-பேரா. ப.கனகசபாபதி, வேதா ஸ்ரீதர், பத்மன், பால.கௌதமன்
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: பேரா. ப.கனகசபாபதி, வேதா ஸ்ரீதர், பத்மன், பால.கௌதமன்...

35. சனாதனமே அனைவருக்கும் கல்வி கொடுத்தது!
-பேரா. ப.கனகசபாபதி
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது “நாமெல்லாம் படிக்கக் கூடாது என்பதுதான் சனாதனத்தின் கொள்கை” என்று கூறியிருந்தார்.
அதற்கு முன்னர் ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு பேசும் போது “இந்தியாவில் முன்பொரு காலத்தில் சனாதன தர்மத்தால் ஏழு சதவீத மக்களே கல்வி கற்க முடியும்” எனப் பேசியிருந்தார்.
சென்ற வருடம் ஜூன் மாதம் சபாநாயகர் அப்பாவு திருச்சியில் பேசும் போது “கிறிஸ்துவப் பாதிரியார்கள் தான் கல்வியை அனைவருக்குமானதாக ஆக்கினர்; சமூக சமத்துவத்தைக் கொண்டு வந்தனர்; திராவிட இயக்கமென்பது அவர்களது பணியின் நீட்சிதான்” என்று குறிப்பிட்டார். மேலும் ”கத்தோலிக்க பாதிரியார்கள் தான் தமிழக வளர்ச்சிக்கு முக்கிய காரணம்; தமிழகத்துக்கான அடித்தளம் அவர்களால் தான் போடப்பட்து; கத்தோலிக்கப் பாதிரியார்கள் இல்லாமல் இருந்திருந்தால், தமிழகம் பிகார் மாதிரி ஆகிப் போயிருக்கும்” எனவும் கூறினார். அவரது பேச்சு பற்றிப் பின்னர் கேள்விகள் எழுந்த போது, தான் வரலாற்றைத் தான் பேசினேன் என்று விளக்கமளித்தார்.
திமுகவினர் தொடர்ந்து மேற்கண்டவாறு பேசி வருவதன் அடிப்படைக் காரணம், பழைய காலந்தொட்டு முந்தைய நூற்றாண்டுகளில் நமது நாட்டில் கல்வி முறை மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கு மறுக்கப்பட்டு, உயர்சாதியினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது; அதற்கு இந்து மதமும் சாதிய அமைப்புகளும் காரணமாக இருந்தன என்பதை நிறுவுவதற்காகத் தான். மேலும் ஆங்கிலேயர் வந்த பின்னரே இந்திய மக்கள் பலருக்கும் கல்வி பரவலாக கிடைக்கப் பெற்றது என்ற எண்ணத்தையும் வலுப்படுத்தத் தான்.
மேற்கண்ட கருத்துருவாக்கத்தை உண்டாக்கியவர்கள் காலனி ஆதிக்க சக்திகள். அதனை திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பலவும் இன்று வரை தொடர்ந்து பரப்பி வருகின்றன. மேலும் பல ஆண்டுகளாக கல்வித் துறையை ஆக்கிரமித்து வந்துள்ள இடதுசாரிகளின் தாக்கங்களால் இதுவரை இந்தியக் கல்வி முறை பற்றி மாணவர்களுக்குச் சரியான விபரங்கள் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. அதனால் படித்தவர்கள் மத்தியில் கூட நமது கல்வி முறை பற்றி முழுமையான புரிதல் இல்லை.
ஆனால் உண்மை என்ன?
‘கல்வி சிறந்த தமிழ் நாடு’ எனப் பாரதி ஏன் பாடினான்?
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்னரே முன் தோன்றி மூத்த மொழி’யான தமிழில் தொல்காப்பியமும், திருக்குறளும், அகத்தியமும், பல்வேறு உயர்ந்த இலக்கியங்களும் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக எப்படித் தொடர்ந்து உருவாகிக் கொண்டே வந்துள்ளன?
சங்க இலக்கியங்களைப் படைத்தவர்களில் பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களும் பெண்களும் இருந்து வந்துள்ளனரே? அது எப்படி சாத்தியமாயிற்று?
மேற்கண்ட கேள்விகளை நாம் எழுப்பும் போது நாம் உண்மையை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
பழைய காலந்தொட்டு உலக அளவில் இந்தியா கல்வியில் முன்னோடியாக இருந்து, பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளைப் புரிந்து வந்துள் ளது. உலகின் முதல் பல்கலைக்கழகம் 2,700 வருடங்களுக்கு முன்னரே தட்சசீலத்தில் செயல்பட்டு வந்ததும், அப்போது உயர்கல்வி பெற உலகம் முழுவதிலிலும் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படித்துச் சென்றதும், இன்று உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.
நாளந்தா பல்கலைக்கழகம் ஆசிய நாடுகளின் பல்கலைக் கழகமாக விளங்கி வந்தது பற்றி சீன யாத்ரீகர்கள் உள்ளிட்ட பலரும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து முந்தைய நூற்றாண்டுகளில் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளன.
அதனால் தான், கணிதம், கட்டடக்கலை, அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தியா முன்னணியில் இருந்து வந்துள்ளது.
மருத்துவத் துறையில் உலகின் முதல் புத்தகம் சுமார் 2,600 வருடங்களுக்கு முன்னாலும், பொருளாதார- அரசியல் துறைகளில் புத்தகம் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னாலும் இங்குதான் எழுதப்பட்டன. ஆகையால் இந்தியா உலகின் பெரும் பொருளாதார சக்தியாகவும், பெரும் செல்வந்த நாடாகவும் விளங்கி வந்ததை சர்வதேச அளவிலான உறுதி செய்கின்றன.
