உருவகங்களின் ஊர்வலம் -36

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #36

38. இப்போதும் அந்தப் பக்கம் தானா?

எப்படி எடை கூடிவிட்டது என்று
குழப்பமாக இருக்கிறதா?

இந்த தேசம் மீதான வெறுப்பின்
மிக மிகச் சிறிய துகள்
உன் கண்ணில் மிஞ்சி இருந்திருக்கும்.

இந்த தர்மம் மீதான
அவமரியாதையின் மிக மிகச் சிறிய திரவம்
கூடுதல் வியர்வையாக
உன் உடலில் சுரந்து நின்றிருக்கும்.

இந்த அரசின் மீதான
இகழ்ச்சியின் மூச்சுக் காற்று
சற்று அதிகமாக
நுரையீரலில் தேங்கி நின்றிருக்கும்.

இந்த அமைப்புக்கு இழைத்த
துரோகத்தின் அழுத்தம்
கால் வழி சற்று அதிகமாகக் கசிந்திருக்கும்.

பொய்க் குற்றச்சாட்டைச் சொல்லி,
உண்மை கண்டறியும் குழுவை ஒதுக்கித் தள்ளி,
நீதிமன்றங்களை நிராகரித்து,
எதிர்க்கட்சிகளின் மலின அரசியல் மகுடிக்கு மயங்கி
திட்டமிட்ட ஃபோட்டோ ஷூட் கேமராக்கள் முன்பு
தேர்ந்த ஒத்திகைக்குப் பின் அரங்கேற்றிய நாடகம் என்பது
தெளிவாகத் தெரிந்த பின்னும்
அந்த அமைப்பு உன் பின்னால் நின்றது…
இந்த தேசம் உன் பின்னால் நின்றது…
இந்த அரசும் உன் பின்னால் நின்றது…

இந்த தேசத்தை ‘மீறி வென்று காட்டியதாக’
உன்னைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் சாக்கில்
இந்த தேசத்தை,
இந்த தர்மத்தைத் தம் காலில் போட்டு மிதிக்க
ஒரு கூட்டம் தயாராக இருந்தது .

அது உன்னை
இத்தனை நாள் தூக்கிச் சுமந்தது
இந்தத் தருணத்துக்காக என்பது தெரிந்ததும்,
செய்த தவறை உணர்ந்து
உன் இரு கண்ணில் துளிர்த்த
பரிவின் துளிகளினால்
எடை கூடிவிட்டதா?

பக்தியுடன் சமர்ப்பிக்கும் துளசி இலைக்கு
பரந்தாமனின் எடை உண்டென்பது தெரியும்.
பிராயச்சித்த கண்ணீரும்
இத்தனை கனத்துடன் இருந்திருக்குமா?

வென்ற பின் கோர்த்து நின்றிருக்கலாமே
உன் விழிகளில் அந்தப் பரிசுத்தத் துளிகள்?
இந்த தேசத்துக்கும் தர்மத்துக்கும்
அவமானங்கள் புதிதா என்ன?

உன்னை உசுப்பேற்றி
உலகின் முன்பு நிறுத்தியவர்களை ஒழித்துக்கட்ட
நீ செய்த இறுதிப் பழிவாங்கலா?

ஒரு நாள் கழித்து
உன் தங்கப் பதக்கத்தை
உரியவரிடம் கொண்டு சேர்த்து
அவர் கால் தொட்டு வணங்கி
அதைச் செய்திருக்கலாமே?

இப்போதும்
உனக்காகச் சிந்திய முதல் கண்ணீர் அவருடையதே.
இப்போதும் உன் தோளில்
ஆறுதலாகத் தட்டிக்கொடுக்கும் முதல் கரம் அவருடையதே.

சர்வதேச எடை எந்திரங்கள்
சத்தியத்தின் பக்கமே நிற்கும்.
நீ எந்தப் பக்கம் நிற்கப் போகிறாய்
தங்கப் பெண்ணே?

$$$

Leave a comment