ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 6ஆ

-சேக்கிழான்

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது ஆறாம் பகுதியின் தொடர்ச்சி-1...

. 1947 முதல் 1980 வரை:

நாடு விடுதலை பெற்ற பிறகு நடைபெற்ற அயோத்தி போராட்டத்தில் அரும்பணி ஆற்றியோர் பலர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலரை இங்கு காண்போம்.

13. தாக்குர் குருதத் சிங்:

சிறுவயதிலிருந்தே ராமபக்தர்  குருதத் சிங்.  ஆண்டுதோறும் அயோத்தி செல்வது இவரது வழக்கம். அலகாபாத் பல்கலைக்கழகதில் பயின்ற பட்டதாரி. சிவில் சர்வீஸ் தேர்வில்  வெற்றி பெற்று சிட்டி மாஜிஸ்திரேட் (நகர ஆணையர் அந்தஸ்து) ஆனார். ஆங்கில பாணி உடை பழக்க வழக்கங்களை விரும்பாதவர். பாரம்பரியமான் பாரதிய உடைகளையே அணிவதில் நாட்டம் கொண்டவர்.     அலுவல் இடம் மாற்றம் பெற்று  சிட்டி மாஜிஸ்ட்ரேட்டாக பைசாபாத் (அயோத்தி) வந்த குருதத்தின் மனதில், ராமர் பிறந்த ஜன்மபூமியில் ராம்லல்லாவின் விக்ரஹம் இல்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. இவரது நண்பர்  அபிராம் தாஸ் தனது கனவில் ராமர் தோன்றியதை இவரிடம் தெரிவித்தார்.  

அப்போது ஆயிரக் கணக்கான பக்தர்கள் அயோத்தியில் கூடி ராமசரித மானஸ் தொடர் பாராயணம் செய்து கொண்டிருந்தனர். அங்கிருந்த சூழல் மிகவும் ஆவேசமாக இருந்தது. குருதத் சிங், சாது  அபிராம் தாஸ், ஹிந்து மஹா சபை தலைவரும் கோரக்ஷ பீடத்தின் தலைவருமான மஹந்த் திக்விஜய்நாத் ஆகியோருடன் சில சாதுக்கள் ஆலோசித்தனர். 1949 டிசம்பர் 22 நள்ளிரவு 3 மணி அளவில் ஜன்ம பூமியில் ராம்லல்லாவை  பிரதிஷ்டை செய்தனர். ”ஜெய் சியாராம்!   ஜெய் சியாராம்!”  என முழங்கி மணி அடித்தனர்.  அதுவே சட்ட ரீதியிலான ஹிந்துக்களின் ராம ஜன்மபூமி நில உரிமைப் போராட்டத்திற்கு வழிவகுத்த ஆணிவேர்.

வாழ்வின் லட்சியம் நிறைவேறிவிட்டதாகத் தெரிவித்த குருதத் சிங்,  ஆறு மாதங்களுக்குப் பிறகு தனது அரசுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் ஹிந்து மஹா சபையில் இணைந்தார்.
பாரதிய ஜனசங்கம் தொடங்கிய பிறகு அக்கட்சியில் இணைந்து,  பைசாபாத் மாவட்டத் தலைவர் ஆனார். சட்ட விரோதமாக அயோத்தியில் ராம் லல்லாவின் விக்கிரஹத்தை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தாக்குர் குருதத் சிங் பெயரும் இடம் பெற்றிருந்தது.  இவரை “முதல் கரசேவகர்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் குறிப்பிடுவது வழக்கம்.

14. பைராகி அபிராம் தாஸ்:

இவரது இயற்பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பிகாரின் தர்பங்கா மாவட்டத்தில், ரஹாரி கிராமத்தில் பிறந்தவர். சிறந்த மல்யுத்த வீரர். இளைஞர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளிக்க அகாடாக்களைத் தோற்றுவித்தவர். மஹந்த் சரயூ தாஸ், பிகாரில் இருந்து அயோத்தி வந்த அபிராம் தாஸின் குரு. அவர் அயோத்தியில் மிகப் புகழ்பெற்ற ஹனுமான் கர்ஹி கோயிலை நிர்வாகம் செய்துவந்த சாது. அவரிடம் தீட்சை பெற்று ராம் சந்தாணி சம்பிரதாய சாதுவாக வாழ்ந்தவர்.

