தேவையான ஞானச் செருக்கு

-கருவாபுரிச் சிறுவன்

தேசியகவியாகிய பாரதிக்கு ஒளவையார் பாடல்கள் மீது ஓர் ஒப்பற்ற மதிப்பு, மரியாதை  இருந்தது என்பதை கீழ்க்கண்ட வரிகள் உணர்த்தும்.  “தமிழ் நாட்டில் மற்ற செல்வங்களை எல்லாம் இழந்து விட பிரியமா... அல்லது ஒளவையாரின் பாடல்களை இழக்க பிரியமா என ஒருவர் கேட்டால் நான் சொல்வேன். மற்ற செல்வங்களை எல்லாம் இழந்தாலும் மீண்டும் சாம்பாத்தியம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒளவை பிராட்டியாரின்  பாடல்களை மட்டும் இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன், ஏனென்றால் அவை தமிழ்நாட்டின் தனிப்பெரும் செல்வம்” என்கிறார்.    
செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று
     முடிபுனைந்து செங்கோ லோச்சி
முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு
     நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித்
     தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி
     யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்.

    -பரஞ்சோதி முனிவர் 
    (திருவிளையாடல் புராணம் - மதுரைக் காண்டம்- காப்புச் செய்யுள்- 12)
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! 

      -அபிராமி பட்டர்

பெண்ணின் நல்லாள்

அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், அழகு ஒப்புரவு,  தொண்டு முதலிய நற்குணங்களை பெண்மைக்கு இலக்கணம் என்பார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனாரவர்கள். ஒவ்வொரு மனிதருடைய வாழ்வும் பூரணம் பெற வேண்டுமானால் அது அவருக்கு ஏற்ற பெண் நல்லாளாக அமைந்தால் மட்டுமே முடியும் என்பது சான்றோர் வாக்கு.

பல ஆண்டுகள் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இப்பாரத தேசம்  சுயாட்சி பெற தன்னுயிரை விலையாகக் கொடுத்த தியாகிகள் பலர். அவர்கள் மக்களிடையே சுதந்திரக்கனலை சொல், செயல் வழியாக சிறந்த உரை வீச்சுகள்  மூலம் வெளிப்படுத்தினார்கள். அதற்கு எட்டையபுரம் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் உரமூட்டின. அத்தகைய  தேசக்கனல் நாடெங்கும் பெருநெருப்பாய்ப் பரவி சுதந்திர விழிப்புணர்வை உண்டாக்கியது. அவருக்கு முன்னும் பின்னும் அப்படியொரு கவிஞரை இவ்வுலகம் பார்த்திருக்காது. இனி அவரைப் போல யாரும் வரப் போவதில்லை. அவரது  பாடல்களில் இடம் பெறாத  துறைகளே இல்லை எனலாம்.

முதன்முதலில் அன்றைய காலத்தில் வாழ்ந்த பெண்கள்  குறித்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக  குரல் கொடுத்த முண்டாசு அணிந்த கொற்றவன்  ஓரிடத்தில்…

 “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!”

     (புதுமைப் பெண்- 7)

-என சிறந்த பெண்களுக்கான குணங்களைப் பட்டியலிடுகிறார்.

நல்லாளுக்குரிய இலக்கணம்

ஹிந்துக்களின் புனித நூல் பகவத் கீதை, கிறிஸ்துவர்களின் புனித நூல் பைபிள், இஸ்லாமியர்களின் புனித நூல் குரான், சீக்கியர்களின் புனித நூல் குரு கிரந்தப் சாகிப் இவை யாவும் தத்தம் மதத்தினர் எப்படி நன்னெறியோடு நுாறாண்டு காலம் வாழ வேண்டும் என விதிமுறைகளை வரைமுறையோடு எடுத்துரைக்கும்  நுால்கள். இவற்றை தவிர வேறு பல துணை நூற்களும் சட்ட நுாற்களாக உள்ளன விரிவஞ்சி நிற்க.

இங்கு  சந்தானக்குரவர்களில் ஒருவரும், சித்தாந்த அட்டக நுாலாசிரியருமாகிய  உமாபதி சிவாசாரிய சுவாமிகள் தமிழர்களுக்குரிய  சட்ட நூற்களை வரிசைப்படுத்திகிறார்.

வள்ளுவர் நுால் அன்பர் மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை - தெள்ளிய சீர்த்
திருதொண்டர் புராணம் தொகு சித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாறு தரம்.

என்னும் சிவாச்சாரிய சுவாமிகளின் வாக்கினை சிரமேற்கொண்டு  அனைவருக்கும்  பொது நூலாய்த் திகழுவதும், தமிழர்களுக்கே உரிய சட்ட நூலாகிய  தொல்காப்பியம்  களவியல் நுாற்பா 8-இல்

அச்சமும் நாணும் மடனும் முந்துறத்த
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப...

