நாடகக் கலை – 3 அ

-அவ்வை டி.கே.சண்முகம்

சமுதாயத்தை உயர்த்துவது எப்படி என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமுதாயத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால் அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் நன்மையேற்படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக நம் கலையில் பிரசாரக் கருத்துக்களே கூடாது என்ற முடிவுக்கு வந்து  ‘கலை கலைக்காகவே’ என்னும் கோஷ்டியில் சேர்ந்துவிட முயல்வது தவறாகும்.

3. நாடகத்தில் பிரசாரம் (அ)

கலை கலைக்காகவா?

‘கலை கலைக்காகவே’ என்று சொல்லுபவர்கள் நம்மிடையே சிலர் இருக்கிறார்கள்.  ‘கலை வாழ்க்கைக்காகவே’ என்று சொல்லுபவர்கள் – எண்ணுபவர்கள் பலர் இருக்கிறார்கள். கலையை ரசிப்பவர்களிடையே மட்டுமல்ல இந்த வேற்றுமை; கலையைக் கையாள்பவரிடையேயும் கூட இவ்வாறு இரண்டு வேறுபட்ட கொள்கைகள் இருந்து வருகின்றன.

கலை கலைக்காகவே என்று கருதுபவர்கள் நாடகத்தை வெறும் பொழுதுபோக்காகக் கருதி ரசிப்பதோடு மன நிறைவு பெற்று விடுகிறார்கள்.
கலை வாழ்க்கைக்காகவே என எண்ணுபவர்கள் அவ்வாறு ரசிப்பதில்லை. அவர்களுக்கு கலை வாழ்க்கைக்குப் பயன் தரும் ஒன்றாக அமையவேண்டும். பயனில்லாத கலையை அவர்கள் போற்றுவதில்லை.

பொழுதுபோக்காக மட்டுமே கலை இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் மக்களிடம் – மனித சமுதாயத்தினிடம் கருணை இல்லாதவர்கள், அன்பில்லாதவர்கள். மனிதன் உயர வேண்டும், வாழ்க்கை உயர வேண்டும்; சமுதாயம் உயர வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. ஆனால் கலை உயர வேண்டுமென்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்வுக்காகவே கலை

மனித சமுதாயத்தினிடம் பற்றுக் கொண்ட ரசிகர்கள் கலைஞர்கள், மனித வாழ்வு வளம்பெற வேண்டுமென எண்ணும் நல்லவர்கள் கலை, சிறப்பாக நாடகக் கலை வாழ்வுக்கு வளர்ச்சி தரும் முறையிலே தான் வளர வேண்டுமென விரும்புவார்கள்.

நமது நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள் பாருங்கள்:

‘கலையென்றால் உணர்ச்சிகளைக்
கவர வேண்டும்.
களிப்பூட்டி அறிவினைப் போய்க்
கவ்வ வேண்டும்.’

ஆம்; கலை ரசிகனுக்குக் களிப்பூட்ட வேண்டும். அவன் உணர்ச்சிகளைக் கவரும் முறையில் இருக்க வேண்டும். அதற்குமேல் அவனது அறிவைப் போய்த் தட்டியெழுப்பவும் வேண்டும் என்று சொல்லுகிறார் கவிஞர். மகாகவி பாரதி சொல்வதைப் பாருங்கள்:

‘வெள்ளத்தின் பெருக்கைப் போல்
கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்
குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்!’

உண்மைதான்; கலைப்பெருக்கினால் மனித குலத்தின் அறிவுக்கண் திறக்கிறது. அறியாமைப் படுகுழியில் விழுந்து கிடக்கும் மக்களுக்கு அது வாழ்வளிக்கிறது. சமுதாயத்தின் மனவிருளை நீக்கி அறிவொளி பரப்பி நல்வழி காட்டுகிறது.

நல்ல நாடகங்களின் மூலம் மக்கள் நல்லறிவைப் பெறுகிறார்கள். வாழ்க்கையின் சிக்கல்களைப் புரிந்து கொள்கிறார்கள். அதன்மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குரிய துணிவைப் பெறுகிறார்கள்.

பல்வேறு வகைப்பட்ட நாடகக் கதை நிகழ்ச்சிகளின் மூலம் வாழ்க்கை உண்மைகள் மக்களுக்கு எளிதாக எடுத்துக் காட்டப்படுகின்றன. மனிதன் மனிதனாக வாழ முயல்கிறான். தவறு நேரும் சமயங்களில் நாடகக் காட்சிகள் அவன் நினைவுக்கு வருகின்றன. அவை அவனுக்குச் சரியான வழியைக் காட்டித் திருத்துகின்றன.

கல்வியறிவோடு இந்தக் கலையறிவும் சேரும் போது மனிதன் நினைவு பெறுகிறான். தான் கற்ற கல்வியால் பெற்ற அறிவின் வழியில் நிற்பதற்கு நாடகக் கலையின் மூலம் அனுபவப் பேருண்மைகளையும் அவன் தெரிந்து கொள்ளுகிறான்.

