நாடகக் கலை -3 ஆ

-அவ்வை டி.கே.சண்முகம்

‘கள்ளிப் புதர்களும் கற்றாழைக் காடுகளும் நிறைந்திருந்த கலைத் துறையை நாங்கள் கைப்பற்றி விட்டோம்; இனி இங்கே இதிகாசங்களும், புராணங்களும் இடம் பெற இயலாது’  என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்  ‘இராமாயணம்’ திரைப் படத்தை வெற்றிப் படமாகக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப்படத்தை நூற்றுக் கணக்கான நாட்கள் ஓட்டிக் காட்ட முடிந்தது என்றால் அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?

3. நாடகத்தில் பிரசாரம் (ஆ)

கம்பன் காட்டும் கருணை

அடுத்தபடியாக இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். அதைப் போன்ற ஒரு அழியாத நாடகக் காப்பியத்தை இனி நாம் பெற முடியுமா? எவ்வளவு அருமையான பாத்திரப் படைப்புக்கள்! தந்தையின் சொல்லுக்காக பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்த ஒரு தனையன்; தாய் தனக்குத் தேடிக் கொடுத்த அரசைத் தமையனுக்கே கொடுக்க முன்வந்த தம்பி பரதன்; எத்தனை விதமான மனநிலைகளைப் பார்க்கிறோம்.

‘கொடியவளாகிய இவளது புகதல்வன் பரதன் எனக்கு ஈமச் சடங்குகளும் செய்யத் தக்கவன் அல்லன்’ என்று தயரதன் நாவால் சொல்லும் அளவுக்கு அவன் மனத்தை மாசுபடுத்தி விட்ட கைகேயி என்ன சாதாரணப் படைப்பா? கணவன் தயரதன், மகன் பரதன் முதலிய எல்லோராலும் இவ்வாறு வெறுத்து ஒதுக்கப்பட்ட கைகேயியை, இறுதியில் இராமன் எவ்வாறு போற்றுகிறான்!

போர் முடிந்தது; தயரதன் தெய்வ வடிவிலே வந்து திருமகனைச் சந்திக்கிறான்.  ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்கிறான் தந்தை.  ‘தந்தையே, தங்களைக் கண்டதே போதும். இதைவிட வேறு என்ன வேண்டும்?’ என்கிறான் இராமன். பின்னும் பரிவோடு  ‘உனக்கு வேண்டியதைக் கேள்’ என்கிறான் தயரதன். இந்த இடத்திலே இராமன் வாக்கால் வெளிப்படுத்தும் சொற்கள் கம்பரை ஒரு மிகப் பெரிய நாடக ஆசிரியராக நமக்குக் காட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது. பாடலைப் பாருங்கள்.

‘ஆயினும் உனக்கமைந்த தொன்றுரையென அடிகள்,
தீயளென்று நீ துறந்த எந்தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம்வரம் தருகெனத் தாழ்ந்தான்
வாய்திறந்தெழுந் தார்த்தன உயிரெலாம் வழுத்தி’

தயரதன் அவ்வாறு கேட்டவுடனே  ‘தீயவளென்று நீ கைவிட்டாயே, அந்த என் தெய்வமாகிய கைகேயியும் அவள் திருமகனும் எனக்கு மீண்டும் தாயும், தம்பியுமாகும்படியான ஒரு வரத்தைத் தர வேண்டும்’ என்று வணங்கினானாம் இராமன். உடனே இராமனை மனிதர் வாழ்த்தியதாகச் சொல்லவில்லை கம்பர்; தேவர்கள் வாழ்த்தியதாகச் சொல்லவில்லை; உயிர்க்குலங்கள் எல்லாம் வாய் திறந்து எழுந்து ஆரவாரம் செய்ததாகச் சொல்லுகிறார். என்ன அற்புதக் காட்சி!

காப்பிய முழுவதும் கொடுமைக்காரியாகத் திகழ்ந்த கைகேயியை, எல்லோராலும் வெறுக்கப்பட்ட கைகேயியை, அவளால் கொடுமைக்காளான பாத்திரமாகிய இராமன் தன் திருவாயாலேயே தெய்வம் என்று கூற எப்படி உயர்த்தி விட்டார் கம்பர்! இஃதல்லவா நாடகப் பண்பின் உச்ச நிலை.

பாரதம் கூறும் பண்பு

மகாபாரதக் கதையை எடுத்துப் பாருங்கள். பஞ்ச பாண்டவர்களின் அருமைத் தாய் குந்தி தேவியும் அவளுடைய முதற் புதல்வனும், பாண்டவர்களில் மூத்தவனுமான கர்ணனும் சந்திக்கிறார்களே; அந்தக் கட்டத்தைப் போல ஒரு அற்புதக் காட்சியை உலக நாடக இலக்கியங்களிலே நாம் பார்க்க முடியுமா? இதை நான் சொல்லவில்லை, மேனாட்டு நாடகாசிரியர்களே கூறுகிறார்கள். கர்ணனுடைய பாத்திரப் படைப்பும், குந்தி தேவியின் பாத்திரப் படைப்பும் நாம் இனிப் புதிதாகப் படைக்கக் கூடியதா?

குந்தியைத் தன் தாயென்று அறிந்ததும் கர்ணன் ஆனந்தக் கூத்தாடுகிறான். தாயின் காலடியில் வீழ்ந்து கண்ணீர் பெருக்குகிறான். அதே நேரத்தில் அவன் தான்  ‘ஐவரோடு நீயும் சேர்ந்து அறுவராக இருக்கலாம்; துரியோதனனை விட்டு வந்து விடு’ என்கிறாள். அங்கே தான் கர்ணனின் மனநிலை உயர்ந்து விளங்குகிறது.

