ஒரு கதையும் நான்கு கட்டுரைகளும்…

 -எல்.முருகராஜ்

பத்திரிகையாளர் திரு. எல்.முருகராஜ், சுவாமி விவேகானந்தர் குறித்து 2014-இல் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.

 ஒரு பிரபலமான கதை.

அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

தன் மீது தீராத பக்தி கொண்ட ஒருவருக்கு தரிசனம் தருவது என்று முடிவெடுத்த கடவுள் பக்தனிடம், “உன் வீட்டிற்கு நாளை வருகிறேன்” என்று கனவில் சொல்லிவிட்டார்.

பக்தனுக்கு தாங்கமுடியாத ஆனந்தம்.

வீட்டை படு பாங்காக அலங்கரித்து பலவித பலகாரங்கள் செய்வித்து அவரை வரவேற்க அதிகாலை முதலே காத்திருந்தான்.

விடிந்ததும் விடியாத அதிகாலைப் பொழுதில், ‘வயதான ஒருவர் பக்தனது வீட்டு வாசலில் வந்து நின்று பசிக்கிறது ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?’ என்று கேட்டார்.

‘முதல்ல இடத்தைக் காலிபண்ணு.  நான் வேறு ஒருவருக்காக காத்திருக்கிறேன். இந்த நேரம் இடையூறு பண்ணாதே’ என்று அந்த முதியவரை விரட்டிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து ஒரு  வயதான பெண் இதேபோல, ‘வீட்டில் பலகார வாடை அடிக்கிறதே, அதில் கொஞ்சம் தரக் கூடாதா?’ என்று கேட்டு நின்றார்.

‘உனக்குக் கொடுத்தால் அது எச்சில் பண்டமாகிவிடும். கடவுள் ஏற்க மாட்டார். ஆகவே போய்விடு ’என்று அந்தப் பெண்ணையும் விரட்டிவிட்டான்.

பிறகு மாலை மங்கி இரவானது இப்போது வந்தவர் ஒரு அடியவர்.

‘ஐயா காலை முதலே உணவு கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் விருந்து தயாராக இருப்பதாக அறிகிறேன். ஏதாவது கிடைக்குமா ?’ என்று கேட்க,  ‘விருந்து தயராக இருக்கிறது,  ஆனால் அது உனக்கல்ல’ என்று சொல்லி அந்த அடியவரையும் துரத்திவிட்டான்.

இரவும் போனது, நாளும் முடிந்தது. கடவுளைக் காணாத வருத்தத்தில் அயர்ந்து படுத்திருந்த பக்தனிடம் கடவுள் மீண்டும் வந்தார், ஆனால் பக்தனோ அவரிடம் கோபித்துக்கொண்டான்.

‘உனக்காக எவ்வளவு சிரமப்பட்டு வீட்டை அலங்கரித்து வைத்திருந்தேன், உனக்கு பிடிக்குமே என்று பலவித பலகாரங்களை செய்து வைத்திருந்தேன், ஆனால் நீங்கள் வராமலே ஏமாற்றிவிட்டீர்களே, இது நியாயமா?’ என்று கேட்டான்.

அதற்கு கடவுள், ‘ நான் வரவில்லையா? யார் சொன்னது?  ஒரு முறைக்கு மூன்று முறை நான் உன் வீட்டிற்கு வந்தேன், விடிகாலையில் வயதானவராகவும், பின் பெண்ணாகவும், இரவில் அடியவராகவும் வந்தேன். வாய்விட்டு பசிக்கிறது என்றும் கேட்டேன். ஆனால் நீ தான் வீட்டிற்குள்ளேயே விடாமல் விரட்டிவிட்டாய்’ என்றதும் பக்தன் மயக்கமானான்.

சரி இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா? இறுதியில் சொல்கிறேன்.

***

காம்கேர் கே.புவனேஸ்வரி…

கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாக இயக்குனர், மனிதநேய எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர்,  தமிழ் ஆர்வலர், சமூக சேவகர் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

உண்மையாகவும், மென்மையாகவும் பழகுவது  எப்படி என்பதை இவரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொண்டு வருகிறேன்.

விவேகானந்தரின் 150-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரையைப் படித்து பாராட்டியிருந்தேன், வெறுமனே நன்றி சொல்லி ஏற்றுக்கொள்வதோடு நிறுத்திவிடாமல், ‘ஒரு புகைப்பட நிருபரின் பார்வையில் உங்களது ஒரு பதிவும் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன், ஒரு கட்டுரை எழுதி அனுப்ப முடியுமா?’ என்று கேட்டார்.