கல்வி, அறிவை வளர்க்கின்றது. இந்த நாடகக் கலை பல அனுபவங்களைக் காட்சிப்படுத்திக் காட்டி உணர்த்துகின்றது. அறிவு எப்போதும் உண்மையை உணர்த்தும். ஆனால், மனிதனுடைய மனம் உணர்ச்சி நிறைந்தது. அந்த உணர்ச்சி வசப்பட்ட மனம் உண்மையை நாடிச் செல்வதற்கு அனுபவமே துணை செய்யும். உணர்ச்சிகளுக்கு அறிவைப் பறிகொடுத்து விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சக்தி அனுபவம். இந்த அனுபவத்தை நாடகக் கலையால் நாம் பெறுகிறோம்.

நாடகத்தின் பயன்

திரு. பரிதிமாற்கலைஞன் அவர்கள் தமது  ‘நாடக இயல்’  என்னும் நூலில் நாடகத்தின் பயனைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இந்த நாடக இலக்கண விளக்கத்திற்கு  ‘அறம்’ என்றே தலைப்பிட்டிருக்கிறார்.

‘நல்லொழுக் கத்தை நனிவிரித் துரைத்தலு
நல்லொழுக் கமுளார் நன்மை யெய்தலுந்
தீயொழுக் கத்தின் தீமையைச் செப்பலுந்
தீயொழுக் கமுளார் தீதுற் றழிதலுந்
தீயர்தந் தீமையைச் சிறப்பித் துரைப்பினுஞ்
செம்மையோ ரதனைச் சினந்துரை யாடலும்
அரியநாற் பொருளினுள் அறத்தின் பாலவாம்.’

நல்ல ஒழுக்க நெறிகளை விரிவாக எடுத்துக்காட்ட வேண்டும்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் கதையின் முடிவில் நன்மை பெற வேண்டும்; தீய ஒழுக்கங்களால் விளையும் கேடுகளை எடுத்துக் கூற வேண்டும்; அத்தகைய தீயவர்களை அவர்கள் செய்யும் தீமையே அழித்துவிட வேண்டும்; தீயனவற்றைத் தீச்செயல் புரிவோர் எவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொன்னாலும், நல்லவர்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவதாக அமைய வேண்டும்; இதுவே அறம் என்று அழகாகக் கூறுகிறார் ஆசிரியர்.

இவ்வளவு விளக்கமாக நாடக இலக்கணம் கூறிய பிறகும் கூட  ‘கலை கலைக்காகவே’ என்பதில் என்ன பொருளிருக்கிறது?

காணும் கலை

நாடகம் ஒரு மகத்தான சக்தி; அறிவையும் உள்ளுணர்ச்சியையும் கிளறிவிடக் கூடிய சக்தி. கண், காது, மனம் மூன்றையும் தன்பால் இழுத்து வைத்துக் கொள்ளும் ஓர் அற்புதக் கலை. காவியக் கலைகளில் நாடகம், பார்க்கும் கலையாகக் கருதப் பெறுகிறது. அதனால்தான் நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அறிஞர்கள், ‘நாடகம் அச்சில் அழகாக வந்து விடுவதால் மட்டுமே வளர்ந்து விடாது; அரங்கிலும் ஆடிச் சிறப்புப் பெற வேண்டும்’ என்கிறார்கள்.

நாடகத்தில் இயல் இருக்கிறது, இசை இருக்கிறது, மூன்றாவதாக நடிப்பும் இருக்கிறது. இவற்றோடு கதை, வேடம், காட்சிகள் அனைத்தும் ஒன்று சேரும்போது லட்சக் கணக்கான மக்களுக்குச் சுவைதரும் ஒன்றாக நாடகம் அமைந்து விடுகிறது.

நாம் இப்படியெல்லாம் சொல்லும்பொழுது  ‘கலை கலைக்காகவே’ என்று சொல்லுபவர்களுக்குக் கோபம் வருகிறது.  ‘என்னையா! பகலெல்லாம் அலுவலகங்களில் உழைத்துவிட்டு அலுப்போடு கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க வருகிறான் மனிதன். வந்த இடத்திலும் வாழ்க்கைத் தொல்லைகளைப் பற்றிப் பிரசாரமா?’ என்று கேட்கிறார்கள். உண்மைதான். நாடகம் அவர்கள் எண்ணுகிறபடி பொழுதுபோக்குக் கலையாக இருக்கலாம். ஆனால் நல்ல கலைஞர்கள், தாய்மைப் பண்புள்ள கலைஞர்கள், நாடகத்தை அதற்காக மட்டும் பயன்படுத்த மாட்டார்கள்.

கள் வெறியும் கலை வெறியும்

கள் வெறியால்கூட சில மணி நேரம் இன்பம் கிடைக்கிறது. கலையும் ஒரு வகை வெறிக்குச் சமமானதுதான். சில மணி நேர இன்பப் பொழுதுபோக்குக்காக மட்டும் இதைப் பயன்படுத்துவோமானால் கள் வெறிக்கும் கலை வெறிக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடுமல்லவா?