“தாயே! நானும் துரியோதனனின் பத்தினி பானுமதியும் ஒரு நாள் தனியே சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது துரியோதனன் வந்தான். நான் வாசல் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்ததால் அவன் வந்ததைக் கவனிக்கவில்லை. கணவன் வருவதைப் பார்தததும் பானுமதி எழுந்தாள். அந்தச் சமயம் அவள் தோல்வியடையும் நேரம். எனவே, தோல்விக்குப் பயந்து ஓடுகிறாளென்று எண்ணிய நான் அவன் சேலையைப் பற்றி இழுத்தேன். அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலாபரணம் அறுந்து அதிலிருந்த முத்துக்கள் சிதறியோடின. அதன் பிறகுதான் நான் துரியோதனனைப் பார்த்தேன். அவன் என்ன எண்ணுவானோ என்று தலைகுனிந்து நின்றேன். என் தோழன் துரியோதனன் சிரித்துக்கொண்டே என்னை நோக்கிக் கீழே சிதறிக் கிடந்த முத்துக்களை  “எடுக்கவா? கோக்கவா?” என்று கேட்டான். அப்படிப்பட்ட கள்ளங் கபடமற்ற நட்பினனான துரியோதனனை விட்டு நான் வருவது துரோகமல்லவா தாயே!” என்கிறான் கர்ணன்.

இந்தக் கட்டத்தில் வில்லிப்புத்தூரார் எழுதியுள்ள பாடலைப் பாருங்கள்:

‘மடந்தை பொற்றிரு மேகலைமணி யுகவே
      மாசறத் திகழும் ஏகாந்த
இடந்தனில் சற்றே நான் அயர்ந்திருப்ப
      ‘எடுக்கவோ கோக்கவோ’ என்றான்;
‘திடம் படுத்திடு வேல் இராச ராசனுக்குச்
      செருமுனைச் சென்று செஞ்சோற்றுக்
கடங்கழிப்பதுவே எனக்கினிப் புகழும்
      கருமமும் தருமமும்’ என்றான்.

இவ்வாறு பழம்பெரும் கதைகளிலே காணப்படும் சிறப்பும் உயர்வும் இனி நாம் எளிதில் படைக்கக் கூடியனவா? எண்ணிப் பாருங்கள்.

அமர காவியங்கள்

‘கள்ளிப் புதர்களும் கற்றாழைக் காடுகளும் நிறைந்திருந்த கலைத் துறையை நாங்கள் கைப்பற்றி விட்டோம்; இனி இங்கே இதிகாசங்களும், புராணங்களும் இடம் பெற இயலாது’  என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்  ‘இராமாயணம்’ திரைப் படத்தை வெற்றிப் படமாகக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப்படத்தை நூற்றுக் கணக்கான நாட்கள் ஓட்டிக் காட்ட முடிந்தது என்றால் அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?

அரசியலிலே என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும், விஞ்ஞானம் இன்னும் எத்தனை புதுமைகளைக் கண்டாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும் நிலைத்து நிற்கும் ஆற்றல் படைத்த அமர காவியங்கள், சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம் முதலியவை.

மனித உள்ளங்களைப் பண்படுத்தவும் மனிதனை மனிதனாக்கித் தெய்வ நிலைக்கு உயர்த்தவும் நமது முந்தையோர் தந்து போன இந்தச் செல்வங்களுக்கு ஈடானவற்றை இனிப் படைக்க யாராலும் இயலாது. கடவுளரையும் மனிதர்களையும் கலந்து உறவாட விட்டுக் கதைகள் புனைந்து, அழியாத பேருண்மைகளை நெஞ்சத்திலே அழுத்தமாகப் பதிய வைக்கும் புராண இதிகாசக் கதைகளைக் குறைவாக மதிப்பிடுதல் கூடாது. இந்த உண்மையை மாணவர்களாகிய நீங்கள் நன்கறிந்து கொள்ள வேணடும்.

ஒரு நல்ல நாடகம் எப்படி இருக்க வேண்டும் என அறிஞர்கள் விரும்புகிறார்கள்? இதற்கொரு விளக்கம் தருகிறேன்.

எது நல்ல நாடகம்?

பலவிதமான மனோதத்துவ நிலைகளை, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நிகழக் கூடிய மனப் போராட்டத்தின் வெற்றி தோல்விகளை சீரிய நடிப்பின் மூலம் சித்திரித்துக் காட்டுவது; கலைச் சிறப்புக்கள் நிறைந்த கருத்தோவியமாகக் காட்சிகளை அமைப்பது; பார்ப்பவர்கள் புலன்களெல்லாம் ஒடுங்கித் தம்மை மறந்த நிலையில் ரசிக்குமாறு கதையை எழுதுவது; இம்மூன்று சிறப்புக்களும் ஒரு நல்ல நாடகத்திற்கு வேண்டும்.

நல்ல நாடகம் என்பதற்குரிய இலக்கணத்தைப் பற்றி விளக்கும்போது தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய கருத்துரை இது.

சென்னையில் புதிய நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. நாடகத்தைப் பார்த்துத் திரும்பிய எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மலையாளி;

‘நாடகம் எப்படியிருந்தது?’ என்று கேட்டேன். உடனே அவர் முகத்தைச் சுளித்தார். வெறுப்புடன்  “அதில் ஒரு சுக்கு மில்லா” என்றார்.

