-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #81..

81. சநாதன சத்யமேவ ஜெயதே
தர்மக் கொடியை ஏந்தியபடி
அத்தனை ராஜ்ஜியங்களுக்கும் சென்ற நம் அஸ்வங்கள்
வெற்றியுடன் திரும்பிவிட்டனவா அமைச்சரே?
ஆமாம் சக்ரவர்த்தியே…
ஆனால்…
என்ன ஆனால்?
நாம் குதிரைகளை அனுப்பினோம்.
வந்திருப்பவையோ…
சொல்லுங்கள் அமைச்சரே!
கோவேறு கழுதைகளாகத் திரும்பி வந்திருக்கின்றன…
அதைவிட முக்கியமான விஷயம் ஒன்றுளது சக்ரவர்த்தியே…
அது என்ன..? சீக்கிரம் சொல்லுங்கள்.
நாம் தர்மக் கொடியை அனுப்பினோம்…
அவையோ
தேசக் கொடியைச் சுமந்து திரும்பியிருக்கின்றன.
இப்போது என்ன செய்யலாம்?
சக்ரவர்த்திக்குத் தெரியாதல்ல…
ஆலயங்களில் அல்ல;
பக்தர்களின் இதயங்களில் நடந்தேற வேண்டும்
ப்ராண ப்ரதிஷ்டைகள்!
அரண்மனைகளில் அல்ல;
ஆட்சியாளர்களின் உள்ளங்களில்
ஊன்றப்படவேண்டும் செங்கோல்கள்!
எம்மதமும் சம்மதம் என்ற நம் தர்மக் கொடி
ஏற்றப்படவேண்டியது
நம் ஆலயங்களில் மட்டுமல்ல,
இந்த தேசத்தில் இருக்கும் அத்தனை வழிபாட்டு மையங்களிலும்
அந்த வேத ஸ்லோகம் பட்டொளிவீசிப் பறக்க வேண்டும்.
முதலில் விஹார்களில்…
மசூதிகளில்… சர்ச்களில்…
குருத்வாராக்களின் கோபுர உச்சிகளில்…
எம்மதமும் சம்மதம்
மத பிரசார சுதந்தரம் என்பது
பிற மதங்களை அழிக்க அல்ல என்று மின்ன வேண்டும்.
சத்யமேவ ஜெயதே என்ற பொன் மொழியை
‘சநாதன சத்யமேவ ஜெயதே’ என்று ஆக்க வேண்டும்.
நம் ஆட்சியின் முழக்கம்
இடையில் செருகப்பட்ட மதச்சார்பின்மை அல்ல,
மத நல்லிணக்கம் போதிக்கும்
ஆதி அந்தம் இல்லா தர்மத்தின் அறச்சார்பு நிலையே!
அப்படியே ஆகட்டும்…
முரசறைந்து அறிவியுங்கள் தேசம் முழுவதும்
முன்னோர் வழியிலேயே இனி முன்னேறுவோம் என்று
சங்கு முழங்கித் தெரிவியுங்கள்…
சநாதனமே இனி நம் சாசனம் என்று.
உலகுக்கு வழிகாட்ட வேண்டுமென்றால்
ஊருக்கு வழி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?
தெரியாதவர்களுக்கு
தர்மத்தின் வழிகாட்டுவோம்.
தெரிந்துகொள்ள விரும்பாதவர்களுக்கு
பரம தர்மத்தின் வழிகாட்டுவோம்.
$$$