ராம் சந்தாணி சாதுக்கள் வெள்ளையாடை அணிந்து துறவியைப் போன்று வாழ்பவர்கள். குருவின் மறைவிற்குப் பின் ஹநுமான்கர்ஹி கோயிலின் நிர்வாகம்  அபிராம் தாஸ் வசம் வந்தது. ஹநுமான்கர்ஹி கோயிலேயே வசித்து வந்தார். வேத பாடசாலை, ஸம்ஸ்க்ருத வகுப்புகள், கோசாலை போன்றவற்றை அங்கு நடத்தி வந்தார். அயோத்தி மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். மஹந்த் ராமசந்திர பரமஹம்சரின் நண்பர்.

பரமஹம்சர்  ஹிந்து மஹா சபையின் நகரத் தலைவர். அபிராம் தாஸ் அக்கட்சியில் சாதாரண உறுப்பினர்; ராம ஜன்மபூமியை மீட்க வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவர். இவர் கனவில் ராமர் தோன்றினார். ராமர் கனவில் கூறியபடி, 1949 டிச. 22ஆம் தேதி இரவு, ராமஜன்ம பூமியில் ஆக்கிரமிப்பாளர்களால் கட்டப்பட்டிருந்த கட்டடத்தின் நடு குமட்டத்தின் நேர் கீழே  ஸ்ரீராம் லல்லாவின் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

இவருடைய நண்பரும் ராம் சந்தாணி சாதுவுமாகிய பிருந்தாவன் தாஸ் ராம் லல்லாவின் சிலையை எடுத்துவந்தவர். இவர்கள் இருவரும் நிர்வாணி அகாடாவைச் சேர்ந்தவர்கள். பைராகி அபிராம் தாஸ் தனது கனவை நிறைவேற்றியதே, அயோத்தி சட்டப் போராட்டத்தில் முக்கிய அங்கமானது. அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அபிராம் தாஸ் சேர்க்கப்பட்டார். அபிராம் தாஸ் தனது கடைசிக் காலம் (1981) வரை ராம ஜன்மபூமியை மீட்க வேண்டும் என்பதில் ஆர்வமுடன் பணியாற்றி வந்தார்.

15. பாபா ராகவ தாஸ்:

பைசாபாத் தொகுதியில் 1948ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்றவர் பாபா ராகவ தாஸ். அத்தொகுதியில் நேருவின் ஆதரவுடன் போட்டியிட்ட சோஷலிஸ்ட் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் மார்க்சிய  சிந்தனாவாதியுமான நரேந்திரதேவ் தோல்வியைத் தழுவினார். பைசாபாத் முஸ்லிம்கள்  அனைவரும் நரேந்திரதேவிற்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். அயோத்தி ஹிந்து வாக்காளர்கள் அனைவரும் பாபா ராகவ தாஸிற்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிபெற வைத்தனர்.

அப்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த் வல்லப பந்தும் பாபா ராகவ தாஸ் வெற்றி பெறுவதையே விரும்பினார். கோவிந்த் வல்லப பந்த் அயோத்தியில் ராம ஜன்மபூமிக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். அதனால் நேருவின் கோபத்திற்கு ஆளானபோதும் நேருவால் அவரை எதுவும் செய்ய இயலவில்லை. பாபா ராகவதாஸின்   நெருங்கிய நண்பரான ஹனுமான் பிரசாத் போத்தார் நீண்ட காலம் செய்து வந்த உதவி,  ராம ஜன்மபூமி விடுதலை இயக்கத்திற்கு  பேருதவியாக அமைந்தது.

16. கே.கே.நாயர் – சகுந்தலா நாயர்:

அயோத்தி இயக்கத்திற்காக, சர்வ வல்லமை படைத்த நேருவையே எதிர்த்து நின்று, ஹிந்துக்களின் தார்மிகக் குரலாக ஒலித்தவர் பைசாபாத் மாவட்ட ஆட்சியராக இருந்த கே.கே.நாயர். இவரும் இவரது மனைவி சகுத்தலா நாயரும் ராமபக்தர்களால் என்றும் நினைவு கூரப்படுவர்.