முந்தைய காலங்களில் வித்தியாசமின்றி நமது தேசத்தில் கல்வி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. மைத்ரேயி, கார்கி உள்ளிட்ட புகழ்பெற்ற பெண் தத்துவ ஞானிகள் ரிக் வேதத்துக்குப் பங்களித்துள்ளனர். தமிழகத்தில் சங்க காலத்தில் சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னரே வாழ்ந்த ஔவையார் புற நானூற்றில் ஐம்பது பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்று உலகெங்கும் வைணவத் தலங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் திருப்பாவையை எழுதியவர் ஆண்டாள்; எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழகம் தந்த துறவி; நாச்சியார் திருமொழியை எழுதியதும் அவரே.
மகாத்மா காந்தி 1931ஆம் வருடம் வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றார். அந்த சமயத்தில் அங்கு நடந்த கூட்டமொன்றில் இந்தியக் கல்வி பற்றி அவரிடம் கேட்ட போது, அப்போது இருந்ததை விட முந்தைய காலங்களில் நன்றாக இருந்தது எனவும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மோசமாகி வருவதாகவும் பதிலளித்தார். மேலும் இந்தியக் கல்வி முறை ‘அழகான மரம்’ போல இருந்ததாகவும், ஆங்கிலேயர்கள் அதைத் தோண்டி எடுத்து அப்படியே விட்டு விட்டனர் எனவும் குற்றம் சாட்டினார். அவரது கூற்றை நிரூபிக்க முடியுமா என ஆங்கிலேயர்கள் சவால் விட்டனர். சுதந்திரப் போராட்டத்தில் இருந்ததால் அவரால் அதற்கு நேரம் கொடுக்க முடியவில்லை.
சுதந்திரத்துக்குப் பின்னர் காந்திய அறிஞர் தரம்பால் அந்தப் பணியை மேற்கொண்டார். இங்கிலாந்து சென்று அங்கிருந்த ஆவணங்களை எல்லாம் திரட்டினார். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கணக்கெடுப்புகள் வாயிலாக களத்தில் நாடு முழுவதும் தொகுக்கப்பட்ட விபரங்களைச் சேகரித்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலவி வந்த கல்வி முறை பற்றிய விபரங்களை ‘அழகிய மரம்- பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய பாரம்பரிய கல்வி’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.
அந்த விபரங்கள் அப்போதைய மதராஸ் பிரசிடென்சியில் 1822- 25 காலகட்டத்தில் நிலவிய கல்வி பற்றிய ஆய்வுகள்; 1820களில் பம்பாய் பிரசிடென்சியில் நிலவிய கல்வி பற்றிய ஆய்வுகள்; 1835-38 காலகட்டத்தில் வங்காளம், பிகார் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து முன்னாள் மத போதகர் வில்லியம் ஆடம் எழுதிய ஆவணங்கள் மற்றும் பஞ்சாப் பகுதியின் ஆரம்பக் கல்வி பற்றி ஜி.டபிள்யூ. லெய்ட்னர் 1882இல் தொகுத்தவை உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
அவை, இப்போது திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் நம் தேசத்தின் கல்வி பற்றிச் சொல்லி வரும் பொய்களை உடைத்தெறிகின்றன. அவற்றில் மூன்று முக்கிய விஷயங்களை மட்டும் இப்போது எடுத்துக் கொள்ளலாம். அதிலும் இப்போது கல்வி பற்றிய விவாதம், நமது மாநிலம் பற்றி இருப்பதனால் அதைப் பற்றி அதிகமாகப் பார்க்கலாம்.
முந்தைய காலக் கல்வி பற்றி வைக்கப்படும் முதல் குற்றச்சாட்டு அப்போது கல்வி பரவலாக அதிக அளவில் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பது. ஆனால் ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் மற்றும் அவர்களின் ஆவணங்கள், கல்வி எவ்வாறு நமது நாட்டின் பல பகுதிகளிலும் விரிந்து பரவியிருந்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
அந்தக் கணக்கீடுகள் எடுக்கப்பட்ட காலகட்டங்களில் பாரம்பரிய பள்ளிக் கல்வி முறை அழிய ஆரம்பித்து விட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலேயர்கள் ஏற்கெனவே நமது கல்வி முறையை சிதைக்கத் தொடங்கியிருந்தனர். எனவே இந்தப் புள்ளி விபரங்கள் நமது கல்வி முறை சிதைவுகளை எதிர்கொண்டு வரும்போது எடுக்கப்பட்டவை. அதற்கு முன்னர் கல்வி இன்னமும் நன்றாக இருந்தது என்று ஆங்கிலேயர்களே ஒப்புதல் வாக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்தப் புள்ளி விபரங்களை எடுத்துக் கொண்டால் கூட, அவை சராசரியாக நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது என்றும், பெரிய கிராமங்களில் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் இருந்தன என்றும் எடுத்துக் காட்டியுள்ளன. 1830கள் வரை அப்போதைய வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் மட்டும் ஒரு லட்சம் பள்ளிகள் இயங்கி வந்தாக ஆடம் குறிப்பிட்டுள்ளார்.
மதராஸ் பிரசிடென்சியைப் பொருத்த வரை, அதன் கவர்னர் ஜெனரலாக 1820 முதல் இருந்து வந்த தாமஸ் மன்றோ உள்ளிட்ட பலரும் “ஒவ்வொரு கிராமமும் பள்ளியைக் கொண்டிருந்தது” எனக் கூறியுள்ளனர். மன்றோ கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ அதிகாரியாகவும் இருந்தவர். மேலும் சராசரியாக சுமார் ஐநூறு பேரிலிருந்து ஆயிரம் பேருக்கு ஒரு பள்ளி இயங்கி வந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு, கல்வி மேல் ஜாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது; பிற ஜாதிகளுக்கு மறுக்கப்பட்டது என்பது. உண்மை நிலவரம் என்ன?
இப்போதைய தமிழக நிலப்பரப்பை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால், சூத்திரர்களும், பிற ஜாதிகளுமே மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் படித்து வந்துள்ளது தெரிய வருகிறது.
பிராமணரல்லாத மாணவர்களே 78 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை பள்ளிகளில் இருந்துள்ளனர். பிராமண மாணவர்களின் எண்ணிக்கை மாவட்டங்களில் 8.6 விழுக்காடு முதல் 22 விழுக்காடு வரை இருந்துள்ளது. மாநில முழுவதும் சராசரியாக சுமார் 13 விழுக்காடு அளவு.
பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய உயர் ஜாதிகளைத் தவிர சூத்திரர் மற்றும் பிற ஜாதி மாணவர்களின் எண்ணிக்கை மாவட்டங்களில் சராசரியாக சுமார் 70 முதல் 84 விழுக்காடு வரை இருந்து வந்துள்ளது. சூத்திரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 70 விழுக்காட்டுக்கு மேல் அப்போதைய கோயம்புத்தூர், திருச்சி, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் படித்து வந்துள்ளனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை, மாவட்டங்களில் 2.4 விழுக்காடு முதல் பத்து விழுக்காடு வரை இருந்துள்ளது.
எனவே பிராமணர்களே கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, பிற ஜாதிகளுக்கெல்லாம் அதை மறுத்து வந்தனர் என்கின்ற வாதம் தவிடுபொடியாகிறது. கல்வியின் அவசியத்தை நமது முன்னோர் புரிந்துகொண்டு, அதனால் கல்வியைப் பரவலாக்கி வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட தேசிய நூலகம்- ஸ்காட்லாந்து ஆவணக் குறிப்புகள், ‘இந்துக்கள் அளவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை’ எனவும், ‘கல்வி பெறுவதற்காக அவர்கள் மற்ற அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள்’ எனவும் குறிப்பிடுகின்றன.
இந்தியக் கல்வி மற்றும் கலாசாரம் பற்றி ஆய்வுகள் செய்த இலங்கை அறிஞர் ஆனந்தகுமாரசாமி, ‘பாரம்பரிய அமைப்புகள் சிதைக்கப்பட்டதால் தான் அனைத்து ஜாதியினரும் பரவலாகப் பெற்று வந்த சமநிலை குறைந்தது; அட்டவணை ஜாதிகள் என்று இப்போது அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் மக்களின் தாழ்ந்த நிலைக்கு காரணமாக அமைந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக வைக்கப்படுகின்ற வாதம், ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வி கொடுத்தனர் என்பது. உண்மை என்ன?
பொதுயுகம் 1,800 வரை இங்கிலாந்தில் பள்ளிக்கல்வி அனைத்து மக்களுக்கும் பொதுவாகக் கிடைக்காத ஒன்றாகவே இருந்தது. 1,800களின் தொடக்கக் காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து வந்த பள்ளிகளின் எண்ணிக்கையில் சுமார் பாதியளவே இங்கிலாந்து முழுவதும் இருந்து வந்துள்ளது. அதுவும் அங்கு பள்ளி நேரம் ஒன்றிரண்டு மணி நேரங்கள் மட்டுமே. இங்கு கல்விக்காலம் பல வருடங்கள். எனவே அங்கேயே கல்வி இல்லாத போது, அவர்கள் இந்தியாவுக்கு கல்வி கொடுத்தார்கள் என்பது தான் ஏமாற்று வேலை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நமது கல்வி முறை சிதைந்து கொண்டிருக்கும் போது தான் இங்கிலாந்தில் அதிக அளவில் பள்ளிகள் அதிகரித்தன. அப்போது இங்கு நிலவி வந்த நமது பரவலான கல்வி முறையைத் தான் ஆங்கிலேயர்கள் அவர்களின் நாட்டில் கல்வியைப் பரவலாக்கப் பயன்படுத்தியுள்ளனர். ஆடம் மற்றும் மதராஸ் (கலெக்டர்) ஆட்சியாளர்களின் ஆய்வுகள் ‘இந்திய பாரம்பரியக் கல்வியின் அழிவுக்கு ஆங்கிலேயர்களே காரணம்’ எனத் தெரிவிக்கின்றன.
எனவே பல நூறாண்டுகளாக இந்தியாவில் இருந்து வந்த அனைவருக்குமான கல்வி அமைப்பு முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர். கல்வி நிறுவங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகைகள், வருமான ஆதாரங்களை எல்லாம் நிறுத்தினர். பின்னர் 1835ஆம் ஆண்டில் மெக்காலே கல்வி முறை இந்தியாவில் திணிக்கப்பட்டது. அதன் பின்னர் முழுமையாக கல்வி சிதைக்கப்பட்டது. அதனால் எழுத்தறிவு பெற்றவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 1891இல் வெறும் ஆறு விழுக்காடாகக் குறைந்து போனது.
அமெரிக்க அறிஞர் வில் துரந்த் 1930இல் எழுதும் போது, ‘இந்தியக் கல்வி முறை ஆங்கிலேயர்களால் சிதைக்கப்பட்டதனால், அந்தச் சமயத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்கு விழுக்காடாக குறைந்து போனது’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அதில் பெண்களின் பங்கு ஒன்றரை விழுக்காடு மட்டுமே. அந்தக் கல்வியும் அதிகக் கட்டணம் வசூலித்த பின்னரே கொடுக்கப்பட்டது. எனவே மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்த ஒரு நூறு வருட காலத்துக்குள் இந்தியாவில் கல்வி பெற்றவர் எண்ணிக்கை அகல பாதாளத்துக்குச் சென்று விட்டது.
மேற்கண்ட ஆதாரங்கள் இந்தியாவின் பாரம்பரியக் கல்வி முறை எவ்வாறு பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் தேசத்தின் பாரம்பரியக் கல்வி முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர் என்பதும், இங்கிலாந்து நாட்டில் கல்வி பத்தொன்பதாவது நூற்றாண்டு தொடங்கியே அதிகரிக்கத் தொடங்கியது என்பதும் தெரிய வருகிறது.
எனவே சனாதன தர்மம் கல்வியை அனைவருக்கும் கொடுத்து, அதனால் தேசத்தை உலகின் முதல் நிலையில் வைத்திருந்தது; தமிழகத்திலும் கல்வி ஜாதி வித்தியாசமின்றி பலருக்கும் அதிக அளவில் கிடைக்கச் செய்தது. அதனால் இந்தியா உலக அளவில் வெவ்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வந்தது.
திராவிட –கம்யூனிசவாதிகள் இனி மேலாவது நமது தமிழகம் மற்றும் தேசத்தின் வரலாற்று உண்மைகளைப் படித்துத் தெரிந்து கொண்டு, ஐரோப்பியர்கள் சொல்லிக் கொடுத்த பொய்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.
அவர்கள் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி, தமிழ்க் கலாசாரத்தின் பெருமைகளையும், இந்து தர்மத்தின் வரலாற்றையும் இனி மேலும் மறைக்க முடியாது.
இல்லையெனில் உங்கள் இயக்கங்களின் ஆயுள் காலங்கள் முடிவதற்கு முன்னரே, அவை மக்களால் ஜனநாயக முறையில் தூக்கி எறியப்படும்.
- பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி, புதுதில்லியில் உள்ள டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் அறங்காவலர்; தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவரும் கூட.
$$$
36. ஜாதி முறை தீமையல்ல!
-வேதா ஸ்ரீதர்
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சீற்றத்தைக் கண்டு திராவிட அடிப்பொடிகள் குலை நடுங்கிய விவகாரத்தைப் பற்றித் தமிழ்நாட்டில் முதல்முறையாக பாஜக சார்பில் அதன் தலைவர் திரு. அண்ணாமலை பேசி இருக்கிறார். சந்தோஷம்.
இதேபோல அறுபதுகளில் சித்ரா பௌர்ணமியில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவ தினத்தின்போது தி.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தின் மேடைக்கே சென்று ‘நான் முத்துராமலிங்க தேவர் சொல்கிறேன், இந்தக் கூட்டம் நடக்காது, அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்று தேவர் ஐயா அறிவித்தார். அன்றைய தினம், அவிழ்ந்த வேட்டியை எடுத்து முடியக்கூடத் திராணி இல்லாமல் ஈவேரா அன்டர்வேருடன் ஓடியதும், சில காங்கிரஸ் பிரமுகர்கள் தயவால் உயிர் பிழைத்ததும் வரலாறு சொல்லும் தகவல்.
அதாவது, பேச வேண்டியவர்கள் பேசினால், இவர்களுக்குப் புரிய வேண்டியது புரியும்.
இதுவரை நாட்டின் நல்லவர்கள் அனைவரும், ‘நாய் குரைத்தால் நாம் பதிலுக்குக் குரைப்பதா?’ என்று அமைதி காத்தார்கள்.
குரைக்க வேண்டாம், சாமி. கீழே குனியுங்கள், அது போதும். ஏனென்றால், அடுத்து என்ன வஸ்து பறந்து வரும், அதன் விளைவு என்ன என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு நன்றாகவே தெரியும். இன்று திரு. அண்ணாமலை செய்திருப்பதும் அதுதான்.
இதுவரை ஹிந்து இயக்கங்கள் ஜாதி விஷயத்தை முன்னிலைப் படுத்தாததற்குக் காரணம், அது சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் என்ற அச்சமே. ஆனால், இது தவறான கண்ணோட்டம் என்பது எனது கருத்து. காரணம், எந்த ஜாதியும் தங்கள் ஜாதியிலுள்ள மோசமான மக்களை முன்னிலைப் படுத்துவதில்லை.
சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
ராமனின் வழித்தோன்றல்கள் என்று தங்ளைப் பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்கள் வன்னியர்கள்.
‘இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த எங்கள் முன்னோரான தர்ம வர்மாதான் பெருமாள் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருள வேண்டும் என்று தவமிருந்தார், இந்த ஆலயத்தின் முதல் சுற்றைக் கட்டியதும் அவரே’ என்று பெருமைப்படுபவர்கள், காவிரிக்கரையில் வாழும் தேவர் ஜாதியினர். திருமங்கையாழ்வாரின் குல வாரிசுகளுக்கு இன்றும் அந்த ஆலய வேடுபறி உற்சவத்தில் மரியாதை உண்டு. இவர்கள் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே.
துருக்கர் ஆட்சியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டிருந்த நம்பெருமாளை ஶ்ரீரங்கத்தில் கொண்டுவந்து புனர் பிரதிஷ்டை செய்தவன் மகாராஜா கம்பண்ணன். பெருமாளுக்காக அவன் நடத்திய போரில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் மாண்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் மனைவியும், ‘என் கணவன் க்ஷத்ரியன், தர்மத்தைக் காக்கும் போரில் இறப்பதைத் தவிர அவனுக்கு உயர்வானது எதுவுமே இல்லை அதற்காக நான் பெருமைப்பட வேண்டும். நான் துக்கப்பட மாட்டேன்’ என்று சொல்லி வாளால் தங்களது திருமாங்கல்யத்தை அறுத்துக் கொண்டனர். அவர்கள் நாயுடு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
இன்றும்கூட பிராமண ஜாதியைச் சேர்ந்த வைணவர்களான ஐயங்கார்கள் அளவுக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ஓதுபவர்களும் ஆழ்ந்து படிப்பவர்களும் இந்த ஜாதியில் அதிகம் உண்டு.
சைவ ஆதீனங்களுக்குச் சொந்தம் கொண்டாடுவதில், சைவப் பிள்ளைகளுக்கும் வேளாளர்களுக்கும் செட்டியார்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான போட்டி உண்டு.
தமிழ் வளர்ப்பதில் பிராமணர்களுக்கும் செட்டியார், முதலியார், நாய்க்கர், பிள்ளை முதலிய ஏராளமான ஜாதிகளுக்கும் இடையே ஆக்கபூர்வமான போட்டி உண்டு.
எத்தனையோ பிராமணர்கள் மத அனுஷ்டானங்களைக் கைவிட்ட பின்னரும்கூட, பிள்ளை, செட்டியார், நாயக்கர், நாடார் முதலிய ஜாதியினர் தங்களது அனுஷ்டானங்களை முழுமையாகக் கைவிடவில்லை.
அதேபோல, மதுரை மீனாட்சியையும் சொக்கனையும் தங்கள் குலத்தின் மூதாதையாகக் கொண்டாடுவதில் வைகைக்கரைத் தேவர்களுக்கும் வேளாளர்களுக்குமிடையே ஆக்கபூர்வமான போட்டி உண்டு.
எனக்குத் தெரிந்து காஞ்சி மகா பெரியவா பரமாச்சாரியார் ஏதாவது ஒரு ஜாதியைப் பெயர் சொல்லித் திட்டி இருக்கிறார் என்றால், அது பிராமணர்களைத்தான். காரணம், அவர்கள் தங்களது குல ஆசாரத்தைக் கைவிட ஆரம்பித்து விட்டார்கள் என்பதே. அதேபோல, அவர் ஏதாவது ஒரு ஜாதியைப் பெயர் சொல்லிப் பாராட்டி இருக்கிறார் என்றால், அது செட்டியார் ஜாதியைத்தான். காரணம், கோயில்களில் பூஜைகள் முறைப்படி நடக்க வைப்பதில் தங்களது திரவிய காணிக்கையே முதலிடம் பெற வேண்டும் என்று ஆசைப்படுபவர்களைக் கொண்ட ஜாதி அது.
சென்னையில் திருப்பதிக் குடை வைபவத்தின்போதும் புரட்டாசி சனிக்கிழமைகளின்போதும் அனைத்து ஹிந்துக்களும் – குறிப்பாக, நாயுடுகளும் முதலியார்களும் – திருமண் அணிவார்கள். சென்னை மட்டுமல்ல, ஆர்க்காடு மாவட்டம் வரை அனைத்து ஜாதியினரும் திருப்பதியைச் சொந்தம் கொண்டாடுபவர்களே.
‘ஐயமாரைப் போலவே எங்களுக்கும் பூணூல் உண்டு, நாங்கள் தேவலோகத் தச்சன் மயனின் வழித்தோன்றல்கள்’ என்று மார்தட்டுவது கோயில் சிற்பங்களையும் விக்கிரகங்களையும் உருவாக்கும் விச்வகர்மா ஜாதி.
சாணாப்பயல் என்று மகா கேவலமாக நடத்தப்பட்டு வந்த பனையேறி ஜாதியினரான நாடார்கள், தங்கள் உழைப்பினால் மட்டும் முன்னேறவில்லை, ஐயா வைகுண்டர் என்ற அவதார புருஷரின் வழிகாட்டுதலும் அவர்களுக்கு உண்டு. இன்று அந்த ஜாதியினர் யோகி ராம்சுரத்குமாரை ஐயாவின் மறு அவதாரமாகவே பார்க்கிறார்கள். அரசியல் தளத்தில் பார்த்தாலும் அந்த ஜாதியினர் காமராஜர் போன்றவர்களைத் தான் தங்களது முன்னோடிகளாகக் கருதுகிறார்கள்.
என்னவோ, பிராமணர்கள் சாமியின் பெயரைச் சொல்லி சிலரைத் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி விட்டார்கள் என்ற ஒரே பொய்யைச் சொல்லிக் காலங்காலமாக வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்களே, இதே தமிழகத்தில்தான் மிகவும் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த பள்ளர்கள், தங்களை ‘தேவேந்திர குல வேளாளர்கள்’ என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறார்கள். தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்பதும் ஊருக்கே படியளக்கும் விவசாயம் சார்ந்தவர்கள் என்பதும்தான் அவர்களுக்குப் பெருமையாகத் தெரிகிறது.
இதேபோல ஒவ்வொரு ஜாதியையும் பற்றியும் பேச முடியும். இந்தியாவில் எந்த ஜாதியும் மட்டமான ஜாதி இல்லை. அதுமட்டுமல்ல, எந்த ஜாதியுமே மட்டமானவர்களைக் கொண்டாடுவதில்லை என்பது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்.
ஆமை நுழைந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்று பழமொழி சொல்லுவார்கள். அதையே இஸ்லாம் புகுந்த நாடும் கிறிஸ்தவம் புகுந்த நாடும் என்றும் சொல்லலாம். இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பாரதம் மட்டுமே. காரணம், ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களும் தங்களுக்குரிய ஆசாரங்களைக் கடைப்பிடித்தார்கள். அதற்குத் துணை நின்றது அவரவர் சாதியின் கட்டமைப்பும் தலைமையுமே.
ஹிந்து மதம் நலிவடைந்ததற்குக் காரணம் ஜாதிப் பிளவுகள் அல்ல, மாறாக, ஜாதி ஆசாரங்கள் குறைந்து ஜாதிப் பெருமை மங்கி வருவதுதான். இது எனது கருத்து.
எனவே, ஜாதியை வைத்து மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்பவர்களை எதிர்கொள்ள ஒரே வழி, ஹிந்து மதத்துக்கும் பாரதிய சமுதாயத்துக்கும் ஒவ்வொரு ஜாதியின் பங்களிப்பை உரக்க எடுத்துச் சொல்வதுதான்.
ஹிந்து இயக்கங்கள் ஒவ்வொரு ஜாதியையும் பற்றிய இத்தகைய உயர்வான அம்சங்களை உரக்கச் சொல்ல வேண்டும். அப்போது, ஜாதி மோதல்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திராவிடக் குள்ளநரித் தந்திரம் எடுபடாது.
- திரு. வேதா ஸ்ரீதர் பதிப்பாளர்.
$$$
37. பாரதியின் வாக்கில் ‘சனாதனம்’
-பத்மன்
‘சனாதனம்’- இன்று பலர் வாயில் விழுந்து சங்கடப்படுகின்ற சொல்லாக மாறிவிட்டது. இதில் தெளிவு கிடைக்க, மகாகவி பாரதியின் வாக்கினிலே சனாதனம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் காண்போம்.
“மாகாளி கண்ணுற்றாள் ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!” என்று ரஷ்யப் புரட்சியை வாழ்த்தியதன் மூலம், தமிழுக்குப் புரட்சி என்ற புதுச் சொல்லைத் தந்த புதுமையாளர் பாரதி. அதேநேரத்தில் பழம்பெருமையையும் போற்றுபவர். அதனால்தான் “பாரத நாடு பழம்பெரும் நாடு; நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்”என்று நமக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆனால், அந்த நினைவை அகற்றத் தான் பல தீய சக்திகள் இன்று போர் தொடுக்கின்றன.
சனாதனம் என்ற சொல்லுக்கு, தொன்றுதொட்டு வருகின்ற நன்மரபு என்று பொருள். அது நமக்கு வழிகாட்டும் வெளிச்சம். சனாதனத்தில் தவறில்லை. ஆயினும், அதைப் பின்பற்றும் சிலரிடம் தவறு இருக்கிறது, அதனைத் திருத்த வேண்டுமே தவிர, சனாதனத்தையே ஒழிக்க நினைப்பது, வேர்களை வெட்டத் துடிக்கும் மூடத்தனத்தின் மணிமகுடம். உடலிலே ஓர் நோவு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக உடலையே வெட்டி எறிந்துவிட முடியுமா? நோயைத்தானே விரட்ட வேண்டும்? எலி புகுந்துவிட்டது என்பதற்காக வீட்டைக் கொளுத்துவார்களா?
எது சனாதனம்?
“ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஒரு
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?”
என்றார் மகாகவி பாரதியார்.
“உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே, அன்றி
வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே”
-என்றும் பாடினார் அவர்.
இந்த சகோதர மனப்பான்மையைக் கொடுத்திருப்பது சனாதனம்.
“ஹிமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம்!
யம் தேவம் நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே”
-என்கிறது ரிக் வேதம். இதனையே “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” என்று புறநானூற்றின் வரிகள், பாரத நாட்டின் வடக்குத் தெற்கு எல்லைகளாக வகுத்துக் கூறுகின்றன.
இவற்றை அடியொற்றி காலச்சூழலுக்குத் தகுந்த வண்ணம் “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா” என்றும்,. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றும் பாடினார் மகாகவி.
இவ்விதம் தாய்நாட்டைத் தெய்வமாகப் போற்றுதல் சனாதனம். நாட்டைப் போற்றுவதையே மதத்தின் முதல் அடையாளமாகக் கொண்டிருப்பது நம் சனாதனம். ஆகையால்தான் ‘பாரத மாதா’ என்கிறோம். ‘தமிழ்த்தாய்’ என்று மொழியைத் தாய்க் கடவுளாகக் காண்பதும் இந்தச் சனாதனக் கண்ணோட்டமே.
சாதியை நம் சனாதனம் போதிக்கவில்லை. அனைவரும், அனைத்துமே ஆண்டவனின் அம்சம் என்பதே நம் சனாதனம். இதைத்தான்
“காக்கை குருவி எங்கள் சாதி,
நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம்!
நோக்குமிடமெல்லாம் நாமின்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்!”
என்றும்,
“யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மையெல்லாம் உன் தெய்வ லீலையன்றோ”
-என்றும் மகாகவி பாடினார். காக்கை சிறகினில்கூட நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்டார். “காண்பதெல்லாம் கடவுள்” என்ற சனாதனக் கருத்தை உள்வாங்கியதன் வெளிப்பாடே இந்த வைர வரிகள்.
நந்தனாரை சாதி பார்த்து பிரித்தது சமூகக் கொடுமை. அவரையே நாயன்மாராக உயர்த்தி வணங்குவதே நம் சனாதனம்.
பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி அல்ல, அடையக்கூடிய தகுதி நிலை என்பதுதான் சனாதனம். இதை நாற்குலம், பிராமணன், ஜாதிபேத வினோதங்கள் ஆகிய கட்டுரைகளில் விவரித்துள்ளார் மகாகவி பாரதியார். பிராமணன் யார் என்ற கட்டுரையில் ‘வஜ்ர ஸூசி’ என்ற உபநிஷதத்தில் பிராமணன் யார் என்று விளக்கப்பட்டிருப்பதை இவ்விதம் விண்டுரைக்கிறார்:
“உயிராலோ, உடம்பாலோ, பிறப்பாலோ, அறிவாலோ, செய்கையாலோ, தர்ம குணத்தினாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிட மாட்டான். இரண்டற்றதும், உள்ளும் புறமுமாய் நிறைந்திருப்பதும் அனுபவத்தால் உணரக் கூடியதுமான இறுதிப் பொருளை நேருக்கு நேராக அறிந்து, காம, குரோத, லோப குற்றங்கள் நீங்கியவனாக வாழ்கிறோனோ அவனே பிராமணன். பிராமணன் ஆக நினைப்போர் மேற்சொன்ன தகுதிகளை அடைய முயற்சி செய்க”
-என்று கூறியுள்ளார் பாரதியார். இதை நடைமுறையிலும் சாதிக்கத்தான் கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டு வேத உபதேசம் செய்தார்.
‘தத்வமஸி’ என்பது வேத மகா வாக்கியம், இதன் உட்பொருளை, தனது ‘புதிய ஆத்திசூடி’யில் “தெய்வம் நீ என்று உணர்” என எளிமையாகவும் தெளிவாகவும் பாரதியார் எடுத்துரைத்துள்ளார். “அறிவே தெய்வம்” என்ற கவிதையிலே,
“சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ- பல
பித்த மதங்களிலே தடுமாறி
பெருமை அழிவீரோ?’
-என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதே கவிதையில்,
“வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று
வேதம் புகன்றிடுமே ஆங்கோர்
வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென
வேதம் அறிகிலதே”
என்றும் பாடியிருப்பார். “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்கிறது ரிக் வேதக் கருத்தின் விளக்கம் தான் இந்தக் கவிதை வரிகள்.
என் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்று சனாதனம் சொல்வதில்லை, வழிபாட்டுச் சுதந்திரம் உனக்கு உண்டு, ஆனால் அதற்காகப் பிறர் நம்பிக்கையைப் பழிக்காதே என்பதுதான் சனாதனம் காட்டுகின்ற வழி. இதை, ‘யாரைத் தொழுவது?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதியார் விளக்கியுள்ளார்.
“பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாய் உபாசனை செய்ய ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்த இந்த பக்தி எளிய வழி- ஆனால் இதர தெய்வங்களை விஷயம் தெரியாமல் பழித்தால் வேத விரோதம்” என்கிறார். ஆனால், இதர தெய்வங்களைப் பழிக்கத்தான் அன்னிய மதங்கள் பெரும்பாலும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிவருடிகளாக இருப்பவர்கள் கூறுவதுதான் சனாதன ஒழிப்பு.
“இனி” என்ற தலைப்பிலான கட்டுரையில் கோயில் எதற்காக என்பதற்கும் பாரதியார் விளக்கம் கொடுத்துள்ளார்:
“கடவுள் எங்கும் இருக்கிறாரே அவரை ஏன் ஓரிடத்தில் கூடித் தொழ வேண்டும் என்றால் ஜனங்களிடம் ஒற்றுமை ஏற்படுவதற்காக. கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது (இயங்குகிறது). இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து –‘தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. எல்லாம் ஓர் உயிர். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஆயினும், கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறது என்று நம்பி நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?
“கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்கிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் (வெளியே தெரியாமல்) இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
“ஆண் தெய்வமெல்லாம் நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ, சக்தி உன் மனைவி; விஷ்ணு நீ, லக்ஷ்மி உன் மனைவி; பிரம்மா நீ, ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையில் இருந்து மனிதரைத் தேவ நிலையில் கொண்டுசேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்களாம்”
-என்கிறார். இதுதான் கோவிலை உருவாக்கிய நம் முன்னோர்களின் சனாதன தர்மம். ஆயினும் சனாதன எதிர்ப்பாளர்களைப் போலவே அதன் ஆதரவாளர்களும் இந்த உட்கருத்தை உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது!
‘பாரத ஜாதி’ என்ற கட்டுரையில் “கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ, பார்ஸிக்களோ எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடினாலும் பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களை பாரத ஜாதி என்று கணக்கிட வேண்டும். இது பிரிக்க முடியாதது அழிவில்லாதது இதற்கு ஆதாரமும் மூலபலமும் யாதெனில் ஆரிய சம்பத்து. அதாவது நமது மூதாதையரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்” என்கிறார் மகாகவி பாரதியார்.
இவ்வாறு இந்த நாட்டைப் போற்றுகின்ற அனைவரையும் அரவணைக்கச் சொல்கிறது நமது சனாதனம்.
எவை எல்லாம் ஆரிய சம்பத்து?
“நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு (மக்கள் சமுதாயம்), நமது பாஷைகள், நமது சிற்பம், கவிதை, சங்கீதம், நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், இராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குள், ஆண்டாள் திருமொழி ஆகிய அனைத்தின் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதே கட்டுரையில், “ஆரிய சம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் பாரத ஜாதியை செல் அரித்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளார். அவ்வாறு செல்அரிக்க வேண்டும் என்று எண்ணும் நச்சுக் கருத்தாளர்கள் நடத்துவதுதான் சனாதன எதிர்ப்பு மாநாடு.
‘ஆர்ய’ என்பது இனத்தைக் குறிப்பதல்ல. உயர்ந்த, மேலான என்ற பொருள் கொண்டது என்பதைத் தெளிவாக அறிந்தவர் பாரதி. ஆகையால்தான் “அச்சம் கொண்டவன் ஆரியனல்லன்; ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தே மாதரம்” என்றெல்லாம் பாடியுள்ளார்.
பாரதி கூறும் ஆரிய சம்பத்தில் ஒன்று பகவத் கீதை. அதை வன்முறை நூல் என்கிறார்கள் சனாதன எதிர்ப்பாளர்கள். பகவத் கீதைக்கு பாரதி எளிய விளக்கம் அளித்துள்ளார். அதன் முன்னுரையில்,
“துரியோதனாதிகள் பாவச் சிந்தனைகள், அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா- பாவச் சிந்தனைகளைக் கொன்றொழிக்குமாறு ஜீவாத்மாவுக்குப் பரமாத்மா போதிப்பதே கீதை. துறவு மாத்திரமே மோக்ஷத்துக்கு வழியில்லை, இல்லறமும் ஏற்றதே என்பதே கீதையின் சாராம்சம். வீட்டில் இருந்தபடியே உறவினர்களுக்கும் பிறருக்கும் உபகாரம் செய்தபடி, மனுஷ்ய இன்பங்களை நேர்மையாக அனுபவித்துக்கொண்டு, கடவுளை உபாசனை செய்து ஜீவன் முக்தராய் வாழ்வதை கீதை போதிக்கிறது. ஸர்வமிதம் பிரஹ்ம – உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற வேதத்தின் கொள்கையை நிறுவுவதே கீதை”
-என்று பகவத் கீதையின் நோக்கத்தை பாரதியார் விவரித்துள்ளார். எல்லாம் கடவுள்மயம் என்ற இந்தக் கோட்பாடுதான் சனாதனம்.
‘தத்துவம்’ என்ற கட்டுரையில் கணபதி என்ற துணைத்தலைப்பின் கீழ் பாரதி கூறியிருப்பதை ஒவ்வொரு சனாதனியும் நினைவில் நிறுத்த வேண்டும்:
''ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர் என்று வேதமே சொல்லுகிறது. கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பல மூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்றுவரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழிய மாட்டா. இவை எப்போதும் உள்ளன”
– என்று கூறியுள்ளார் தீர்க்கதரிசியான மகாகவி பாரதியார். ஆகையால் சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் தான் ஒழிந்து போவார்கள் என்பதை திடப்படுத்திக் கொள்வோம்.
‘பரோபகார்த்தம் இதம் சரீரம்’ (பிறருக்கு உதவவே இவ்வுடல்) என்ற வேத வாக்கை “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்று மொழிந்தவர் பாரதி.
“யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா” (எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியுடன் விளங்கும்) என்ற மனுஸ்மிருதியின் அடியொற்றி, “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று ஆனந்தக் கூத்தாடியவர் பாரதி.
சனாதனத்தின் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை அதாவது ஆண்- பெண் சமத்துவத்தை, “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று வாழ்த்தியவர் பாரதி.
“சர்வம் இதம் பிரஹ்ம” என்ற வேதவாக்கை, “எல்லோரும் ஓர் நிறை”என்று ஓங்கி உரைத்தவர் பாரதி.
இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்ற நாடு பாரதம் என்பதால்தான் “பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்; நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்” என்றும் கட்டளையிட்டுள்ளார்.
பாரத நாட்டின் உன்னதப் பாரம்பரியமான சனாதனத்தை மகாகவி பாரதி, தமது பல்வேறு கவிதைகளாலும், கட்டுரைகளாலும் விவரித்துள்ளார். அனைவருக்குள்ளும் தெய்வத்தைக் காணுதல், சாதி பேதம், வர்க்க பேதம், பாலினப் பாகுபாடு இவற்றைக் கடந்து அன்பு செலுத்துதல், இயற்கையைப் போற்றுதல், அனைத்து மனிதர்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்துதல் -இதுதான் சனாதனம்.
இந்த சனாதனத்தைப் போற்றுவோம்.
இத்தகைய சனாதனத்தை வேரறுப்பதாக ஊளையிடும் சூளுரைகளைச் சுட்டெரிப்போம்.
அதுமட்டுமல்ல, “எல்லோரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உலகுக்கு அளிக்கும்”என்ற பாரதியின் வாக்கை நனவாக்கும் வகையில் நமது சனாதனத்தின் மாண்பை உலக நாடுகளிலும் மலரச் செய்வோம்.
ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத அன்னை வெல்க!
- திரு. பத்மன், மூத்த பத்திரிகையாளர்.
$$$
38. ஒழிக்கப்பட வேண்டியது சனாதனமா? திராவிடமா? (காணொளி)
-பால.கௌதமன்
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேச, நாடு முழுவதும் சர்ச்சையும் ஹிந்துக்களிடையே கோபமும் எழுந்தது. ஹிந்து மதத்தை ஒழிக்கச் சொல்லவில்லை; சாதிய ஏற்றத்தாழ்வைத் தான் சொன்னார் என முதல்வர் உட்பட பலரும் முட்டுக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சனாதனம் என்பது என்ன? திராவிடம் சாதியத்தை ஒழித்து விட்டதா? உண்மையில் ஒழிக்கப்பட வேண்டியது சனாதனமா? திராவிடமா? என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு. பால.கௌதமன்.
இது ஸ்ரீ டி.வி.யில் வெளியாகியுள்ள காணொளிச் செய்தி அலசல்….
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$