-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்தொன்பதாம் திருப்பதி...

மலைநாட்டு திருப்பதிகள்
59. அழகிய திருமேனி கொண்ட திருவனந்தபுரம்
ஆபத்து பாந்தனே, அனந்த பத்மநாபனே! நாமகிரி உடனுறையும் எனை ஆளும் பெருமானே! முக்கோடி தேவர்க்கும் முன்தோன்றி வந்தவனே! எக்காலம் என அறிய முடியாத மூலவனே! கிடந்தவனே, அமர்ந்தவனே, அளவிடமுடியாதவனே! நின்றவனே, அளந்தவனே, திருவனந்தபுரத்தானே! திருவடியை- பற்றிவிட்டேன், தினம் காட்சி தருவாயே!
கேரள மாநிலத்தில் உள்ள பிரதான ஆலயம் இது. திருவாங்கூர் ராஜவம்சத்தால் கட்டமைக்கப்பட்ட ஆலயம். இங்குள்ள நிலவறைகளில் அளவற்ற செல்வம் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒரு துறவியுடன் கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடலால் அமைந்த தலம் இது. ஆரம்பத்தில் இலுப்பை மரத்தாலான மூலவர் சிலை இக்கோயிலில் இருந்தது. 1686ஆம் ஆண்டு நிகழ்ந்த தீவிபத்தால் மர விக்கிரஹம் எரிந்துபோனது. அதையடுத்து, ராஜா மார்த்தாண்ட வர்மன் புதிய சாளக்கிராமத் திருமேனியுடன் 1726ஆம் ஆண்டில் ஆலயத்தை புனர் நிர்மானம் செய்தார்.
12,000 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு, கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் செய்யப்பட்ட 18 அடிநீள விக்கிரஹம் இது. முழுவதும் பொன்னால் அணி செய்யப்பட்டிருக்கிறது. மூலவர் பத்மநாம சுவாமியை, ‘திருவடி, திருநாபி, திருமுக மண்டலம்’ என்ற மூன்று வாயில்களில் தான் தரிசிக்க வேண்டும். திருவாங்கூர் ராஜவம்சம் தங்களை ‘பத்மநாப தாசர்கள்’ என்றே அழைத்துக் கொள்வது வழக்கம்.
மூலவர்: அனந்தபத்மநாபன் (புஜங்க சயனம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஸ்ரீ ஹரிலக்ஷ்மி
விமானம்: ஹேமகூட விமானம்
தீர்த்தம்: மத்ஸ்ய தீர்த்தம், வராக தீர்த்தம், பத்ம தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 09.00 மணி வரை
எப்படிச் செல்வது?
கேரள மாநிலத்தின் தலைநகராக விளங்கும் திருவனந்தபுரத்தில், ரயில்நிலையத்தின் அருகில் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
தீராத பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட, திருமணத்தடை நீங்க, மனநிம்மதியோடு வாழ வந்து வணங்க வேண்டிய தலம் இது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும், 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம்.
$$$