உருவகங்களின் ஊர்வலம் -54

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #54...

54. மாற்றுத் திறனாளிகள் குறித்த மாற்றுச் சிந்தனை…

திவ்யாங்ஜன்
தெய்வம் தந்த உடல் கொண்டவர்…
மற்றவர்களுடைய உடலும் தெய்வம் தந்தது தானே?
அப்படிப் பார்த்தால்,
எல்லாரும்தான் ஹரியின் ஜனங்கள்.

*

உடல் ஊனமுற்றவர் என்று
சொல்வது தவறென்றால்,
ஊனமில்லாத உறுப்புகள் பல கொண்டவர்
என்று சொல்லலாம்.
குறையச் சொல்லி அடையாளப்படுத்துவானேன்?
நிறையைச் சொல்லி
(குறையைச் சொல்லாமல் சொல்லி) அடையாளப்படுத்தலாம்.

நீளமான வார்த்தை தவறில்லை…
நேர்மையற்ற வார்த்தைதான் தவறு.
மாற்றுத் திறனாளி என்றால் மடத்தனமாக இருக்கிறது.
ஒவ்வொருவருடைய திறமையும்
மாறி மாறித்தான் இருக்கும்.

*

ஒருவகையில் எல்லாருமே ஊனமுற்றவர்தான்.
எங்கெல்லாம்
யாரெல்லாம் வடிகட்டப்படுகிறார்களோ,
அங்கெல்லாம்
அவர்களெல்லாம் ஊனமுறத்தான் செய்கிறார்கள்.

சிறுபான்மைச் சலுகை ஒருவருக்குக் கிடையாது என்றால்,
அங்கு அவருடைய பெரும்பான்மை மதமே
ஊனமாகி, ஊனமாக்கித் தடுக்கிறது.

ஒரு மதவாத நாட்டில்
பெரும்பான்மை முன்னெடுக்கும் போரோ
துன்பமோ நேர்ந்தால்,
ஓடோடிச் சென்று
ஓராயிரம் டன்கள் உதவிகள் நீள்கிறது.
இன்னொரு மதவாத நாட்டில்
அங்கிருக்கும் சிறுபான்மைகள் கட்டம் கட்டிக் கொல்லப்பட்டால்
அரசியல் கட்சிகளுக்கிடையிலான மோதல் என்று
தள்ளி நின்று கைகட்டிக் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

இந்துவுக்குப் பெரும்பான்மையாக இருப்பது,
சொந்த நாட்டிலேயே ஊனம்!
அப்பாவிச் சிறுபான்மையாக இருப்பது,
ஆப்ரஹாமிய மதவாத நாட்டில் ஊனம்!
எங்கு இருந்தாலும்
இந்துவுக்கு ஊனமே.

*

அரசியல்வாதியின் சிபாரிசால்,
மிரட்டலால்,
அதிகாரத்தால்,
குறுங்குழுவாதத்தால்,
நடக்கும் அத்தனை வேலைகளிலும்
அரசியல் சாராத அத்தனை பேரும் ஊனமுற்றவர்களே.

வாரிசு அரசியல் வல்லாதிக்கத்தில்
துணைவிகளில் யாருக்கேனும் பிறக்காத காரணத்தால்
துணை முதல்வர் கூட ஆகமுடியாத
துச்சாதன்களும் ஊனமுற்றவர்களே.

கழிப்பறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டும்
வேட்டி உருவப்பட்டும் விரட்டப்படும்போது,
ஒரு விசுவாசமான நேர்மையான தலைவர்
மது பானம் ஊற்றிக் கொடுக்காத காரணத்தாலும்,
மல்லாந்து படுக்காத காரணத்தாலும்,
ஊனமுற்றவராக்கப்படுகிறார்.

*

கோடிகளைக் கொட்டிப் படிக்க முடியாத காரணத்தால்
கிராமப்புற ஏழை மாணவர் எல்லாருமே
நேற்றுவரை ஊனமுற்றுத்தான் இருந்தார்கள்.

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில்
கிறிஸ்தவராக இல்லாத காரணத்தால்
இடஒதுக்கீடு கூடக் கிடைக்காமல் ஓரங்கட்டப்படும்
இளிச்சவாய இந்துக்கள் எல்லாருமே ஊனமுற்றவர்களே.

இளிச்சவாயன் என்பதே ஒரு ஊனம்தான்.
உண்மையில் அதுவே எல்லாவற்றிலும்
ஆகப் பெரிய ஊனம்.

*

பகுத்தறிவு பேசுவோமா?
ஊனமுற்ற குழந்தை பிறந்ததற்கு
ஊட்டச்சத்துக் குறைபாடே காரணம்.

கர்ப்பவதிக்குக் கூட
ஊட்டச்சத்துக் கொடுக்க வக்கில்லாத
கழக ஆட்சிகளே காரணம்.

குறைபாட்டைக் கணித்து
சிகிச்சை தரத் தெரியாத மருத்துவரே காரணம்.
காசு வாங்கிக் கொண்டு சீட்டும் பட்டமும் தந்த
திருட்டு திராவிட மருத்துவக் கல்லூரியே காரணம்.

