-சேக்கிழான்
பத்தி எழுதுபவர் எதைப் பற்றி வேண்டுமாயினும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்ந்து எழுதுவார்; சில நேரங்களில் நாட்டு நடப்பை போகிற போக்கில் சொல்லிச் செல்வார்; சில நேரங்களில் நகைச்சுவைத் தோரணமாகவும் அந்தப் பத்தி எழுத்து இருப்பதுண்டு. இவை அனைத்திற்கும் முன்னோடியாக பாரதியின் ‘தராசு’ கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

இசைக் கச்சேரியில் ராக ஆலாபனையைக் கேட்டிருப்பீர்கள். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், அதில் தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள், சங்கதிகள், ரசனைகள்? இசை என்னும் கடலில் தன்னை மறக்கும் பாடகர்கள் பாடுகையில் நாமும் நம்மை மறந்து ரசிக்கிறோம். அதுபோன்றது தான் எழுத்தும்.
கவிதை, கதை, கட்டுரை என்ற எதுவாக இருந்தாலும் அதில் லயித்து, எழுத்தே வாழ்வாகக் கொண்டு ஒருவன் எழுதினால், அது நம் மனதில் ஊடுருவுகிறது. அப்படி வாழ்ந்தவர், எழுதியவர் மகாகவி பாரதி. இன்றும் அவர் நமக்கு தமிழ் வானில் விடிவெள்ளியாக வழிகாட்டிக் கொண்டிருப்பது அந்த எழுத்து தவத்தால் தான்.
சாகாவரம் பெற்ற கவிதைகளை வழங்கி தமிழன்னைக்கு சிறப்புச் சேர்த்தவர் மட்டுமல்ல, நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழின் உரைநடை உருவாகிவந்த காலத்தில், தமிழுக்கு புதிய வடிவங்களை அறிமுகம் செய்தவரும் மகாகவி பாரதியே. ‘சுதேசமித்திரன், இந்தியா’, சக்கரவர்த்தினி, விஜயா, பாலபாரதா உள்ளிட்ட பல பத்திரிகைகளில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகள், கவிதைகள், தொடர்கள், ஆங்கிலக் கட்டுரைகள், மொழியாக்கங்கள், கதைகள், புதினங்கள், வரலாற்று நூல், சித்திர விளக்கங்கள், சிறு துணுக்குகள் தற்போது தொகுக்கப்பட்டு வருகின்றன.
மகாகவி பாரதியின் இதழியல் பணி 1904-இல் தொடங்கியது. 1921-இல் அவர் மறையும் வரையிலான 17 ஆண்டுகளுக்குள், அதுவும் அடிமைப்பட்ட இந்தியாவில், மிக மோசமான பொருளாதாரச் சூழலில் இதனை அவர் சாதித்தார்.
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” – என்று அவர் பாடியது பிறருக்கு மட்டுமல்ல. அதை அவரே முன்னோடியாக இருந்து செய்து காட்டினார். அதற்கு அவரது இதழியல் உறவும், பல மொழிகளில் தேர்ச்சியும் பிற நாட்டு இலக்கியங்களை வாசிக்கும் வாய்ப்பும் உதவின.
பத்திரிகையாளராக இருந்தபோது, ‘லண்டன் டைம்ஸ்’ முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான ‘அமிர்தபஜார்’ பத்திரிகை வரை பல்வேறு பத்திரிகைகள் குறித்தும், பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே பாரதி தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அப்போது அவர் படித்த பிற நாட்டு பத்திரிகைகள், பிற மொழி இதழ்களின் உள்ளடக்கத்தால் கவரப்பட்டு, அதை தான் பணியாற்றிய இதழ்களிலும் பரிசோதனை முயற்சியாக நடத்திக் காட்டினார். அப்படி அவரால் தமிழ் பத்திரிகை உலகில் அறிமுகம் செய்யப்பட்டதே ‘தராசு’ என்ற தலைப்பிலான பத்தி எழுத்து வடிவம்.
நாளிதழ்கள், பருவ இதழ்களில் பத்தி (Column Writing) எழுதுவது இப்போது பிரபலமாக இருக்கிறது. எழுத்தாளரின் எண்ணத்தை பாதித்த, அல்லது சமூகம் பயன்பெறும் எந்த விஷயம் குறித்தும், தொடர்ந்து ஒரே பகுதியில், ஒரே தலைப்பில் (இதனை மகுடம் என்கிறார் இதழாளர் பாரதி) எழுதுவது தான் பத்தி எழுத்தாகும். 1915இல் சுதேசமித்திரன் நாளிதழில் பாரதி எழுதத் துவங்கிய ‘தராசு’ பத்தி, தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே நின்று, வெளிவந்திருக்கிறது.

