-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்
கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றினர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையு முன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லாமலே விளங்கும்.

புறம்
8. தமிழர் கண்ட உண்மைகள் – ஆ
.
பொய் கூறார்
சரித்திரம் எட்டிப் பார்ப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லாத காலத்தில் இத்தமிழர் யாது நினைந்தனர்? எவ்வாறு வாழ்ந்தனர்? எதனைச் சிறந்தது என்று கருதினர்? எதனை இழிந்தது என்று கருதினர்? இவற்றை நாம் அறிவது இன்றும் பயன் தரக் கூடிய ஒன்றாகும். அவ்வாறாயின், இத்தமிழ்ப் பாடல்களைப் பாடிய புலவர் அனைவரும் பொய் கூறாமல் மெய்யே கூறினரா என்று எண்ணத் தோன்றுகிறதா? இதோ பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் விடை கூறுகிறார். வன்பரணர் என்ற தமிழ்க் கவிஞர் சங்கப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். அவர் தமக்கு மட்டும் அல்லாமல் தம் இனத்தவராய தமிழ்ப் புலவர் அனைவருக்குமே சேர்த்து ஓர் உண்மையை வெளியிடுகிறார். தமிழ்ப் புலவர்கள் பொய் கூற மாட்டார்களாம்! பெரிய அரசர்களிடத்து அவர்கள் தரும் பரிசிலைக் கருதியை அப்புலவர்கள் சென்றாலும், அவ்வரசர்கள் செய்யாதவற்றைக் கூறிப் புகழுதல் அப்புலவர்கட்கு மரபு அன்றாம்!
பீடுஇல் மன்னர் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே
(புறம்-148)
(பொருள்: பிறருக்கு வாரி வழங்கும் பெருமை (பீடு) இல்லாத அரசரைப் புகழ வேண்டி அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகக் கூறி அவர் குணங்களைக் கூறுதலை (கிளத்தல்) அறியாது (எய்யாது) எம்முடைய சிறிய செம்மையான நாக்கு]
புலவருடைய நா ஏனையோருடைய நாவைப் போலத் துணிந்து பொய் கூறாமையின், செம்மையான நா என்றார் வன்பரணர். ஆனால், தாமும் ஒரு புலவராதலின் புலவர்களுடைய நாவின் பெருமையை எடுத்துக் கூறும் ‘சிறு’ என்ற அடைமொழி தந்து ‘சிறு நா’ என்று மிக்க அடக்கத்துடன் கூறிக் கொள்கிறார். வன்பரணர் போன்ற பெறும் புலவர்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதனால், அத்தகைய புலவர்களை வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது!
தாழ்ந்தது எது?
இத்துணைச் சிறப்புடைய புலவர்கள் தங்களுடைய இனத்தவர் எதனை உயர்ந்தது என்றும், எதனைத் தாழ்ந்தது என்றும் கருதினார்கள் என்பதைக் கூறினால் அது அந்த இனத்தார் அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா? இன்று வாழும் நாம் மிகவும் தாழ்ந்தது என்று எதனைக் கருதுகிறோம்? பலரும் பலவாறு நினைப்பதற்கு ஏற்ற வினாவாகும் இது. ஆனால், நாம் எதை இழிந்தது என்று நினைத்தாலும், ஒன்றை மட்டும் நினைக்க மாட்டோம் என்பது உறுதி. பிறரிடம் ஒன்றைத் தா என்று கேட்டல் இழிவு என்று கூறினால் நம்மில் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவோம். காரணம், இன்று நம்முடைய அன்றாட வாழ்வில் பலருடைய கையை எதிர்பார்த்தே வாழ வேண்டியுள்ளது. நம்மால் எதிர்பார்க்கப்படும் அப்பலருள் சிலர், தாமே நாம் வேண்டியவற்றைத் தருவர்; இன்னுஞ் சிலர், நாம் கெட்ட காலத்தும் கொடுக்க மறுப்பர். அத்தகையவர்களிடத்தும் வாய் கூசாமல் கேட்டால்தான் நாம் விரும்பியது கிடைக்கும். எனவே, நம் காலத்தில் ஒருவரை ஒன்று கொடு என்று கேட்பது தவறு அன்று என்று கருதப்பட்டாலும், அந்நாளைய தமிழன் இதனை மிக இழிந்ததாகவே கருதினான்.
ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
(புறம்-204)
என்று இந்நான்கு அடிகளில் இற்றைநாள் தமிழ்ச் சமுதாயம் இழந்துவிட்ட ஒரு நாகரிகம் பேசப்படுகிறது.
உலகத்தில் எவ்வாறேனும் வாழ்ந்துவிட வேண்டும் என்ற கருத்தால் தனக்கு மிகவும் வேண்டப்படுவதாக ஒன்றைக் கருதிக் கொள்கிறான் ஒருவன். அது இல்லாவிடின் உயிர் வாழ முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. உயிரைப் பெரிது என்று மதிக்கும் ஒரு காரணத்தால் எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்கிறான். இத்தகையவன் தனக்கு மிகவும் தேவை என்று கருதப்படும் பொருளை அது உடையான் ஒருவனிடமிருந்து வேண்டிப் பெற முயல்கிறான். அப்பொருளை உடையானும், இந்த இல்லானும் சமமாக இருப்பின் அவனை நோக்கி இவன், ‘தா’ என்று கேட்கலாம். ஆனால், உடையான் உயர்ந்தவனாய் இருப்பின், அவனிடம் சென்று ‘ஈவாயாக!’ என்றுதானே கேட்க வேண்டும்? மானத்தைவிட்டு ஒரு பொருளை ஈ என்று கேட்டலினும் இழிந்தது வேறு இல்லை என்கிறார். மானம் என்ற ஒன்றை மிகப் பெரிதாக மதிக்கும் அற்றை நாள் தமிழ்ப் புலவர். பசுமாடு ஒன்று உயிர் நீங்கும் நிலையில் இருக்கிறது. சிறிது தண்ணீர் இருந்தால் அது உயிர் பிழைத்துவிடும். பசுவைக் காப்பது அறமாகும். வேண்டப்படும் பொருளோ, எங்கும் எப்பொழுதும் கிடைக்ககூடிய தண்ணீர்தான். என்றாலும், அந்தத் தண்ணீரை ஒருவனிடம் சென்று ‘தருக’ என்று கேட்பதில் மானம் போய்விடுவதாகக் கருதினர் அற்றை நாள் தமிழர்.
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
(குறள்-1066)
இரத்தலின் இழிவு இத்தகையது என்று பேசிய தமிழ்ப் புலவர், இதனுடன் நிற்கவில்லை; இதனினும் இழிந்த ஒன்றும் உண்டு என்கிறார். இவ்வாறு மானத்தை இழந்தும் ஒருவன் ஒரு பொருளைத் ‘தா’ என்று கேட்டு விடுகின்றான். அவ்வாறு கேட்பவன் எதிரே அக்கேட்கப்பட்ட பொருளை இல்லை என்று கூறுதல், கேட்டலினும் மிகவும் இழிந்ததாம். கேட்பதே இழிவு எனில், கேட்டதை இல்லை என்று உரைத்தல் அதனினும் இழிந்ததாம். இழிந்தது பற்றி ஆராய்ந்த தமிழர் உயர்ந்தது பற்றியும் அடுத்துப் பேசுகிறார்.
உயர்ந்தது எது?