எனவே, பொழுதுபோக்கு என்ற போர்வையில் சில பல நல்ல உண்மைகளைச் சொல்லுவதே நாடகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். பொழுதுபோக்குக் கலையென்பது கரக விளையாட்டு, காவடியாட்டம், சிலம்பக்கூத்து, கழைக் கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், இன்னும் இவை போன்ற பல்வேறுபட்ட கலைகளாகும். இந்தக் கலைகளெல்லாம் தனி மனிதனின் பயிற்சித் திறமையை வெளிப்படுத்தும் கலைகள். இவற்றிலும்கூட ஏதேனும் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு பாடத் தொடங்கும் போது இவையும் பிரசாரக் கலைகளாகி விடுகின்றன. பொதுவாக எல்லாக் கலைகளுமே ஒன்று அறிவு வளர்ச்சி, அல்லது உடல் வளர்ச்சி இவற்றின் அடிப்படையிலே எழுந்தவைதாம்.

அறிவு வளர்ச்சிக் கலை

நோய் நொடி எதுவும் வராமல் உடம்பைப் பாதுகாப்பதற்காக நாம் உடற்பயிற்சி செய்கிறோம்; யோக ஆசனங்கள் போட்டுப் பழகுகிறோம். ஆனால், உடல் பயிற்சியிலும் ஆசனங்கள் போடுவதிலும் எல்லோருக்கும் உற்சாகம் இருப்பதில்லை அல்லவா? உடற்பயிற்சி நேரத்தில்  ‘உடம்பிற்குச் சரியில்லை’  என்று எத்தனை பேர் ஓடி ஒளிகிறார்கள்! அதற்காகத் தான் பலவிதமான விளையாடல்களையும் நமது பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். விளையாட்டு நேரம் வந்ததும் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு கலந்து கொள்ளுகிறீர்கள்? பலீன் சடுகுடு, நொண்டி, கிளித்தட்டு முதலிய பழங்கால விளையாடல்களும் இன்று நீங்கள் விரும்பும் கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ், புட்பால் முதலிய பல்வேறு விளையாடல்களும் உடல் வளர்ச்சிக்காக ஏற்பட்டவைதாம்.

அறிவு வளர்ச்சிக்கான விளையாடல்களும் உண்டு. நாடகம் அறிவு வளர்ச்சிக்கான விளையாடல்களில் ஒன்று.

கட்டுரை- கதை- நாடகம்

‘இளமையிற் கல்’ என்று நமது அவ்வைப் பிராட்டி சொல்லியிருக்கிறார். இதை நாம் புத்தகத்தில் படிக்கிறோம். இதையே கருப்பொருளாக வைத்து இளமையில் ஒழுங்காகப் படித்ததனால் நன்றாக வாழ்ந்த ஒருவனையும், படிக்காததனால் பெரியவனானபின் கஷ்டப்பட்ட ஒருவனையும் சேர்த்துக் கதையாகச் சொல்லுகிறார்கள்.  ‘இளமையிற் கல்’ என்று நீதி சொன்னதை விட அந்த நீதியைக் கதையாகச் சொல்லும்போது நமக்கு இன்னும் நன்றாகப் புரிகிறதல்லவா?

பண்டைக் காலத்திலெல்லாம் நமது பாட்டிமார்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி நீதிக்கதைகள் சொல்லுவதுண்டு.  ‘திருடாதே’ என்பதற்காக,  திருடியதால் ஒருவன் அடைந்த கஷ்டங்களை விளக்கி ஒரு கதை, நல்லவனுடைய நட்பை எடுத்துக்காட்ட ஒரு கதை, தீய நட்பை விளக்க ஒரு கதை; இப்படிக் கதைகளின் மூலம் நமக்கு அறிவுரைகள் கூறி நம்முடைய பாட்டிமார்கள் நம்முடைய அறிவை வளர்த்திருக்கிறார்கள். அந்தக் கதைகளையே காட்சிகளாக வகுத்து வேடம் புனைந்து நாடகமாக நடித்தால் இன்னும் தெளிவாக சிறுவர்கள் மனத்தில் பதியும்.

அவ்வைப் பிராட்டி நமக்குச் சொன்ன அறிவுரைகளையெல்லாம் காட்சிகளில் சேர்த்துத்தான் அவ்வை நாடகத்தை நாங்கள் நடித்து வருகிறோம்.

வாழ்வையே உயர்த்துவது

1945-இல் எங்கள் அவ்வை நாடகத்தைத் திருச்சிராப்பள்ளியில் பார்த்துவிட்டுப்போன  ‘கல்கி’ ஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது பத்திரிகையில் விமர்சனம் எழுதினார்கள். அதில் ஒரு பகுதியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன்.

“இந்த நாடகத்தைப் பார்த்து வந்தபோதும் அதன் முடிவிலும் எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் கையில் மட்டும் அதிகாரம் இருந்தால் இந்த நாடகக் கம்பெனியையும், இந்த ஔவையார் நாடகத்தையும் உடனே நாட்டின் பொதுவுடைமையாக ஆக்கிவிட வேண்டும் என்பதுதான். ஆம்; இந்த நாடகக்காரர்களை ஒரே இடத்தில் வெகு காலம் இருக்கவே அனுமதிக்கக் கூடாது. ஊர் ஊராகப் போய் ஒவ்வொரு மாதம் இருக்கச் செய்ய வேண்டும்…

தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் இந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும். ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை பார்த்துவிட வேண்டும். பள்ளிக்கூடத்தில் எத்தனை வருடம் படித்தாலும் அடைய முடியாத பயனை நம் குழந்தைகள் அடைந்து விடுவார்கள். பழந்தமிழ் நாட்டின் பண்பாடு எத்தகையது என்பதை அவர்கள் நன்றாக அறிந்துகொண்டு விடுவார்கள். இதைக்காட்டிலும் நமது குழந்தைகளுக்கு நாம் செய்யக் கூடிய நன்மை வேறு என்ன இருக்கிறது? அவ்வையார் நாடகம் பார்த்து அனுபவிக்க வேண்டிய கலைக்காட்சி மட்டுமல்ல; தமிழர்களின் வாழ்வையே உயர்த்தக்கூடிய நிர்மாணத் திட்டத்தைச் சேர்ந்தது.”