என்னும் தொல்காப்பியரின் வாய்மொழிக்கு ஏற்றவாறு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை நான்கும் நற்குண பெண்களின் இயல்பான அடையாளம் என்கிறது.

சங்க நூற்களில் ஒன்றான அகநானுாற்றில்…

அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கை 

    (அக. 225: 1-4 )

என இயம்பியுள்ளார் எயினந்தை மகனார் இளங்கீரனார்.

அன்பு, மடம், மென்மை, இனிமை, அழகு ஆகியவற்றை அணிகலனாகக் கொண்ட பெண்கள் ஏன் அறியாமை, இருள் ஆகியவற்றில் கிடக்கிறீர்கள் அதில் இருந்து எழுந்து வாருங்கள்.  ஞான விடுதலை அடையுங்கள்.  புதுமைப்பெண்ணாய்   திகழுங்கள் என்று அவர்  பாடிய வரிகள் சிந்திக்கத் தக்கன.

ஞானச்செருக்கு:

* செருக்கு என்பதற்கு அனைவரும் கர்வம், திமிர், ஆணவம், அகந்தை, அடங்காத தன்மை, யாரையும் மதியாமை என்றும்,  ஞானம் என்பதற்கு அறிவு என்றும், திமிர்ந்த என்பதற்கு திடமான என்றும் பொதுவாக பொருள் கொள்வர். ஆனால் அஞ்சாமை, ஆண்மை, பெருமகிழ்ச்சி, மயக்கம், செல்வம் என்னும் பொருளும் உண்டு என்பதை பலரும் மறந்து விட்டனர்.

* தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் செரு என்னும் அஞ்சாமையைத் துணையாகக் கொண்ட செருத்துணை நாயனாருடைய வரலாறும் (தஞ்சை மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்), திருவள்ளுவ தேவ நாயனாரின் படைச்செருக்கு அதிகாரமும் கீழ்க்கண்ட வரிகளுக்கு துணையாக இருக்கும்.

* ஞானச்செருக்கு  என்பதற்கு சொல்லாலும் பொருளாலும் விளக்கத்தினை பலரும் பலவிதமாகக் கூறலாம்.  ஆனால் அதற்கு இங்கு இப்போது ஆங்காங்கே பொருத்தமான சொற்பொருளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். அது கோடிட்டுக் காட்டப்படுமேயொழிய அதுவே முடிவன்று.

 * செருக்கு என்ற சொல்லிற்கு ஒருவருக்குத் தெரிந்த செயலை அவர் இடைவிடாமல் பின்பற்றுவது, பிறரையும் பின்பற்றச் செய்வது, தம் உணர்ந்ததை பிறருக்கு தம் வழியில் உணர்த்துவது என பொருள் கொள்ளுதல்.  மேலும், உறுதியானதாக இருக்கும் செயலை,வார்த்தையை, எண்ணத்தை பிறர் உணர்த்துமாறு விடாபிடியாக செயல்படுத்திக் காட்டுதல் எனவும் பொருள் கொள்ளலாம்.

முக்கண்ணாகிய புராணங்கள்:

சைவ சமயத்தின் பரத்துவத்தையும், சிவபெருமானின் மகத்துவத்தையும், உயர்கள் உய்யும் மார்க்கத்தையும் எடுத்துரைக்கும் புராண நூற்கள் மூன்று.

 சிவபெருமானின் வலக்கண்ணை சூரிய பகவானுக்கு நிகராகவும், இடக்கண்ணை சந்திர பகவானுக்கு நிகராகவும், நெற்றிக்கண்ணை அக்னி பகவானுக்கு நிகராகவும்  நம்முடைய வேதாகமங்களும் இன்ன பிற ஞான நூற்களும் போற்றிப் புகழ்கின்றன.

 தெய்வச்சேக்கிழார் சுவாமிகள், பரஞ்ஜோதி மாமுனிவர், கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளால் அருளப்பெற்ற நூற்களாகிய திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம்,  திருவிளையாடல் புராணம்,   சைவர்களின் சொந்த புராணமாகிய  கந்த புராணம்* இம்மூன்றும் பரசிவத்தின் முக்கண்கள் என, தமிழ் வளர்த்த தருமை ஆதீன 26 குருமகா சன்னிதானம் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தனது அருளுரையில் அருளிச் செய்திருப்பது நாம் செய்த கொடுப்பினை.

சைவர்களின் குல தெய்வம், சித்தாந்தத்தின் எழுச்சி நாயகன் நமது  சிவஞான யோகிகள் தம் அறையில் மேற்கண்ட புராண நுாற்சுவடிகளை வைத்துக் கொண்டு சயனம் கொள்வார்கள் என கர்ண பரம்பரை செய்திகளும், சொற்பொழிவாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். இப்புராணங்கள் முறையே, உயிர்கள் யாவும் பல்லாண்டு வாழ்ந்து உய்வடைய பேரொளி, குளுமை, பரிசுத்தம் இம்மூன்றும் மிக மிக அவசியம் என்பதை உணர்த்துகிறது.

* ஒரு சாரார் திருவாசகத்தையும் வைத்துக் கொள்வார் என்றும் கருதுகின்றனர்.

பரிசுத்தத்தையும் உள்ளடக்கிய பரிபாடல்: 

சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் உள்ள  மூன்று, நான்கு, ஐந்து ஆகிய மூன்று பாடல்களும் கடுவன் இளவெயினனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டவை. மூன்றும், நான்கும் திருமாலைப் பற்றியவை; ஐந்து முருகப் பெருமானைப் பற்றியது. அதில் சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் தெய்வீக  மன நிலையை அழகுற தன் செய்யுளில் கடுவன் இளவெயினனார் வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்களேன்.

அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!

     (பரிபாடல்: 3:78-82)

செவ்வேள் பரம்பொருளே யாம் உன்னிடம் வேண்டுவது நின்பால் அருளும் அன்பும் அறனும் மட்டுமே வேறொன்று வேண்டுவதன்று என்கிறார்.

இவ்வரிகளுக்கு இணையாக  இச்சுவை தவிர யான்  போய்  இந்திரலோகம் யாளும் அச்சுவை  பெறினும் வேண்டேன் என தொண்டரடிப் பொடியாழ்வாரும் அரங்கனைப் பார்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.

எட்டாம் திருமுறையாம், திருவாசகம் தந்த மாணிக்க வாசக சுவாமிகள் வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன் விண்ணும் மண்ணும் என்று பாடி மறைமுகமாக உன்னுடைய அன்பு ஒன்று மட்டுமே வேண்டும்  என்கிற வேண்டும் பாங்கு நன்கு உணரத்தக்கது.

இவ்வரிகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக அமைந்ததுள்ளது கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளின் திருவாக்குகள். சைவர்களின் சொந்த புராணமாம் கந்த புராணம் –  பானுகோபன்  வதைபடலத்தில் ….

கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன்
 மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்
மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்
  சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன்......    154

அந்த நல்வரம் முத்தியின் அரியதொன் றதனைச்
 சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன்
உய்ந்தி டும்வகை அருள்செய வேண்டுமென் றுரைப்ப
 எந்தை கந்தவேள் உனக்கது புரிந்தனம் என்றான் ......    155

சிறப்பாக போரினை வழிநடத்திய தம்பி வீரபாகுவே, உனக்கு என்ன வேண்டும் விரும்பிய வரத்தை கேள் என்று முருகப்பெருமான் சொன்ன போது இந்திரனும்,பிரம்மாவும்,  மகாவிஷ்ணுவும் எங்கே நமது பதவியை கேட்டுவிடுவாரோ என பயந்தார்களாம்.  ஆனால் அங்கு அவர்கள் நினைத்தது ஒன்று நடந்தது வேறு.

இவ்வுலகத்தை வழிநடத்தும் பரம்பொருளே நம் முன் தோன்றி விரும்பிய வரத்தைக் கேள் என்றாலும் கூட

உமது அன்பைத் தவிர வேறுறொன்றும் வேண்டேன். நின்பால் வேண்டுவது அன்பு ஒன்றே என வீரபாகுத் தேவர் வழி பரம் பொருள் நம்மை வழிநடத்துகிறார் என்பதை நினைந்து நினைந்து மகிழ்வோம்.

பேரொளியாகிய திருநூல்

சைவ உலகில் பன்னிரு திருமுறைகளில் பெரிய புராணத்திற்கு முன்னுள்ள பதினொன்று  திருமுறைகளும் சிவபெருமானுடைய புகழினைப் பாடும். இந்த பன்னிரெண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் மட்டுமே சிவபெருமானுடைய புகழினைப் பேசும்.  இது தொட்டவரை சிவமாக்கும் தன்மை கொண்டது. இதில் அந்தணரில் தொடங்கி நந்தனார் வரையிலும், அரசர் முதல் ஆண்டி வரையிலும், உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரையிலும், பெரியவர் முதல் சிறியவர் வரையிலும் அனைவருடைய நற்குணநலன்களையும் பாரபட்சமில்லாமல்  துல்லியமாக இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப உள்ளதை உள்ளபடி அருளிச் செய்துள்ளார் நம் தெய்வச்சேக்கிழார் சுவாமிகள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் மற்ற காப்பியங்கள் எல்லாம் வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டிருக்கும். ஆனால் நமது திருத்தொண்டத்தொகை என்னும் பெரிய புராணம் மட்டுமே தமிழில் இருந்து வடமொழிக்கு எடுத்தாளப் பெற்றிருக்கும் ஒரே ஒரு காப்பிய நுால் என்ற பெருமையினையும் சிறப்பினையும் உடையது. 

