நந்தனார் சரிதம் – 3

-பி.ஆர்.மகாதேவன்

“பழகிக் கொண்டவர்களை விடுங்கள். இப்படிப் பழக்கியவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த மன்னரேனும் ஏதேனும் ஒரு இழிதொழிலையேனும் மாற்ற முயற்சி எடுத்தாரா? எந்த ஐயரேனும் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவரின் கஷ்டத்தைப் போக்கினாரா? வாந்தியையும் மலத்தையும் ரத்தத்தையும் நிணத்தையும் கையால் தொட்டு சுத்தம் செய்தாக வேண்டிய கொடுமையில் இருந்து விடுவித்தாரா? எந்த வணிகராவது தீட்டுத் துணி துவைக்கும் வண்ணாருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரா? எந்தப் பண்ணையாராவது தொழில் குலத்தினராவது இறந்த அழுகிய விலங்கை அப்புறப்படுத்த வழி கண்டுபிடித்துக் கொடுத்தனரா… நம்மவர்களுக்குக் கால காலமாக இதைத் தானே செய்துவர வேண்டியிருந்தது? சின்னஞ்சிறு வயதிலேயே இந்த இழிவுக்குப் பழக்கப்படும் குழந்தைகள் அதைப் பழகிக் கொண்டு வாழ்ந்து மடிவதென்பது எவ்வளவு கேவலம்… கொடுமை. யாரேனும் ஒருவர் இதை மாற்றியிருக்கலாமே…?”

-3-

சுகமான சுமைகள்

நந்தனுடன்  அவனது உற்றாரின் விவாதம் தொடர்கிறது…

“இந்த நாய்கள் வேதனையில் உழல்வதாக நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? நம் முன்னோர்கள் வேதனையில் உழன்றதாக நீங்கள் சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நான் நாய்களை பைரவராக, முன்னோர் வழிபடும் தெய்வமாக, உயர்வாகவே பார்க்கிறேன். அப்படியான வாழ்க்கை வாழும் நம்மையும் நம் முன்னோரையும் வாழ்வாங்கு வாழ்ந்தவராகவே பார்க்கிறேன். இருக்கும் தோகையைக் கொண்டு மயிலைப் போல் மகிழ்கிறேன். இல்லாத தும்பிக்கையை நினைத்து ஏங்கவில்லை. நம் தொழிலில் இழிவும் இல்லை, கடினமும் இல்லை. ஐயரைப் போல் நாம் ஏன் இல்லை என்று ஏங்கவில்லை. பறையரைப் போல் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்.”

“மனிதர்களுக்கு ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்தால் பழகிப் போய்விடும். அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகும் குணமே ஆகப் பெரிய அபாயம். ஆனால், கடினமான இழிவான வேலையிலிருந்து தப்பிக்கத்தான் எல்லாரும் விரும்புவார்கள்; விரும்பியிருப்பார்கள். அதும் கண் முன்னே சிலர் கஷ்டப்படாமல் இருப்பதைப் பார்க்கும்போது நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி வராமல் இருந்திருக்குமா என்ன?”

“உண்மைதான். கஷ்டங்களில் இருந்து விடுபட நிச்சயம் முயற்சி செய்திருப்பார்கள். பொதி சுமக்க முடியவில்லை என்ற நிலைவந்தபோது கழுதையை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். சுமை இழுக்க முடியவில்லை என்றபோது எருதை வண்டியில் பூட்டியிருக்கிறார்கள். அப்படியாக முடிந்ததைச் செய்திருக்கிறார்கள். முடியாததற்குப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.”

“பழகிக் கொண்டவர்களை விடுங்கள். இப்படிப் பழக்கியவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த மன்னரேனும் ஏதேனும் ஒரு இழிதொழிலையேனும் மாற்ற முயற்சி எடுத்தாரா? எந்த ஐயரேனும் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவரின் கஷ்டத்தைப் போக்கினாரா? வாந்தியையும் மலத்தையும் ரத்தத்தையும் நிணத்தையும் கையால் தொட்டு சுத்தம் செய்தாக வேண்டிய கொடுமையில் இருந்து விடுவித்தாரா? எந்த வணிகராவது தீட்டுத் துணி துவைக்கும் வண்ணாருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரா? எந்தப் பண்ணையாராவது தொழில் குலத்தினராவது இறந்த அழுகிய விலங்கை அப்புறப்படுத்த வழி கண்டுபிடித்துக் கொடுத்தனரா… நம்மவர்களுக்குக் கால காலமாக இதைத் தானே செய்துவர வேண்டியிருந்தது? சின்னஞ்சிறு வயதிலேயே இந்த இழிவுக்குப் பழக்கப்படும் குழந்தைகள் அதைப் பழகிக் கொண்டு வாழ்ந்து மடிவதென்பது எவ்வளவு கேவலம்… கொடுமை. யாரேனும் ஒருவர் இதை மாற்றியிருக்கலாமே…?”

“அந்த வேலைகளைச் செய்த நம் முன்னோர்களில் யாரேனும் அதை மாற்றிக்கொள்ள எந்த முயற்சியேனும் எடுத்தனரா? அவர்களுக்கு இல்லாத அக்கறையை அடுத்தவரிடம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அவர்களாலேயே முடியாததை மற்றவர் எப்படிச் செய்ய முடியும்? சுமையைத் தூக்கி வைத்தவரா இறக்கிவைக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்? சுமையைச் சுமப்பவர் அல்லவா முதலில் அதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்? அதைச் சுமையாக அவர் கருதியிருந்தால் செய்திருப்பாரே? கஷ்டம் யாருக்குத்தான் இல்லை? க்ஷத்ரியர்களுடைய போர்ப் பயிற்சி என்பது இடுப்பெலும்பை முறிக்கக் கூடியது. வணிகர் குடும்பத்தைப் பிரிந்து பயணம் செய்தாக வேண்டும். நம் குலத்தினர் யாரேனும் என்றேனும் விட்டுப் பிரிய நேர்ந்திருக்கிறதா? பிற நாடுகளில் அடிமைகளாக நம்மைப் போன்றவர்களை நடத்துவார்களாம். குடும்பத்தைப் பிரித்து இழுத்துச் செல்வார்களாம்…”

“கேள்விப்பட்டிருக்கிறோம்…”

“மன்னருக்கும் தளபதிக்கும் உயிர் பயம் இல்லையா என்ன…? ஆயுதம் தூக்காத நாடு எது…  போர் இல்லாத நாள் எது? போர் என்றால் மன்னர் குலம் செத்து மடிந்தது;  கை கால் இழந்து தவித்தது. வணிகர்களின் சொத்துகள் நாசமாகின. பண்ணையாரின் நிலங்கள் பறிபோயின.  வேதியர்களையும் வேதனைகள் சூழ்ந்தன. போரில் பாதிக்கப்படாத ஒரே குலம் நம்மைப் போன்ற குலத்தினரே.  இது பெரிய விடுதலை அல்லவா? இதைவிட வேறு என்ன வேண்டும்?”

“ஆமாம். ஆயுதங்களைத் தூக்க வேண்டாம் என்று சொன்னதில் இருக்கும் நன்மை அது.”

“ஆக, வேலை நேரமும் குறைவு. போர்க்கால வேதனைகளும் குறைவு. கள்ளுக்கும் குறைவில்லை; மாமிசத்துக்கும் குறைவில்லை. நம் முன்னோர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கையாக இது இருந்திருக்காது என்று சொல்ல முடியுமா?”

“அப்படி இருக்க வாய்ப்பில்லை.”