 ‘கண்டங்களத்தில் கருணாகரன் நாயர்’ என்பதன் சுருக்கமே கே.கே.நாயர். 1907 செப். 11இல் குட்டநாடு பகுதியில் பிறந்தவர். சநாதன தர்ம வித்தியாசாலை- ஆலப்புழை, ஸ்ரீமூலம் விலாசம் உயர்நிலைப் பள்ளி- திருவனந்தபுரம், சயின்ஸ் காலேஜ்- திருவனந்தபுரம் (மெட்ராஸ் பல்கலைக்கழகம்), பாரசேனி கல்லூரி- அலிகர், ஆக்ரா பல்கலைக்கழகம், ஆகியவற்றில் பயின்றவர்; பின்னர் இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ஐ.சி.எஸ். தேர்ச்சி பெற்று  1930ஆம் வருடம் ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.  மலையாளம், தமிழ், ஆங்கிலம், சமஸ்க்ருதம், ஹிந்தி, உருது, பிரெஞ்ச், லத்தீன், ருஷ்யன், ஸ்பானிஷ், ஜெர்மானி மொழிகள் அறிந்தவர். தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றிய கே.கே.நாயர் 1949ஆம் வருடம் மாவட்ட ஆட்சியராக பைசாபாத்திற்கு பணி மாற்றலாகி வந்து சேர்ந்தார். இவரின் கீழ் நகர மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றியவர் தாக்குர்  குருதத் சிங்.

1949ஆம் ஆண்டு அயோத்தி ஜன்மஸ்தான் வளாகத்தில் நடைபெற்ற ராம்லல்லா பிரதிஷ்டை சம்பவங்களைப் பற்றி அறிக்கையைக் கேட்ட மாநில அரசின் கோரிக்கைக்காக, தனக்குக் கீழ் பணியாற்றிய குருதத் சிங்கிடம் அப்பணியை ஒப்படைத்தார். அறிக்கை சமர்ப்பித்த குருதத் சிங், “ராமர் பிறந்த இடத்தில் மக்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். 

மத்தியில் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் அரசாங்கம், ராம ஜன்மபூமியில் இருந்து அந்த விக்ரஹத்தை அகற்றி பக்தர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட மாஜிஸ்திரேட்டான (ஆட்சியர்) கே.கே.நாயர் அதற்கு உடன்படவில்லை. “அயோத்தி ஆலயத்தில் இருந்து ஹிந்துக்களை வெளியேற்ற முடியாது” எனக் கூறிய அவர்,  “கோயிலுக்கு சொந்தக்காரர் அந்த இடத்தில் பூஜை செய்து வருகிறார். அகற்றினால் வகுப்புக் கலவரம் வரும்” என்று தெரிவித்து, பிரதமர் நேருவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்துவிட்டார்.

எனவே, அப்பகுதியின் கோட்டாட்சியர் எஸ்.எஸ்.தர் அயோத்தி நிலவரம் குறித்து உண்மை நிலவரத்தை அளிக்குமாறு பணிக்கப்பட்டார். அவர் அளித்த அறிக்கையிலும் ஆட்சியரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தினார். “நான் நிலைமையை நன்கு ஆராய்ந்திருக்கிறேன். மக்களின் கருத்தையும் கேட்டேன். இப்போது அங்குள்ள ராமர் விக்ரஹத்தை பலவந்தமாக அகற்றினால் பெரும் கலவரம் வெடிக்கும். அது உசிதமானதல்ல. இ.பி.கோ. 145வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். அங்கு தற்போதுள்ள பூஜாரியை நீக்கிவிட்டு, அரசே தகுந்த நபரை பூஜாரியக நியமிக்கலாம். அங்கு நடைபெறும் எந்த வழிபாட்டுச் சடங்குகளையும் அரசு நிறுத்தக் கூடாது” என்று அவர் அறிக்கை அளித்தார்.

என்றபோதும், நேருவின் நெருக்கடி காரணமாக, உத்தரபிரதேச முதல்வர் கோவிந்த் வல்லப பந்த், ஆட்சியர் கே.கே.நாயரை பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி  உத்தரவிட்டார். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்று  மீண்டும் அப்பதவியில் அமர்ந்த நாயர், சில மாதங்களுக்குப்  பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்யத் தொடங்கினார்.

1952ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்டபோது தனது மனைவியுடன் அதில் சேர்ந்தார். 1967இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கே.கே.நாயர் பாஹ்ரைச் தொகுதியிலும், இவரது மனைவி சகுந்தலா நாயர் கேசர்க்கஞ்ச் தொகுதியில் இருந்தும் பாரதீய ஜனசங்கம் சார்பில் வெற்றி பெற்றனர். 

