அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆக வேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று.