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்துாரில் நடந்த  சைவ மாநாட்டு மேடையில் பேச வந்த ஒரு சிறுமி (துாத்துக்குடி ச.குழந்தையம்மாள்) தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் என்று சொன்னவுடன் அவ்விழாவினை தலைமையேற்று நடாத்திய தலைவர் பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள் விம்மி விம்மி அழுதார்களாம். அருகில் இருந்த வாரியார் சுவாமிகள் ஏன் அழுகிறீர்கள் என கேட்ட போது  அந்தச் சிறுமி தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் என்றல்லவா கூறி விட்டாள் என சொல்லி மேலும் தேம்பி தேம்பி அழுதார்களாம். அன்றைய கால கட்டத்தில் தமிழக அரசு ஒரு திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகத்தை நடத்துகிறது என்றால் பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகளிடம்  ஆலோசனை கேட்டுத்தான் அப்பணியை மேற்கொள்ளும். அப்படிப்பட்ட ஞானவானின் உணர்வுப்பூர்வமான ஞானத்தின் உயரிய நிலையை சிந்திக்கும் போது அது மேலும் உயர்ந்து நிற்கிறது. ஆக பெரிய புராணம் என்கிற நுாலாசிரியரின் பெயருக்கே இப்படியொரு  உயர்ந்த  ஞானம்  இருக்கிறது என்றால், அந்த நுாலின் நாயகர்களான  நாயன்மார்கள் சரித்திரத்திலும் நிமிர்ந்த ஞானச் செறிவு நிறைந்து இருக்கும் என்பதை உணர்ந்து படித்தால் அனுபவிக்கலாம்.  கல்லைப் பிசைந்து கனியாக்கும் திருவாசகத்தில் சண்டிகேஸ்வர நாயனாரையும், கண்ணப்ப நாயனாரையும் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.  அதிலுள்ள திருக்கோத்தும்பி பதிகத்தில்…

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற  வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்றுாதாய் கோத்தும்பீ

என்றும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன் என பட்டினத்து அடிகளும் உம்மை போல நாங்களும் இல்லையே என கண்ணப்பரை  வியந்து போற்றுவார்கள். 

அவர்களுடைய சரித்திரத்தை எல்லோரும் மனதில் உள்வாங்கி இருப்பீர்கள்.  இருந்தாலும், குடும்பித்தேவரின்  கண்களில் இருந்து ரத்தம் வடிவதைக் கண்ட திண்ணனின் மனம் படபடக்கிறது. பறி தவிக்கிறது, நாக்குழறுகிறது, மயிர் கூச்சொரியுது, மேனி நடுங்குகிறது என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கின்றான். அப்போது  அவனுடைய சித்தம் ஒரு உபாயத்தை நினைக்கிறது. ஊனுக்கு ஊனே சரி என்ற நோக்கில் தன் கண்ணை அம்பினால் (அன்பினால்) பிடுங்கி திருக்காளத்தி நாதரின் கண்ணில் அப்பியவுடன் கண்ணப்பரின் மனஓட்டத்தை  தெய்வச்சேக்கிழார் சுவாமிகள்  தெய்வத்தமிழில் விவரிக்கும் பாங்கினை அவருடன் சேர்ந்து பாராயணம் செய்யலாம்.

நின்ற செங் குருதி கண்டார்; நிலத்தின் நின்று ஏறப் பாய்ந்தார்;
குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
‘நன்று நான் செய்த இந்த மதி’ என நகையும் தோன்ற,
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்.
வலத்திருக் கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
நலத்தினைப் பின்னும் காட்ட, நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில் செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப் பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.

ரத்தம் நின்றவுடன் தேவர்களை விட  மேலான பக்தி செய்யும் கண்ணப்பர்  விண்ணுக்கும் மண்ணுக்குமாகக் கூத்தாடுகிறார். அவனுடைய செயல் நம்முடைய செயல் என்று ஞானமே வடிவமாகிய சிவபெருமானிடம் பாராட்டுப் பெற்ற கண்ணப்பர், என்னுடைய மதியால் நடந்தது என தெய்வச் சேக்கிழார் சுவாமிகளே வாய்மொழி பகர்கிறார் என்றால்…. நாம் பரம்பொருளிடம்  காட்டும் அன்பில், பக்தியில், தொண்டில்  தன்முனைப்பு வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி நினையாமல் நினைத்து பவ தொடக்கை வெல்ல வேண்டும்  என்கிற உபதேசச் செய்தி சிந்தித்து உணரத் தக்கதாகும்.

தண்ணருள் சுரக்கும் தலைவன் 
கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணு றத்தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்

என்று தமிழ் மொழியின் உயர்தனி சிறப்பினை போற்றி மகிழ்வார் திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதி மாமுனிவர்பிரான். மறைக்காட்டில் பிறந்த துறவிக்கு அடியார் பெருமக்களைப் பற்றி திருநூல் ஒன்று செய்ய வேண்டும் என சித்தம் கொண்டார். திருவருள் பயனால் நம் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணம் என்கிற மாகாப்பியத்தை அருளிச் செய்ததால், பரம்பொருளே நேரிடையாக அடியார்களுடன் புரிந்த அருள் லீலைகளைத் தொகுத்தளிக்கலாம்  என்பது அவருடைய திருவருள் சித்தமாயிற்று. அதன்படி நமக்கு கிடைத்த தண்ணருள் பொக்கிஷமே திருவிளையாடல் புராணம்.

