அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 7

மற்ற புலவர்களோடு பழகியபோது அவரவர்கள் தாம் தாம் சென்று கண்டு பாடிய செல்வர்களைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பல காலம் முயன்ற பின்பு மனங்கனிந்த கல் நெஞ்சக்காரர்கள் சிலரைப் பற்றிக் கேள்வியுற்றார். புலவர்கள் தம்மை வானளாவப் புகழ அதனால் மகிழ்ச்சி பெற்று ஓரளவு பரிசில் வழங்கும் தன்னலத்தினர் சிலரைப் பற்றியும் கேள்வியுற்றார். புலவர்களுக்கு அளித்தால் ஊரார் புகழ்வர் என்ற எண்ணத்தால் சில புலவர்களுக்குப் பொருள் வழங்கி அதனைத் தாமே யாவருக்கும் ஆரவாரத்தோடு எடுத்துச் சொல்லும் அகங்கார மூர்த்திகள் சிலரைப் பற்றி அறிந்தார். பாடலின் நயத்தைப் பாராமல் தம் பெயரைப் பாட்டில் அமைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பரிசளிக்கும் சிலரைப் பற்றியும் அறிந்தார். அத்தகைய செல்வர்களிடம் போவதைவிட வறுமையால் வாடுவதே நன்று என்று எண்ணினார் பெருஞ்சித்திரனார்.