சகுந்தலா நாயர் 1952இல் ஹிந்து மஹாசபை வேட்பாளராகவும், 1967-1971இல் பாரதீய ஜனசங்கம் சார்பிலும் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இவரது வாகன ஓட்டுநரும் பைசாபாத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு ஜனசங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்டார்! இறுதிவரை அயோத்தி மக்களால் ‘நாயர் சாஹேப்’ என்று அன்புடன் கே.கே.நாயர் அழைக்கப்பட்டார்.

இந்திரா காந்தியின் நெருக்கடிநிலைக் காலத்தில் கே.கே.நாயரும் இவரது மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்து விடுதலையான நாயர் 1977, செப். 7 ஆம் தேதி காலமானார். தம்பதி இருவரும் தங்களது கடைசிக்காலம் வரை அயோத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தனர். 

17. மஹந்த் ராமசந்திர தாஸ் பரமஹம்ஸர்:

அயோத்தி ராம ஜன்மபூமி விடுதலை இயக்கத்தில் மஹந்த் ராமசந்திர பரமஹம்ஸரின் (1913- 2003) பங்களிப்பு முதன்மையானது. ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவராக இருந்து வழிகாட்டியவர்; இதற்கான சட்டப் போராட்டத்திலும் ஆரம்பத்தில் இருந்து துணை நின்றவர் பரமஹம்ஸர்.

 பிகாரில் 1913இல் பிறந்த சந்திரேஸ்வர் திவாரி, அயோத்தி வந்து திகம்பர் அகாரா மடத்தில் சேர்ந்து துறவியானார். இவரது ஆவேசமான தர்க்கத் திறனால் ‘பிரதிவாதி பயங்கரம்’ என்று சிறப்புப் பெயர் பெற்றார். 1947இல் பைசாபாத் மாவட்ட ஹிந்து மகாசபை தலைவராகப் பொறுப்பேற்றார்.

1949இல் சர்ச்சைக்குரிய கட்டடத்தினுள் ராமர் விக்ரஹம் வைக்கப்படுவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார். அயோத்தி நில உரிமை தொடர்பான இரண்டாவது வழக்கு 1950இல் இவரால் தொடரப்பட்டது. 1950 முதல் 1980 வரை அயோத்தி மீட்புக்கான உணர்ச்சி அலைகள் தொடர்வதற்கு இவரது தீவிரமான பக்தி ஈடுபாடே காரணம்.

1980களில் அயோத்தி இயக்கம் மீண்டும் வீறுகொண்டு எழுந்தபோது, விஸ்வ ஹிந்து பரிஷத்துடனும் துறவியர் பேரவையில் இணைந்தும் அயோத்தி ராமர் கோயில் மீட்புப் போராட்டத்தில் முன்னின்றார். 1992இல் கும்மட்டங்கள் தகர்க்கப்பட்ட பிறகு ராமர் கோயிலை அமைக்க பரிஷத் உருவாக்கிய ராம ஜன்மபூமி நியாஸில் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.

மஹந்த் ராமசந்திர பரமஹம்ஸர் மிகவும் உணர்ச்சிமயமானவர். அவருக்கு ராமபக்தியே பிரதானம். ராமருக்காக தனது உயிரைத் துறக்கவும் அவர் எந்நேரமும் சித்தமாக இருந்தார். எனவேதான் அரசுகள் இவரை மிகவும் பயபக்தியுடன் நடத்தின.

1984இல் உடுப்பியில் கூடிய துறவியர் மாநாடு, “சிவராத்திரிக்குள் ராமர் கோயிலின் பூட்டுகள் திறக்கப்பட வேண்டும்” என்று அரசை எச்சரித்தது. அப்போது, “ராமரை வழிபட பூட்டுகள் திறக்கப்படாவிட்டால் ராமநவமியன்று தீக்குளிப்பேன்” என்று அறிவித்தார் பரமஹம்ஸர்.

அதுபோலவே, ‘இனிவரும் காலத்தில் சட்டப் போராட்டம் மூலமாக அயோத்தி இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்று சொன்ன பாஜகவுடன் பரமஹம்ஸர் முரண்பட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 2002ஆம் ஆண்டு அரசின் தடையை மீறி சிலா தானம் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்தார்.  ‘அரசு அனுமதிக்காவிடில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்றும் அறிவித்தார். அரசு அவருக்குப் பணிந்தது. நீதிமன்ற உத்தரவு பெற்று, சிலாதானம் நிகழ்ச்சி நடைபெற அரசு உதவியது.