அவர் கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாதபோது எழுதுவது எளிதாக இருந்தது. ஆனால் ஒருவரது எதிர்பார்ப்பு இருக்கிறது என்று தெரிந்த பிறகு எழுதுவது என்பது சிரமமாகவே இருந்தது.

இத்தனைக்கும் எனக்குப் பிடித்தவர்களில் முக்கியமானவர் விவேகானந்தர்.

அவரைப் பற்றி ஒரு அழுத்தமான பதிவு போட வேண்டும் என்று நிறையவே யோசித்தேன்.

எழுத நினைக்கும் போதெல்லாம் ஏதாவது வெளியூர் வேலை வந்தது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலை எல்லோருக்கும் தெரியும். அந்த உயரமான மலையில் சுமைதூக்கும் தொழிலாளிகளாக பணியாற்றி சிரமப்படும் பெண்களின் கதை பற்றி எழுதப் போய்வந்தேன்.

குடிகாரக் கணவர்களால் நிகழ்காலத்தை இழந்தாலும் பெற்ற குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்காக எட்டு மணிநேரம் மலைமீது சுமையுடன் சொற்பக் கூலிக்காக ஏறி இறங்கும் பேச்சியம்மாள் போன்ற பெண்களின் கண்ணீர்க் கதை அது.

இந்த வேலை முடிந்ததும்,  அடுத்ததாக விவேகானந்தர் பற்றி எழுத உட்காரும் போது,  தென்காசி பக்கமுள்ள ஆய்குடி அமர்சேவா சங்கத்தில் உள்ள உடல் ஊனமுற்றவர்களின் வாழ்க்கை முறை பற்றி எழுத போய்வரப் பணிக்கப்பட்டேன்.

கழுத்திற்குக் கீழ் செயல்படாத ராமகிருஷ்ணனின் தலைமையில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் யாருக்கும் பராமில்லாமல் சுயதொழில் மூலம் முன்னேறி வருகின்றனர் . இங்கு முதுகுத்தண்டு வட பிரச்னையால் இயற்கை உபாதையைக் கூட தணிக்க யாருடைய துணையையாவது நாடும் நோயாளிகளை பார்த்துக்கொண்டும், பராமரித்துக்கொண்டும் இருந்த வெளிநாட்டுப் பெண் லாரா என்பவர் எனக்குள் ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தினார்.

‘லண்டனில் ஆறு மாதம் பிசியோதெரபியாக வேலை பார்த்து, சம்பாதிக்கும் பணத்துடன் இங்கு வந்து என் அறிவையும்,ஆற்றலையும் இவர்களுக்காக ஆறு மாதம் செலவழிக்கிறேன். இது தொண்டு அல்ல, சக மனிதர்களுக்கு நான் செய்யும் கடமை. என்னை நன்றாக படைத்த கடவுளுக்கு நான் செலுத்தும் நன்றி’ என்றார்.

ஊர் திரும்பியதும் அவரைப் பற்றி எழுதிவிட்டு மீண்டும் விவேகானந்தரைக் கையில் எடுத்தேன்.

‘கோவையில் ஒரு குட்டி விவேகானந்தராகப் பார்க்கப்படும் சிறுவன் சபரி வெங்கட்டைப் பற்றி ஒரு பதிவு தேவை. போய்வர முடியுமா?’ என்றனர்.

எப்போது முடியாது என்று சொல்லி இருக்கிறேன்? உடனே கோவை போய் அங்கு இருந்து பெரியநாயக்கன் பாளையத்தில் வசிக்கும் அந்த அன்புச்சிறுவனைக் காணச் சென்றேன்.

நான் தான் அந்த சிறுவனைக் காண முடிந்ததே தவிர, அந்தச் சிறுவனால் என்னைக் காண முடியாது என்று உணர்ந்தேன். காரணம் தவறான மருத்துவ சிகிச்சையால் படிப்படியாக எட்டு வயதிற்குள் பார்வையை இழந்த 12 வயது சிறுவன் அவன்.

பிரெய்லி முறையில் படிக்க ஆரம்பித்த சிறுவன் சபரிக்குக் கிடைத்த முதல் புத்தகம் விவேகானந்தரைப் பற்றியது தான். படிக்கப் படிக்க விவேகானந்தர் அவனுக்குள் குடிபுகுந்து நாளடைவில் அவனே குட்டி விவேகானந்தர் போல ஆனான்.

விவேகானந்தரின் அனைத்துச் சொற்பொழிவுகளையும், புகழ்பெற்ற கருத்துக்களையும் பிசிறில்லாமல் மழலை மொழியில் அவன் பேசுவைதைக் கேட்க தற்போது தமிழகத்தில் பெரும் கூட்டமே காத்திருக்கிறது.

