ராமாயண சாரம்- 23

-ச.சண்முகநாதன்

23. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!

இலங்கை சேர சுக்ரீவன் மேற்பார்வையில் பாலம் கட்டும் வேலை தொடங்குகிறது.

(பொது அறிவு சமாச்சாரம் – 1: ராமர் பாலத்தைக் கட்டியது ராமன் இல்லை.)

சுக்ரீவன் ஒரு குழு அமைத்து  ‘நளன் இதை திறம்பட செய்து முடிப்பான்’ என்று நளனை அழைக்க,  ‘என்ன செய்ய வேண்டும்?” என்று நளன் கேட்க, சுக்ரீவன்  “செறி திரைக் கடல் பந்தனை செய்குதல் பணி நமக்கு” என்று தெரிவித்தான்.

நளன் வானரத் தச்சன் என்றறியப் பட்டவன். It was not a random choice. அனுமன் இலங்கை செல்ல வேண்டுமென்பதும் நளன் சேது செய்ய வேண்டும் என்பதும், அவரவர் திறமையை உணர்ந்தே. Horses for courses.

நளன்  “காரியம் கடலினை அடைத்துக் கட்டலே?” என்று  “கடலை அடைத்து கட்ட வேண்டும், அவ்வளவுதானே?” என்று கேட்டுவிட்டு, வேலையில் இறங்குகிறான்.

சாம்பன்,  “லக்ஷ்மணனும், இறைவன் ராமனும் விபீஷணனும், நம் அரசன் சுக்ரீவனும் இங்கேயே இருக்கட்டும். மற்றவர்கள் வாருங்கள். கடலை அடைத்து அணை கட்ட வாருங்கள்” என்று பறை சாற்றுகிறான்.

“இளவலும், இறைவனும், இலங்கை வேந்தனும்,
அளவு அறு நம் குலத்து அரசும், அல்லவர்

வளைதரும் கருங் கடல் அடைக்க வம்” வானரங்கள் எல்லாம் “காலிடை ஒரு மலை உருட்டி, கைகளின் மேலிடை மலையினை வாங்கி” முனைப்புடன் கற்களைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. நளன் அவற்றை சமமாக உடைத்து நன்றாக அடுக்கி மேல்பாகத்தை ஒரே சீராக இருக்க மணல் கொண்டு தன் கையால் மட்டம் செய்கிறான்.

“சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து, நேர்
மலைகள் ஒக்க அடுக்கி, மணற் படத்
தலைகள் ஒக்கத் தடவும், தடக் கையால்”

இப்படித்தான் சேது அமைக்கப்பட்டது. மூன்று நாட்களில். (வால்மீகி 5 நாட்களென்பார்).

(பொது அறிவு சமாச்சாரம் – 2 : கம்பன் அணில் உதவி செய்ததாகச் சொல்லவில்லை. அந்தக் கதை இடைச்செருகல்).

சேது கட்டி முடித்தாகிவிட்டது. ராவணனின் அழிவுக்குப் பாதை போட்டாயிற்று.  ராவணனின் தீமையைப் பொறுக்காத இலங்கை எனும் மென்மகள் ராமனை நோக்கி கையை நீடித்ததுபோல இருந்ததாம் ராமசேது.

“மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள்
பொய்யன் ஈட்டிய தீமை பொறுக்கலாது,
ஐயன் ஈட்டிய சேனை கண்டு, அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்.”

ஆஹா!

சேது கட்டி முடிந்தபின் சுக்ரீவன், விபீஷணன் முதலானோர் ராமனிடம் சென்று  “யோசனை ஈண்டு ஒரு நூறுடன் ஐ-இரண்டின் அகலம் அமைந்திடச் செய்ததால் அணை” என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கின்றனர்.

ராமன் அவர்களை ஆரத்தழுவி  “சரி. எல்லோரும் புறப்படுங்கள்” என்று கூறி அணையை நோக்கிப் புறப்படுகிறான்.

விபீஷணன் எல்லோருக்கும் முன்னே செல்ல, அவன் பின் அனுமனும், அவனுக்குப் பின் லக்ஷ்மணன், அவர்களுக்கு பின்னால் ராமனும் அவர்களுக்கு பின்னர் வாணர் சேனையும் அணை மீது நடந்து இலங்கை நோக்கிப் பயணமாயிற்று. கடல் கடந்து கரையேறினான் ராமன்.

“ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து
இருங் கடல் கடந்து, கரை ஏறினன்- இராமன்”

ராவணனின் தீமை அழிவுக்கு அருகினில்.

(தொடர்கிறது)

$$$

Leave a comment