ஒருவன் எதிரே நின்று ஒன்றைத் தருக என்று கேட்பதன் முன்னர், நிற்போன் குறிப்பை அறிந்து, இதனைப் பெற்றுக் கொள்க என்று தருதல் உயர்ந்ததாம்; அவ்வாறு கேளாமலும் தரப்படுகின்ற ஒன்றை வேண்டா என்று மறுத்து விடுதல் தருதலைக்காட்டிலும் உயர்ந்ததாம். ஒருவருக்கு ஒன்றைத் தருதல் என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. அவ்வாறு தருவதிலும், அதனைப் பெறுபவர் மனம் நோவாமலும் இதனைப் பெற வேண்டியுளதே என்று வருந்தாமலும் இருக்கும்படிச் செய்து ஒன்றைத் தருதல் ஒரு கலையாகும். இவ்வாறு தருபவர் மூன்றாம் அடியில் குறிக்கப்படுகின்றனர். இவரினும் மேம்பட்டவர், தானே வருகிற ஒன்றை வேண்டா என்று மறுப்பவர். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பதற்கு இந்த முறையில் இலக்கணம் கூறிய பெருமை, இந்த உலகில் வாழும் பல்வேறு சமுதாயங்களுள்ளும் தமிழன் ஒருவனுக்கே உரியது என்று கூறுதல் தவறு ஆகாது என்றே தோன்றுகிறது.
பழைய தத்துவம்
உலகில் வாழும் பல்வேறு மக்களும் ஏன் ஒன்றாக வாழ முடியாது? எல்லோரும் சோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கூறாத பெரியவர்கள் இல்லை. ஆனாலும் இன்று வரை உலகம் அவ்வாறு வாழவில்லை. உலகம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு நாட்டில் வாழும் ஒரு மொழி பேசுபவருள்ளாது இந்த ஒற்றுமை நிலைத்திருக்கிறதா? இல்லையே! ஏன்? அனைவரும் சமம் என்று கூறும் கொள்கை ஏனைய நாடுகளைப் பொறுத்த மாட்டில் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆனால் இத் தமிழர் மிகப் பழங்காலத்திலேயே இக்கருத்தைக் கூறியுள்ளனர். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற கருத்தைப் பலரும் கூறியிருப்பினும், தமிழர் கூறிய முறையே ஒரு தனிச் சிறப்புடையது.
ஒருவன், எல்லாம் தன்னுடைய ஊராகும், அனைவரும் தன்னுடைய சுற்றத்தார் என்று நினைத்து வாழ முற்படுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். எவ்வளவு வரையில் இது முடியும்? பிறர் அவனுக்குத் தீங்கு இழைக்கும் பொழுது இவ்வாறு நினைக்க முடியுமா? அதிலும் காரணம் இல்லாமல் வேண்டுமென்றே தீமை செய்யும் பொழுதும் சும்மா இருக்க முடியுமா? சிறு துன்பம் செய்தால் ஒருவேளை பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், உயிர்போகிற பெருந்துன்பம் இழைத்தால் என்ன செய்வது? அப்பொழுதும் துன்பம் இழைப்பவரைப் பகைவர் என்று கருதாமல் கேளிர் என்று கருத முடியுமா? முடியாதுதான். என்றால், பிறர் அனைவரையும் சோதரர் என்றே கருத வேண்டும் என்று கூறுவது பொருளற்ற சொல்லாயந் முடிந்துவிடும்.
இன்று நம்மைச் சுற்றி நிகழ்வது யாது? கறுப்பனை வெள்ளையன் தோலின் நிற வேறுபாட்டால் வெறுக்கின்றான். பணக்காரனை ஏழை வெறுக்கிறான். பொருள்களை உற்பத்தி செய்பவன் அதனை வாங்காதவனை வெறுக்கிறான். ஒரு வகை அரசியல் முறை உள்ளவன் பிறிதோர் ஆட்சி முறையுடையவனை முழுப் பகைவனாகக் கருதுகிறான். இன்னமும் கூறப் போனால், தம்மைப் போல் எல்லா வகையிலும், நினைக்காமல் வேறு வகையில் நினைக்கிறவர்களைக்கூட பகைவர்கள் என்றே சில நாட்டார் கருதுகின்றனர். இத்தனை வெறுப்புக்களிடையே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறுதல் பொருந்துமா? அல்லது எடுபடுமா? இவற்றை எல்லாம் மனத்தில் நினைத்த ‘கணியன் பூங்குன்றனார்’ என்ற அந்தத் தமிழ்ப் புலவர் இவற்றிற்குச் சமாதானம் கூறுகிறார்.
ஒருவன் மற்றொருவன்மேல் எப்பொழுது வெறுப்புக் கொள்கிறான்? தனக்குத் தீங்கு இழைத்துவிட்டான் என்று நினைத்தால்தானே வெறுப்புத் தோன்றும்? அவ்வாறு நினையாமல் மற்றொருவன் தனக்குத் தீமையோ நன்மையோ செய்ய முடியாது என்று நினைத்தால், வெறுப்புக் கொள்ள வாய்ப்பே இல்லையன்றோ?
இதனாலேதான் அந்தப் புலவர் பாடலின் இரண்டாம் அடியில் ‘தீதும் நன்றும் பிறர் தர வருவன அல்ல’ என்கிறார். ‘ஒருவன் நேரே நம்மைத் தாக்கும்பொழுது கண் எதிரே ஊறு விளைப்பவனைக் காண்கிறோமே! அப்பொழுதும் அவனை வெறுக்கக் கூடாதா?’ என்பாருக்கு விடை கூறுமுகமாக மூன்றாம் அடியில், ‘உடலில் படும் துன்பம் நீடித்து நிற்ப தில்லை. எனவே, அதனால் வெறுப்புக்கொள்ள வேண்டா’ என்கிறான். ‘ஒரு வேளை பிறன் ஒருவன் நம்மைக் கொல்லவே வந்தால் அப்பொழுது யாது செய்ய வேண்டும்?’ என்பாரை நோக்கி, ‘இறத்தல் என்பது புதுமையன்றோ? ஏன் மனம் வெறுக்க வேண்டும்?’ என்கிறார். ‘வாழ்வு இனிமையுடையது, சாவு துன்பந் தருவது’ என்று நினைத்ததால்தானே கொல்ல வரும் பிறர் மேல் வெறுப்புக் கொள்ள நேரிடும்? ஆதலால், அவற்றையும் மறுத்து விடுகிறார். இவ்வாறு பல வழியிலும் காரணங் காட்டி ஒருவர் மேல் வெறுப்போ பகையோ கொள்வது தவறு என்று எடுத்துக்காட்டி விட்டார்.
நீரில் அகப்பட்ட கட்டை
இனி வேறு ஒரு வகையிலும் வெறுப்புத் தோன்றக் கூடும். நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகளை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவிடத்தும், நாம் செய்யும் உபகாரத் திற்கு நன்றி பாராட்டாதவிடத்தும் வெறுப்புத் தோன்றுதல் இயற்கை. இதோ புலவர் அதனையும் மறுக்கிறார். ‘வானம் இடியுடன் மழை பெய்கிறது. அதனால், ஆற்றில் வெள்ளம பெருகுகிறது. அந்த வெள்ளத்தில் ஒரு கட்டை அகப்பட்டு விடுமாயின், யாது செய்யும்? வெள்ளம் போகும் வழி கட்டையும் செல்லுமன்றோ? அதேபோல, ஒவ்வொருவனுடைய ஆன்மாவும் அதனுடைய ஊழின்வழி நடைபெறு கிறதாதலின் நன்மை செய்யும் ஒருவனைப் புகழவும் வேண்டா. அவன் அற்பனாய் இருக்கும் பொழுது வாய் தவறியும் இகழவும் வேண்டா’ என்கிறார் புலவர்.
ஒருவனைப் புகழ்வதாலும் மற்றவனை இகழ்வதாலுந் தானே உலகில் வேறுபாட்டுணர்ச்சியும், வெறுப்பும் தோன்றுகின்றன? எனவே, அடிப்படையில் அவ்வாறு கூறவே வேண்டா என்கிறார் கவிஞர், ‘தப்பித் தவறிப் பெரியோரைப் புகழந்துவிட்டாலும் தவறு இல்லை; சிறியவர்களை வாய் தவறியும் இகழ்ந்துவிட வேண்டா’ என்று கூற வந்தவர் ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்கிறார். உலகம் உள்ள அளவும் மறவாமல் போற்ற வேண்டிய இந்த அருமையான பாடலை ஒரு தமிழர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் கிறிஸ்து பிறக்கு முன்னரே பாடினார் என்பதை நினைத்து வியப்படையாமல் இருக்க இயலாது.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றாலும் இலமே; மின்னொடு
வானம் தண்துணி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறம்-192)
(முனிவு- வெறுப்பு; வானம்- மழை; கல்பொருது- கல்லை உருட்டி; இரங்கும்-ஒலிக்கும்; மல்லல்- வளப்பம் பொருந்திய; புணை- தெப்பக் கட்டை; முறை- ஊழ்; திறவோர்- மெய்ஞ்ஞானிகள்; காட்சி-நூல்).
கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றினர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையு முன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர்.
புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லாமலே விளங்கும்.
சங்கப் பாடல்களில் வரும் தெய்வம், சமயம் பற்றிய குறிப்புகள் அளவிறந்தனவேயாகும்.
ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் தாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுக்கென உருவு அமைத்து நிறுவினர்; வழிபட்டனர் என்பதனை,
தெய்வம், உணாவே மாமரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
(தொல் - பொருள். அகத்திணையியல்)
என்ற சூத்திரத்தால் உணரலாம்.
இதனோடு நில்லாமல் தெய்வத்திலும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழி பட்டனர் என்பது தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.
தெய்வம், கடவுள் என்னும் இரண்டனையும் இன்று ஒரு பொருளனவாக வழங்குகின்றோம். எனினும் தொல்காப்பியர் காலத்தில் இவை வெவ்வேறு பொருளன என்று நினைக்கத் தோன்றுகிறது.
கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தில் பற்றுக் கோடில்லாத பரம்பொருளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
அத்தகைய இடங்களில் ‘கடவுள்’ என்ற சொல்லை வேண்டுமென்றே பெய்கின்றார்.
ஆள் அமர் கடவுள்
கடவுள் ஆலம்
(புறநானூறு)
கடவுள் காந்தள்
அருந்திறல் கடவுள்
(அகநானூறு)
மலை உறை கடவுள்
குன்றக் குறவன் கடவுள் பேணி
(ஐங்குறு நூறு)
கடவுள் கல்சுனை
கடவுள் ஓங்கு வரை
(நற்றிணை)
நிலை உயர் கடவுள்
நீ பூப்பலி இட்ட கடவுள்
(கலித்தொகை)
உருகெழு மரபின் கடவுள்
கடவுள் அஞ்சி
(பதிற்றுப் பத்து)
கடவுள் கற்பின்
பேஎம் முதிர் கடவுள்
(குறுந்தொகை)
-இவ்வாறு அமைவன எண்ணிறந்தன.
மேலும் திருக்கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஏதோ பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் இருந்தது என்ற தவறான கருத்து இக்கால ஆராய்ச்சியாளரிடை தோன்றியுள்ளது.
ஆனால் இத்திருக்கோயில்கள் முன்னர் கோட்டம், தேவகுலம் என்ற பெயரினவாக இருந்தன (சிலம்பு – கனாத் திறம் உரைத்த காதை).
ஊரானோர் தேவகுலம்
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து
(கலி)
அணங்குகுடை முருகன் கோட்டம்
(புறம்)
கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன.
மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின்
(அகம்)
போற்றுவார் இன்றி, வழிபடுநர் இன்றி சில கோயில்கள் பாழாயின என்றும் அறிகிறோம்.
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
........கடவுள் போகலின்
(அகம்)
‘கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’
(நெடுநல்வாடை)
கர்ப்பக் கிரகம் – சிலை – அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தது.
நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன்...
அருந்திறல் கடவுள் வாழ்த்தி
(பெரும்பாணாற்றுப்படை)
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
(அகம்-167)
இப்பாடல் தொடர்வழி மிக உயர்ந்த, கர்ப்பக் கிரகத்தோடு கூடிய திருக்கோயில்களே சங்க காலத் தமிழர் சமைத்து வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.
