அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது.