-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்தொன்றாம் திருப்பதி...

81. மகாபலிக்கு சேஷனாக காட்சி அளித்த திருஊரகம்
வில்லை உடைத்தாய், கல்தூணைப் பிளந்தாய்! மல்லாண்டாய், மலையைச் சுமந்தாய்! மறையைக் காத்தாய், மகாபலிக்காக திருஊரகத்தில் மறுபடியும் உலகளந்து காட்சி அளித்தாயே!
எம்பெருமாள் வாமன அவதாரத்தின்போது திரிவிக்கிரமனாக இருந்த திருக்கோலத்தை, அவரது பாதத்தின் கீழிருந்த மகாபலியால் காண முடியவில்லை. அவரது பிரார்த்தனையை ஏற்று, காஞ்சியில் இத்தலத்தில் தரிசனம் தந்தார்; பிறகு, அந்த மிகப்பெரிய திருவுருவத்தை நிமிர்ந்து சேவிக்க முடியாத்தால், மகாபலிக்காக ஆதிசேஷனாக பெருமாள் காட்சி அளித்தார் என்கிறது தலபுராணம்.
மூலவர்: ஊரகத்தான், உலகளந்த பெருமாள் (நின்ற திருக்கோலம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஆரணவல்லித் தாயார்
விமானம்: ஸாரஸ்ரீகர விமானம்
தீர்த்தம்: சேஷ தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
பெரிய காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ளது இத்திருத்தலம். உலகளந்த பெருமாள் கோயிலின் மூலவர் சன்னிதிக்கு இடப்புறம் இவரது சன்னிதி உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
முன் ஜென்ம பாவங்கள், தோஷங்கள் நீக்கக் கூடிய தலமாகும். பக்தி மார்க்கத்தில் முன்னேற நினைப்பவர்கள் வந்து வணங்க வேண்டிய தலமும் கூட. 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க நலம் உண்டாகும்.
$$$