அதில் எல்லாமே முக்கியம் தான் இருந்தாலும் மாணிக்கம் விற்ற படலத்தில் நவமணிக்குரிய இலக்கணங்களையும், கால்மாறிய ஆடிய படலத்தில் நடனக்கலை பற்றியும், விறகு விற்ற படலத்தில் இசை நுணுக்கங்களையும், நரியைப் பரியாக்கிய படலத்தில் குதிரையின் இலக்கணங்களையும் கட்டமைப்போடு துறவியார் சொல்லுவது வியப்புக்குரியதாகும்.

மேலும் ஆங்காங்கு நீதிக் கருத்துக்களையும் பரக்கக் கூறுவதில் அவருக்கு நிகர் அவரே. தலச்செய்திகள், சிவபெருமான், ஆச்சாரிய பெருமக்களோடு தொடர்புடைய அருளிப்பாடுகள், இயற்கை நிகழ்வுகள் என ஒன்று விடாமல் சொல்லும் பேரறிவு பெற்ற நம் முனிவர் பிரான் எந்தை சிவபெருமானுக்கும் நக்கீரருக்கும் நிகழ்ந்த தண்ணருள் போர் நிகழ்வினை திருவாலவாய் காண்டத்தில் தருமிக்கு பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்தபடலம் ஆகியவற்றில் வழங்கி இருப்பார்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என சொன்ன கீரரை,  சிவபெருமான் நெற்றிக்கண் காட்டி எரித்தார் என பெரும்பாலும் பலரும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அது உண்மையா எனில் இல்லை. அதிலுள்ள நுட்பத்தை ஆராய்ந்தால் ஆலவாயண்ணல் எவ்வளவு பெருங்கருணைத் தெய்வம்  என்பது ஆராய்பவருக்கு  விளங்கும்.

சிவபெருமான், மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் உனது கண்ணுக்கு மட்டுமே தெரிவார் என்னும் சிறப்பு வரத்தைப் பெற்றாள். அதைப்போலத் தானே கீரரும் சாம்பலாகி இருக்க வேண்டும். ஆனால் மீண்டும் சுயநினைவோடு பொற்றாமரைக்குளத்தில் எழுந்து கோபப்பிரசாதம் என்னும் ஒரு தேவாமிர்த்தை வழங்கியுள்ளாரே அவரா செருக்குடன் திகழ்ந்திருக்க முடியும்? ஒரு ஒப்புமைக்காக அப்படி கூறலாமேயொழிய அதுவே  உண்மையாகாது.

கீரரின் புலமையை இன்னும் பரிசுத்தமாக்கி இவ்வுலகிற்கு அவரையும், அவருடைய தமிழும் இன்னும் பல ஆண்டுகள் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக…

 கிராமங்களில் பருந்துகளுக்கு பயந்து பஞ்சாக்கர கூடையால் எப்படி கோழி, அதனுடைய குஞ்சுகளை அடைத்து வைத்து மீண்டும் அதனை கால நேரம் பார்த்து விடுவிப்பார்களோ அதைப்போல சிவபெருமான் கீரரை நெற்றிக்கண்ணாகிய பஞ்சாக்கரத்தால் காத்து நமக்கு மீண்டும் தந்தார் என்பதே துணிபான ஆலவாயண்ணலின் அற்புதம் பொருந்திய நுட்பமான செய்தி.

இருப்பினும்…

சால நான் இழைத்த தீங்குக்கு என்னையும் தண்டம் செய்த
கோலமே போற்றி பொல்லாக் கொடியனேன் தொடுத்த புன்சொல்
மாலை கேட்டு என்னை ஆண்ட மலைமகள் மணாள போற்றி
ஆலவாய் அடிகள் போற்றி அம்மை நின் அடிகள் போற்றி

என செருக்கழிந்து  பலவாறு துதி செய்கிறார் கீரர்.   