“ஏன் இல்லை? காட்டில் திரிந்த வேட்டை நாய்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து சேர்ந்ததில் அவற்றுக்கும் ஏதோவொரு நன்மை இருந்திருக்கும். அரை வயிறு நிரம்பவும் ஒரு இரவு தூங்கவும் அவை பட வேண்டியிருந்த பாடுகள்… இரை கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களின் வலி… பிற வேட்டை விலங்குகளிடமிருந்து ஏற்படும் அபாயம்… நிலையற்ற வாழ்க்கை… குடியிருப்புப் பகுதியில் மிஞ்சும் உணவை உண்ண ஆரம்பித்து மெள்ள மெள்ள அவர்களுடன் நட்புறவாகி, அவர்கள் அனுமதிக்கும் நாட்களில் வேட்டையாடி அவர்களுக்கு உதவி செய்து… என அந்த மாற்றத்தை அவை விரும்பித்தான் தேர்ந்தெடுத்திருக்கும். தொடர்ந்து அதிலேயே அவை சுகம் காண்கின்றன என்றால் வளர்க்கும் நம்மைப் பழி சொல்ல முடியுமா? நாமும் அப்படித்தான் கானகங்களில் மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்திருப்போம். சமதளத்தில் முன்னதாகவே வந்து விவசாயம் செய்ய சில தலைமுறையினர் ஆரம்பித்திருப்பார்கள். தாமதமாக வந்தவர்களுக்கு கடைநிலை வேலைகள் கிடைத்திருக்கும். கானக, மலை வாழ் மக்கள், நாடோடி வாழ்க்கையில் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க நம் முன்னோர் இந்த கடைநிலை வேலைக்கு சம்மதித்திருக்கலாம். அது பழகியிருக்கலாம்.”

“நாம்தான் முதலில் விவசாயம் செய்திருப்போம். நம்மிடமிருந்து நிலத்தை இவர்கள் பறித்திருப்பார்கள்.”

“அப்படியும் இருக்கலாம். ஆனால், வெட்டியான், வண்ணான், தோல் தொழில், பறை, மருத்துவர் என அனைவருமே நிலங்களில் இருந்து விரட்டப் பட்டிருப்பார்கள் என்பதைவிட, தாமதமாக நிலவுடமை சமுதாயத்துக்குள் வந்துசேர்ந்து, அப்போது இருந்த ஏதேனும் தொழில் ஒன்றில் ஈடுபட ஆரம்பித்திருக்கவே வாய்ப்பு அதிகம்.”

“போரில் தோற்றவர்கள் இப்படி ஆக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.”

“ஆமாம். அப்படியும் இருக்கலாம். எது உண்மையென்றாலும் இன்று அந்த வாழ்க்கைக்குப் பழகிவிட்டிருக்கிறோம். இன்னொன்று சொல்லவா…? ஒரு விவசாயக் கூலித் தொழிலாளிக்கு இழைக்கப்படும் அநீதியைவிட நமக்கு இழைக்கப்படுவது குறைவுதான். ஒரு வயலில் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, காவல் காத்து, அறுவடை செய்து… என அத்தனை வேலை செய்தும் அவருக்குக் கிடைப்பது அன்றாட வயிற்றுப் பாட்டுக்குத் தேவையானது மட்டும்தான். அவை எதையும் செய்யாமலே நமக்கு அந்த நெல் ஊர் மானியமாகக் கிடைக்கிறது. நம் வேலைக்கான கூலி தனி. இப்போது சொல், யார் வசதியானவர்? மாடுபோல உழைத்தும் குருவி போல கொத்தித் தின்னும் அளவுதான் கிடைக்குமென்றால், அதற்குப் பதிலாக அழுகின விலங்கை அரை நாளில் அப்புறப்படுத்திவிட்டுப் போய்விடலாம். சொரணை அதிகமாக இருந்ததால் தான், அதிகம் சுரண்டப்படாத வேலையை நம் முன்னோர் தேர்ந்தெடுத்திருக்கலாம்.”

“ஆடுகள் தாமாகத்தான் கழுத்தை நீட்டுகின்றன; மிகவும் மகிழ்ச்சியாகவே நீட்டுகின்றன என்று சொல்கிறீர்கள்…”

“இத்தனை தலைமுறையாக இந்த வாழ்க்கையை வாழ்ந்ததற்கு எது காரணம் என்று நீங்கள் சொல்லுங்களேன். அவர்கள் கெட்டவர்கள்; நாம் அப்பாவிகள் என்ற ஒற்றை வாக்கியம் தாண்டி எதைப் பற்றியும் யோசிக்காமல், ஐயர்தான் எல்லா கஷ்டத்துக்கும் காரணம். கோயிலுக்குள் விடாததுதான் ஆகப் பெரிய கொடுமை என்று புறப்பட்டுவிட்டீர்கள்.  ஐயர் என்றால் எதுவும் செய்ய மாட்டார் என்பதால் ஆலயத்தின் முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்கிறீர்கள், அப்படித்தானே?”