-இவ்வாறு திரு. ரா.கிருஷ்ணமூர்த்தி 1945-இல் எழுதினார்.

தமிழனின் ஆற்றலைக் கண்டேன்

1948-இல் சென்னையில் ஔவையார் நாடகத்தைப் பார்த்தபோது திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்கள் கூறியதாவது:

“அவ்வை நாடகம் தளர்ச்சியுற்றிருந்த என் உள்ளத்தில் புதிய உணர்ச்சியையும் நம்பி்க்கையையும் ஊட்டி விட்டது. இந் நாடகத்தின் மூலம் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் தனியரசு செலுத்திய தமிழனின் ஆற்றலைக் கண்டு உள்ளம் பூரித்தேன். நாடகம் முழுவதிலும் நாட்டிற்கு இன்று வேண்டிய நல்லுரைகளே செம்பொருளாகக் கிடக்கின்றன.”

-இவ்வாறு இன்னும் எத்தனை, எத்ததனையோ அறிஞர் பெருமக்கள் அவ்வை நாடகத்தைப் பெருமிதத்தோடு வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

நல்லுரைகளை நல்ல நாடகத்தின் மூலம் சொல்லும்போது அவைகளை நல்லவர்கள், நாட்டின் நலனை விரும்புபவர்கள் எப்படியெல்லாம் வரவேற்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுகிறோம். இப்படிப் பயன் தரும் நாடகத்தை வெறும் பொழுதுபோக்குக் கலையாக எப்படிச் சொல்ல முடியும்.  ‘கலை கலைக்காகவே’ என்று எப்படி வழிபாடு செய்ய முடியும்?

நாடகம் மகத்தான சக்தி

மக்களைச் செயல்படத் தூண்டும் ஓர் அருமையான சக்தி நம்மிடம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் வேறு ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு அந்த சக்தியை வழிபடுவதோடு, பூசிப்பதோடு மட்டும் நின்று விடுவதா? அதுபோல் தான் இருக்கிறது  ‘கலை கலைக்காகவே’ என்பது.

மக்களுக்கு விரைவாக அறிவு வளர்ச்சியைக் கொடுப்பதும், புரட்சிகரமான மன மாற்றத்தை உண்டு பண்ணச் செய்வதும், உன்னதமான இலட்சியங்களைத் தேசத்தில் பரப்புவதுமான சர்வ சக்தி படைத்த கலையே நாடகம். இதை வெறும் பொழுதுபோக்கும் அழகுக் கலையாக மட்டும் போற்றுவது நாட்டிற்கு நஷ்டமல்லவா?

உணவு உடலுக்கா? நாவுக்கா?

வயிற்றுப் பசிக்கு உணவு தேவை; ஆனால், வயிற்றுப் பசிக்காக மட்டுமா உணவு அருந்துகிறோம்? சிந்தித்துப் பாருங்கள். பசிக்காகவே உணவு என்றிருந்தால் அறுசுவை உண்டி எதற்கு? இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு இந்த சுவைகளெல்லாம் எதற்கு? பசி நேரத்தில் எதையாவது அள்ளிப் போட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டியது தானே? அப்படியா செய்கிறோம்? இல்லையே! உப்பு அதிகமாய்ப் போய்விட்டால் அந்தச் சுவை உணர்ச்சி நமது முகத்தில் உடனே தெரிகிறதே!

அப்படியானால் பசிக்காக உணவு என்றாலும் அந்த உணவு நாவிற்கும் ருசியாக இருக்க வேண்டும் என்றாகிறது. சரி; நாவிற்கு ருசியாக இருப்பதையெல்லாம் சாப்பிடலாமா? அப்படிச் சாப்பிட்டால் உடம்பிற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே! உண்பதற்கு சுவையாக இருக்கலாம்; அது உடலுக்கு ஊறு செய்யாமல் இருக்க வேண்டாமா? அதையும் கவனிக்கிறோமல்லவா?

பசிக்காக உணவு என்றாலும் அந்த உணவு நாவிற்கு ருசியாக இருந்தாலும் சத்துள்ள உணவு தானா என்பதையும் பார்க்கிறோமல்லவா? எந்தெந்தப் பொருட்களில் என்னென்ன வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றனவென்று ஆராய்கிறோமல்லவா? சில நேரங்களில் நாவிற்கு ருசியில்லாத உணவானாலும் உடல் வலிமைக்காகச் சாப்பிட வேண்டியதாகி விடுகின்றது. எனவே பசிக்காக உணவு அருந்தும் போதும் நாவிற்கு ருசி; உடலுக்கு வலிமை இவற்றை யெல்லாம் பார்த்துத்தான் அருந்த வேண்டியிருக்கிறது.

கலைஞனின் தாய்மை

கசப்பு மருந்தானாலும் நம் தாய்மார்கள் இனிப்போடு கலந்தோ, அல்லது வாழைப்பழத்திலே வைத்தோ கொடுத்து விடுகிறார்கள். அதேபோலத் தான்  ‘கலை வாழ்வுக்காகவே’  என்று எண்ணுபவர்கள் நாடகத்திலே கலையழகு, கருத்தழகு, நல்ல பயன் இவையெல்லாம் இருக்க வேண்டுமென எண்ணுகிறார்கள்.

ஒரு தாய் எப்படித் தன் குழந்தைகளைப் பேணி வளர்த்து அறிவாளிகளாக்க வேண்டுமென்று நினைக்கிறாளோ, அப்படியே ஒவ்வோர் உண்மைக் கலைஞனும் கருதுகிறான். தன்னுடைய கலாசக்தியால் உலகத்து மக்களை வாழ்விக்க வேண்டுமென நினைக்கிறான். அழகுக் கலையாகிய நாடகக் கலையிலே அறிவைக் கலந்து, அன்பைக் கலந்து, அருளைக் கலந்து நாட்டு மக்களுக்கு ஊட்டிவிடுகிறான்.

‘வாழ்வு சிறிது, வளர்கலை பெரிது’ என்னும் உறுதியான கொள்கையுடையவன் அவன்.

நாடகமும் பிரசாரமும்

சாதாரணமாக  ‘பிரசாரம்’ என்று சொல்லும் பொழுது சமூக, அரசியல், பொருளாதார விஷயங்களை மட்டும்தான் நாம் பிரசாரமாக நினைக்கிறோம். அது தவறு. மனிதனுடைய மனோதத்துவப் போராட்டங்களை விளக்கிக் காட்டி அதில் நல்லதற்கு வெற்றி காண்பிப்பதும் பிரசாரம்தான்.

பிரசாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நிரந்தரமானது. மற்றொன்று அழியக் கூடியது. உள்ளத்திலே எழக்கூடிய உணர்ச்சிப் போராட்டங்கள் நிரந்தரமானவை; மனித குலம் இருக்கும் வரை அந்த உணர்ச்சிகளும் இருக்கும். சமூக அரசியல் பொருளாதாரப் போராட்டங்கள் நிலையற்றவை. கால மாறுபாட்டிற்கேற்ப நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போகும். இந்த இரண்டு வகையான பிரசார நாடகங்களும் நாட்டுக்குத் தேவையானதாம். தனி மனிதனுடைய உள்ளத்தையும் உயர்த்த வேண்டும், சமுதாயத்தின் நிலையையும் உயர்த்த வேண்டும்; தனி மனிதப் பண்பு வளர்வதிலேதான் சமுதாயத்தின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

சமுதாயத்தை உயர்த்துவது எப்படி என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமுதாயத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால் அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் நன்மையேற்படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக நம் கலையில் பிரசாரக் கருத்துக்களே கூடாது என்ற முடிவுக்கு வந்து  ‘கலை கலைக்காகவே’ என்னும் கோஷ்டியில் சேர்ந்துவிட முயல்வது தவறாகும்.

நாடகம் எழுதுகிற ஆசிரியரோ அல்லது நடிக்கிற நடிகரோ தமது கருத்தைத் கலையழகுடன் வெளிப் படுத்த முடியாததனால் தான், பெரும்பாலும் நிகழ்சாசிகளின் மூலம் எடுத்துக்காட்ட வேண்டிய கருத்துக்களை அப்படியே பிரசங்கம் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். நாடக மேடைக்கும் சொற்பொழிவு மேடைக்கும் வித்தியாசம் தெரியாமல் செய்துவிடுகிறார்கள். நாடகாசிரியர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது நல்லது.

நாடகம் நாடகமாக இருக்க வேண்டும்

நாடகத்தில் பிரசாரம் இருக்கலாம்; அது நாட்டிலுள்ள எந்தக் கட்சியின் கொள்கைப் பிரசாரமாகவும் இருக்கலாம். ஆனால் அரங்கிற்கு வரும்போது நாடகம் நாடகமாக இருக்க வேண்டும். நாடகத்திற்குரிய இலட்சணங்கள் எல்லாம் அதில் பொருந்தியிருக்க வேண்டும். ஆசிரியன் தான் மக்களுக்குச் சொல்ல விரும்பும் கருத்துக்களுக்கு ஏற்றபடி கதை, பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் இவற்றையெல்லாம் படைத்துக்கொள்ள வேண்டும். எண்ணங்களை இடமறிந்து பாத்திரத்தின் பண்பு கெடாமல் வெளியிட வேண்டும். அதுதான் கலைக்கும் அப்பட்டமான பிரசாரத்திற்கும் உள்ள வேறுபாடு.