புலவர்கள் காட்டும் ஞானச் செருக்கு

ஒரு நாடு, நகரம், கிராமம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அங்கு வாழ்ந்த, வாழும் புலவர்கள்பற்றிய நுட்ப திட்ப செய்திகளையும் அவர்களுடைய வரலாறுகளையும் யாவரும் தெரிந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தி போற்றி செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த நாடு முன்னேற்றம் அடையும். தமிழகம் தந்த புலவர் பெருமக்கள் ஒன்றா, இரண்டா… பட்டியலிட்டாலும் அது முற்றுப்பெறுமா என்பது சந்தேகம் தான். அவர்களுள் முதன்மைப்புலவர்களாக வைத்து போற்றக் கூடியவர் ஒளவையார், திருவள்ளுவதேவ நாயனார்,  ஒட்டக்கூத்தர், கம்ப நாட்டாழ்வார்.  கம்பரும் வள்ளுவரும் என்னும் பெயரை  சுருக்கி தமிழுக்கு இந்த இரு புலவர்களே கதி என  சொன்னார் செல்வ கேசவ முதலியார். இந்த வரிகளில் இருந்து புலவர்களின் சிறப்பினை நன்றாகவே  உணர்ந்து கொள்ள முடிகிறது. அது இயல்பாகவே படிப்பவர்களுக்கு புலப்படும். புலவர்களுக்குள் போட்டியோ,  பொறாமையோ இருந்திருக்க முடியாது.  அவர்கள் அனைவரும் அனைத்தையும் உணர்ந்தவர்கள். அதை மற்றவருக்கு வெளிப்படுத்த வேண்டும் அவர்களும் நம்முடைய ஞானத்தை அடைய வேண்டும் என்கிற பண்பிற்காக ஒருவருக்கொருவருக்கு  உரசல் வந்திருக்கும் அது நீர்வழிப்பட்ட அம்பு போல அவர்களிடம் அக்கணமே  மறைந்தும் போய் இருக்கும் என்பது  என் போன்றவர்களின் துணிபு.

ஒளவையாரின் தன்மானம்

தேசியகவியாகிய பாரதிக்கு ஒளவையார் பாடல்கள் மீது ஓர் ஒப்பற்ற மதிப்பு, மரியாதை  இருந்தது என்பதை கீழ்க்கண்ட வரிகள் உணர்த்தும்.  “தமிழ் நாட்டில் மற்ற செல்வங்களை எல்லாம் இழந்து விட பிரியமா… அல்லது ஒளவையாரின் பாடல்களை இழக்க பிரியமா என ஒருவர் கேட்டால் நான் சொல்வேன். மற்ற செல்வங்களை எல்லாம் இழந்தாலும் மீண்டும் சாம்பாத்தியம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒளவை பிராட்டியாரின்  பாடல்களை மட்டும் இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன், ஏனென்றால் அவை தமிழ்நாட்டின் தனிப்பெரும் செல்வம்” என்கிறார்.    

ஒரு  சமயம், ஔவையார் கூழுக்குப் பாடி சிலம்பியை செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் சோழ அரச சபைக்கு வருகை தந்த ஔவையாரைக் கண்ட  கம்பர், இரு பொருள் படும்படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு, “ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”என்று கூறினார். இதற்கு பதிலாக அவரும்…

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே, குலராமன் துாதுவனே
ஆரையடா சொன்னாயது"

எட்டைக் குறிக்கும் தமிழ்க்குறி ‘அ’, கால் என்னும் பின்னத்தைக் குறிக்கும் தமிழ்க்குறி ‘வ’.  இரண்டையும் சேர்த்தால் ‘அவ’.  எனவே எட்டேகால் லட்சணம் என்பது அவலட்சணம். எமன் ஏறும் குதிரை எருமைக்கடா.பெரியம்மை அக்கா மூதேவி ஏறும் வாகனம் கழுதை. மேற்கூரை இல்லாத வீடு குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் குரங்கு.

ஆரை = ஆராம்புல், யாரையடா. கைக்குள் உள்ளது ஆரைப்புல் என விடையைச் சொல்லி, அதன் மற்றொரு பொருளால் கம்பரை  திட்டவும் செய்கிறார். இந்த சூழலில் ஒளவையார் எப்படி செயல் பட்டாரோ அது போல பெண்கள் செயல் பட வேண்டும் என விரும்பினார் போலும் முறுக்கு மீசைக்காரன் பாரதியார் அதனால் தான் இருள், அறியாமையில் இருந்து விடுபடுங்கள். அதை உமிழ்ந்து தள்ளுங்கள். இத்தகைய நிமிர்ந்த ஞானச் செருக்கு பெண்களுக்கு  வேண்டும் என பாடினார். தற்காலத்திலும் இத்தகைய தனித்தன்மையுடைய ஞானச் செருக்குடைய பெண்கள் இருத்தல் கூடும். அவர்கள் இன்னார் என கண்டுபிடித்தல் எளிதன்று.

ஒட்டக்கூத்தரின் சமயோஜிதம்

கூத்தர் என்னும் பெயருடைய இவர் தமிழ் செய்யுள்களை இயற்றுவதில் சமர்த்தர். வடமொழியில் நுாற்பயிற்சியும் உடையவர். சொற்சுவையும் பொருட் சுவையும் தந்த நாவலர்கள் வரிசையில் ஒட்டக்கூத்தருக்கு தனி இடம் உண்டு. அன்னை கலைவாணி மீதும், ஆளுடைய பிள்ளையார் மீதும் அளவற்ற பக்தியை கொண்டவர். கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன் என அறிஞர்களால் சிறப்பிக்கப்பெற்ற இவர், குலோத்துங்கன் சோழ அவையில்  அவைக்களப் புலவராக அலங்கரித்தவர்.