கோயில் வழிபாட்டு முறையில் ஏதோ சில சடங்குகளைச் செய்து சமயம் என்ற பெயரிட்டு வாழ்ந்தனர் என்று நினைப்பது பெருந்தவறாகும்.
சமய வாழ்க்கையின் உயிர்நாடியாக உள்ள பக்தி என்பது இத்தமிழர்கள் அனைத்து உலகத்திற்கும் அளித்த பெருங்கொடை ஆகும்.
வேதத்தில் பக்தி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அறிய முடிகிறது.
உபநிடதங்கள் அறிவின் துணைகொண்டு உண்மைப் பொருளை ஆராயத் தொடங்கின. வேதங்களை அடுத்து வந்த பௌத்தம், சமணம் என்ற இரண்டிலும் பரம்பொருட் கொள்கை இன்மையால் அங்கு பக்திக்கே இடம் இல்லை.
இந்நிலையில் வேத காலத்துக்கு முன்னும், வேத காலத்திலும், பின்னும் வீறுபெற்றிருந்த தமிழர், தம்சமய வாழ்க்கையில் பக்தி என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர்.
பக்தியின் அடிப்படையே தன்னை மறத்தலும், தன்னைத் தியாகம் செய்தலும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் செய்யப்படுகின்ற யாகம் முதலியவற்றுள் உயர்ந்த குறிக்கோள் இருப்பதாகச் சொல்ல முடியாது.
ஆனால் சமய வாழ்க்கையர் இன்று ஆண்டவனை வேண்டி ‘பல்வேறு நலன்களை அடைய வேண்டும்; பொன், பொருள், புகழ் முதலாயின அருள்க’ எனக் கோரக் காண்கிறோம்.
பக்தியின் உண்மைத் தத்துவத்தை அறிந்தவர் இவ்வாறான வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வதில்லை. எனவேதான் பரம்பொருளிடம் முறையிடும் பொழுது.
யாஅம் இரப்பவை
பொருளும், பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலி தாரோயே!
(பரிபாடல் 5-80)
என்று வேண்டியதாகத் தெரிகிறது.
இப்பரிபாடலின் நான்கு அடிகள் இத்தமிழ்ச் சாதியின் அன்றைய வாழ்க்கைக் கொள்கை, பண்பாட்டு வளர்ச்சி, என்பனவற்றைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.
சிவ விஷ்ணு வழிபாட்டில் இப்பண்டைத் தமிழர் மூழ்கி இருப்பினும், இந்நாட்டில் வாழ்வதற்கென வந்த பிற புலத்தவரான சமணர், பௌத்தர் என்பவர்களோடு, மாறுபாடு கொள்ளவோ, மனக் காழ்ப்பு கொள்ளவோ செய்கிலர்.
தனி மனிதனுடைய சமய நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, சமய வாழ்வு என்பவை அம்மனிதன் சமுதாயத்துடன் உறவாடும்போழுது உலக வாழ்க்கையில் குறுக்கிடவில்லை என்று அறிகிறோம்.
எனவேதான் இவ்வியல்பினரான தமிழருடன் வந்த வடபுலத்தாரும் பூசலற்று காழ்ப்பு அற்று வாழ்ந்தனர் என்று அறிகிறோம்.
இங்குள்ளார் தாமும் தம்முள் சைவ, வைணவ, சமண சாக்த, பௌத்தச் சார்பினரேனும் கூட்டாக வாழ்ந்தனர். தமக்குள்ள எவ்வித மனவேறுபாடும், சகிப்புத்தன்மை இன்மையும் கொள்ளவில்லை.
சங்க காலத்துக்கு அணியரான இளங்கோ அடிகள்,
‘பிறவா யாக்கைப் பெரியோன்’ ‘திருமால் சீர்கேளாதசெவி என்ன செய்வியே’
என்று பாடுவன, நம் சிந்தனைக்குரியன.
சமயப் பொறை, சகிப்புத்தன்மை முழுவதாக நிறைந்திருந்தாலன்றி இவ்வாறு பாட மாட்டார் என்பதைக் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.
.
(அகமும் புறமும்- நிறைவு)
$$$