-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்தேழாம் திருப்பதி...

87. பல்லவன் கட்டிய பரமேஸ்வர விண்ணகரம்
அமர்ந்தாய், கிடந்தாய், நின்றாய், அருள் திருபரமேஸ்வர விண்ணகர பெருமாளே – நீ ஒரு குழந்தைக்காய் மனம் கனிந்து வைகுண்டநாதனாய்க் காட்சி அளித்தாயே!
பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்ம பல்லவனால் கட்டப்பட்ட மும்மாடக் கோயில் இது. மணல் பாரையில் அமைக்கப்பட்ட இக்கோயிலின் கருவறையும் முதல் பிரகாரமும் குடைவரையாக உள்ளன. அற்புதமான மணற் சிற்பங்களின் கருவூலமாக இக்கோயில் திகழ்கிறது. அமர்ந்த கோலம், சயனக் கோலம், நின்ற கோலம் என மூன்று நிலைகளில் மும்மாடங்களில் பெருமாள் காட்சி அளிக்கிறார். ந்த பரமேஸ்வர வர்ம பல்லவனை பெருமாளும் தாயாரும் வேடுவத் தம்பதிகளாக வளர்த்தனர் என்கிறது தலபுராணம்.
மூலவர்: ஸ்ரீ பரமபதநாதப் பெருமாள், வைகுண்டநாதன் (அமர்ந்த திருக்கோலம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: வைகுந்தவல்லி
ஆகமம்: வைகானஸம்
விமானம்: முகுந்த விமானம்
தீர்த்தம்: ஆயிரம் தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 07.30 மணி வரை
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு நேர்கிழக்கே உள்ளது இத்திருத்தலம். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே கீழராஜவீதியில் இருந்து வலப்புறச் சாலையில் இக்கோயில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
குழந்தை பாக்கியம் பெறவும், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் இருக்கவும், இங்குள்ள சிவபெருமானை வணங்கி பின் பெருமாளை தரிசனம் செய்து துவார பாலகர்களும் அர்ச்சனை செய்தால், நிவர்த்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும், 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் வர வேண்டிய தலம் இது.
$$$