண்டு வலுவானது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டதன் எதிரொலியாகும்.

இந்தியாவின் நிதானமான வியூகம்:

கடந்த ஆகஸ்டில் இந்தியா மீது மிகவும் அதிகப்படியான வரிவிதிப்பை டிரம்ப் அறிவித்த போது, இந்தியா மட்டுமல்ல, உலகமும் அதிருந்தது. ஏனெனில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தவர் டொனால்டு டிரம்ப். ஆனால், பாகிஸ்தான் மீதான  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு (2025 மே 7 -10) இருதரப்பு உறவுகள் மோசமடைந்திருந்தன. போர் நிறுத்ததிற்கு தானே காரணம் என்று டிரம்ப் சொன்னதை இந்தியா ஏற்காததும் உறவு விரிசலுக்கு ஒரு காரணமாகப் பேசப்பட்டது.

சமகால உலக அரசியல் அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு பெருகி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் சர்வதேசப் பார்வையாளர்கள் கூறினர். எனவே இந்தியாவைக் கட்டுப்படுத்த வர்த்தகத்தை ஓர் ஆயுதமாக்க அமெரிக்கா முயன்றது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்ய நிர்பந்திக்கப்பட்டது. அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்பட்ட ஏற்றுமதி பாதிப்பால் இந்தியாவில் அமைதியின்மை ஏற்படும் என்றும் அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் இந்திய அரசியல் தலைமை இந்த இரண்டிற்கும் தலை வணங்கவில்லை.

குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகத்தில் அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்காமல் வேறு வாய்ப்புகளை இந்தியா ஆலோசிக்கத் தொடங்கியது. இந்திய ஏற்றுமதியை பல்வகைப்படுத்தல் (டைவர்சிஃபிகேசன்) மூலமாக, இது போன்ற நெருக்கடிகளை நீண்டகால நோக்கில் எதிர்கொள்ள மோடி அரசு தீர்மானித்தது. ஐக்கிய அரபு அமீரகம், பங்களாதேஷ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஏற்றுமதி தடம் மாறியது. இதனால் ஆரம்பகட்ட பொருளாதாரத் தேக்கம் நீங்கி, சில மாதங்களில் இந்திய ஏற்றுமதி இரட்டை இலக்கத்தை எட்டியது.

ஐரோப்பிய யூனியனுடன் நெருக்கம்:

அமெரிக்காவின் இதேபோன்ற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இந்தியா அதிவிரைவில் கைகோர்த்தது. இதனை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. ஐரோப்பிய நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் கடந்த 18 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 27இல் தான் அது சாத்தியமானது. அதற்கு தங்கள் சுயநலமான, தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது.

ஐரோப்பிய தாராள வர்த்தகக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளான ஸ்விட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்டென்ஸ்டின், ஓமன், நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தமும் இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாசல்களைத் திறந்துள்ளது. இதன் தாக்கம் அடுத்துவரும் ஆண்டுகளில் தெரியவரும்.

தடையை மீறிய வளர்ச்சி

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு சுமார் 18 % ஆக உள்ளது. அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது அதீத வரி விதித்தபோதும், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் பெருத்த மாற்றம் ஏதும் நிகழவில்லை. சென்ற நிதியாண்டின் ஏற்றுமதியே இந்த நிதியாண்டும் தொடரும் என்று தெரிய வருகிறது.

கடுமையான வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 30 % சரிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025 ஏப்ரல்- நவம்பர் காலகட்டத்தில் இந்திய ஏற்றுமதி 11.38 % வளர்ச்சி கண்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நிர்பந்தங்களுக்கு வளைந்து கொடுக்காமை:

அமெரிக்க அரசு வெளிநாட்டு வர்த்தகத்தை ஒரு ஆயுதமாக்கி, இந்தியாவின் நலன்களை விலை பேசியபோது, இந்திய பிரதமர் மோடி அதனை ஏற்காமல் அமைதி காத்தார். டிரம்ப் தனது நெருங்கிய நண்பர் என்றபோதும் அவருடன் நேரடியாகப் பேசுவதையே மோடி தவிர்த்தார். அது தொடர்பான எதிர்க்கட்சியினரின் ஏளனங்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை.

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட வேண்டும்; அமெரிக்க பால்பண்ணைப் பொருட்களையும் கடலுணவுகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மறைமுகமாக் நிர்பந்திக்கப்பட்டது. இந்திய விவசாயிகளின் நலனைக் காவு கொடுத்து வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா தயாரில்லை என்று மோடி அரசால் தெளிவாக பதில் அளிக்கப்பட்டது. ”உள்நாட்டு விவசாயிகளின் நலனைக் காப்பதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. அதற்காக எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகவே அறிவித்தார்.

