-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தொன்பதாம் திருப்பதி...

69. பாண்டவர்கள் வழிபட்ட திருவித்துவக்கோடு
என் ஜான் உடம்பைக் காத்தாய், மண் உண்டாய், மலை கொண்டாய், விண்ணையும் மண்ணையும் அளந்தாய், திருவித்துவக்கோடு வந்த என் மனதையும் திருடிக் கொண்டாயே!
அம்பரீஷன் தவமிருந்து முக்திபெற்ற தலம். அவரது வேண்டுதலை ஏற்று நான்கு திருக்கோலங்களில் பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் முதலில் சிவன் கோயிலும் அடுத்து பெருமாள் கோயிலும் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் இக்கோயிலில் உள்ள ஐந்து பெருமாள் மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தனர் என்பது ஐதீகம். எனவே இக்கோயில் ஐந்து மூர்த்தித் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளதாலும், காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும், இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. சிவனை வழிபட்ட பிறகே இங்குள்ள பெருமாளை வணங்க வேண்டும் என்பது மரபு. சைவ- வைணவ ஒற்றுமைக்கு இத்தலமும் ஓர் உதாரணம்.
மூலவர்: உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் (நின்ற திருக்கோலம்- தெற்கே திருமுக மண்டலம்)
தாயார்: வித்துவக்கோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார்.
விமானம்: த்த்வகாஞ்சன விமானம்
தீர்த்தம்: சக்கர தீர்த்தம்
மங்களா சாசனம்: குலசேகர ஆழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 07.30 மணி வரை
எப்படிச் செல்வது?
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், ஷோரனூர்- கள்ளிக்கோட்டை ரயில் பாதையில் பட்டாம்பி ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் இக்கோயில் (திருவீக்கோடு) உள்ளது. ஷோரனூர்- குருவாயூர் போகும் பஸ்ஸில் சென்றால் 16 கி.மீ. தொலைவில் இத்தலத்தை அடையலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
முன் ஜென்ம பாவங்களும், இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் இப்பெருமாளை தரிசித்தால் தோஷம் நீங்கப் பெறலாம். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வரவேண்டிய தலம் இது.
$$$