திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -60

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபதாம் திருப்பதி...

60. சப்தரிஷிகளுக்கு காட்சி அளித்த திருவண்பரிசாரம்  

அருள்பவனே, காப்பவனே, ஆஞ்சநேயனுக்கு உரியவனே!
தருபவனே, தயாபரனே, ஆயர்பாடி மாதவனே!
அமந்தவனே, கனிந்தவனே, நாமகிரியை மார்மீது கொண்டவனே!
அழகனே, திருக்குறளப்பனே, அடியவனைக் காத்தவருள்வாயே!

சப்தரிஷிகளான அத்திரி, பரத்வாஜர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிஷ்டர், விஸ்வாமித்திர மகரிஷி சுசீந்திரத்தில் தவமிருந்தபோது, இறைவன் சிவபெருமானாக வந்து காட்சி அளித்தார். அப்போது முனிவர்கள் திருமாலின் வடிவில் இறைவனைக் காண வேண்டும் என்று சோமதீர்த்தக் கட்டத்தில் தவம் இருந்தனர். இறைவனும் திருமால் உருவில் முனிவர்களுக்கு காட்சி அருளினார். அவர்களது வேண்டுதலை ஏற்று  மகாவிஷ்ணு கோலத்தில் இங்கு  எழுந்தருளியுள்ளார்.

ஹிரண்ய கசிபுவை சம்ஹரித்த நரசிம்மப் பெருமாள் கோபம் தீர்ந்து லட்சுமிஅயி தன் திருமார்பில் சேர்த்துக் கொண்ட இடம். சப்தரிஷிகளால் சூழப்பட்டு,  9 அடி உயரத்தில் மூலவர் காட்சி தருகிறார். லட்சுமி தாயார்  திருமாலின் திருமார்பில் நித்ய வாசம் செய்வதால் இத்தலப் பெருமாள் திருவாழ் மார்பன் என்று அழைக்கப்படுகிறார். திருவாகிய லட்சுமி தாயார், பதியாகிய திருமாலை சார்ந்து இத்தலத்தில் தங்கியதால் இவ்வூர்  ‘திருப்பதி சாரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதனால் தாயாருக்கு தனி சன்னிதி இல்லை.

மூலவர்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன் (அமர்ந்த திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: கமலவல்லி நாச்சியார்
விமானம்: இந்திரகல்யாண விமானம்
தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 4.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 07.15 மணி வரை

எப்படிச் செல்வது?

நாகர்கோவிலிருந்து வடக்கே 4  கி.மீ. தொலைவில் உள்ளது (திருப்பதிசாரம்).  நகரப் பேருந்து வசதியும் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய் நொடிகளில் இருந்து விடுபட, வறுமையைப் போக்க வந்து தரிசிக்க வேண்டிய தலம் இது. 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம்.

$$$

Leave a comment