அந்நிகழ்வில், கரசேவகபுரத்தில் தயாரான சிற்பத் தூண்களை கோயில் கட்டுமானப் பணியின் அடையாளமாக வழங்கினார் பரமஹம்ஸர். 2003 ஜூலை 31ஆம் தேதி, மஹந்த் ராமசந்திர பரமஹம்ஸர் காலமானார். மஹந்த் நிருத்ய கோபால்தாஸ், ராம ஜன்மபூமி நியாஸின் தலைவரானார்.

18. மஹந்த் அவைத்யநாத்:

தனது குரு திக்விஜய்நாத்தின் அடியொற்றி, 1969இல் கோரக்‌ஷ பீடத்தின்  அதிபதியான மஹந்த் அவைத்யநாத் (1921-2014), அயோத்தி மீட்பு இயக்கத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புடன் இணைந்து முன்னெடுத்தார். 1984இல் ராம ஜன்மபூமி முக்தி யக்ஞ சமிதி அமைக்கப்பட்ட போது அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இவரது இயற்பெயர் கிருபா சிங் பிஷ்ட்; 1940இல் துறவேற்றார். ஹிந்து மகாசபை, பாரதீய ஜனசங்கம், பாஜக ஆகிய அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், உ.பி.யின் மணிராம் சட்டசபை தொகுதியில் இருந்து 5 முறையும் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 4 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

1949இல் ராமர் சிலையை தடையை மீறி பிரதிஷ்டை செய்தது முதல், ராமர் கோயில் மீட்பு இயக்கத்தின் வழிகாட்டியாகவும், நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமருக்காக ஆக்ரோஷமாக வாதிடும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தார். இவருக்குப் பின் கோரக்பூர் கோரக்‌ஷ பீடத்தின் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்துபவர் வேறு யாருமல்ல, உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் தான். அந்த வகையில் தனது குரு பரம்பரையின் அற்புதமான தொடர்ச்சியை விட்டுச் சென்றிருக்கிறார் மஹந்த் அவைத்யநாத்.    

19. மோரோபந்த் பிங்களே:

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பு மட்டும் தோன்றாமலிருந்திருந்தால், ராமர் கோயில் இயக்கமே இந்த அளவு பேசுபொருளாகி வென்றிருக்காது. ராமர் கோயில் இயக்கத்தின் தளகர்த்தர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வார்க்கப்பட்டவர்களே. அவர்களுள் தலையாயவர் மோரோபந்த் பிங்களே.

மகாராஷ்டிரத்தைச் சார்ந்த மோரேஸ்வர் நீல்காந்த் பிங்களே (1919- 2003), ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனரான டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரிடம் பயிற்சி பெற்றவர்; 1946 முதல் சங்கத்தின் முழுநேர ஊழியர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றிய பிங்களே, 1964இல் விஸ்வ ஹிந்து பரிஷத் தொடங்கப்பட்டபோது அதன் நிறுவன உறுப்பினரானார்.

1981இல் தமிழகத்தின் மீனாட்சிபுரத்தில் கூட்டு மதமாற்றம் இஸ்லாமியர்களால் முன்னெடுக்கப்பட்டபோது, மதமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் ஏகாத்மதா யாத்திரைகளை 1983இல் திட்டமிட்டு நடத்தினார். அடுத்து ராமர்- ஜானகி ரத யாத்திரைகள் 1984இல் நடத்தப்பட்டதிலும் பிங்களேயின் பங்கு முதன்மையானது. இந்த யாத்திரைகளின் வெற்றியே, ராமர் கோயில் இயக்கத்தின் முதல் உந்துசக்தியானது.

பின்னாளில் நடைபெற்ற ராமர் ரத யாத்திரைகள் பலவும் (ராம் சிலா யாத்திரை, ராமஜோதி யாத்திரை, ராமர் பாதுகை யாத்திரை) மோரோபந்த் பிங்களேயின் வழிகாட்டலில் வெற்றி அடைந்தன. 1992 டிச. 6 நிகழ்வின் பின்னணியில் இருந்தவர் என்று அரசால் சந்தேகிக்கப்பட்டவர் பிங்களே.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களாக இருந்த குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், பாளாசாஹேப் மதுகர் தத்தாத்ரேய தேவரஸ், பேராசிரியர் ராஜேந்திர சிங், கு.சி.சுதர்சன், தற்போதைய தலைவர் மோகன் பாகவத் ஆகியோரும் ராமர் கோயில் இயக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர்.