பிரசாரக் கருத்துக்களை வெளியிடும் ஆவேசத்தில் நாடகக் கலைக்குரிய சிறப்பான அம்சத்தைக் கொன்றுவிடக் கூடாது. உரையாடல்களை எழுதும் பொழுது நாடகப் பாத்திரங்களை நன்கு நினைவில் இருத்த வேண்டும். கருத்துக்காக வசனமே தவிர வசனத்திற்காகக் கருத்தல்ல. அடுக்கு மொழிகள் அவசியமான கட்டங்களிலே இருக்கலாம். அது நாடகத்திற்குச் சிறப்பைத் தரும். ஆனால், நாடக வசனம் முழுவதும் முதலிலிருந்து இறுதி வரை எந்தப் பாத்திரம் பேசினாலும் அடுக்கு மொழியாகவே இருக்க வேண்டுமா? அதனால் நாடக உணர்ச்சி குறைந்து விடாதா? பாத்திரத்தின் பண்பு கெட்டு விடாதா? இவற்றையெல்லாம் நாடகாசிரியன் நன்கு சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமன்று, நாடகத்தைப் பார்க்கிறவர்கள் பாத்திரங்களையும், அவர்களுடைய உணர்ச்சிப் போராட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் மறந்து விட்டு வெறும் வார்த்தைகடைய ஜாலங்களிலேயே மனத்தைச் செலுத்தும்படியாக ஆகிவிடுகிறது.

கலையம்சமுள்ள பிரசார நாடகமென்றால், பாத்திரப் படைப்பு; குணப் போராட்டம்; இப்போராட்டத்தில் உச்சம்; அந்த உச்சத்தின் விளைவு; காலம் இடம், செயல் இவற்றின் ஒருமைப்பாடெல்லாம் சிறப்பாக அமைந்த ஒரு கட்டுக்கோப்பு இருக்க வேண்டும்.

கலைவழி என்பது அறவழி

கலைக்குரிய மகத்தான ஒரு சிறப்பையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். கலைவழி என்பது அன்பு வழி; அறவழி. எந்தக் கருத்தையும் இனிமையாக பண்போடு அன்போடு மக்களுக்கு எடுத்துச் சொல்லி மன மாற்றம் ஏற்படும்படியாகச் செய்வதுதான் கலைவழி. அதுதான் பயன் தரும் வழி; அந்த வழியில் செல்வதே கலைஞனின் கடமை.

கத்தியை உபயோகிக்கும் போது எப்படிக் கவனமாக உபயோகிக்கிறோமோ அப்படியே கலையின் மூலம் நாவை உபயோகிக்கும் போதும் கவனமாக உபயோகிக்க வேண்டும். கத்தியைவிடக் கூர்மையானது நாவு; நாவிலிருந்து வரும் வார்த்தைகள் மிகுந்த ஆற்றலுடையவை.

தீயினாற் சுட்டபுண் ஆறி விடும்; நாவினாற் சுட்ட வடு ஆறாது. கத்தி உடலை மட்டுமே புண்படுத்தும்; வார்த்தைகள் உள்ளத்தைப் புண்படுத்தும். கலையின் மூலம் சொல்லப் படும் கருத்துக்கள் உள்ளத்தைப் பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தல் கூடாது.  ‘வாளைக் கொண்டு சாதிப்பதைவிட வார்த்தைகளைக் கொண்டு போதிப்பது மேல்’ என்பது அறிஞர்கள் கருத்து. எனவே, நாடகத்தைக் கட்சிப் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தும் எவரும் கலைவழியாகிய அன்பு வழியிலேயே அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் விரும்பும் மனமாற்றத்தை மக்களிடத்திலே காண முடியும்.

நாடகக் கலையின் மூலம் நல்ல செயல்களைத் தூண்ட பெரு முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தீமைகளை எளிதில் விதைத்து விடலாம். உயிரின் உற்பத்திதானே கஷ்டம்; அழிவு வேலை செய்வதற்குப் பெரிய கலைத்திறன் வேண்டியதில்லையல்லவா?

“கலைப்பண்பு என்பது தொழிற் பயிற்சியினால் மட்டும் ஏற்படுவதன்று. உள்ள மலர்ச்சியின் பயனாய் ஏற்படும் ஒரு நிலையே கலைப்பண்பாகும். அந்நிலை ஆத்மீகத்தன்மை பொருந்தியது. ஐம்புல இன்ப நிலைக்கு அப்பாற்பட்டது”  என ஓர் அறிஞர் கூறுகின்றார்.

கலை அறிவினால் மட்டும் வளருவதன்று. அருளின் துணையும் வேண்டும். அறிவினால் முயன்று அறத்தின் வழிச்சென்று அருளின் துணைகொண்டு ஆற்றும் கலைப்பணிகள்தாம் உலகில் நின்று நிலைபெற்று ஒளிர்கின்றன. பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:

“கலை மனத்தைப் பண்படுத்த உதவுவது. எங்கேனும் கலை மன அமைதியைக் கெடுத்துக் கவலையும் ஏக்கமும் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமானால் அங்கே மனிதன் விழிப்பாக இருக்க வேண்டும் உதவிக் கருவி எதிர்க்கும் கருவியாக மாறிவிடக் கூடாது. உண்ணும் உணவு உடலைக் கெடுக்கும் நஞ்சாகமாறக்கூடாது. எனவே  ‘கலைவழி அறவழி’ என்பதைக் கலைஞன் என்றும் மறத்தல் கூடாது.”

மகாகவியின் வாக்கு

மகாகவி பாரதியார் மகாத்மா காந்தியடிகளை வாழ்த்தும்போது தமது பாடலிலே போர்வழியை  ‘கொலைவழி’ யென்றும் அறவழியை  ‘அருங்கலை வழி’யென்றும் குறிப்பிடுகிறார்.

“பெருங் கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலும் திறன் பெரிதுடைத்தாம்.
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழியென்று நீ யறிந்தாய்!”

என்று மகாகவி பாரதி சொல்லும்போது நமக்கு எத்தனை பெரிய உண்மை புலனாகிறது; மக்களைச் செயல்படுத்தும் வழிகளை இரண்டாகப் பிரித்து ஒரு வழியைக் கொலை வழியென்றும் மற்றொரு வழியைக் கலைவழியென்றும் கூறுகிறார். கொலை வழியைவிடக் கலைவழி வலிமையுடையது, திறனுடையது என்று அழுத்தமாகக் கூறுகிறார். எனவே, வலிமை வாய்ந்த இந்தக் கலை வழியிலேயே, அறவழியிலேயே கலைஞர்கள் செயல்பட வேண்டும்.

பண்டைக் காலத்தில் நடைபெற்று வந்த நாடகங்களை நாம் பார்க்கும்போது இந்தக் கலைவழி எவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

நாடக வகைகள்

தமிழ் நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம், இதிகாச நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி நாடகம், இலட்சிய நாடகம், சமுதாய நாடகம், சமுதாய சீர்திருத்த நாடகம், தேசீய நாடகம், நகைச்சுவை நாடகம் என நாடகங்களை இவ்வாறு பலவகைப் படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு பிரசார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிவலீலா, கந்தலீலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா, பிரபுலிங்க லீலை, இராமாயணம், மகாபாரதம், தசாவதாரம், சாவித்திரி, சதியனுசூயா முதலியவை புராண, இதிகாச நாடகங்கள்.

இமயத்தில் நாம், தஞ்சை நாயக்கர் தாழ்வு, இராஜராஜ சோழன், வீரபாண்டிய  கட்டபொம்மன், முதலியவை வரலாற்று நாடகங்கள். மனோகரன், இரண்டு நண்பர்கள், லீலாவதி சுலோசனா, வேதாள உலகம் இவற்றையெல்லாம் கற்பனை நாடகமாகக் கொள்ளலாம்.

இராமதாஸ், பிரகலாதன், துருவன், சிறுத்தொண்டர், மார்க்கண்டேயர், நந்தனார் முதலிய நாடகங்கள் பக்தி நாடகங்கள் என்னும் பிரிவில் சேர்ந்தவை.

தான் போற்றிவரும் குறிப்பிட்ட ஒரு இலட்சியத்திற்காக இறுதிவரை போராடி வெற்றிபெறும்  ‘ஹரிச்சந்திரா’ போன்ற நாடகங்கள் இலட்சிய நாடகம் என்ற வகையில் அடங்கும்.

டம்பாச்சாரி, இராஜாம்பாள், இராஜேந்திரா, மோகனசுந்தரம், மேனகா, பம்பாய் மெயில், வித்தியாசாகரர், நாலு வேலி நிலம், மல்லியம் மங்களம், உயிரோவியம், வேலைக்காரி முதலியவை சமுதாய நாடகங்கள்.

அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா, பைத்தியக்காரன், இழந்த காதல், இரத்தக் கண்ணீர், மனிதன், வாழ்வில் இன்பம், பெண் முதலியவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள்.

கதரின் வெற்றி, தேசீயக் கொடி, தேச பக்தி, போன்றவை தேசீய நாடகங்கள்.

சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் முதலியவை நகைச்சுவை நாடகங்கள்.

பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலாங்கு மனிதன் போன்றவை பிரசார நாடகங்கள்.

இப்போது நான் சொல்லி வந்த எல்லா வகையான நாடகங்களிலும் பிரசாரம் இருக்கிறது.

புராண, இதிகாசங்கள் தேவையா?

புராண, இதிகாச நாடகங்கள் இன்று மக்களுக்குத் தேவையா? எனச் சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் நாடக நல்லியல்புகளைப் பற்றி அறியாதவர்கள். மேற்போக்காகப் பார்க்கிறார்களே தவிர ஆழ்ந்து சிந்திப்பதில்லை. புராண, இதிகாசக் கதைகளில் சொல்லப்படும் பேருண்மைகளும் அறிவுரைகளும் இன்று நடைபெறும் சில முற்போக்கு நாடகங்களிலேகூடக் காணப் படவில்லையே! மகாகவி காளிதாசன், பவபூதி முதலியோரின் நாடகங்கள் புராண, இதிகாசக் கதைகள்தாம். மேலைநாடுகளில் இன்றும் அந்த நாடகங்களின் சிறப்பைப் போற்றுகிறார்களே! நடித்தும் வருகிறார்களே! காளிதாசனின் சகுந்தலை நாடகம் சந்திர மண்டலத்தை எட்டிப் பிடித்த ருசியாவிலும் இன்று நடிக்கப்படுகிறதே!