இதேபோன்ற நெருக்கடிகள் பிற நாடுகள் மீது அமெரிக்காவால் திணிக்கப்பட்டபோது, ஐரோப்பிய யூனியன் போன்ற வலிமை மிகுந்த கூட்டமைப்பே சரண் அடைந்ததை நாம் சென்ற ஆண்டு கண்டோம். ஆனால் இந்தியா நிதானமாக அமைதி காத்ததுடன், உணர்ச்சிவசப்பட்டு அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபடாமலும் பண்பட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

நொறுங்கும் பொருளாதாரம் அல்ல:

2013ஆம் ஆண்டு ஆகஸ்டில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார ஆய்வாளர் மார்கன் ஸ்டான்லி,  ‘நொறுங்கும் பொருளாதாரம்’ கொண்ட நாடுகள் (Fragile Five) என்று 5 நாடுகளை வகைப்படுத்தினார். துருக்கி, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா ஆகிய 5 நாடுகள் நம்பகமற்ற வெளிநாட்டு முதலீடுகளைச் சார்ந்திருப்பதால் அவற்றின் வளர்ச்சி நொறுங்கக் கூடியது என்றார் அவர். ஆனால், இன்று, இந்தியா அமெரிக்க வர்த்தகத் தடைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனது பொருளாதார வலிமையைப் பறைசாற்றியுள்ளது. உலக விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பை யாராலும் புறக்கணிக்க இயலாது என்பதை உலகம் தற்போது புரிந்துகொண்டுவிட்டது.

உலக நாடுகளுடன் பேச்சு நடத்துவதில் தாழ்ந்து போகாமல், தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை இந்தியா அடைந்திருக்கிறது. இதனை அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘இந்தியாவைக் குறைவாக எடைபோட்டுவிட்டோம்’ என்று அமெரிக்கத் தலைவர்கள் தற்போது வருத்தம் தெரிவிக்கின்றனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியான தலைவர். அவருக்கு இந்தியாவின் நலனே பிரதானம். அவருடன் பேச்சு நடத்துவது எளிதானதல்ல” என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற உலகத் தலைவரின் நெருக்குதல்களையே சமயோசிதமாக சமாளித்தவர் என்ற பெருமையையும், உலக அளவிலான ராஜதந்திரி என்ற மரியாதையையும் மோடி இப்போது பெற்றிருக்கிறார். இந்தியாவைச் சீண்டுவதற்காக இந்தியப் பொருளாதாரத்தை  ‘செத்துப்போன பொருளாதாரம்’ என்று கேலி பேசிய அதே டொனால்டு டிரம்ப், இப்போது அவசர அவசரமாக இந்திய- வர்த்தக ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கையெழுத்தாகாத நிலையிலும்கூட, தானாகவே அதனை உலகிற்கு அறிவித்திருக்கிறார் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகப் பார்க்கின்றன.

டிரம்ப்பின் அடியொற்றியே,  ‘இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது’ என்று இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்திய மதிப்பை மேலும் உயர்த்தியுள்ள நிலையில், ராகுல் போன்றவர்களின் முகத்தில் டிரம்ப் கரியைப் பூசியுள்ளார்.

வர்த்தக ஒப்பந்தத்தின் லாபங்கள்:

2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 500 பில்லியன் டாலர்  (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 45 லட்சம் கோடி) ஆக வேண்டும் என்ற இலக்கு (மிஷன் 500) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு தேக்க நிலை கடந்த 6 மாதங்களாக (2025 ஆகஸ்ட் – 2026 ஜனவரி) நிலவினாலும், புதிய ஒப்பந்தம் காரணமாக, நமது ஏற்றுமதி கூடுதல் வேகம் பெறத் தொடங்கிவிட்டது..

இந்திய இறையாண்மையை அடகு வைக்காமல், எவ்வித நெருக்கடிக்கும் அடிபணியாமல், இந்தியா தனது நிதானமான அணுகுமுறையாலும், பொறுமையாலும் இதனைச் சாதித்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு இதனால் மேலும் அதிகரித்துள்ளது.

சவால்களை சாதனையாக்கும் இந்தியாவின் திறன் காரணமாக, ஐரோப்பிய யூனியன் போன்ற புதிய சந்தை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. பின்னலாடை நகரான திருப்பூர் போன்ற நகரங்கள் புதிய இலக்குகளைத் தேடத் தொடங்கிவிட்டன. இது எதிர்காலத்தில் இந்தியாவை மிரட்ட முயற்சிப்போருக்கு எச்சரிக்கையாக இருக்கும்.

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலமாக, சில துறைகளில் மட்டுமே ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாற்றும் கண்டறியப்பட்டுள்ளது. தடைக்கற்களைக் கொண்டே பாதை அமைக்கும் இந்தியாவின் சுயசார்பும், உறுதியான அரசியல் தலைமையும் இந்திய வர்த்தகத்தை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கிக் கொண்டு சென்றுள்ளன. 

$$$

Leave a comment