விவேகானந்தர் போல காவி உடையணிந்து, மரச்செருப்பு போட்டு, கம்பீரமாக நடந்து வந்து,  யார் மனதையும் அள்ளும் குறுஞ்சிரிப்புடன் பேச ஆரம்பிக்கும் போது,  சிறுவன் சபரியாக இருப்பவன் கொஞ்ச நேரத்தில் விவேகானந்தராகவே மாறிவிடுகிறான். இல்லை மாறிவிடுகிறார்.

ஏழைகள், பலமற்றவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோரிடம் கடவுளைக் காண்பவனே உண்மையில் கடவுளைக் கண்ட  பேறு பெற்றவன். தன்னை கோவிலில் வந்து வணங்குபவரை விட இவர்களுக்கு சேவை செய்பவர்களையே கடவுள் நேசிக்கிறார்.

செல்வமும், புகழ் வாழ்வும், உலக போகமும் சில நாட்களுக்கே. எனவே ஆசையில் மூழ்கிக் கிடக்க வேண்டாம். கடமையைச் செய்து களத்தில் உயிரை விடுவது தான் நன்மை. ஒருவரிடமும் பொறாமைப்படாதீர்கள், நன்மை செய்ய விரும்புவோருக்கு கை கொடுக்க தயராகுங்கள், உலக உயிர்களை நேசித்து சகோதர உணர்வுடன் வாழுங்கள்

-என்று முத்து முத்தாக சிறுவன் சபரி பேசியதைக் கேட்கும் போது எதிரே நின்று விவேகானந்தரே பேசுவது போல உணர்ந்தேன்.

ஊர் திரும்பினேன், வாழும் விவேகானந்தரான சிறுவன் சபரி வெங்கட் பற்றி எழுதி முடித்தேன்.

காம்கேர் புவனேஸ்வரி விவேகானந்தர் கட்டுரை பற்றி நினைவு படுத்தினார்.

நடந்தைச் சொன்னேன், ஒவ்வொரு முறை விவேகானந்தர் பற்றி எழுத உட்காரும் போதும்,  சுமைத்தொழிலாளி பேச்சியம்மாளும், சமூக சேவகர் ராமகிருஷ்ணனும், வெளிநாட்டுப் பெண் லாராவும், சிறுவன் சபரி வெங்கட்டும் என் எழுத்தில் வந்து உட்கார்ந்ததைச் சொன்னேன்.

***

இப்போது கட்டுரையின் ஆரம்பத்திற்கு வாருங்கள்.

கடவுள் ஒவ்வொரு முறை வேறு வேறு ரூபத்தில் பக்தனின் கதவைத் தட்டியது போல, விவேகானந்தரும் வேறு வேறு ரூபத்தில் எனது கட்டுரை மாந்தராகி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

விவேகானந்தரின் உடையிலும், உணர்விலும் வீற்றிருந்த பார்வையற்ற சிறுவன் சபரி வெங்கட் பேசும் போது சொன்னதைத் தான் சொல்ல வேண்டி உள்ளது.

என்னைக் கோவிலில் வந்து தரிசிப்பவனை நேசிப்பதை  விட இயலாதவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உதவுபவனையே நான் அதிகம் நேசிக்கிறேன் என்ற  கடவுளின் வார்த்தைகளின்படி, விவேகானந்தரின் வாக்குப்படி முத்தான நான்கு பேரை, சமூகத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டிய நான்கு பேரை எழுத விவேகானந்தர் தனக்கான நேரத்தை எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார் என்றே எடுத்துக்கொள்கிறேன்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற வரிகளுடன் கம்பீரமாக என் எழுது மேஜையின் மீது வீற்றிருக்கும் விவேகானந்தரைப்  பார்க்கிறேன்.

‘காம்கேர் புவனேஸ்வரி, என்னைப் பற்றி ஒரு கட்டுரை தான் எழுத சொல்லியிருந்தார். ஆனால் நீ நான்கு கட்டுரைகள் எழுதிவிட்டாய்’ என்ற அர்த்த்த்துடன் விவேகானந்தரின் பார்வை இருப்பதாகவே பட்டது.

குறிப்பு:

திரு. எல்.முருகராஜ் தற்போது தினமலர் நாளிதழின் சென்னை பதிப்பில்  மூத்த புகைப்பட நிருபராகவும், தினமலர்.காம் இணையதளத்தின் கட்டுரையாளராகவும் உள்ளார்.

2014இல் விவேகானந்தம்-15.காம் இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரை இது...

Leave a comment