இது மலையாளத்தில் சாதாரணமாகச் சொல்லும் ஒரு வார்த்தை; நிகழ்ச்சியில் ஏதும் சுவை இல்லையானால்  ‘ஒரு சுக்கு மில்லா’ என்றுதான் குறிப்பது வழக்கம்.

இந்தப் பழஞ்சொல்லிலே ஒரு சீரிய பொருள் புதைந்து கிடக்கிறது.  ‘சுக்கு’ நோய்களுக்குரிய மருந்துப் பொருளல்லவா? எனவே, ஒரு சுக்கும் இல்லையென்றால் மக்கள் நோய்க்குரிய மருந்து (கருத்து) எதுவும் அந்த நாடகத்திலே இல்லை என்பது பொருள்.

உள்ளத்தை உயர்த்த வேண்டும்

நாடகம் வெறும் பொழுதுபோக்குக் கலையன்று; புன்மைகளைப் போக்கவும் அதைப் பயன்படுத்த வேண்டும். திரு.வி.க. அவர்களின் கருத்துரை  இதைத்தான் வலியுறுத்துகின்றது.

எந்த நாடகத்திலும் மக்களுக்குப் பயன்படும் ஒரு நல்ல கருத்து இருக்க வேண்டும். புராணம், இதிகாசம், சரித்திரம், சமுதாயம்- எந்த அடிப்படையைக் கொண்டு நாடகம் எழுதப்பட்டாலும், ஒன்று நான் முன்பு சொன்னது போல மனிதப் பண்பை உயர்த்துவதாக இருக்க வேண்டும், அல்லது சமுதாயத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும்.

“ஒரு நாடகத்தைப் பார்க்க வரும் மக்கள் நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது வந்த போதிருந்ததை விட உள்ளத்தில் சிறிதளவாவது உயர்வான எண்ணங்களைக்கொண்டு செல்ல வேண்டும். அதுதான் நல்ல  நாடகம்” என்று நமது ராஜாஜி அவர்கள்  ‘இராஜராஜ சோழன்’ நாடகத்திற்கு வாழ்த்துரை வழங்கியபோது குறிப்பிட்டார். திரு.வி.க. அவர்கள் நமது கருத்துரையில் குறிப்பிட்ட மூன்று சிறப்புக்களும் இருந்தால்தான் ராஜாஜி அவர்கள் சொல்லியது போல, பார்ப்பவர்கள் உள்ளத்தில் உயர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

இவ்விரு பெரியார்களுடைய அறிவுரைகளையும் என் அனுபவத்தையும் துணைகொண்டு பார்க்கும்போது  ‘நல்ல நாடகம்’ என்றால் அந்த நாடகத்தில் மக்களுக்குத் தேவையான  ‘கருத்து’;  அக்கருத்தை உள்ளத்தில் பதியும் வண்ணம் அமைத்துள்ள காட்சிக் கட்டுக்கோப்பு; இவற்றோடு கதைப் பொருளை நன்கு வெளிப்படுத்தும் நடிகர்களும் அமைய வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் சேரும்போதுதான் நல்ல நாடகம் மக்களுக்குக் கிடைக்கிறது.

நாடகத்தால் நாட்டுப் புரட்சி

கண்ணால் காணும்போது ஏற்படும் உணர்ச்சி படிக்கும்பொழுதோ கேட்கும்பொழுதோ ஏற்படுவதில்லை. மனித சமூகத்தின் நன்மைக்குரிய விஷயங்களை நெஞ்சில் பதியவைப்பதற்கு நாடகத்தைவிடச் சிறந்த சாதனம் கிடையாது. பொது நன்மைக்கான கருத்துக்களைக் கட்டுரையாகவோ, கதையாகவோ சொல்லுவதைவிட, இசையோடு பாடுவதைவிட நாடகமாக நடித்துக் காட்டுவது நல்ல பயனைத் தரும்.

மேலைநாடுகளில் நடைபெற்ற அநேக அரசியல் புரட்சிகளுக்கு அந்த நாட்டு நாடக மேடைகள் பேருதவியாக இருந்திருக்கின்றன. எங்கள் நாடகக் குழுவில் நாங்கள் நடித்துவந்த  ‘கதரின் வெற்றி, தேச பக்தி’ போன்ற நாடகங்களும்,  ‘கவியின் கனவு, இன்ப சாகரன்’ ஆகிய தேசீய நாடகங்களும் எத்தனை எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைச் சுதந்திர இயக்கத்தில் குதிக்கச் செய்திருக்கின்றன; விடுதலை வெறியூட்டியிருக்கின்றன.

ஒரு எழுத்தாளன் தன்னுடைய இலட்சியத்தில் பூரண வெற்றி பெற வேண்டுமானால் அவன் ஒரு சிறந்த  ‘நாடகாசிரியன்’ என்ற இடத்தைப் பெற வேண்டும். நாடகாசிரியன் ஆகும்போதுதான் அவனுடைய கற்பனைகள், கருத்துக்கள் எல்லாம் நாட்டுக்கும் மக்களுக்கும் பூரணமாகப் பயன்படுகின்றன.

மகாகவி ஷேக்ஸ்பியர், மகாகவி காளிதாசன் என்றெல்லாம் புகழும்போது அவர்கள் நாடகாசிரியர்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். வங்காளத்தில் துவிஜேந்திரலால் ராய் என்ற பெரியவர் இருந்தார். அவர் சிறந்த நாடகாசிரியர். கதை, கட்டுரை, கவிதை எல்லாம் எழுதியிருக்கிறார். ஆனால் அவரை நாடகாசிரியர் துவிஜேந்திரர் என்றே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். பேரறிஞர் பெர்னாட்ஷா எப்போது உலகப் புகழ் பெற்றார் தெரியுமா? நாடகங்கள் எழுதிச் செல்வாக்குப் பெற்ற பிறகுதான். இவை எல்லாம் எதைக் குறிக்கிறது? கட்டுரை, சிறுகதை, நாவல் எழுதுவதை விட நாடகம் எழுதுவது கஷ்டமானது என்பது மட்டுமன்று; நாடகம் மக்களுக்கு அதிகப் பயனைத் தரக் கூடியது என்பதுதான் உண்மை.

