மாலனுடன் மட்டும் மனம் கலந்து பழகி வந்தேன். அவனுடைய குறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்த குறைகள் அவ்வளவாகத் தீமை செய்வதில்லை. பழகிய வழியில் உள்ள மேடும் பள்ளமும் கல்லும் முள்ளும் நமக்குத் தீமை செய்வதில்லை. பழகாத வழியில் உள்ள குறைகள்தான் தீமை செய்கின்றன. மாலனும் எப்படியோ என்னிடம் மட்டுமே நெருங்கிப் பழகிவந்தான். என்னுடைய முற்போக்குக் கொள்கைகளும் அவனுடைய மூடநம்பிக்கைகளும் முரண்பட்டன. என்னுடைய இரக்க உணர்ச்சியும் அவனுடைய தன்னல முயற்சியும் மாறுபட்டன. ஆனால் எப்படியோ என் நெஞ்சமும் அவன் நெஞ்சமும் உறவு கொண்டன.