20. கோபால் சிங் விஷாரத்:

அயோத்தி ராமர் கோயில் நில உரிமை வழக்கை முதன்முதலில் தொடர்ந்தவர்  (1950 ஜன. 16) அயோத்தி பிரமுகர்  கோபால் சிங் விஷாரத். ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கட்டடம் பூட்டப்பட்டிருப்பதால் வழிபாடு மறுக்கப்படுவதாக கூறி, ராமரை வழிபட அனுமதிக்குமாறு கோரி வழக்குத் தொடர்ந்தவர்  இவர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்தக் கட்டடத்தில் 1949இல் ராமர் விக்ரஹம் நிறுவப்பட்ட பின், அங்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் கோபால் சிங் விஷாரத். ஒருநாள் அவர் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. உடனே பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அது மட்டுமல்ல, “அங்கிருக்கும் ராமர் சிலையை அகற்ற சிலர் திட்டமிடுகின்றனர். அதனை நீதிமன்றம் தடுக்க வேண்டும். அதனை பக்தர்கள் வழிபடவும் உதவ வேண்டும்” என்று அவர் வாதிட்டார். மாநில அரசு, உள்ளூர் முஸ்லிம் பிரமுகர் ஜாகூர் அகமது உள்ளிட்டோருக்கு எதிராக அந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, அங்கு நிறுவப்பட்ட ராமர் சிலையை அகற்ற தடை விதித்தார்.

1986இல் விஷாரத் காலமான பிரகு, அவரது மகன் ராஜேந்திர சிங் வழக்கை தொடர்ந்து நடத்தினார். பின்னாளில் ராமர் கோயில் வழக்குகள் அனைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொகுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டன.

21. பி.பி.லால்:

ராமர் கோயில் வழக்கில் முக்கியமான நேரடி ஆதாரமாகக் கொள்ளப்பட்டவை, தொல்லியல் ஆய்வுத் துறையின் சாட்சியங்கள் தான். அதற்கு வித்திட்டவர், தொல்லியல் அறிஞர் பேராசிரியர் பிரஜ் பாசி லால் (1921- 2022). இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் (ஏ.எஸ்.ஐ.) தலைவராக 1968 முதல் 1972 வரை பணியாற்றியவர்; 1975-76 காலகட்டத்தில், அயோத்தி, சித்திரகூடம் உள்ளிட்ட ராமாயணம் தொடர்புடைய 5 இடங்களில் இவர் நடத்திய தொல்லியல் அகழாய்வு பல சரித்திர உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. ஆனால் இவரது ஆய்வறிக்கைகளை வெளியிட அரசு அனுமதிக்கவில்லை.

20 நூல்களையும் 150 ஆய்வறிக்கைகளையும் எழுதியுள்ள பி.பி.லால், பணி ஓய்வுக்குப் பிறகு, தனது தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகளை 1990இல் எழுதியபோது தான், தொல்லியல் துறை மீது அரசும் இடதுசாரிகளும் செலுத்தி வந்த மறைமுக ஆதிக்கம் தெரியவந்தது. பாபர் மசூதி கட்டடத்தின் கீழே மிக நீண்ட பழைய கோயில் கட்டுமானம் இருந்ததை லால் கண்டறிந்திருந்தார்.

                “பாபர் மசூதியின் அடித்தளத்தைத் தாங்கும் 12 தூண்கள் ஹிந்து கட்டடக் கலைநயம் கொண்டதாக இருப்பதுடன், ஹிந்து  கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் பாபர் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல; இத்தூண்கள் பாபர் மசூதிக்கு அந்நியமானது” என்ற இவரது ஆய்வு முடிவு இடதுசாரிகளை பெரும் பதற்றம் கொள்ளச் செய்தது. (Rama, His Historicity, Mandir and Setu: Evidence of Literature, Archaeology and Other Sciences- 2008)

இவரது தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள், அயோத்தி வழக்கில் பெரிது பயன்பட்டன; தவிர, 2003இல் ஏ.எஸ்.ஐ. மேற்கொண்ட அகழாய்வுக்கு உறுதுணை புரிவதாகவும் இருந்தன. இவருக்கு 2021இல் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

(தொடர்கிறது)

$$$

முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:

மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-

விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com

Leave a comment