இத்தகைய பெருமை வாய்ந்த நாடகக் கலையை நீங்கள் வெறும் வேடிக்கை நிகழ்ச்சியாகக் கருதக் கூடாது. நல்ல நாடக நிகழ்ச்சிகள் உங்கள் உள்ளத்தை உயர்த்தி, சென்ற காலச் சிந்தனைகளையும் நிகழ்காலத்தின் உண்மைகளையும் வருங்காலத்தின் வளமைகளையும் எடுத்துக் காட்டுகின்றன.

கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரியும். கலைக் கண்ணாடியாகிய நாடக மேடையில் அகத்தையும் பார்க்கலாம். அதனால்தான்  ‘உலகம் ஒரு நாடக மேடை’ என்றும், நாடக மேடையை உலக அரங்கம் என்றும், உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடிகளாக நாடக மேடைகள் விளங்குகின்றனவென்றும் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே, உயர்வான நாடகக்கலை நம்முடைய வாழ்வை உயர்த்த, மனிதப் பண்புடன் வாழ, வளர வேண்டும்.

நல்ல கலையழகுடைய கருத்துப் பிரசார நாடகங்கள் 1924-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்திருக்கின்றன.

‘இராஜாம்பாள்’ நாடகம், மனத்திற்கொத்த இளைஞனை மணந்துகொள்ள ஒரு மங்கை படும் வேதனையைச் சித்திரிக்கும் நாடகம்.

‘இராஜேந்திரா’ நாடகம் ஆலயங்களில் சேவை புரிந்து வரும் அருச்சகர்களில் சிலர் தவறான வழியில் செல்லுவதை எடுத்துக் காட்டியும், தெய்வ சந்நிதியில் கூட இளைஞர்களின் கண்ணோட்டம் எவ்வாறு தீயவழியில் செல்லுகிறது என்பதை விளக்கியும், வரதட்சணையின் அலங்கோல அவல நிலைகளைத் தெளிவாகக் காட்டியும் மக்களிடையே பிரசாரம் செய்யும் ஒரு சிறந்த நாடகம்.

‘சந்திரகாந்தா’ நாடகம், மதத்தின் பாதுகாப்பாளர்கள் என்று சொல்லப்படும் மடாதிபதிகளில் சிலர் வெளியே சமயப் பிரசாரம் செய்வதாகக் காட்டி உள்ளே இரகசியத்தில் காமக் களியாட்டங்கள் நடத்தி வரும் அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறது; குறுநில மன்னர்கள் செய்யும் மோசடிகளையும் விளக்குகிறது.

இன்னும் தாசிகள் கோவிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்படுவது தவறு என்பதை விளக்கவும், கிழவர்கள் இளங்குமரியை மணக்கும் கொடுமையைக் காட்டவும், சீர்திருத்த முறையில் பல நாடகங்கள் எங்கள் குழுவில் நடிக்கப் பெற்றன.

குமாஸ்தாவின் பெண்

சாதி மத பேதங்களை எதிர்த்துப் போராடவும், பெண்ணுரிமையைப் பேணி வளர்க்கவும், கலப்பு மணத்தை ஆதரிக்கவும், விதவையர் துயரை எடுத்துக் கூறவும் நாடக மேடையை நல்ல முறையில் நாங்கள் பயன்படுத்தி வந்திருக்கிறோம். எங்களைப் போலவே மற்றும் பலர் நாடக மேடையைப் போற்றி வந்திருக்கிறார்கள். நாங்கள் நடத்திய  ‘குமாஸ்தாவின் பெண்’ என்ற சமுதாய சீர்திருத்த நாடகம் மக்கள் மனத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்று கூறுகிறேன்.

கோவையில் என் நண்பர் ஒருவர் தம் புதல்விக்குத் திருமணம் நடத்தினார். தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தந்தைக்குச் சந்தேகம் தோன்றி விட்டது. மணமகள் போட்டிருப்பதெல்லாம் அசல் நகைகள் தானா கில்ட் நகைகளாவென்று சம்பந்திகளுக்குள் தகராறு ஏற்பட்டது. கடைசியாக நகைகளைச் சோதித்துப் பார்க்காமல் தாலி கட்டக் கூடாதென்று மணமகனுக்குக் கட்டளை பிறப்பித்து விட்டார் அவர் தந்தை. மணமகளின் தந்தைக்கு மானம் பெரிதாகத் தோன்றியது. இப்படிப்பட்ட மணமகனுக்குத் தம் புதல்வியைக் கொடுக்க அவர் மனம் இசையவில்லை. தகராறு வளர்ந்தது. மணமகன் தந்தையோடு வெளியே கிளம்பினார். அவ்வளவுதான்; மணமகளின் தந்தை தன் கடையில் வேலை செய்யும் குமாஸ்தா ஒருவரைப் புது ஆடைகள் உடுத்தச் செய்து மணமகனாக்கி அவருக்கே தம் புதல்வியை மணஞ்செய்து கொடுத்தார். திருமணம் எல்லாம் முடிந்த பிறகு அந்த நண்பர் விவரமாக எனக்குக் கடிதம் எழுதினார்.

“நீங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தில் வரதட்சணை அதிகம் கேட்ட சம்பந்திகளை வெளியே அனுப்பிவிட்டு  ‘நானே மணமகன்’ என்று சொல்லி திரௌபதியின் கழுத்தில் தாலி கட்டுவீர்களே; அந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. துணிவோடு என் கடையிலிருந்த குமாஸ்தாவுக்கே என் மகளை மண முடித்துவிட்டேன். இந்தப் பெருமைகளெல்லாம் உங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைச் சேர்ந்தது” என்று எழுதியிருந்தார். நாடகத்தால் விளைந்த நற்பயனைப் பார்த்தீர்களா?

நாடகம் தந்த நற்பயன்

‘அந்தமான் கைதி’ என்றொரு நாடகம் நடித்தோம். தன் அன்புத் தங்கையின் நல்வாழ்வுக்காக அவளைப் பலவந்தப்படுத்தி மணந்த கிழவனைக் கொலை செய்து விட்டு தீவாந்திர தண்டனை பெறுகிறான் அண்ணன். இந்த நாடகத்தைப் பார்த்த மாவட்ட நீதிபதி சி.எஸ்.சௌத்திரி அவர்கள்,  ‘இந்த நாடகம் என் போன்ற நீதிபதிகளுக்கு நீதியை எடுத்துச் சொல்வது போல இருக்கிறது. இம்மாதிரியான நாடகங்களை என் போன்ற நீதிபதிகள் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்” என்று கூறினார். அப்படிக் கூறியதோடு நிற்கவில்லை. இரண்டு மாதங்களுக்குப்பின் நடந்த ஒரு கொலை வழக்கு அவர் முன் விசாரணைக்கு வந்த போது அந்த வழக்கு அந்தமான் கைதி வழக்குப் போலவேயிருந்ததால் குற்றவாளிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினார்.

இப்படி நாடகத்தால் நலன் விளைந்த எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம்.

ஷேக்ஸ்பியரின் உள் நாடகம்

நாடகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட செய்தியை நாம் ஆங்கில நாடகங்களிலே கூடப் பார்க்கலாம். மகாகவி ஷேக்ஸ்பியரின்  ‘ஹாம்லெட்’ நாடகம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்குமென்று கருதுகிறேன்.

அந்த ஹாம்லெட் நாடகத்திலேயே  ‘உள் நாடகம்’ ஒன்று வருகிறது. தன் தந்தையைக் கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க எண்ணுகிறான் ஹாம்லெட். நாடகம்தான் அதற்கு நல்ல வழி; உணர்ச்சி மிக்க நடிகர்களைக் கொண்டு தன் தந்தையின் கொலை நிகழ்ச்சியை நாடகமாக்கி நடிக்க வேண்டும்; சிற்றப்பன் கிளாடியசும் தன் அன்னையும் அந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும்; அப்போது அவர்களின் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது என்றெல்லாம் பார்க்க விரும்புகிறான்.

கதையைத் தானே எழுதினான். நடிகர்களை நடிக்கச் சொன்னான். சிற்றப்பனும் தாயும் நாடகத்தைப் பார்த்தார்கள். சிற்றப்பன் முகம் மாறியது. தந்தையைக் கொன்றவன் அவனே என முடிவுக்கு வந்தான் ஹாம்லெட்.

நாடகத்தின் நற்பயனை நன்குணர்ந்திருந்த மகாகவி ஷேக்ஸ்பியர் தமது நாடகத்திலேயே ஒரு உள் நாடகத்தைப் புகுத்தி இந்த அற்புதத்தை விளக்குகிறார். எனவே, நாடகம் பயனுடையதாக இருக்க வேண்டுமென்பதே மகாகவி ஷேக்ஸ்பியரின் கருத்துமாகும்.

இந்த உண்மையை நன்குணர்ந்துதான் ருசியா, சீனா போன்ற நாடுகளில் நாடகங்கள் நடத்துகிறார்கள். குழந்தைகளுக்கு என்றும்,  மாணவர்களுக்கென்றும், மற்றவர்களுக்கென்றும் தனித்தனியாக நாடகம் போடுகிறார்கள்; திரைப்படங்களை எடுக்கிறார்கள். இவற்றையெல்லாம் கல்வியிலாகாவின் மூலம் அரசாங்கமே செய்கிறது. நம்முடைய நாட்டிலும் அந்த நிலை வந்துகொண்டிருக்கிறது.

பருவத்திற்கேற்றபடி நாடகம்

பருவத்திற்கு ஏற்றபடி நாடகம் நடத்தும் பழக்கம் நமக்கு இன்னும் ஏற்படவில்லை. எங்களைப் போல நாடகத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் அந்தப் பழக்கத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் ஆதரவும் அரசாங்க ஆதரவும் இன்னும் ஏற்பட வேண்டும்.

வயதான பெரியவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்தறியும் அனுபவம் இருப்பதால் அவர்கள் எந்த நாடகத்தையும் பார்க்கலாம். அதனால் பெரிய பிழை எதுவும் நேர்ந்துவிடாது. ஆனால், சிறுவர்கள், இளைஞர்கள், உலக அனுபவம் பெறாதவர்கள்; உணர்ச்சிவசப்பட்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் உள்ளம் படைத்தவர்கள். அதனால் நல்ல நாடகம் எனத் தேர்ந்தெடுத்தவற்றைத் தான் சிறுவர்கள் பார்க்க வேண்டும்.

