திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -70

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபதாம் திருப்பதி...

70. சகாதேவன் பிரதிஷ்டை செய்த திருக்கடித்தானம்

பொன் வேண்டும், பூமலர் அமர்ந்தாளின் அருள் வேண்டும்,
மனை வேண்டும், மணிவண்ணன் துணை வேண்டும்,
பொருள் வேண்டும், உனை மறவாத நிலை வேண்டும்,
எல்லாமே வேண்டும் என்றாலும் – திருக்கடித்தானத்து அப்பனே
உனைப் பிரியாத நிலை வேண்டுமே எனக்கே.

பஞ்ச பாண்டவர்களில் சகாதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் இவர். பாண்டு மகாராஜா இங்குதான் மரித்ததாக தல புராணம் கூறுகிறது. கடி என்றால் பரிமளம். பரிமளம் மிக்க சோலைகள் மிகுந்த ஊர் என்பது ஊரின் பெயர்க் காரணம்.

‘கடி’ சென்ற சொல்லைக் கொண்டு மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அவை திருக்கடிகை என்றழைக்கப்படும் சோளிங்கபுரம், கண்டமென்னும் கடிநகர் மற்றூம் திருக்கடித்தானம் ஆகும். ஒரு கடிகை நேரம் (நாழிகை – 24 நிமிடம்), இத்தலத்தில் தவம் மேற்கொண்டால், அனைத்துச் செயல்களில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம். 

மூலவர்: அற்புத நாராயணன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: கற்பகவல்லி நாச்சியார்.
விமானம்: புண்யகோடி விமானம்
தீர்த்தம்: பூமி தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை

எப்படிச் செல்வது?

கேரள மாநிலம், திருவல்லாவிலிருந்து கோட்டயம் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவு சென்றால் செங்கணச்சேரி வரும். அங்கிருந்து ஒரு கிளைப் பாதை வழியாக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

சேவிப்பதன் பலன்கள்:

வேலை கிடைக்கவும், இருக்கின்ற வேலையில் பதவி உயர்வு பெறவும் வந்து வணங்க வேண்டிய தலமாகும். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment