விடுதியில் முன்நாள் இருந்த உணர்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல்லை. ஏதோ பேய் உலாவும் இடம் என்று சொல்லத் தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லோரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.