ஓட்டல்களில் போய் கண்டதையெல்லாம் வாங்கித் தின்றால் உடம்புக்கு நோய் வந்து விடுகிறதல்லவா? அதே போன்று நாட்டிலே நடைபெறும் எல்லா நடகங்களையும் பார்ப்பதால் இளைஞர்களின் உள்ளமும் நோயுற்றதாகிவிடும்.

வகுப்புகளுக்குத் தக்கபடி, மாணவர்களின் வளர்ச்சிக்குத் தக்கபடி படிக்கும் புத்தகங்களை மாற்றிக் கொண்டே போகிறோம் அல்லவா? அதே போன்று பருவத்திற்குத் தக்கபடி மாணவர்கள் பார்க்கும் நாடகங்களின் படிப்பினையும் மாறித்தானே இருக்க வேண்டும்? பருவத்திற்கேற்ற கருத்துடைய நாடகங்களைத் தானே அவர்கள் பார்க்க வேண்டும்?

சிறுவர்களுக்குரிய நாடகம் எது?

சிறுவர்களின் உள்ளம் தூய்மையானது; பரிசுத்தமானது; பிஞ்சு உள்ளம். பச்சை மரத்தில் ஆணியை அடித்தால் எப்படி எளிதாக உள்ளே நுழைந்து விடுகிறதோ, அதேபோல தூய்மையான இளம் உள்ளத்தில் தவறான விஷயங்கள் வெகு சுலபமாகப் புகுந்துவிடும். எனவே, அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

இளம் பிள்ளைகளுக்குரிய நாடகம்? எது வீட்டில் தாய் தந்தை முதலியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்; பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடத்தில் எப்படிப் பணிவோடு மரியாதையோடு பழக வேண்டும்; உடலையும் உடைகளையும் எவ்விதம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; பள்ளிக்கு வரும்போது வீதிகளிலே வம்பு பேசாமல் எவ்வாறு ஓரங்களிலே நடந்து வர வேண்டும்; என்பனவற்றை யெல்லாம் நாடகங்களின் மூலம் போதிக்கலாம்.

மகாகவி பாரதி  ‘ஓடிவிளையாடு பாப்பா’ என்னும் பாட்டிலே குழந்தைகளுக்கு எவ்வளவு அருமையாக விஷயங்களைச் சொல்லுகிறார்?  அதையேதான் நாடகத்திலும் சொல்ல வேண்டும்.

உயிர்களிடத்தில் அன்பு; உறுதியான நெஞ்சு; தெய்வபக்தி உன்னதமான உயர்ந்த எண்ணங்கள்; இவற்றையெல்லாம் நாடகத்தின் மூலம் போதிக்க வேண்டும்.

தாய்மொழிப் பற்று; தேசபக்தி; தீமைகளை எதிர்த்துப் போராடும் உணர்ச்சி இவைகளெல்லாம் நம் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே உண்டாக வேண்டும். நல்ல நாடகங்களின் வாயிலாக இவற்றைச் சுலபமாகப் பெறலாம்.

காவியம் தந்த ஓவியம்

ஒரு சிறுகதை சொல்லுகிறேன் கேளுங்கள். நல்ல கதை:

ஓர் ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு இருபது வயது. அந்த இளைஞனுடைய தாயும் தந்தையும் வயதானவர்கள்; இருவருக்கும் கண் தெரியாது. நடக்க முடியாத நிலையில் இருந்தார்கள். இளைஞன் மிகவும் நல்லவன். பெற்றவர்களைத் தெய்வமாக எண்ணிப் பேணி வந்தான்.

தாய் தந்தை இருவரையும் இரண்டு கூடைகளில் உட்கார வைத்துத் துணியால் கட்டிக் காவடிபோல தான் போகுமிடங்களுக்கெல்லாம் தோளிலே சுமந்து கொண்டு போய்ப் பாதுகாத்து வந்தான். பெற்று வளர்த்த தாய் தந்தைக்குப் பணிவிடை செய்வதையே தனது இலட்சியமாகக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் ஒரு பெரிய காட்டின் வழியே அவன் அவர்களிருந்த காவடியைத் தூக்கிக் கொண்டு போகும் போது தந்தைக்குத் தாகம் ஏற்பட்டது.  ‘மகனே, கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா’ என்றார் தந்தை. உடனே மகன் அவர்களைக் கீழே இறக்கி வைத்து விட்டு, ‘அப்பா, சமீபத்தில் தண்ணீர் இருக்கிறது, கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு சற்று தூரத்திலிருந்த சுனைக்குப் போய் தண்ணீரை மொண்டான். எங்கிருந்தோ ஒரு அம்பு விரைந்து வந்து அந்த இளைஞன் மார்பில் பாய்ந்தது. இளைஞன்  ‘அப்பா, அம்மா’ என்றலறிய வண்ணம் கீழே சாய்ந்தான். அந்த சத்தத்தைக் கேட்டதும் அங்கே ஒரு அரசன் வில்லும் கையுமாக ஓடி வந்தான். அந்த அரசன் பெயர் தசரதன். அவன் வேட்டையாட வந்த ஓர் அரசன். இளைஞன் தண்ணீர் மொண்ட சத்தம் கேட்டவுடனே, ஏதோ மிருகம் தண்ணீர் குடிக்கிறது என்று நினைத்துப் புதர் மறைவிலிருந்து பாணத்தை எய்துவிட்டான். என்ன செய்வது?

இளைஞன் ஒருவன் அம்ம்புபட்டு மெய் நோக அலறித் துடிப்பதைக் கண்டு அரசன், தான் அறியாமல் செய்த குற்றத்தை மன்னிக்கும்படியாக மன்றாடினான். மரணத் தறுவாயிலிருந்த அந்த இளைஞன்,  ‘ஐயா, நீங்கள் தெரியாமல் செய்ததை நான் மன்னித்து விட்டேன். என் உயிர் பிரியப் போகிறது. இந்த சமயத்தில் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று அரசனை வேண்டினான்.

“தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமென்று கேட்ட என் வயது முதிர்ந்த தாயும் தந்தையும் சிறிது தூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கண் தெரியாதவர்கள்; நடக்கவும் முடியாதவர்கள். அவர்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் தாகத்தைச் சாந்தி செய்யுங்கள். அவர்கள் தண்ணீரைக் குடிக்கு முன் எதுவும் பேச வேண்டாம்; நான் இறந்துவிட்ட சேதியைத் தண்ணீர் குடித்த பின் சொல்லுங்கள்” என்று கூறித் தன் உயிரைவிட்டான்.

இந்தக் கதை இராமாயணத்தோடு ஒட்டிய ஒரு பழைய கதைதான். சாகும் தறுவாயிலும் பெற்றவர்களுக்குத் தனது கடமையைச் செய்த இப்பேர்ப்பட்ட நல்ல இளைஞர்களின் கதையை நாடகமாக நடித்துக் காட்டினால் சிறுவர்களுக்கு எவ்வளவு நன்மை ஏற்படும்?

நாடகத்தில் பிரசாரம் என்றால் இதைப் போன்ற நல்ல எண்ணங்களை மனத்தில் பதிய வைக்க வேண்டும்.

பிரசாரம் என்றால் என்ன?

பிரசாரம் என்பதற்குப் பொருள், ஒரு கருத்தை அல்லது கொள்கையைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லி அதை நாடெங்கும் பரவச் செய்வது. இத்தகைய பிரசாரங்கள் இப்போது நாடகங்களின் மூலம் தமிழ்நாடெங்கும் பரவி வருகின்றன. ஆனால் நல்ல கருத்துக்கள், உயர்வான எண்ணங்கள் பரவவில்லை.

நாடகம் எழுதுவது மிகவும் கஷ்டமானது என்பதை முன்பே சொன்னேன். இப்போது தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மலிந்துள்ள இன்றையச் சூழலில் நாடகம் எழுதுவது மிக எளிதான ஒன்றாகக் கருதப்பட்டு விட்டது.

பண்புகள் நிலைக்க வேண்டும்

தாய்மொழியாகிய தமிழைச் சரியாகப் படிக்காதவர்கள் கூட நாடகம் எழுதி அனுப்புகிறார்கள். நாலைந்து நாடகப் போட்டிகளில் நாடகத்திற்காக வந்த பிரதிகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந்த அனுபவத்தைக் கொண்டு சொல்லுகிறேன்.

தமிழனுக்கென்று சில பண்புகள் இருக்கின்றன. நாகரிகம் இருக்கிறது, மரபு இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆழ்ந்து படித்துத் தெரிந்துகொண்ட அறிவாளிகள் தாம் நாடகம் எழுத வேண்டும்.

புதுமை மோகம்

மனிதகுலம் இன்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி என்று பேசி வருகிறது. கதையில் புதுமை, கருத்தில் புரட்சி, எழுத்தில் உணர்ச்சி என்றெல்லாம் விளம்பரங்களில் பார்க்கிறோம். பொது மக்களுடைய இந்தப் புதுமை ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதுமையென்ற போர்வையில் பொல்லாங்கு செய்கிறார்கள் சிலர். மக்கள் மறுமலர்ச்சி மோகத்தினால் புதுமை என்ற பெயரால் நடமாடுபவைகள் நல்லனவா, தீயனவா என்பதைக் கூடச் சிந்தித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

புதுமை வரவேற்கப்படும் போது, அல்லது புதுமை உருவாக்கப்படும்போது, பழமை அத்தனையும் குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

நாம் விரும்பும் புதுமை மனித வாழ்வுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும் என்பதைத் தான் கலைஞன் இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இந்தப் புதுமை ஏமாற்று வித்தை இன்று திறமையாகக் கையாளப்படுகிறது. அறிஞர்கள் என்று நம்மால் கருதப் படுபவர்கள் கூட இந்தச் செயல்களை ஆதரிக்கிறார்கள்.

கதைக்குப் பொருத்தமோ பொருத்தமில்லையோ கவலையில்லை. வளர்ச்சி பெற்று வரும் மக்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். கதை, பாத்திரம், இடம், நேரம் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் எதை வேண்டுமானாலும் சொல்லத் துணிந்து விடுகிறார்கள். இப்படி எங்கேயாவது ஏதாவது இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லிக் கைதட்டல் வாங்கி புதுமையான மறுமலர்ச்சிக் கருத்துக்களைப் புகுத்திவிட்டதாகப் பறை சாற்றுகிறார்கள்.

மறுமலர்ச்சி என்பது எது?

கலைகளின் மூலம் தங்கள் கருத்துக்களை- கொள்கைகளைப் பிரசாரம் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு. அதற்காகக் கதையைக் கொலை செய்வது கூடாது. சொல்ல விரும்பும் கருத்துகளுக்கேற்பக் கதையையும் பாத்திரங்களையும் படைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் கருத்துக்களைத் தாராளமாகச் சொல்லட்டும். பாத்திரத்தின் தன்மையைக் கொன்றுவிட்டு மக்களின் மதிப்பைச் சம்பாதிக்க முயல்வது, உயிரைப் போக்கிவிட்டுப் பிணத்திற்கு அலங்காரம் செய்வது போலத்தான் இருக்கும்.