“ஆலயப் பிரச்னையும் சமூகப் பிரச்னையும் ஒன்றா என்ன? மனிதர்கள் தவறு செய்யலாம். தெய்வம் தவறு செய்யலாமா? அரசனுடைய அரண்மனையில் அநீதி நடக்கலாம். ஆலயத்தில் அடக்குமுறை இருக்கலாமா? குடித்துக் கும்மாளமிடும் பண்ணையார் கொடுமைப்படுத்தலாம். கருவறையில் இருக்கும் அர்ச்சகர் பாகுபாடு பார்க்கலாமா? லெளகீக சமத்துவம் மறுக்கப்படுவதை ஏற்றுக்கொண்டால் ஆன்மிக சமத்துவம் மறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டுமா?”

“அப்படிச் சொல்லவில்லை. ஆன்மிகத்தில் சமத்துவம் மறுக்கப்படவே இல்லை என்கிறேன். எல்லாருமே இறைவனின் குழந்தைகள் என்று சொல்வதோடு நிறுத்தவில்லை; எல்லாரின் இறைவனும் ஒன்றே… சமமானவர்களே என்றே சொல்கிறது  நமது பாரம்பரியம்.  மயான ருத்ரனை வழிபட்டாலும் ஒன்றுதான். நால் வர்ணத்தார் தொழும் நாதனை வழிபட்டாலும் ஒன்றுதான். குல தெய்வத்தைக் கும்பிட்டாலும் ஒன்றுதான்… குலங்களுக்கெல்லாம் தெய்வமானவரை வழிபட்டாலும் ஒன்றுதான். போய் பிறப்பால் எல்லாரும் சமம் என்பதை அர்ச்சகரிடம் சென்று சொல்லாதே. அரசனிடம் சென்று சொல். உனக்கு அடுத்தது நானே அரசன் என்று சொல்லு.”

“அதெப்படி முடியும்?”

“பெரு வணிகனிடம் சென்று கேள், மூட்டை மூட்டையாகக் கட்டி வைத்திருக்கும் பணமெல்லாம் எம் குலம் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்திச் சேர்த்த பணம். பகிர்ந்து கொடு என்று கேள். அடுத்த கப்பலில் நாங்கள் போய்வருகிறோம். நீ எங்கள் புலைப்பாடியைப் பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்.”

“அதெப்படி முடியும்?”

“பரதவரிடம் சென்று, உங்கள் வலைகளையும் கட்டு மரத்தையும் எங்களிடம் கொடு என்று கேளுங்கள்.”

“அதெப்படி முடியும்?”

“வண்ணாரிடம் சென்று, இனிமேல் நாங்கள் துணி துவைக்கிறோம் என்று சொல்லுங்கள்.”

“அதெப்படி முடியும்?”

“தொழிலை மாற்றிக்கொள்ளச் சொல்லிக் கேட்க முடியாது. செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்கச் சொல்லிக் கேட்க முடியாது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கச் சொல்ல முடியாது. ஆனால், ஆன்மிகத்தை மட்டும் ஐயர்கள் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் அப்படித்தானே?  அதிலும் நம்மிடம் ஏற்கெனவே குல தெய்வம் இருக்கும் நிலையில், நம் குலத்தினரால் அந்த தெய்வத்திடம் தான் ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள முடியும் என்பது தெரிந்தும், அடுத்தவர் தெய்வத்தைக் கும்பிட ஆசைப்படுவதேன்?”

“ஐயர்கள் தமது தெய்வத்தை நானா ஜாதிக்கும் பங்கிட்டுக் கொடுக்கத் தானே செய்திருக்கிறார்கள். நம்மை மட்டும்தானே விலக்கி வைக்கிறார்கள்? அதுதான் ஏன் என்று கேட்கிறோம்.”

“அதை ஐயரிடம் மட்டும் ஏன் கேட்கிறாய்?”

“அவர்கள்தானே தடுக்கிறார்கள்?”

