சநாதன தர்மம்: ஒரு நுண்ணிய பார்வை

-சேக்கிழான்

சநாதனம் என்ற சொல் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் தீய பிரசாரத்தால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அமுதத்தை விஷமென்று தூற்றும் அறிவிலிகள் நிறைந்த கூட்டத்தின் இடையே நின்று, அமுதத்தின் சுவையை ஓங்கி முழங்க வேண்டி இருக்கிறது.

பாரதத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் வேராக விளங்கும் சநாதன தர்மம், காலம் கடந்த நமது வாழ்வியல் நெறி. ஒரு வகையில் இன்றைய ஹிந்து தர்மத்தின் (ஹிந்து என்பது மதமல்ல, அது ஒரு வாழ்வியல் நெறிமுறை என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது) முந்தைய பெயராகவும் காட்சி அளிக்கிறது. இது குறித்த சுருக்கமான விளக்கத்தை அளிக்கிறது இந்நூல்.

பேரா. பா.மஹாதேவன், பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐஐஎம்- பெங்களூரு) 30 ஆண்டுகளாகப் பணியாற்றுபவர். உற்பத்திப் பொறியியலில் இளநிலைக் கல்வி, தொழிலக மேலாண்மையில் முதுநிலைக் கல்வி மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்ற இவர், தில்லி ஐஐடி, ஜாம்ஷெட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனங்களில் பேராசிரியராகவும், சின்மயா பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராகவும் (2016-2018) பணி புரிந்துள்ளார்.

மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள பேரா. பா.மஹாதேவன், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.

இந்நூலை 7 அத்தியாயங்களாகப் பகுத்துக் கொண்டு, ஒவ்வொரு விஷயமாக   -புரியாத மாணவருக்கு ஆசிரியர் பாடம் நடத்துவது போல-  சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். புனர்ஜென்மக் கோட்பாடு, நான்கு வர்ணங்கள், நான்கு ஆசிரமங்கள், நான்கு புருஷார்த்தங்கள், இன்றைய சூழ்நிலையில் சநாதன தர்மம் என துணைத் தலைப்புகளில், மாணவன் புரிந்துகொள்ள வேண்டுமே என்ற தாபத்துடன், ஓர் ஆசிரியராக எழுதி இருக்கிறார். ஆங்காங்கே தேவையான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள் குறிப்புகளைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ள வேண்டியது, அறிவைப் பெருக்க விழைவோரின் கடமை.

தொழில் ரீதியான ஜாதி வேறு, குணரீதியிலான வர்ணம் வேறு என்பதை கீதை, குறள் ஆகிவற்றின் அடிப்படையில் விளக்கும் நூலாசிரியர், வர்ண தர்மம் வேறு, ஆசிரம தர்மம் வேறு என்றும் விளக்கம் அளிக்கிறார். இதனைப் படிக்கையில், தமிழகத்தில் ‘வர்ணாசிரம’ தர்மத்துக்கு எதிராக முழங்கும் போலிக் குரல்களின் பொய்முகம் புரிகிறது.

வர்ணம் என்பது மனிதனின் இயல்பான குணத்தின் (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர்) அடிப்படையில் அமைந்தது. நூலாசிரியர் கூறியபடி, ஜாதியால் பிராமணராக உள்ள ஒருவர் வியாபாரம் செய்தால், அவர் வர்ண அடிப்படையில் ஒரு வைசியரே. அதேபோல, ஜாதியால் சூத்திரராக உள்ள ஒருவர் கோயில் பூஜை செய்தால் அவர் வர்ண அடிப்படையில் பிராமணரே; போர்ப்படையில் இருக்கும் (ஜாதியால்) பிராமணரும் வைசியரும் சூத்திரரும் வர்ணத்தால் ஷத்திரியரே. இந்த விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. ”நந்தனைப் போலொரு பார்ப்பான் இந்த நானிலத்தில் இல்லை” என்ற மகாகவி பாரதியின்  வைரவரிகள் நினைவுக்கு வருகின்றன.

அதேபோல நான்கு ஆசிரமங்கள் (பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்யாசம்) நமது தனி மனித வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் நூலாசிரியர் விளக்குகிறார். உலக வாழ்வில் இல்லறம் ஏற்றுள்ளவனே பிற மூன்று நிலையில் இருப்போரையும் தாங்க வேண்டிய கடப்பாடு உடையவன் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். ”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” என்ற திருக்குறள் நினைவுக்கு வருகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய, மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ள கோட்பாடுகளையும், இவற்றில் ஒன்றை ஒன்று சார்ந்த நமது சநாதன தர்ம வாழ்வியலையும் சுருக்கமான முறையில் அறிமுகம் செய்கிறார் பேரா. பா.மஹாதேவன். சநாதனம் குறித்து நுண்ணிய பார்வையில் அறிவதற்கான சுருக்கமான கையேடாக இந்நூல் விளங்குகிறது.

***

நூல் குறித்த விவரங்கள்:

சனாதன தர்மம் (கையடக்கத்தில்) ஒரு நுண்ணிய பார்வை
-பா.மகாதேவன்

80 பக்கங்கள், விலை: ரூ. 99-

வெளியீடு:
வியோமா லிங்குவிஸ்டிக் லேப்ஸ் ஃபவுண்டேஷன்,
பெங்களூரு- 560040

தொலைபேசி: +91 94808 65623
Please mail to: support@vyomalabs.in

$$$

Leave a comment