ஒரு நாள் இரவில் சோழ மன்னன் குடை பிடித்துக் கொண்டு உலா வரும் போது பெண்கள் எல்லாம் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைப்பிடிப்பானாம் என்பது போல இவரும் குடை பிடித்து வருகிறாரே என அறியாமையால்  கேலி செய்தார்களாம். இதை காதில் வாங்கிய மன்னன், கூத்த பிரானாகிய புலவரை அழைத்து நீ இருக்கையில் பெண்கள் இப்படி பேசுகிறார்களே இவர்களுக்கு பதில் என்ன சொல்லப் போகிறாய் எனக் கேட்டாராம். உடனே தன் கவிதா சாமர்த்தியத்தை கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்துகிறார்

அண்டம் மீதுலவும் அருந்திறல் கற்புக்கரசியாம் அருந்ததி நின்னே
கண்டதால் ஊறுபட உன்னாதல் என்றெண்ணி பவநியில் நீ கவிதை
கொண்டது முறையே குலோத்துங்க என்னும் கொற்றவ நற்றவ மணியே
மண்தனை புரப்போர் மாதாரார் கற்பை வளர்த்திடல் மாண்புடை தந்தோய்.

இரவு நேரத்தில் கற்புக்கரசியாகிய அருந்ததி வானத்தில் உலா வருகிறாள். இச்சமயத்தில்  உம்மை ஏதேச்சையாக பார்க்க நேரிட்டால் உம்மீது மையல் கொள்வாள். அவள் பார்க்கக் கூடாது என்பதற்காக குடை பிடித்து வருகிறீர்கள் என்பது இவர்களுக்கு தெரியுமோ, தெரியாது. மேலும் நாட்டிலுள்ள பெண்களுடைய கற்பிற்கு நாட்டை ஆளும் மன்னனே முக்கிய காவலன் என்பதும் அவர்களுக்கு தெரியாது போலும் என்ற கருத்தமைந்த மேற்கண்ட செய்யுளை இயற்றி மன்னர்பிரான் வாட்டத்தைப் போக்கிய ஒட்டக்கூத்தரின் சாமர்த்தியம் இக்கால புலவர்களுக்கு உண்டோ என்பது ஐயப்பாடு தான்.

குருமுதல்வர்  காட்டும் குறிப்பு:

இப்புவனியில்  தமிழும் சைவமும் தழைத்தினிதோங்கச் செய்த அருமை, பெருமையினை துறைசை, சூரியனார் கோயில், தருமை, திருப்பனந்தாள், மதுரை… மற்றும் ஒரு சில ஆதின குருமகா சன்னிதான அருளாட்சி காலத்தில் காணலாம். அவர்கள் செய்தருளிய  பெருந்தொண்டினை தற்போது யாவரும் செய்வது அரிது. அப்படி யாவரேனும் அத்தகைய தொண்டுகளைச் செய்வாரேயாயின் அவர்கள் கருவிலே திருவருள் பெற்றவராக இருத்தல் கூடும்.

ஆதின கர்த்தாக்களை பிற மடாலயத்தில் எழுந்தருளி இருக்கும் தலைவரோ, அவர்களது கீழுள்ள தம்பிரான் சுவாமிகளோ சென்று தரிசித்து ஞான விசாரங்கள் செய்வது வழக்கம்.  துறைசை என்னும் திருவாவடுதுறை ஆதினத்தின் ஸ்தாபகரான நமசிவாய மூர்த்திகள் அருளாட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வு.

திருவாவடுதுறை வீதியில் சூரியனார் கோயில் ஆதின தம்பிரான்கள்  நண்பகலில் எழுந்தருளி வந்தனர். அப்போது துறைசை ஆதின தம்பிரான்கள் உஞ்ச விருத்திக்காக வீதியில் சென்றார்கள்.  எதிரே  சூரியனார் கோயில் ஆதின  தம்பிரான்களை பார்த்த துறைசை ஆதின தம்பிரான்கள்  தன் கையில் இருந்த திருவோட்டினை எதிர்ப்பட்ட திண்ணையில் வைத்து விட்டு மரியாதை செலுத்தினர். பின்னர், சூரியனார் கோயில் ஆதின தம்பிரான்கள் நடந்த நிகழ்வினை குருமுதல்வரை தரிசித்த போது அளவளாவினர். துறைசை தம்பிரான்களை அழைத்த நமசிவாய மூர்த்திகள், ‘தம்பிரான் சுவாமிகளைப் பார்த்தும் தங்களுக்கு திருவோடு பெரிதாக தோன்றுமோ!  அதனை அக்கணமே வீசி எறிந்து விட்டு அல்லவா நீங்கள் நமஸ்காரம் செய்திருக்க வேண்டும்? அதைச் செய்யத் தவறியதால் இக்கணமே,  காசி யாத்திரை செய்து பின்னர் மடாலயம் திரும்புங்கள்’ என அருள் ஆணையிட்டார்கள்.

நமச்சிவாய மூர்த்திகள் தம்பிரான் சுவாமிகளுக்கு விடுத்த  அருளாணை  நிமிர்ந்த ஞானத்தினை வெளிப்படுத்துகிறது என்பதை

திருவே என் செல்வச் சிறப்பே சிவானந்தத் தெள்ளமுதே
உருவே உருவமும் ஊருடன் பேருமொன் றும் புணரா
அருவே தெளிந்த அறிவே  மெய்யன்பர்க்கு அருளும் தெய்வத்
தருவே தென் கோமுத்தி முத்தி பஞ்சாக்கர சற்குருவே 

என்னும் வாடாபாமாலையான பஞ்சாக்கர தேசிக மாலையில் இருந்து ஒரு பாடலை பாடி உணர்வோமாக.

திருப்புகழ் காட்டும் உறைப்பு

முருகப் பெருமானின் புகழினையும் சிறப்பையும் சொல்லும் திருநூற்களில் முதன்மை வகிப்பது திருப்புகழ்.

மானிடர்களை நல்வழிப்படுத்தும் திருநூற்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. அருணகிரி நாதர் பாடிய

பதினாராயிரம் பாடல்களில் நம் செய்த தவத்தின் பயனாக ஆயிரத்து முன்னுாற்று ஏழு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றில் ஆயிரத்திற்கு எண்பத்து எட்டு பாடல்கள் சந்த வேறுபாடு மிக்கவை. அத்தகைய திருப்புகழை ஒருவர் பாராயணம் செய்தால் அவர் என்னென்ன பேறுகளை அடைவார் என திருப்புகழ் பாயிரப்பகுதி பட்டியலிடும். அதை இயற்றியவர் யார் என துணிந்து இதுவரை தமிழ் இலக்கியம் கூறியதுமில்லை; குறிப்பிடவும் இல்லை. இயற்றியவர் என்ன காரணத்தினாலோ தம் பெயரை குறிப்பிடாமல்  விட்டது  நின்பால் அன்பும் அருளும் வேண்டுவது மட்டுமே. மற்றொன்றும் இல்லை என்ற கருத்தினை உள்வாங்கி இருந்தார் போல.

அப்பாயிரத்தின் பத்தாவது பாடலில் திருப்புகழ் படிக்கும் அடியார்களின் சிந்தை வலுவாகும். உனது அருளால் அவர்கள் யாரையும் மதிப்பதில்லை என்ற வரிகள் நிமிர்ந்த ஞானச் செருக்கின் உறைப்பினை காட்டுகிறது.

திருப்புகழ் படிக்கும் அவர் சிந்தை வலுவாலே
ஒருத்தரை மதிப்பதில்லை உன்தன் அருளாலே
பொருப்பு உக மிகப்பொருது வென்று மயில் மீதே
தரித்து ஒரு திருத்தணியில் நின்ற பெருமாளே.    
  • மேலான பதவிகள் தன் கண்முன் தெரிந்தும் உன்னிடம்  வேண்டுவது  அன்பும் அருளும் போதும் என்கிற வீரபாகுதேவரின் மனத்திண்மை,
  • கண்ணப்ப நாயனார் தன் பக்திக்குரிய வெற்றியைக் கொண்டாடும் பாங்கு
  • நக்கீர தேவ நாயனாரை பரம்பொருளே மீண்டும் காப்பாற்றி இவ்வுலகிற்குக் கொடுத்த நுட்பம்
  • புலவர்  பெருமக்களின் தன்மானமும் சமயோஜிதமும்
  • ஆதின குரு முதல்வர் தம் சீடர் குழாமிற்கு விடுத்த அருளாணை.
  • திருப்புகழ் பாயிரம் காட்டும் உறைப்பு. 

இவையே  திமிர்ந்த ஞானத்திற்கு தக்கதொரு உதாரணம்.

நிறைவாக ஒரு சொல்

இந்த மானுடம் நிமிர்ந்த ஞானத்துடன்  திகழ வேண்டுமானால் கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச்செருக்கு இம்மூன்றையும் அறவே விட வேண்டும். அதை விட்டால் ஞானத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால்…

நமது ஹிந்து மத நூற்களான பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திரங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருவருட்பா, பட்டினத்தார், தாயுமானவர் பாடல்களில் தேர்ந்தெடுத்த பாடல்கள், மற்றும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை தினமும்  அன்றாடம் வழிபடும் வழிபாட்டில்  பாராயணம் செய்தால் எதிர்வரும் எக்காலங்களிலும் மாசற்ற மகிழ்ச்சியில், திமிர்ந்த ஞானத்தோடு  திளைக்கலாம். 

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
           ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
           எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
           திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
           தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.

சிவசிவ.

$$$

Leave a comment