“அவ்வாறு தடுக்கும்படி பொறுப்பை ஒப்படைத்தவர்களைக் கேட்க மாட்டாயா? கோயிலைக் கட்டிய அரசனும் பெருவணிகரும் பண்ணையாரும் சிற்பியும் தச்சரும் விவசாயிகளும் தொழிற்குலங்களும் அனைவரும் சேர்ந்துதான் அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஐயரிடம் தர்ப்பைப் புல்லைத் தவிர வேறு எதுவும் கிடையாது. நாம் நினைத்தால் எளிதில் உள்ளே நுழைந்திருக்க முடியாதா?”

“உண்மைதான்; காவலனும் வணிகனும் தொழிற் குலங்களும் பண்ணையார்களும் விவசாயிகளும் எல்லாரும் சேர்ந்துதான் ஐயருக்கு அரணாக நிற்கிறார்கள். ஆனால் இவர் அனுமதித்தால் அவர்களும் அனுமதித்து விடுவார்கள்.”

“இவர் அனுமதிக்கக் கூடாது என்று சொல்லித் தானே அவர்கள் இவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்?”

“அப்படி எப்போது சொன்னார்கள்?”

“மூலவரை பிரதிஷ்டை செய்தபோது அந்த சத்தியத்தை ஊர் கூடித்தானே உமையொருபாகனிடம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதை மீறச் சொல்லி ஐயரை மட்டும் எப்படிக் கேட்க முடியும்? ஆலயத்தில் அவர் பூஜை செய்வதால் அவருடையதென்று நினைக்கிறாயா என்ன? அவர் அவருடைய ஜாதியைச் சேர்ந்தவர்களையே கருவறைக்குள் விடுவதில்லை.”

“நம்மை ஆலயத்துக்குள்ளேயே விடுவதில்லை. மூலவரிடம் நம்மை உள்ளே விட மாட்டோம் என்று சத்தியம் செய்துகொடுத்தார்களா என்ன?”

“ஊருக்குள்ளேயே நமக்கு வேலையில்லை. எனவே ஆலயத்துக்குள் விட மாட்டோம் என்று தனியே சத்தியம் செய்யத் தேவையே இருந்திருக்கவில்லை. ஆலயத்துக்குள் அனுமதிக்கலாம் என்று விதி இல்லை. எனவே கூடாது என்பது விதியாகிவிட்டது. உங்களுக்குத் தான் மறு உலக நம்பிக்கை கிடையாதே. கண்டதே கோலம்… விண்டதே வேதம் தானே. முதலில் அரண்மனைக்குள் நுழைய வேண்டும் என்று கூட்டம் கூடுங்கள்… செட்டியாரின் வீட்டுக்குள் நுழைய விடு என்று கேளுங்கள். பண்ணையாரின் வீட்டுக்குள் போக வேண்டும் என்று சொல்லுங்கள். அங்கும் தாம் யாரையும் அனுமதிப்பதில்லை. அதுதான் பெரிய அவமானம்.”

“அவையெல்லாம் தனி நபர் இடங்கள். ஆலயம் அப்படியா? அங்கு வாழும் ஆண்டவன் அப்படியா?”

“ஆமாம். கட்டுக்குள் அடங்காத இறைவனுக்கு முன் எல்லாரும் சமம். கட்டப்பட்ட கோயிலுக்குள் எல்லாரும் சமம் இல்லை. அந்தக் கோயில் அவர்களுடைய மோக்ஷத்துக்கான பாதையில் நிற்கிறது. நமக்கான மோக்ஷப் பாதை நம் குலதெய்வக் கோயில் வழியாக இருக்கிறது. தெய்வத்தைக் கும்பிடுவதன் நோக்கம் மோக்ஷத்தை அடைவதுதானே தவிர, உனக்கு நான் சமம் என்று சொல்வது அல்ல. நமக்கு மோக்ஷம் மறுக்கப்பட்டால்தான் அநீதி. இன்னொருவரின் பாதையில் வர வேண்டாம் என்பது தர்மம். தானாகப் பொழியும் மழை அனைவருக்குமானது. கிணறும் குளமும் அப்படி அல்ல. யாரால் வெட்டப்படுகிறதோ, அவர்கள் சொல்வதே அங்கு விதி.”