நாடகக் கலையைப் பொறுத்த வரை புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது மக்களின் கைத்தட்டலின் வாயிலாக வெளிப்பட்டால் போதாது. பார்ப்பவர் உள்ளத்திலே பாய்ந்து நம் பண்புக்கொத்த முறையில் அது செயலாக வெளிப்பட வேண்டும். அதுவே மறுமலர்ச்சி.


மற்றொன்று இங்கே சொல்ல விரும்புகிறேன். கலைஞன் அரசியல்வாதி அல்லன். அரசியல்வாதியாகக் கலைஞன் இருக்கலாம். ஆனால், அவன் கலையைக் கையாளும்போது கலைஞனாகவே காட்சி அளிக்க வேண்டும். அரசியல்வாதி எதிர்க்கட்சிக்காரனைப் ஏசிப் பேசுவான். கலைஞன் அந்த வழியை மேடையில் பின்பற்றக் கூடாது. கண்ட கண்ட இடங்களில் கட்சிப் பிரசாரங்களை அரசியல்வாதி புகுத்தலாம். கலைஞன் அப்படிச் செய்தல் கூடாது. அப்படிச் செய்தால் கலை மறைந்துவிடும். பிரசாரம் மட்டுமே நிற்கும்.

எப்போதுமே ஆக்க வழியில் செல்லுவது தான் கலை. கலைஞன் ஆக்கத்திற்காகவே வாழ்கிறான். அழிவிற்காக அல்ல. கலையில் அழிவுப்பாதையே கிடையாது.


நன்மைக்காக வளருவதே கலை

‘மனிதனுக்கு அறிவிருக்கிறது. அதை நல்ல வழியிலும் திருப்பலாம்; கெட்ட வழியிலும் திருப்பலாம். நல்லதைவிடத் தீயதைத்தான் மனித மனம் விரைவில் ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது’ என ஒரு அறிஞர் கூறுகிறார். ஆகவே, பொழுதுபோக்கு என்ற பெயரால் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மக்களின் நலன் கருதியே வளர வேண்டும்.

இறுதியாக ஒன்று கூறுகிறேன். அரசியல் கருத்துக்களும் விஞ்ஞான உண்மைகளும் வளர்ந்து வருகின்றன. மனிதன் சந்திர மண்டலத்தைத் தொட்டுவிட்ட அளவுக்கு உயர்ந்திருக்கிறான். உண்மைதான். மனித மனம் மிகப் பெரிதாக விரிவடைந்திருக்கிறது. அறிவு வானை அளந்துவிட்டது. ஆனால், இதயம் மட்டும் விரிவடையவில்லை. சுருங்கிக் கொண்டே போகிறது.

அன்பு, அறம் இவற்றையெல்லாம் நமது இதயம் ஏற்க மறுக்கிறது. அன்பினாலும் அறத்தினாலும் இவற்றையெல்லாம்விட மேலாக அருளினாலும் மனித இதயம் வளர்ந்து பண்படாவிட்டால், வளம்பெறாவிட்டால், மனிதன் மனிதனாக வாழமுடியாது என்பதை உறுதியாகச் சொல்லுவேன். அறிவியல் வளர்ச்சியாலும் விஞ்ஞான வளர்ச்சியாலும் மனிதன் கண்ட உண்மைகளை மனித குலத்திற்குப் பயன்படுத்த, அன்பும், அறிவும், அருளும், அவன் இதயத்திலே இடம் பெற வேண்டும். எந்தச் சமயமாயிருந்தாலும் எந்த மதமாயிருந்தாலும் இந்த உண்மையைத் தான் போதிக்கிறது.

நாடகசாலை நல்ல கலாசாலை

எனவே, சமய உண்மைகள் நாடகங்களின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவேண்டுமென்பதை அழுத்தமாகச் சொல்லுவேன்.

“கண்ணைச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்(கு)
எண்ணரிய போதனைகள் ஈவதற்கு- நண்ணுமிந்த
நாடகசாலை யொத்த நற்கலாசாலை யொன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து”

இவ்வாறு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.  ‘நாடக சாலையை யொத்த நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ? சொல்’  என்று கம்பீரத்துடன் கேட்கிறார் கவிமணி. ஆம்; நாடகசாலையை நல்ல கலாசாலையாக அந்தக் கவிதை உள்ளம் காணுகிறது. இந்தப் பாடல் எங்கள் அவ்வையார் நாடகத்தை கவிமணி அவர்கள் பாராட்டியபோது பாடிய பாடல்.

இந்தக் கருத்தின்படி நாடக நற்கலாசாலைகள் நாடெங்கும் தோன்ற வேண்டும். அதன்மூலம் மக்களின் கண்ணைச் செவியைக் கருத்தை எல்லாம் கவர்ந்து, அவர்களுக்கு எண்ணரிய போதனைகள் ஈந்து அவர்கள் வாழ்வை வளமுடையதாக்க வேண்டும்; தூய்மைப்படுத்த வேண்டும்.

சொல்லும் செயலும் ஒத்திருக்கும் நல்ல பண்புடைய கலைஞர்கள் நாடகம் எழுத வேண்டும். அப்படிப்பட்ட நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப்பெற வேண்டும்; ரசிகர்கள் அவற்றை ஆதரித்துப் போற்றுவதன் மூலம் தங்கள் உள்ளங்களை உயர்வு பெறச் செய்யவேண்டும். நாட்டிலே செய்யப்படும் எந்தப் பிரசாரமும் கதையழகோடு, கலையழகோடு மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் வழிகோல வேண்டும்.

கலை வழியே அன்பு வழி; அற வழி!
வளர்க நாடக நற்கலை!

(நிறைவு)

$$$

Leave a comment