-மகாகவி பாரதி
எத்துணை புஷ்டியாக இருந்தாலும், வசதியாக வாழ்ந்தாலும் அடிமைப்பட்டவன் நிம்மதியாக இருக்க முடியாது என்கிறார் மகாகவி பாரதி இக்கதையின் மூலம்…

தென் இந்தியாவிலுள்ள மன்னார் கடற்கரையை யடுத்த ஒரு பெருங்காடு இருக்கிறது. அக் காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக்காரர் இருந்தார். அவர் பெயர் உக்கிரசேனப் பாண்டியன். அவர் யுத்தப் பிரியர். அவர் புலி, கரடி, யானை, சிம்மம் முதலான காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தர். பலவகையான வேட்டைநாய்கள் அவரிடத்தில் இருந்தன. அதிகாலையில் ஒருநாள் அவர் வேட்டைக்குப் புறப்பட்டார். தான் மிகுந்த அன்பு பாராட்டி வளர்த்துவந்த ‘பகதூர்’ என்ற ஒரு நாயைத் தன்கூட கூட்டிக்கொண்டு சென்றார். அந்த நாயானது வெகுகாலமாய் காட்டிலே இருந்தபடியால் அந்தக் காட்டில் யதேச்சையாய்ச் சுற்றித் திரிய சமயம் வாய்த்தவுடனே ஆனந்த பரவசப்பட்டு கண்டகண்ட விடத்திற்கெல்லாம் ஓடியது.
‘பகதூர்’ பார்வைக்கு அழகாய் இருந்தது. மிகுந்த சதைக் கொழுப்பு அதற்குண்டு. அதன் உடம்பு தினந்தோறும் கழுவப்பட்டு வந்ததால் தளதளப்பாய் இருந்தது. அக்காட்டில் ஓநாய்கள் விசேஷமாய் இருந்தன. ஓநாய் வேட்டை தன் அந்தஸ்துக்குத் தகாதென்பது உக்கிரசேனனுடைய கொள்கை. அக்காரணத்தாலேதான் அந்த ஆரண்யத்தில் ஓநாய்கள் நிர்ப்பயமாய் சஞ்சரித்தன. அன்று ஒரு ஓநாய் தன் வழியில் குறுக்கிட்ட ‘பகதூரை’ப் பார்த்து அதிசயப்பட்டு அத்துடன் சம்பாஷிக்க விருப்பங்கொண்டது.
ஓநாய்:- ஹே ஸகோதரா, நான் உன்னைச் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன். எனக்குத் தயவுசெய்து விடைகள் அளிப்பாயா?
வீட்டு நாய்:- அடா ஓநாயே, நாம் நம்முடைய அந்தஸ்துக்குக் குறைவான எந்த நாயோடும் ஸ்நேஹம் பாராட்டுவதில்லை. ஆயினும், உன்மேல் நம்மை யறியாமலே நமக்குப் பிரீதி ஏற்படுகிறபடியால் நீ கேட்கும் கேள்விகளுக்கு ஜவாப் சொல்ல ஸம்மதித்தோம்.
ஓநாய்:- ஐயா, உம்முடைய அந்தஸ்தென்ன? நீ வஸிக்கும் இடம் எங்கே? இக்காட்டிற்கு வந்த காரணமென்ன? உமக்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை எங்ஙனம் ஏற்பட்டது?
வீடு நாய்:- நாம் உக்கிரசேன பாண்டியனிடத்தில் இருக்கிறோம். அவர் நமக்கு ராஜோபசாரஞ் செய்து வருகிறார். நமக்கும்அவரிடத்தில் பக்தியுண்டு. நம்மை அவர் மற்றெந்த நாய்களைக் காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.
ஓநாய்:- அண்ணா, என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? காற்றிலும் மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியிருக்கிறது. பசியின் கொடுமையைச் சகிக்க முடியாததாய் இருக்கிறது.
வீட்டு நாய்:- தம்பி, உன்னுடைய ஊழ்வினைப் பயனை நீயே அனுபவித்துத் தீர வேண்டும். பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இந்தப் பதவி கிடைத்தது.
ஓநாய்:- நாயாரே, நானும் உக்கிரசேனனுடைய நட்பை நாடி வரலாமா? சுகதுக்கங்களே ஸமரஸமாய் இருந்தால் மாத்திரமே இவ்வுலக வாழ்வு சகிக்கத் தக்கது. என்னுடைய கஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.
வீட்டு நாய்:- நல்லதப்பா, என் கூட வா.
இருவரும் சம்பாஷித்துக் கொண்டே வழிநடந்தார்கள். திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுசயம் தோன்றிற்று. பகதூரின் கழுத்தைச் சுற்றி அகலமான தழும்பு இருந்தது. ஓநாய் அதைப் பார்த்தவுடன் ஒரு கேள்வி கேட்டது.
ஓநாய்:- பகதூர், உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?
பகதூர் (வீட்டு நாய்):- ஓ, அது ஒன்றுமில்லை எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.
ஓநாய்:- அந்தப் பொன் பதக்கம் எங்கே? நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை?
பகதூர்:- என்னை வெள்ளிச் சங்கிலியால் கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.
ஓநாய்:- உம்மை ஏன் கட்ட வேண்டும், யார் கட்டுகிறார்கள்?
பகதூர்:- என்னுடைய எஜமானன் என்னைக் கட்டுவார். அவரைப் பார்க்க வரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும்படி என்னைக் கட்டிவைப்பார்.
ஓநாய்:- தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப் பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன். எனக்கு எஜமானனும் இல்லை, சங்கிலியும் இல்லை. கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன். யதேச்சையாய் எங்கும் செல்வேன், எதையும் தின்பேன், எதையும் சொல்வேன், எவரோடும் சேர்வேன். பராதீனம் பிராண சங்கடம்; ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ போகவோ, உண்ணவோ உறங்கவோ, மலம் ஜலம் கழிக்கவோ ஸம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்க வேண்டும்.
இவ் வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப் போய்விட்டது.
$$$