“இயற்கை வளங்கள் எல்லாருக்குமானது. இத்தனை இடைவெளி கூடாது.”

“இன்றைய இடைவெளி யாரோ சிலர் ஏதோ ஒரு நாளில் திட்டமிட்டு உருவாக்கியவை அல்ல. நம் முன்னோரும் அவர்களின் முன்னோரும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து உருவாக்கிய விதிகள். அவர்களின் நலன் மட்டுமே இருந்திருந்தால் நம் முன்னோர் எதிர்த்திருப்பார்கள்.”

“அதற்கு இடம் கொடுக்காத வகையில் நம் கையில் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கிவிட்டனரே!”

“நம் மரபில் ஆயுதங்கள் எல்லாரிடமும் இருக்கவில்லை.”

“எந்தக் குலங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டிருந்ததோ அவற்றின் கையில் ஆயுதம் இல்லாமல் இருந்ததில் தவறில்லை. யாருக்குத் தேவையோ அவர்கள் கைகளில் இருந்து பறிக்கப்பட்டதுதான் பெரிய அநீதி.”

“அநீதி இழைக்கப்பட்டிருந்தால் ஆயுதங்களைக் கைகள் தானாகக் கண்டடைந்திருக்கும்.”

“பிரச்னையே அதில்தான் இருக்கிறது. உம்மைப் போன்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு செல்பவர்கள் இருந்தால், எந்தவொரு அநீதியும் எதிர்க்கப்படவே போவதில்லை.”

“இதுதான் அநீதி என்றால் இந்த நிலையே தொடரட்டும். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்றொரு காலம் வரக்கூடும்.  ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற நிலை வரக்கூடும். ஆனால், எல்லாரும் ஆலயத்தினுள் நுழையலாம் என்பது மட்டும் வரக் கூடாது. அதிலும் எல்லாரும் கருவறைக்குள் செல்லலாம் என்பது மட்டும் வரவே கூடாது. ஏனென்றால் கருவறைக்குள் யார் செல்லலாம் என்று சத்தியம் செய்து தரப்பட்டுள்ளது. எம்பெருமானுக்குச் செய்த சத்தியம். அதை அவரே வந்து அதற்கு விலக்கு தந்தால்தான் அதை மாற்ற வேண்டும். அதுவரையில் இப்போது இருப்பதே எப்போதும் தொடரட்டும்.”

மூட்டிய சுள்ளிகள் குளிர்ந்து அடங்குகின்றன. கள் அருந்திய மகளிர் தமது கொண்டாட்டத்தை விட்ட இடத்தில் இருந்து தொடரச் செல்கிறார்கள். நந்தனின் கூட்டாளிகளும் பின்னால் செல்கிறார்கள்.

நந்தன் துண்டை விரித்து மரத்தடியிலேயே படுத்துக் கொள்கிறான். இலைகளினூடாக நிலவொளி சிறு சிறு துண்டுகளாக அவன் மீது வந்து விழுகிறது. சற்று தொலைவில் வண்டி மாடுகள், அவிழ்த்துவிடப்பட்ட பின்னரும் வண்டிக்கு அருகிலேயே படுத்துக் கொண்டு அசைபோட்டுக் கொண்டிருப்பது அவற்றின் கழுத்து மணிச் சத்தத்தில் இருந்து தெரிகிறது. மந்தைவெளியில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட ஒரு கழுதை நொண்டியபடியே நிலைகொள்ளாமல் அலைந்துகொண்டிருப்பது அதன் கனைப்பில் இருந்து தெரிகிறது.

மல்லாந்து படுத்திருக்கும் தன் கண் முன்னால் தெரிவதை இதமான இருள் என்று சொல்வதா, கண்ணைக் கூச வைக்கும் நிலவொளித் துணுக்குகள் என்று சொல்வதா என்று யோசித்தபடியே படுத்திருக்கிறான். இரவு முடிவற்று நீள்கிறது.

ஏழ் பிறப்பெனும் அக்கினி

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “நந்தனார் சரிதம் – 3

Leave a comment