முற்பிறவி அல்ல…
முன்னால் இருக்கும் முட்டாள் கழக அரசும்
முடமாகிக் கிடக்கும் அதிகாரவர்க்கமுமே காரணம்.

பள்ளியில் முற்பிறவி மறு பிறவிதானே பேசக் கூடாது,
இந்தப் பகுத்தறிவைப் பேசலாம்தானே?

*

மக்கள் பிரதிநிதி ஆட்சியில் இருந்தால்
மக்கள் சட்ட ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும்.
சர்வாதிகாரி ஆட்சியில் இருந்தால்
சட்ட திட்டத்தை நல்லவர்கள் கையில் எடுத்தாக வேண்டும்.
நீதிபதி நியாயவானாக இருந்தால்
தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
ஊழல் மலிந்து கோழைத்தனம் மிகுந்து,
குறுக்கு புத்தி நிறைந்து,
உண்மையை மறைத்து சாயம் பூசிக்கொண்டு,
கூழைக்கும்பிடு போடுபவனாக இருந்தால்,
அந்தத் தீர்ப்பை கிழித்துத்தான் போட வேண்டும்.

குற்றவாளிகளுக்குத் துணைபோகும் நீதிபதியை
நீதிமான் என்று எப்படி மதிக்க முடியும்?

தேச பக்தியும்
தர்ம சிந்தனையும்
தொழில் நேர்த்தியும்
தொழில் தர்மமும் கற்றுத் தருபவரே நல்லாசிரியர்.
தன் பிள்ளைகளை
தனியார் பள்ளிகளில் படிக்கவைத்துவிட்டு…
கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியில்
கால்வாசியைக்கூட கல்விக்குச் செலவிடாமல்,
சம்பளம், போனஸ், சிக் லீவு, சினை லீவு, பஞ்சப்படி, பயணப்படி,
முடிவற்றுத் தொடரும் ஓய்வூதியம்….
(பணிக் காலத்தில் கிடைக்கும் சம்பளமே ஓய்வூதியம்தான்)
ஆண்டுக்கு பாதி நாள் விடுமுறை …
முழு ஆண்டு சம்பளம்!
இத்தனை சலுகைகளை அனுபவித்தும்
அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வருபவர்கள் எல்லாம்
அடிமட்ட, அடிமாட்டு வேலைகளுக்கே போகிறார்கள்.

லட்சங்களைச் சம்பளமாகவும் சுருட்டும்
அரசு ஆசிரியருக்கு முன்னால்
அத்தனை தனியார் ஆசிரியரும் ஊனமுற்றவரே.

பள்ளியில் கற்க வேண்டியது
ஒழுங்கும் அடிபணிதலும் அல்ல;
கலகம்.
ஆசிரியர்களை எதிர்த்து
அவர்கள் நடத்தும் அடிமைப் பாடங்களை எதிர்த்து
கலகக் குரல் எழுப்பவே கற்க வேண்டும்.

நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிபதியைவிட மோசமானவர்
நம்பி வந்த குழந்தைகளின் எதிர்காலத்தை
நாசமாக்கும் ஆசிரியர்.

அங்கஹீனன் அரசாண்டால்
தேசமும் அங்கஹீனமாகும் என்ற வேத வாக்கின்
ஐம்பது ஆண்டுகால அப்பட்டமான சாட்சியாக
நம் மாநிலம் ஆகி விட்டிருக்கிறது.
ஒற்றைக்கண்ணால் பார்த்தே
இத்தனை அழிந்து விட்டிருக்கிறது
இன்னொரு கண்ணும் திறந்திருந்தால்
ஒரேயடியாக அழிந்திருக்கும்.

சமாதானங்கள்… சமரசங்கள்…
தன்னம்பிக்கைத் தடவல்கள்…
இல்லாததையும் இழந்ததையும் நினைத்து
ஏங்கித் தவிக்காமல்
இருப்பதை வைத்து வாழத் துடிக்கும்
அத்தனை பேரும் ஊனமுற்றவர்கள்தானே?

ஆனால்
நாம் புரிந்துகொள்ளவேண்டிய
முக்கியமான உண்மை என்னவென்றால்,
நம் வலது கையை
குதிரையில் வாளேந்தி வந்த ஒருவன் வெட்டியிருக்கிறான்…
நாம் முன்வைத்த காலை
கண்ணிவெடி பதித்து இன்னொருவன் சிதைத்திருக்கிறான்…
நாம் நம் தெய்வத்தால் அல்ல,
ஆப்ரஹாமிய அரக்கர் கூட்டத்தால்
அங்கஹீனமாக்கப்பட்டிருக்கிறோம்…
திருட்டு திராவிடக் கூட்டத்தால்
திவ்ய அங்கங்கள் அறுபட்டுக் கிடக்கிறோம்.

இது அடிபணிந்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விதி அல்ல…
ஊனத்துடன் பிறப்பவர்கள் அனுசரித்துதான் வாழ்ந்தாக வேண்டும்.
ஆனால்-
ஊனமாக்கப்படுபவர்கள் திருப்பி அடித்தாக வேண்டும்.

கண்ணுக்குக் கண் பழிவாங்காவிட்டால்
இருக்கும் இன்னொரு கண்ணும் குருடாக்கப்பட்டுவிடும்.

$$$

Leave a comment