அகல் விளக்கு-  14

"நல்ல பிள்ளை அம்மா, அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது. அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு. சந்திரனுக்கே மனம்மாறி உன்னிடத்தில் வேறு வகையாகப் பழகத் தொடங்கினாலும் விலகிவிடு; அல்லது உன் மனமே சந்திரனிடத்தில் வேறு வகையாகச் செல்லுமானாலும் விலகிவிடு. ஏன் என்றால், ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் உங்கள் உணர்ச்சியால் முடிவு செய்யக்கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக்கூடியது. ஆகையால் அனுபவம் நிறைந்த எங்கள் அறிவுரையும் அதற்கு வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே" என்று கூறினார். அந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது. ஆனால் அவருக்கு அப்படி ஒருவர் அறிவுரை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றாள்.