திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -68

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தெட்டாம் திருப்பதி...

68. கேசனை சம்ஹரித்த திருவட்டாறு

வெண்ணெய் தின்று, வெறும் மண்ணை மென்று,
பவள வாய் திறந்து பார் உலகம் காட்டிவிட்டு,
கள்ளத்தனம் செய்து, கல் உரலோடு கட்டுண்டு,
பொல்லாத பகைவர்களை மல்லாண்டு மல்லாண்டு,
பல்லாண்டாய்க் காக்கின்ற திருவட்டாறு
ஆதிகேசவப் பெருமானின் அருளைப் பெறுவோமே!

திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி போலவே, திருவட்டாற்றில் உள்ள ஆதிகேசவப் பெருமாளையும் மூன்று வாயில்களில் (திருவடி, திருநாபி, திருமுகம்) தரிசிக்க வேண்டும். இங்குள்ள பெருமாளிடம் நாபிக் கமலமும் பிரம்மனும் கிடையாது. எனவே பிறப்பறுக்கும் பெருமாளாக பூஜிக்கப்படுகிறார்.

இது கேரள பாணியில் அமைந்த மலைமாடக் கோயில். 16,008 சாளக்கிராமங்கள் சேர்த்து, கடுசர்க்கரை யோகம் என்ற கலவையால் உருவாக்கப்பட்ட மூலவர் திருமேனி (22 அடி நீளம்). கருவறைக்கு முன்புறம் உள்ள ஒற்றைக் கல் மண்டபம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக் கல்லால் எழுப்பப்பட்டது. இதன் சுவர்கள் மட்டும் 3 அடி தடிமம் கொண்ட பாறையாகும். ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதன் – ரதி தம்பதி, லட்சுமணர், இந்திரஜித் போன்றவர்களின் சிற்பங்கள் இதில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. அற்புதமான கலைக்கருவூலம் இக்கோயில்.

ஒற்றைக்கல் மண்டபம்.

கேசன், கேசி என்ற இரு சகோதர அசுரர்களின் தொல்லைகளைத் தடுக்க, தேவர்களின் பிரார்த்தனையை ஏற்று, பெருமாள் கேசனை சம்ஹரித்து, கேசியின் மீது படுத்து முடக்கினார். அப்போது அவன் தப்பவிடாமல் செய்ய அவனது பன்னிரு கைகளின் மீது ருத்திராட்சங்களை வைத்தார். அப்போது கேசியின் மனைவியின் வேண்டுதலுக்காக கங்கையும் தாமிரபரணியும் அங்கு நதியாகப் பாய்ந்து வந்தனர். உடனே பூமாதேவி பெருமாள் இருந்த பகுதியை மேடாக்கியதால், அந்த நதிகள் அந்த மேடான பகுதியைச் சுற்றி வட்ட வடிவில் ஓடத் தொடங்கின. எனவே இப்பகுதி  ‘வட்டாறு’ என்று பெயர் பெற்றது; கேசனைக் கொன்றதால் கேசவன் என்று பெருமாள் திருநாமம் பெற்றார் என்கிறது தல புராணம்.

பெருமாள் அசுரன் கைகளின் மீது வைத்த 12 ருத்திராட்சங்களும் சிவாலயங்கள் ஆகின. குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின்போது இந்த சிவாலயங்களை தரிசிசிக்க நடைபெறும் ஓட்டம் புகழ் பெற்றது. இறுதியில் சிவ பக்தர்கள் ஆதிகேசவப் பெருமாளை வணங்கி, அவர் பாதத்தின் கீழ் இருக்கும் சிவனையும் வணங்கி, யாத்திரையை முடிக்கின்றனர். சைவ- வைணவ ஒற்றுமைக்கு நமது முன்னோர் கண்டறிந்த உபாயம் இது…

மூலவர்: ஆதிகேசவப் பெருமாள் (புஜங்க சயனம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: மரகதவல்லி நாச்சியார்
விமானம்: அஷ்டாங்க, அஷ்டாஷர விமானம்
தீர்த்தம்: கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 5.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை

 எப்படிச் செல்வது?

தமிழகத்தின் நாகர்கோவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். பேருந்து மார்க்கத்திலும் செல்லலாம். திருவனந்தபுரம் பேருந்து மார்க்கத்தில் தக்கலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

எதிரிகளால் ஏற்படும் துன்பத்தில் இருப்பவர்களும், குடும்பத்தில் பல குழப்பங்களைச் சந்திப்பவர்களும் அரசியலில் முன்னேற நினைப்பவர்களும் வந்து தரிசிக்க பிரச்னைகள் விலகும் என்பது ஐதீகம்.  5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும் இங்கு வந்து தரிசிக்க நலம் பெறுவர்.

$$$

Leave a comment