வந்தே மாதரம்- மகாகவி பாரதியின் தமிழாக்கம்

‘வந்தே மாதரம்’ பாடல் மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார். அவை இங்கே....

ஜாதீய கீதம்-1

(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!

முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)

நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)

போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே)

$$$

ஜாதீய கீதம்-2

(புதிய மொழிபெயர்ப்பு)

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)

அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
      தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
      வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
      பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
      எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

$$$

One thought on “வந்தே மாதரம்- மகாகவி பாரதியின் தமிழாக்கம்

Leave a comment