-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்தாறாம் திருப்பதி...

76. சரஸ்வதி தேவிக்கு காட்சி தந்த திருத்தண்கா
அக்னியில் உதித்து, அக்னியைக் காத்து, பிரமனுக்காக ஒளியாகி, ஒளிவிளக்கேந்தி, விளக்கொளிப் பெருமாளாய்த் தோன்றியவனே – என்னில் ஞான விளக்கேற்றிக் காப்பாயே!
பிரமனின் வேள்வியைத் தடுக்க சரஸ்வதி தேவி உலகை இருளில் மூழ்கடிக்க,பகவான் தானே ஒளியாக இருந்து வேள்வியைக் காத்தார் எனவே தீபஒளிப் பெருமாள் என்று போற்றப்படுகிறார் என்கிறது தலபுராணம். சரஸ்வதி தேவிக்கு பெருமாள் காட்சி அளித்து சமாதானம் செய்த தலம். இங்கு தூய்மையான தர்ப்பைப்புல் வளர்வதால் ‘தூப்புல்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆச்சாரியர் வேதாந்த தேசிகன் அவதாரத் தலமும் இதுவே.
மூலவர்: தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் (நின்ற திருக்கோலம் – மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: மரகதவல்லி தாயார்
விமானம்: ஸ்ரீகர விமானம்
தீர்த்தம்: சரஸ்வதி தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.30 மணி முதல் 07.30 மணி வரை
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரத்தில் அஷ்டபுயகரத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் மேற்கே உள்ளது இத்தலம் (தூப்புல்).
சேவிப்பதன் பலன்கள்:
வாழ்க்கையே இருண்டு போய் வீடுமோ என்று பயப்படுவர்களும், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், சுபகாரியங்கள் நடைபெறாமல் தடையைச் சந்திப்பவர்களும் வந்து நெய் விளக்கேற்றி மூன்று வேளையும் பிரார்த்தனை செய்தால் பலன் உண்டாகும். 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும், 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$