-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்தெட்டாம் திருப்பதி...

88. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த திருப்புட்குழி
ஜானகிக்காகத் தன்னுயிர் துறந்து நாராயணன் மடியில் நற்கதி அடைந்த வானவர் போற்றும் ஜடாயு தகனித்தது விஜயராகவப் பெருமாள் வீற்றிருக்கும் திருப்புட்குழியே!
ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்கப் போராடி பறவை அரசன் ஜடாயு உயிர்நீத்தார். அவருக்கு குழிவெட்டி ஈமச்சடங்குகளை ஸ்ரீராமன் செய்த இடம் என்பதால் திருப்புட்குழி என்று பெயர் பெற்றது. இங்குள்ள அசையும் கல்குதிரை சிற்பம் புகழ்பெற்றது.
மூலவர்: விஜயராகவப் பெருமாள் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: மரகதவல்லித் தாயார்
விமானம்: விஜயகோடி விமானம்
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்
தல விருட்சம்: பாதிரி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார் (ஆச்சாரியர் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் பாடியுள்ளனர்)

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 07.00 மணி வரை
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரத்திலிருந்து வடமேற்காக 12 கி.மீ. தொலைவில் வேகவதி நதிக்கரையோரம் உள்ளது இத்திருத்தலம். காஞ்சிபுரம்- வேலூர் சாலையில் பாலுசெட்டிசத்திரம் நிறுத்தத்திலிருந்து 1 கிமீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி, இரவில் வறுத்த பயிரை மடியில் கட்டிக் கொண்டு சன்னிதியில் படுக்க, மறுநாள் காலையில் அப்பயிறு முளைத்திருந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு. சொத்து பிரச்னை, திருமண வாழ்க்கையில் பிரச்னை ஆகியவை தீர இங்கு வந்து இறைவனை வணங்க நலம் உண்டாகும். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$