பத்தி எழுதுபவர் எதைப் பற்றி வேண்டுமாயினும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்ந்து எழுதுவார்; சில நேரங்களில் நாட்டு நடப்பை போகிற போக்கில் சொல்லிச் செல்வார்; சில நேரங்களில் நகைச்சுவைத் தோரணமாகவும் அந்தப் பத்தி எழுத்து இருப்பதுண்டு. இவை அனைத்திற்கும் முன்னோடியாக பாரதியின் ‘தராசு’ கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
தான் பணியாற்றிய ‘சுதேசமித்திரன்’ இதழில் வாசகர்களுடன் ஒரு இயல்பான விவாதக் களத்தை அமைக்க விரும்பிய மகாகவி பாரதி, அதற்காக உருவாக்கிய பகுதியே தராசுக் கடை. இதில் நாட்டு நடப்பு, சமய விழிப்புணர்வு, மொழிப் பற்று, லேசாக எட்டிப் பார்க்கும் அரசியல் – எல்லாமே பேசப்படும். காளிதாசனுடன் (வேறு யார், பாரதியே தான்) அமர்ந்திருக்கும் தராசு, நாட்டு நடப்பை எடைபோட்டு தனது கருத்தைச் சொல்லும்.
தராசு தொடரின் முதல் நாளிலேயே அதன் தேவையையும், நோக்கத்தையும் இரு பத்திகளில் வெளிப்படுத்தி விடுகிறார் மகாகவி பாரதி:
“இவ்வுலகமே ஈசனுடைய ‘விளையாட்டு’. உலகத்தை அறிய வேண்டுமானால் விளையாட்டுப் பழக்கமும் வேண்டும்… எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனையுண்டாயிற்று. பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடுமாதலால் ‘பலசரக்குக் கடை‘ என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது அதிக விளையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டியாருக்கும் சினேகம்; அவரைப்போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன்.
...‘தராசு’ என்று பொதுப்படையாகப் பெயர் வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும் எல்லாச் செட்டியார்க்கும் இதனால் உதவியுண்டு. எந்தச் செட்டியாரும் நம்மிடம் மனஸ்தாபங் கொள்ள இடமிராது.”
(தராசு-1 / சுதேசமித்திரன் - 25.11.1915).
-இப்படித்தான், சுதேசமித்திரன் இதழில் ‘தராசு’ பத்தி தொடர் ஆரம்பமாயிற்று. இந்தியா பத்திரிகை நடத்தி, அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகித் துவண்டு போயிருந்த நேரத்தில், தனது தேசபக்தியையும் இதழியல் கடமையையும் கைவிட முடியாமல் தவித்த நேரத்தில் எழுதிய பத்தி தொடரே தராசு. இத்தொடரில் காணப்படும் நகைச்சுவை அவல நகைச்சுவை என்பதும், வெடிக்காது நமத்துப் போன பட்டாசு புகைவது போன்ற இயலாமையின் வெளிப்பாடு என்பதும், படிப்பவர்களுக்கு புரியும். எப்போதேனும் இந்தப் பட்டாசு வெடிக்கும் என்ற எழுத்தாளனின் தாபமும் அதில் புலப்படும்.
துரதிர்ஷ்டவசமாக, மகாகவி பாரதி எழுதிய தராசு கட்டுரைகளின் அனைத்துப் பகுதிகளும் நமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்துள்ள 14 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது, நமது கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. எத்துணை உயர்ந்த மாமனிதர் பிறந்த மண்ணில் நாம் வாழ்கிறோம் என்ற பெருமிதத்தில் விளைவது இந்த ஆனந்தக் கண்ணீர்.
“செய்திக் கட்டுரைகளுக்கும் பத்திகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு. செய்திக் கட்டுரைகளில் எழுதுபவர் ஒரு நிலை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், பத்திகளிலோ எழுதுபவரின் நிலைப்பாடு முக்கியம். அரசியல் குறித்து எழுத முடியாத சூழலில் பாரதி என்னதான் எழுதினார் என்பதற்கான ஆவணம் இந்தத் தராசு கட்டுரைகள். அவை அன்று நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு இன்றும் ஒரு துணை ஆவணமாக, நேரடிச் சாட்சியமாக நிற்கின்றன என்பதால் ஆய்வாளர்களின் கவனத்துக்குரியவை” என்று கூறுவார், மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன்.
“பாரதிதாசனின் முதற் சந்திப்பை மட்டுமல்ல, காந்தி சென்னையில் நடத்திய சொற்பொழிவு, அன்னிபெசன்ட் ஒரு மலை நகரில் சிறை வைக்கப்பட்டிருந்தது, நாவலாசிரியர் மாதவையா சுதேசமித்திரனுக்கு எழுதிய கடிதம் இவற்றுக்கெல்லாம் சாட்சியும் கூறுவதும் தராசுதான். பத்திரிகையாளன் வம்பளக்கலாம். ஆனால், அந்த வம்பும் வரலாறாக வேண்டும். சான்று, நூறாண்டு காணும் தராசு!” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உண்மைதான், பத்திரிகையாளன் வாழும் சமுதாயத்தின் ஆன்மா. எதிர்காலத்துக்கு வழிகாட்டும் செய்திகளை வரலாறாக ஏட்டில் பொறித்து வைப்பவன்; வற்றாத சிந்தனைகளை விதைப்பந்துகளாகப் பொதிந்து வைப்பவன். அந்த வகையில் மகாகவி என்றும் நமது முன்னோடி; நமது பயணத்தில் வழிகாட்டுவதுடன் நில்லாமல் உடன் வரும் குருநாதர். அவரது ‘தராசு’ கட்டுரைகள், நம்முடன் உரையாடி சந்தேகம் போக்கும் உற்ற நண்பன்.
$$$