சென்னையில் எந்தத் தமிழ்ப் படமும் ஓடாத அளவுக்குப் பல வாரங்கள் ஓடிய  ‘பத்துக் கட்டளைகள்’ என்னும் திரைப்படம் புராணக் கதைதான். ஆனால், அந்தப் படத்தின் சிறப்பு எந்த நாட்டினராலும் மறுக்கப்படவில்லையே! வடமொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள நாடகங்களை திரைப்படங்களை  புராணக் குப்பைகள் என்று கேலி செய்யும் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லப்படுபவர்கள்கூட இந்த ஆங்கில ‘பத்துக் கட்டளைகள்’  படத்திற்கு பிரமாதமாக விமர்சனம் செய்து வரவேற்று வாழ்த்துக் கூறினார்களே!

எனவே, புராண இதிகாசங்கள் என்பதற்காகவே நாம் எந்த நாடகக் கதைகளையும் ஒதுக்க வேண்டியதில்லை. அப்படி ஒதுக்கித் தள்ளத் தொடங்குவோமானால் நமக்குப் பழைய சிறப்பென்றோ வரலாற்றுப் பெருமையென்றோ சொல்லுவதற்கு ஒன்றும் இல்லாமற் போய்விடும் என்பதைப் பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

காந்தியடிகளுக்கு வழிகாட்டிய நாடகம்

இலட்சிய நாடகமாக நாம் போற்றும் ஹரிச்சந்திரன் இதிகாசக் கதைதான். அந்த ஹரிச்சந்திரன் நாடகம் சமுதாயத்திற்குத் தீமையையா செய்திருக்கிறது? எண்ணிப் பாருங்கள்.

கருணை வள்ளலான நமது மகாத்மா காந்தியடிகள்  ‘ஹரிச்சந்திரா’ நாடகந்தான் தமது வாழ்க்கையில் சத்திய நெறிப்படி நடக்கத் தூண்டியதென்று சுய சரிதையாகிய  ‘சத்திய சோதனை’யிலே எழுதியிருக்கிறார். அப்படியானால் அந்த இதிகாச நாடகத்தின் சிறப்புக்கு வேறென்ன சான்று வேண்டும்? மகாத்மா காந்தியடிகளுக்கு  சத்தியத்தைப் போதிக்கும் சக்தி வாய்ந்திருக்கும் ஒரு நற்கலையை, நாடகக் கலையை, வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக வளர்ப்பது நாட்டுக்கு நன்மை செய்வதாகுமா வென்பதை எண்ணிப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.

நாடகக் கலை அறிவை வளர்ப்பதாகவும் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பி நல்ல செயல்களைத் தூண்டுவதாகவுமே இருக்க வேண்டும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் ஓர் அருமையான நாடகக் காப்பியம். அற்புதமான பாத்திரப் படைப்புகள்.  ‘அல்வழிப்பட்ட அரசை அழித்தொழிப்பேன்’ என்று வீறிட்டெழுந்து நின்ற ஓர் வீராங்கனையின் வரலாறு; தமிழ் மூவேந்தர்களின் சிறப்புக்கெல்லாம் சான்றாக விளங்கும் செந்தமிழ்க் காப்பியம்.

சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்திராவிட்டால் தமிழ் மக்கள் இசையிலும், நடனத்திலும் நாடகத்திலும் சிறந்து விளங்கிய செய்திகள் மறைந்தே போயிருக்கும்.

தாய்க்குலம் எழுச்சி பெற்று நின்றால் கொடுங்கோலையும் வீழ்த்திச் செங்கோலை உயர்த்த முடியும், செம்மையைக் காக்க முடியும் எனச் சிலப்பதிகாரத்தின் வாயிலாக உலகுக்கு உணர்த்துகிறார் இளங்கோவடிகள். எழுச்சி பெற்ற அந்த வீரக் கண்ணகி மெய்யிற் பொடியோடும், விரித்த கருங்குழலோடும், கையில் ஒற்றைத் தனிச் சிலம்போடும்,
கண்ணீரோடும் வந்து பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக் களத்திலே நிற்கிறாள்.  ‘தன் கணவன் கள்வன் அல்லன்’ என்று வாதாடுகிறாள். நீதி வழுவிய நெடுஞ்செழியன் உண்மை யுணர்ந்தான்.

“யானோ அரசன்; யானே கள்வன்,
மன்பதை காக்கும் தென்புலங்காவல்
என்முதற் பிழைத்தது; கெடுக என்னாயுள்”

எனத் துடித்து வீழ்ந்தான்; அவன் உடல் சாய்ந்தது, உயிர் பிரிந்தது. நீதி வழுவியதால் வளைந்த செங்கோலைத் தன் உயிரைக் கொடுத்து நிமிர்த்தினான் பாண்டியன்! எவ்வளவு உயர்ந்த பாத்திரம் பாண்டியன்! தமிழினத்திற்கு எத்தனை பெருமை!

அவ்வாறு நீதிக்காக ஆவி நீத்த நெடுஞ்செழியனை, தன் காதற் கணவனைக் கொன்ற பாண்டியனை, கண்ணகியின் திருவாயாலேயே வாழ்த்துக் காதையில்  “தென்னவன் தீதிலன்” என்று சொல்ல வைக்கிறார் இளங்கோவடிகள். இந்தக் கருணை உள்ளமல்லவா நாடகாசிரியனுக்கு வேண்டும்!

(தொடர்கிறது)

$$$

One thought on “நாடகக் கலை – 3 அ

Leave a comment